கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கரோனா தொற்றாளர்களை வீட்டிலேயே பராமரிப்பது எப்படி? - டாக்டர் கு. கணேசன், இராஜபாளையம்.




கரோனா தொற்றாளர்களை வீட்டிலேயே பராமரிப்பது எப்படி? - டாக்டர் கு. கணேசன், இராஜபாளையம்.


கரோனா தொற்றின் இரண்டாம் அலை நாடு முழுவதும்  தீவிரமடைந்துவருகிறது.


மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை, மருந்துகள் இல்லை, ஆக்ஸிஜன் இல்லை, தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு போன்ற போதாமைகளோடுதான் கரோனாவுக்கு எதிரான போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. இந்த இக்கட்டான சூழலில் பெரும்பாலான தொற்றாளர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்கின்றனர். அவர்களைப் பராமரிப்பதிலும் பலதரப்பட்ட சந்தேகங்கள் இருக்கின்றன.


மூன்று வகை தொற்றாளர்கள்

கரோனா தொற்றாளர்களை ஆரம்பநிலை, மத்திய நிலை, தீவிர நிலை என மூன்று வகைப்படுத்தலாம். லேசான காய்ச்சல், இருமல், தொண்டை வலி, தலைவலி, உடல் அசதி, வாசனை இழப்பு, சுவை இழப்பு, வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்றவற்றுடன் ஆக்ஸிஜன் அளவு 94%க்கும் அதிகம் என்றால் அவர்கள் ஆரம்பநிலைத் தொற்றாளர்கள். இவர்கள் ஆரம்பக் கட்ட மாத்திரைகளை மருத்துவரிடம் பெற்றுக்கொண்டு, வீட்டிலேயே 2 வாரங்களுக்குத் தனிமைப்படுத்திக் கொள்ளலாம். பொதுவாக, இவர்களுக்கு அடுத்த 5 நாட்களில் அறிகுறிகள் குறைந்துவிடும்; வாசனையும் சுவையும் படிப்படியாக மீண்டுவிடும்.


மாறாக, 5 நாட்கள் கடந்த பிறகும் காய்ச்சல் நீடிப்பது, இடைவிடாத இருமல் எனச் சில அறிகுறிகள் தீவிரமடையலாம். முதலில் குறைந்த அறிகுறிகள் மீண்டும் தோன்றலாம். அப்போது அவர் நிமிடத்துக்கு 24 முறைக்கும் மேல் மூச்சுவிடுவார். ஆக்ஸிஜன் அளவு 94%க்கும் 90%க்கும் இடையில் இருக்கும். இவர்கள் மத்திய நிலைத்தொற்றில் இருப்பவர்கள். இவர்களை மருத்துவனையில் அனுமதிக்க வேண்டியது கட்டாயம். இவர்களுக்கு மாத்திரை, ஊசி மருந்துகளுடன் மூக்கின் வழி ஆக்ஸிஜன் செலுத்தப்படும் நிலை சில நாட்களுக்கேனும் இருக்கலாம்.


தொற்றாளருக்கு மூச்சுத்திணறல் தீவிரமாகிறது, நிமிடத்துக்கு 30 முறைக்கும் மேல் மூச்சுவிடுகிறார், ஆக்ஸிஜன் அளவு 90%க்கும் கீழே செல்கிறது, சுயநினைவு குறைகிறது என்றால் அவர் தீவிர நிலைக்குச் சென்றுவிட்டார் என்று பொருள். அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில்தான் அனுமதிக்கப்பட வேண்டும்.  அவருக்கு அதிவேக ஆக்ஸிஜனும் வென்டிலேட்டர் சிகிச்சையும் கூடுதல் நாட்களுக்குத் தேவைப்படும்.


வீட்டில் பராமரிக்கும் முறைகள்

கரோனா தொற்றாளர்களில் 80% பேர் வரை ஆரம்பநிலையில் உள்ளவர்களே. இவர்களை வீட்டில் 2 வாரங்களுக்குத் தனி அறையில் வைத்துக்கொள்ளலாம். அறைச் சன்னல்களைத் திறந்து காற்றோட்டத்துக்கு வழி செய்யுங்கள். குளிரூட்டம் வேண்டாம். அறையையும் கழிப்பறையையும் அவர் பயன்படுத்தும் உணவுத்தட்டு, கதவுக் கைப்பிடி உள்ளிட்ட எல்லாப் பொருள்களையும் தினமும் 1% சோடியம் ஹைப்போகுளோரேட் கிருமிநாசினியால் சுத்தப்படுத்துங்கள்.


தொற்றாளர் தனிமையில் இருந்தாலும் பகல் முழுவதும் முகக்கவசம் அணிய வேண்டும். அடிக்கடி கைகளைச் சோப்பு போட்டுக் கழுவிக்கொள்ள வேண்டும். மற்றவர்கள் அவரிடமிருந்து 6 - 10 அடி தூரம் தள்ளியிருக்க வேண்டும். அவரைப் பராமரிப்பவரும் வீட்டில் உள்ள மற்றவர்களும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம். தினமும் குறைந்தது  2 முறை அதை மாற்றிக்கொள்ள வேண்டும். வீட்டில் உள்ளவர்கள் அவசியமில்லாமல் வெளியில் செல்லக்கூடாது. வீட்டுக்கு அடுத்தவர்கள் வரவும் அனுமதிக்க வேண்டாம்.


