தொடக்க பள்ளி மாணவர்களுக்கு, 'வாட்ஸ் ஆப்'பில் பாடம் நடத்த வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலால், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஓர் ஆண்டுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல், கற்பித்தல் பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் வகுப்புகளை நடத்தாவிட்டால், மாணவர்களின் கல்வித்தரம் கடுமையாக பாதிக்கப் படும் என, பெற்றோர்கள் கருதினர்.
இதையடுத்து, தொடக்க பள்ளி ஆசிரியர்கள், 'வாட்ஸ் ஆப்'பில் மாணவர்களை குழுவாக இணைக்க வேண்டும்.
வீடியோ கால், எஸ்.எம்.எஸ்., வழியாக பாடங்கள், பயிற்சி புத்தகங்கள் மற்றும் இணைப்பு பாடங்களுக்கான பயிற்சிகளை, ஆன்லைனில் வழங்க வேண்டும் என, உத்தரவில் தெரிவிக்க பட்டு உள்ளது.
கல்வி 'டிவி'
இதுதவிர, கல்வி 'டிவி'யில் மாணவர்களுக்கான பாடங்களை ஒளிபரப்பவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும், 26ம் தேதி முதல் தினமும் பகல், 12:30 மணிக்கு, கல்வி 'டிவி' யில் பாட நிகழ்ச்சிகள் துவங்குகின்றன.முதல், 30 நிமிடங்கள், 8ம் வகுப்பு, பின், 7ம் வகுப்பு என்று படிப்படியாக, ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் ஒரு வகுப்புக்கு பாடம் நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் மாலை, 4:00 மணிக்கு, இரண்டாம் வகுப்புடன், 'வீடியோ' பாடங்கள் முடிகின்றன. முதல் நாளில் கணிதம்; ஏப்., 27ல் அறிவியல்; 28ல் சமூக அறிவியல்; 29ல் தமிழ்; 30ல் ஆங்கிலம் என, மே, 10 வரை, கல்வி 'டிவி' நிகழ்ச்சிகள் தொடரும். இந்த பட்டியல், பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும்; 'வாட்ஸ் ஆப்'பிலும் மாணவர்களுக்கு அனுப்பப்படும் என, தொடக்க கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.