கொரோனாவால் உயிரிழப்பை தடுப்பது எப்படி?
தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை வீசி வருகிறது.
முதல் அலையை ஒப்பிடும் போது, இரண்டாம் அலை வேகமாகவும், அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.
இரண்டாம் அலையால் பாதிக்கப் பட்டவர்கள் 45 வயதிற்கு உட்பட்டவர்களே அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏனென்றால் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாலும், ஓரளவிற்கு கொரோனா பாதுகாப்பு விதிகளை கடைபிடிப்பதாலும், இத்தகைய வயதினருக்கு கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்படவில்லை.
இந்த வயதினரில் உள்ளவர்களில், சிலர் கொரோனா பாதிப்புக்கு ஆளானாலும், அவர்களுக்கு தீவிர சிகிச்சை பெரும்பாலும் தேவைப்பட வில்லை.
ஆகவே கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள பின்பற்ற வேண்டியவை:
1. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
2. வீட்டை விட்டு வெளியே வந்தால், மூன்றடுக்கு பாதுகாப்பு கொண்ட முகக் கவசம் அணிய வேண்டும்.
3. முகக்கவசம் அணிந்திருந்தாலும், 6 அடி இடைவெளி பின்பற்ற வேண்டும்.
4. வெளியிலிருந்து வீட்டிற்கு வந்தவுடன் கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும். கைகளைக் கழுவாமல் மூக்கு, வாய், கண்களை தொடக் கூடாது.
உருமாறிய கொரோனாவால், பாதிப்பு விரைவாக ஏற்படுகிறது.
தொற்றுக்கு ஆளான ஒன்றிரண்டு நாட்களிலேயே, நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கொரோனா பரிசோதனைக்கு சளி மாதிரி மூக்கு மற்றும் தொண்டையில் மட்டுமே எடுக்கப் படுகிறது.
இங்கு எடுக்கப் படும் சளி மாதிரியில் கொரோனா தொற்று இல்லை என்றாலும், CT SCAN பரிசோதனையில், நுரையீரல் பாதிப்பு அதிகம் தெரிகிறது.
இதனால் மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.
கொரோனாவின் தீவிர பாதிப்பை எவ்வாறு வீட்டிலேயே கண்டறியலாம்?
ஒவ்வொரு வீட்டிலும் TV, மின்விசிறி இருப்பது போல, இந்த பெருந்தொற்று காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டியவை:
1. நவீன வெப்ப அளவீட்டு கருவி (டிஜிட்டல் தெர்மா மீட்டர்) - இதன் விலை ரூ 100 முதல் ரூ 150 க்குள் வரும்.
2. பல்ஸ் ஆக்சி மீட்டர் (நம் உடலில் ஆக்சிஜன் அளவு எவ்வளவு உள்ளது என்பதை கண்டறியும் கருவி) - இதன் விலை ரூ 1000 முதல் ரூ 1500 வரை வரும்.
நமக்கோ அல்லது நம் குடும்ப உறுப்பினர்களுக்கோ, சளி அல்லது காய்ச்சல் அல்லது மூச்சு வாங்குதல் அல்லது மூச்சு விடுவதில் சிரமம் அல்லது இதய துடிப்பு அதிகரித்தல்
போன்ற அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றோ அல்லது பலவோ இருப்பின், உடனடியாக நாம் செய்ய வேண்டியவை:
1. உடல் வெப்ப நிலை 98.4 அல்லது அதற்கு கீழே உள்ளதா என்பதை கண்காணித்தல்.
2. உடலில் ஆக்சிஜன் அளவு 95 க்கும், மேல் உள்ளதா என கண்காணித்தல்.
கொரோனா உயிரிழப்பை தடுப்பதில் பல்ஸ் ஆக்சி மீட்டரின் பங்கு:
சாதாரணமாக, ஆரோக்கியமாக உள்ள நபரின் உடலில் உள்ள ஆக்சிஜன் அளவு 99 ஆகும். இது 95 க்கு மேல் இருப்பது கட்டாயம்.
ஒருவருக்கு ஆக்சிஜன் அளவு 95 ஐ விட குறைந்து 94, 93 என்ற நிலை ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
ஆக்சிஜன் அளவு 90 ஐ விட கீழே குறையும் போது, உடனடியாக மருத்துமனையில் சேர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட வேண்டும்.
இவ்வாறு சிகிச்சை மேற்கொள்வதால், உயிரிழப்பை பெரும்பாலும் தடுக்க முடியும்.
உடலில் ஆக்சிஜன் அளவு குறைவதை, சாதாரணமாக பாதிக்கப் பட்டவரால் உணர முடியாது.
ஆக்சிஜன் அளவு 80 க்கும் கீழே குறையும் போது தான், பாதிக்கப் பட்டவர் மூச்சு விட சிரமப் படுவதை உணருவார்.
அந்த நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் போது, மருத்துவர்களால் சிகிச்சை அளிப்பதும் கடினம். இத்ததைய நிகழ்வுகளில் தான் உயிரிழப்பு அதிகம் ஏற்படுகிறது.
ஆகவே, கொரோனா தொற்றால் உயிரிழப்பை தடுக்க ஒவ்வொரு வீட்டிலும் தெர்மா மீட்டர் மற்றும் பல்ஸ் ஆக்சி மீட்டர் இருப்பது அவசியமாகிறது.