கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சூயஸ் கால்வாயின் வரலாறும், முக்கியத்துவமும்...

History and Significance of the Suez Canal ...



 சூயஸ் கால்வாயில் புயல் வீசச் செய்த இயற்கைக்கு உலகம் இந்நேரம் விழா எடுத்திருக்க வேண்டும். எவர் கிவன் கப்பலை தரை தட்ட செய்த மாலுமிக்கு மனிதகுலம் நன்றி தெரிவித்திருக்க வேண்டும். அந்த ராட்சத கப்பல் மட்டும் நீர் வழித்தடத்தில் நெருக்கடி உண்டாக்காமல் இருந்திருந்தால் சூயஸ் என்ற சொல் இன்று கூகுள் தேடுபொறியில் மேல் எழுந்து இருக்காது. ஓர் ஒப்பற்ற வரலாற்றை உலகம் உணர சந்தர்ப்பம் வாய்க்காமலேயே போய் இருக்கும்.


ஒரு கடல், ஒரு கப்பல், ஒரு சிறு விபத்து... இதற்கு ஏன் உலகம் இவ்வளவு அலட்டி கொள்கிறது? 1 லட்சம் டன் எடையுடன் சென்ற விமானம் நடுவானில் வெடித்து சிதறிய போது பரபரப்படையாத நாடுகள், ஒரு கப்பலில் விழுந்த சிறு கீறலுக்காக ஏன் இத்தனை கவலை கொள்கிறது?

சூயஸ்.... அதுதான் அனைவரின் பதற்றத்திற்கும் காரணம். கடலில் நடுவே நீண்டிருக்கும் இந்த ஒத்தயடிப் பாதையை நம்பித்தான் உலகின் 20 சதவீத வர்த்தகம் இருக்கிறது. நிலக்கோட்டையில் விளையும் சாதிமல்லி லண்டன் வீதிகளில் மணப்பதற்கும் கலிபோர்னியாவில் தயாராகும் ஐபோன், நம் கைகளில் தவழ்வதற்கும் இந்த கால்வாயின் கருணை அவசியம்.


ஓங்கி வளர்ந்த உலோக மலையை போல சூயஸ் கால்வாயின் குறுக்கே சிக்கியிருந்த எவர் கிவன் கப்பலையும் அதனால் ஏற்பட்ட இழப்புகளை மட்டுமே இந்த உலகம் அறியும். ஆனால் சூயஸ் கால்வாய் கட்டப்பட்ட காலத்தில் இருந்து அது நிகழ்த்திய ஒவ்வொரு சம்பவமும் வரலாற்றை ஸ்தம்பிக்க வைக்க கூடியவையாகவே இருந்திருக்கின்றன. ஒன்றும் அறியாத சிறு பிள்ளையை போல ஓடிக் கொண்டிருக்கும் இந்த நீரோடை, 20 லட்சத்துக்கும் அதிகமான உயிர்களை தின்று செரித்திருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா....? ஆம் உலகின் பிற வரலாறுகளை போல சூயஸ் கால்வாயின் கதையும் ரத்தத்தில் தோயந்ததுதான்.


தேவையே கண்டுபிடிப்புகளின் தாய் என்கிறார் தத்துவஞானி பிளாட்டோ. சூயஸ் கால்வாய் தோற்றத்துக்கும் ஒரு தேவை இருந்தது. ஐரோப்பியா - ஆசியா கண்டங்களுக்கிடையே வணிகம் செழித்திருந்த காலம் அது. ஒரு தேவதூதனை போல பாரங்களை சுமந்த படி கடலின் வடக்கிற்கும் தெற்கிற்கும் கப்பல்கள் மிதந்து கொண்டே இருந்தன. ஆனால் இந்த பயணம் சுமூகமானதாக இல்லை. ஆசியாவில் இருந்து கிளம்பிய கப்பல்கள் நேரடியான வழித்தடம் இல்லாததால் ஆப்பிரிக்க கண்டம் முழுவதையும் சுற்றி, சோர்வுற்ற பிறகுதான் ஐரோப்பிய எல்லைகளை அடைய முடிந்தது. இந்த சுற்றுப்பாதையின் காரணமாக கப்பல் நிறுவனங்களுக்கு நேரம், எரிபொருள் என எண்ணற்ற இழப்புகள் ஏற்பட்டன.


