இந்தியா முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாவது அலை வீசிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் உயர்ந்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அந்தந்த மாநிலங்களில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்திலும் கொரோனா தொற்றின் வேகம் முன் போல உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமுடக்கம் அறிவிக்கப்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் இந்தியாவின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள் பங்கு பெற்றனர். அந்த கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பேசும் போது, பொதுமக்கள் சரியான வழிகாட்டுதல் முறையை கடைபிடிக்காமல் இருப்பது கொரோனா பரவலை அதிகரிக்க செய்யும்.
கொரோனா பரவலை தடுக்க மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், மினி கிளினிக்குகள் ஆகியவற்றில் கொரோனா தடுப்பு மருந்துகள் போடப்பட்டு வருகிறது. தடுப்பு மருந்துகள் செலுத்த கூடிய அனைவரும் தவறாமல் மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் ஏப்ரல் 2 ஆம் தேதி வரை 31.75 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்று வரை 54,78,720 தடுப்பூசிகள் மத்திய அரசிடமிருந்து பெறப்பட்டுள்ளது.
கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களிடம் மட்டும் இதுவரை 2,58,98,600 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான படுக்கை வசதிகள், சுவாசக்கருவிகள் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் 846 பகுதிகள் கொரோனா பாதிப்பு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்ள 104 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கூறினார். செய்தி வெளியீட்டில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளதால், மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுமோ? என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
>>> தமிழகத்தில் கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள் தேவைக்கேற்ப தீவிரப்படுத்தப்படும்- தலைமை செயலாளர்...