இப்படி நெடுங்காலமாக கப்பல்கள் தலையை சுற்றி மூக்கை தொட்டுக் கொண்டிருப்பதை கவனித்தது எகிப்தை சேர்ந்த சூயஸ் என்ற நிறுவனம். ஐரோப்பா - ஆசியா இடையே உள்ள ஒரு சிறு நிலப்பரப்புதான் கடல்வழி பயணத்திற்கு சுமையாக உள்ளது என்பதை அது உணர்ந்தது. அந்த நிலத்தின் ஊடாக கால்வாய் கட்டுவதன் மூலம் கப்பல்களின் பயண நேரத்தை கணிசமாக குறைக்க முடியும் என்று கணக்கு போட்டது. அதன் படி 163 கிலோமீட்டர் தூரத்திற்கு நிலத்தை தோண்டி கால்வாய் அமைப்பது என செயல் திட்டம் வகுத்து 1859 ம் ஆண்டு அதற்கான பணியை தொடங்கியது சூயஸ்.


இத்தனை தொழில் நுட்பங்கள் வளர்ந்து விட்ட காலத்திலேயே எவர் கிவன் கப்பலை மீட்க ஒரு வார காலம் போராட வேண்டியுள்ளது எனில் 160 ஆண்டுகளுக்கு முன்பு என்ன தொழில் நுட்பம் இருந்திருக்கும் என்பது எகிப்து கடவுளுக்கே வெளிச்சம். வேலை என்ற பெயரில் லட்சக்கணக்கான ஆப்பிரிக்க கருப்பின மக்கள், பிரமிடு தேசத்திற்கு அடிமைகளாக இழுத்து வரப்பட்டனர். கட்டுமானத்தை விரைந்து முடிக்க இரவு, பகல் பாரது அடித்து துன்புறுத்தி அவர்களின் உழைப்பும் உயிரும் சுரண்டப்பட்டது. 10 ஆண்டுகள் நடைபெற்ற இந்த பணி 15 லட்சம் உயிர்களை காவு வாங்கியதாக நிறுவுகின்றன ஆய்வுகள். மனித உரிமைகள் படுகொலை செய்யப்படுவதாக எதிர்ப்புகள் வலுத்த நிலையில், அதிகார மையங்களின் தயவில் 1869 ம் ஆண்டு சூயஸ் கால்வாயை வெற்றிகரமாக திறந்தது சூயஸ். 23 மீட்டர் ஆழமும், 254 அடி அகலத்துடன் 193 கிலோ மீட்டர் நீண்டிருக்கும் இந்த கால்வாயை கடக்க 11 மணி முதல் 12 மணி நேரம் ஆகும். இது ஆப்பிரிக்க கண்டத்தை சுற்றி செல்லும் ஆகும் பயண நேரத்தை விட ஒரு மடங்கு குறைவு. மேலும் 19000 கிலோ மீட்டராக இருந்த ஐரோப்பியா - ஆசியா கடற்பயண தூரம், 11000 கிலோ மீட்டராக குறைந்தது. எரிபொருளாக்காக மட்டுமே ஏராளாமான செலவு செய்து கொண்டிருந்த நாடுகள் இந்த கால்வாயை கடவுளின் கொடையாகவே பார்த்தன.



கால்வாய் பணிகள் முடிந்து விட்டன....கப்பல்களும் வரத்தொடங்கி விட்டன.... எனவே நெருக்கடிகள் முடிந்து விட்டதாக நிம்மதி பெரு வீச்சு விட்டது சூயஸ் நிறுவனம். ஆனால் அது முடியவில்லை, வேறு ரூபத்தில் சூயஸின் தலைக்கு மேல் தொங்கி கொண்டிருந்தது. கால்வாய் திறந்து கல்லா கட்டலாம் என்று கனவில் மிதந்தவர்களுக்கு கப்பல் நிறுவனங்கள் பெரும் அடியை கொடுத்தன. எதிர்பார்த்த வருவாய் இல்லை. திறந்த ஐந்தாண்டிற்குள்ளாகவே சுமக்க முடியாத கடனில் மூழ்கியது சூயஸ். இதை பயன்படுத்தி கொண்ட பிரிட்டிஷ் அரசு, கால்வாயை சொற்ப விலைக்கு மிரட்டி வாங்கியது. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டுதானே.


அன்று முதல் 1956 வரை சூயஸ் கால்வாயில் பிரிட்டிஷ் அரசே ஆதிக்கம் செலுத்தியது. சூயஸ் மட்டுமல்ல எகிப்தே அப்போது காலனியாதிக்கத்தின் கீழ்தான் கட்டுண்டு கிடந்தது. தொடர் மக்கள் போராட்டத்தின் வாயிலாக 1956 ல் எகிப்து மக்கள் விடுதலை காற்றை சுவாசித்தனர். இறுதியில் பிரிட்டிஷ் சூயஸ் கால்வாயையும் அவர்கள் வசமே ஒப்படைத்தது. கால்வாய் கட்டி 86 ஆண்டுகளுக்கு பிறகு சூயஸ் கால்வாயில் முதல் முறையாக ஆதிக்கம் செலுத்த தொடங்கியது எகிப்து. ஆனால் அதன் நிம்மதி 2 மாதங்கள் கூட நீடிக்கவில்லை. எகிப்தின் அண்டை நாடான இஸ்ரேல் அடுத்த பிரச்சனைக்கு அடி கோலியது.


சூயஸ் கால்வாயின் ஒரு பகுதி தனது நாட்டின் எல்லையில் இருப்பதால் கால்வாய் தங்களுக்கே சொந்தம் என வம்பு வளர்ந்த்து. இவர்களின் எல்லையில் அவர்கள் ஊடுருவுவதும் அவர்கள் எல்லையில் இவர்கள் ஊடுருவுவதுமாக ஏழு ஆண்டுகள் பனிப்போர் நடந்தது.. எவரும் எதிர்பாரா சமயம், 1867 ம் ஆண்டின் ஒரு அதிகாலை பொழுது.... விமானம் மூலம் எகிப்தின் மீது சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது இஸ்ரேல். "6 நாள் போர்" என வரலாற்றில் குறிப்படப்படும் இந்த போரால் உருக்குலைந்து போனார்கள் பிரமிடு தேச பிரதிநிதிகள். பொருளிழப்புகள், உயிரிழப்புகள் மட்டுமல்லாது தனது எல்லைப்பகுதியான சினான் பெனிசுலாவையும் இஸ்ரேலிடம் பறிகொடுத்து நின்றது எகிப்து.


இனியும் தாமதித்தால் கால்வாயும் சூறைபோகும் என சுதாரித்த எகிப்து அரசு, கால்வாயை பூட்டி பாதுக்காப்புக்காக இரு முனையங்களிலும் ராணுவத்தை குவித்தது. இந்த சமயத்தில் சூயஸ் கால்வாயில் பயணம் செய்து கொண்டிருந்த 15 கப்பல்கள், அங்கேயே நிறுத்த அறிவுறுத்தப்பட்டது. இரு நாட்டின் எல்லையாக சூயஸ் கால்வாய் முழுவதும் ஆயிரக்கணக்கான கன்னி வெடிகள் நிரப்பப்பட்டன. வேறு வழியின்றி கப்பல்கள் இருந்த இடத்திலேயே நங்கூரம் போட்டு நின்றன. நாட்கள் வாரங்களாகின. வாரங்கள்... மாதங்களாகின... மாதங்கள்...வருடங்கள் ஆகின.. ஆனால் எல்லையில் எகிப்தும் சமாதானம் ஆக வில்லை. இஸ்ரேலும் சமாதானம் ஆகவில்லை. விளைவு கால்வாயும் திறக்கப்படவில்லை.


விரக்தியின் உச்சிக்கே போனார்கள் கப்பல் ஊழியர்கள். அவர்களுக்கு இருந்த ஒரே ஆறுதல் 14 கப்பல்களும் பிட்டர்லேக் என்ற ஒரே இடத்தில் நின்றதுதான். 193 கிமீ கொண்ட அந்த ஒற்றையடிப்பாதையில் அகலமான ஒரே இடம் பிட்டர்லேக் மட்டுமே. ரயில்கள் டிராக் மாறும் இடத்தை போல கால்வாயில் எதிரில் வரும் கப்பல்கள் வழிக்காக காத்திருக்கும் இடம் இது. எனவே 14 கப்பல்களும் ஒரே இடத்தில் நிற்க முடிந்தது. அந்த வகையில் மகிழ்ச்சி ஆறுதல் பட்டு கொண்டார்கள் மாலுமிகளும் ஊழியர்களும்.... ஆனால் துரதிஷ்ட வசமாக அமெரிக்காவை சேர்ந்த ஒரு கப்பல் மட்டும் அந்த ஒற்றையடி பாதையிலேயே சிக்கி கொண்டது.


பார்த்த காட்சி...பார்த்த முகம்... பார்த்த வேலை பலர் மனரீதியாக பாதிக்கப்பட்டனர். கப்பல் ஊழியர்களை மீட்க வேண்டும் என கோரிக்கைகள் வலுக்க தொடங்கின. கன்னி வெடி நிரப்பட்ட கால்வாயில் சிக்கி கொண்டிருப்பவர்களை கப்பல் மூலமாக மீட்க முடியாது என்பதால் விமானத்தை பயன்படுத்தின கப்பல் நிறுவனங்கள். ஆனால் அனைவரையும் கரைக்கு கொண்டு வந்து விட்டால் கப்பல்களை கதி என்னாவது....? எனவே 14 கப்பல்களை பராமரிக்க 30 ஊழியர்கள் மட்டுமே அங்கேயே தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 3 மாதங்களுக்கு ஒரு முறை 30 ஊழியர்களும் மாற்றப்பட்டு வேறொரு குழு அங்கு அனுப்பப்பட்டது. இப்படி சுழற்சி முறையில் ஆட்களை ஏற்றுவதும் இறக்குவதுமாக கால்வாயில் மேல் பகுதியில் ஒரு விமான போக்குவரத்தை தொடங்கியிருந்தன கப்பல் நிறுவனங்கள்.


ஓராண்டு, ஈராண்டு அல்ல.... 8 ஆண்டுகள், இந்த கப்பல்கள் அசையவில்லை, அங்கேயே நின்றன. இந்த 14 கப்பல்கள் ஏற்படுத்திய இந்த டிராபிக் ஜாம் தான் உலகிலேயே அதிக நேரம் ஏற்பட்ட டிராபிக் ஜாம் என வரலாற்று ஆய்வாளர்கள் வேடிக்கையாக சிரிக்கிறார்கள். எவர் கிவன் கப்பல் 1 வாரம் ஏற்படுத்திய டிராபிக் ஜாமுக்கே 70,000 கோடி இழப்பு ஏற்பட்டது என அறிக்கை வாசித்து அதிர்ச்சி கிளப்புகிறார்கள். எனில் 8 ஆண்டு டிராபிக் ஜாமால் ஏற்பட்ட இழப்புகள் எந்த அளவிற்கு இருந்திருக்கும் என்பது சொல்லத் தேவையில்லை. எனவே உலக நாடுகள் கொந்தளித்தன. கால்வாயை திறக்கும் படி ஐநா சபை எகிப்தை நெருக்கியது. ஆனால் அடைந்தால் கால்வாய் முனை, இல்லையேல் துப்பாக்கி முனை என்று வீர வசனம் பேசி ராணுவச் செலவுக்காக மொத்த நாட்டையும் எழுதி கொடுத்து கொண்டிருந்தார்கள் எகிப்தின் ஆட்சியாளர்கள்.


எல்லையில் இருந்த இஸ்ரேலும் எகிப்தும் எலியும் பூனையுமாக சண்டையிட்டு கொண்டிருந்தார்களே ஒழிய கால்வாயில் மிதந்து கொண்டு இருந்த கப்பல் ஊழியர்களிடம் கொண்டாட்டத்திற்கு குறைவில்லை. கப்பலிலேயே குழுவாக பிரிந்து புட் பால் மேட்ச் நடத்துவதும், திரைப்பட விழா நடத்துவதும், பார்ட்டி கொண்டாடுவதுமாக எல்லைப் படையினரை எரிச்சல் அடைய வைத்து கொண்டிருந்தார்கள். அவர்கள் அதகளத்தின் உச்சமாக, 1968 ம் ஆண்டு ஒலிம்பிக்கிற்கு போட்டியாக கப்பலிலேயே பிட்டர் லேக் ஒலிம்பிக் நடத்தி உலகின் கவனத்தை ஈர்த்தார்கள்.


6 வருடங்கள் எல்லை வீரர்களுக்கு இப்படியாக தொல்லை கொடுத்து கொண்டிருந்த கப்பல் ஊழியர்களுக்கு ஒரு எதிர்பாராதா அதிர்ச்சி காத்திருந்தது. 6 வருடத்திற்கு முன்னால் தங்கள் நாட்டின் மீது குண்டு வீசி தாக்கிய இஸ்ரேலை பழி வாங்க சிரியாவுடன் சேர்ந்து இஸ்ரேல் மீது வான் வெளி தாக்குதலை நடத்தியது எகிப்து. இதை பார்த்த கப்பல் ஊழியர்கள் நொந்து போனார்கள். பிரச்சனையை முற்றுப்புள்ளி வைத்து முடிப்பார்கள் என்று எண்ணியிருந்தால் கமா போட்டு கண்டின்யூ செய்கிறார்களே... காலக்கொடுமை கதிரவா....என தலையில் அடித்து கொண்டார்கள்.


ஆனால் இந்த தாக்குதலால் எகிப்து, உலக அரங்கில் கடுமையான நெருக்கடியை சந்தித்தது. அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகளின் பெருங் கோபத்துக்கு ஆளானது. பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை முடித்து கொள்ளுமாறு இரு நாடுகளுக்குமே அழுத்தம் கொடுக்கப்பட்டது. எனவே வேண்டா வெறுப்பாக வேறு வழியின்றி இஸ்ரேலும் எகிப்தும் கை குலுக்கி சமாதானம் ஆனார்கள். ஆனால் அப்போதும் எகிப்து சூயஸ் கால்வாய் எனது பிறப்புரிமை என முழக்கமிட்டு முரண்டு பிடித்தது. சூயஸிற்காக எதையும் விட்டுத்தருவோம்...., ஆனால் எதற்காகவும் சூயஸையும் விட்டு தர மாட்டோம் என வீர வசனம் பேசினார்கள் சமாதானத்திற்கு வந்த எகிப்தின் வீரபாண்டிய கட்டபொம்மன்கள். அவர்களின் உக்கிரத்தை பார்த்த உலகின் சட்டாம் பிள்ளை நாடுகள் இஸ்ரேலை பணிந்து போக சொல்லி வற்புறுத்தினார்கள். விளைவு சூயஸ் எகிப்தின் கைகளில் வழங்கப்பட்டது. ஆனால் கால்வாய் திறக்கப்பட்டாலும் கப்பல்களுக்கு விடிவு காலம் பிறக்கவில்லை. ஏனெனில் அதில் மூழ்கியிருந்த கன்னிவெடிகளை அகற்றி அதனை பயணத்திற்கு உகந்ததாக மாற்றுவதற்கே 2 ஆண்டுகள் பிடித்தது. சரியாக 8 ஆண்டுகளுக்கு பிறகு 1975-ல் சூயஸ் கால்வாய் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. சிக்கியிருந்த கப்பல்கள் தாயகம் திரும்பின. இதனை 1 லட்சத்தும் அதிகமான மக்கள் துறைமுகத்தில் திரண்டு ஒரு திருவிழா போல கொண்டாடினர்.


15 கப்பல்கள் சிக்கிக் கொண்ட நிலையில் 14 கப்பல்கள் மட்டுமே கரை சேர்ந்தது எனில் அந்த குறுகிய பகுதியில் நின்ற கப்பலின் நிலை என்னவனாது என்ற கேள்வி எழலாம். இரண்டாது முறையாக எகிப்து இஸ்ரேல் மீது குண்டு வீசியதாக சொன்னோம் அல்லவா...அந்த போராடு போராக அவர்கள் அனாதையாக நின்றிருந்த அந்த அமெரிக்க கப்பலின் மீதுதான் குண்டு வீசினார்கள். அமெரிக்கா மீதான வெறுப்பை கப்பல் மீது கக்கி விட்டது எகிப்து..


165 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரு கால்வாய் இன்று உலகின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் இடத்தில் வந்து நிற்கிறது. சூயஸ் இன்றி பொருளாதார கிராஃப் ஒரு புள்ளி கூட நகராது என்பதுதான் இப்போதைய உலகின் நிலை. ஒரு நாளைக்கு 15 கப்பல்கள் இந்த கால்வாய் வழியாக பயணிக்கிறது. 2020 ம் ஆண்டில் மட்டும் 19 ஆயிரம் கப்பல்கள் பயணித்திருக்கின்றன. இந்திய நாட்டின் புழங்கும் எல்லா இறக்குமதி பொருட்களுமே இந்த கால்வாய் வழியாக வந்தடைபவை தான். எனவே மார்ச் 23 அன்று எவர்கிவன் கப்பல் மணல் புயலில் சிக்கி கரைதட்டி நின்ற போது உலகம் பதறியது.


1300 அடி நீளம், 60 மீட்டர் அகலம்,... ஒப்பீட்டுக்கு சொல்ல வேண்டுமெனில் செங்குத்தாக நிறுத்தினால் ஈஃபிள் டவரை காட்டிலும் உயரம். இப்படி ஒரு பிரமாண்டத்தை மிதக்க செய்வது என்பது எத்தனை சவாலானது இரவு பகலாக உழைத்தார்கள் தொழில் நுட்ப வல்லுனர்கள். மார்ச் 23 அன்று மணல் புயலால் தரை தட்டி நின்ற கப்பலை மீட்க சூயஸ் கால்வாய் ஆணையம் மற்றும் போஸ்காலிஸ் என்ற டச்சு நிறுவனமும் இணைந்து சுமார் 10 லட்சத்து 60 ஆயிரம் கனமீட்டர் அளவுக்கு மணலை தோண்டும் முயற்சியில் இறங்கின. இது தவிர எவர்கிவன் கப்பலை நிர்வகித்து வரும் பிஎஸ்எம் நிறுவனமும் மணல் அள்ளும் கப்பலை சூயஸ் பகுதியில் கொண்டு வந்து நிறுத்தியது


அதன் படி 4000 டன் கொண்ட கப்பலின் சீரான ஓட்டத்திற்காக 18 மீட்டர் ஆழத்துக்கு மண் தோண்டப்பட்டு 27000 கியூபிக் மீட்டர் அளவிலான மண் வெளியேற்றப்பட்டது. டச்சை சேர்ந்த சால்வேஜ் நிறுவனத்தின் ஆலோசனையின் பேரில் இழுவை படகுகள், கப்பலின் பின் பகுதியை நீரின் மேற்பரப்புக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டன. உதவியாக அகழ்வு படகுகளும் ஈடுபடுத்தப்பட்டன. முதல் கட்டமாக நான்கு மீட்டரில் தூரத்தில் சிக்கியிருந்த கப்பலின் பின்புறபகுதி 102 மீட்டர் தூரத்திற்கு அப்புறபடுத்த பட்டது. இதனால் கப்பல் நீரில் மிதக்க தொடங்கியது. மனித முயற்சிகள் மட்டுமின்றி இயற்கையும் கப்பலை மீட்க உதவியது. 28 ம் தேதி பெளர்ணமி அன்று கடலில் உருவான ராட்சத அலை ஏற்படுத்திய உந்துதலால் கப்பலை கால்வாயின் மையப்பகுதிக்கு கொண்டு வர உதவியது. அதன் படி கால்வாயில் சிக்கிய கப்பல் சரியாக ஒரு வாரத்திற்கு பின்னர் வெற்றிகரமாக மீட்கபட்டது


இந்த ஒரு வார காலம் சூயஸ் கால்வாய் ஏற்பட்ட இந்த தடையால் 367 கப்பல்கள் கால்வாயின் நுழைவு வாயிலில் காத்து கிடந்தன. எவர்கிவன் ஒரு வேளை இன்னும் மீட்கப்படாமல் இருந்திருமாயின் உலகம் பொருளாதாரம் முடங்கியிருந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. 50,000 யானைகளின் எடைக்கு ஈடான சரக்கு எவர் கிவன் கப்பலில் இருந்ததாக கூறப்படுகிறது. ஒரு கப்பலிலேயே இவ்வளவு சரக்குகள் எனில் ஒவ்வொரு கப்பல் எடையையும் கணக்கிட்டால் உலகின் பொருளாதாரம் விளங்கும்.


கடந்த காலத்தின் மகிச்சியையும், துயரங்களையும் மெல்ல அசைபோட்ட படி சூயஸ் கால்வாய் இன்று எந்த ஆர்ப்பாட்டமின்றி அழகாக ஊர்ந்து கொண்டிருக்கிறது. கப்பலில் பணியாற்றும் ஒவ்வொரு ஊழியனுக்கும் சூயஸை கடக்க வேண்டும் என்பதுதான் கனவாகத்தான் இருக்கிறது. நாற்புறமும் நீரையே பார்த்து பூத்து போன கண்களுக்கு சூயஸ் கரையின் செந்நிலம் சிலிர்ப்பை உண்டாகுவதில் ஆச்சரியமில்லை. அதன் நுழைவுவாயில் ஒரு புறம் காட்சி அளிக்கும் பழமையான எகிப்து நகரின் கட்டிங்களும் மறுபுறம் பாலைவனமும் பார்க்க பார்க்க சலிக்காத காட்சிகள். மிதப்பது சுகமெனில் நகருக்குள் மிதப்பது எத்தனை சுகம். உண்மையில் சூயஸ் ஒரு மிதக்கும் சொர்க்கம் தான்.


சாலையில் செல்லும் வாகனங்களிடம் சுங்க கட்டணம் வசூலிப்பது போல கால்வாயில் செல்ல கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நடுக்கடலில் ஒரு கால்வாய்... அதில் ஒரு சுங்கச் சாவடி....கேட்கவே சுவாரஸ்மாக இருக்கிறதல்லவா..? பொதுவாக வரலாறுகள் சுவாரஸ்யம் மட்டுமல்ல. அது சொல்லும் நீதிகள் அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று.


வரலாற்றை அறிந்து கொள்கிற சமூகம் மேன்மையுறுகிறது என்கிறனர் ஞானிகள். ஏனெனில் வரலாற்றை அறிதல்..., குரூரத்தை இல்லாமல் செய்யும், சரியான அரசியல் நோக்கி நகர்த்தும். உயிரின் வலி கடத்தும் பூமிப்பந்தில் விரவிக் கிடக்கும் ஒவ்வொரு செல்லின் மீதும் சமமான அன்பை பகிர்ந்தளிக்க செய்யும். ஏனெனில் வரலாறு என்பது மனதில் நிற்கா எண்களும், பெயர்களும் மட்டுமல்ல. அது கடவுளின் விரல் அது நம்மை சரியான திசையை காட்டும். வரலாறு மிக முக்கியம் அமைச்சரே...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...