வெப்பமானி, பல்ஸ் ஆக்ஸிமீட்டர், ரத்த அழுத்தமானி ஆகியவை வீட்டில் இருக்க வேண்டும். இவர்கள் இணையம் அல்லது தொலைபேசி மூலமாக மருத்துவர் ஒருவரின் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். உடல் வெப்பத்தையும் பல்ஸ் ஆக்ஸிமீட்டரில் ஆக்ஸிஜன் அளவையும் சீரான இடைவெளியில் தினமும் தலா 4 முறையும் ரத்த அழுத்தத்தை 3 முறையும் அளந்துகொள்ள வேண்டும். அவற்றில் மாறுதல் தெரிந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். துணை நோய்கள் இருந்தால் அவற்றுக்கான மாத்திரைகளைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.


குப்புறப் படுப்பது நல்லது

தொற்றாளரின் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கத் தொடர்ந்து 2 - 4 மணி நேரம் குப்புறப் படுக்க வேண்டும். தினமும் 4 - 8 முறை இப்படிப் படுத்துக்கொண்டால் நல்லது. இரவில் தொடர்ந்துகூட குப்புறப் படுத்துக்கொள்ளலாம். ஆனால், கர்ப்பிணிகள், தீவிர இதயப் பிரச்சினை இருப்பவர்கள், முதுகெலும்பில் பிரச்சினை உள்ளவர்கள் இதற்கு விதிவிலக்கு. சாப்பிட்டபின் அரை மணி நேரத்துக்குக் குப்புறப் படுக்கக்கூடாது. தொற்றாளர்கள் எந்நேரமும் படுத்தே இருக்காமல் அறைக்குள்ளே அவ்வப்போது நடக்கலாம். இதனால் உடலில் ரத்த உறைவு ஏற்படாது. பிராணயாமம், பலூன் ஊதுவது, ஸ்பைரோமீட்டரில் காற்றை ஊதுவது உள்ளிட்ட மூச்சுப் பயிற்சிகளையும் செய்யலாம்.


தொற்றாளரைப் பராமரிப்பவரும் கைகளை அடிக்கடி சோப்புப் போட்டுக் கழுவிக்கொள்ள வேண்டும். தொற்றாளருக்கான உணவுகள் அவரது அறையின் கதவுக்கு அருகில் வைக்கப்பட்டு, தொற்றாளர் எடுத்துக்கொள்ளச் செய்ய வேண்டும். பயன்படுத்திய முகக்கவசங்களை கிருமிநாசினி கலக்கப்பட்ட தண்ணீரில் நனைத்தபின் மூடி உள்ள குப்பைத் தொட்டியில் போடவேண்டும். அவரது துணிகளை கிருமிநாசினி கலக்கப்பட்ட தண்ணீரில் அல்லது வெந்நீரில் நனைத்த பின்பு சலவை செய்யலாம். தொற்றாளர் குணமானதும் அவரது அறையைச் சுத்தப்படுத்தி 5 நாட்கள் கழித்து மற்றவர்கள் பயன்படுத்தலாம். 90 நாட்கள் கழித்து அவர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.


ஊட்டச்சத்து உணவுகள் முக்கியம்

தொற்றாளர்களுக்குக் குறைந்தது ஒரு மாதத்துக்குப் புரதச்சத்து, நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவுகளைத் தர வேண்டும். காலை டிபனுக்கு இட்லி, தோசை, ஊத்தாப்பம், பொங்கல், கிச்சடி, கேசரி, சப்பாத்தி, பருப்பு, சாம்பார், சட்னி சாப்பிடக் கொடுக்கலாம். மதியம் சோறு, சப்பாத்தி, பாசிப்பருப்பு சாம்பார், கீரை, மிளகு ரசம், மோர், தயிர். தினமும் இரண்டு வகை காய்கள், ஒரு பழம், மாலையில் பயறு, சுண்டல், கொண்டைக்கடலை, சூப் கொடுப்பது நல்லது. காளான், மீன், இறைச்சிகளை அடிக்கடி எடுத்துக்கொள்ளலாம். இடைவேளையில் மஞ்சள் பால், மிளகுப் பால், சுக்கு, இஞ்சி கலந்த தேநீர் குடிப்பது ஆரோக்கியம் தரும். இரவு டிபன் காலை உணவுபோல் இருக்கலாம். தினமும் 2 முட்டை அவசியம்; அரை லிட்டர் பால், 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். மதுவும், புகையும் ஆகாது.


தொற்றாளர் தினமும் மூன்று முறையேனும் நீராவி பிடிப்பதும் தொண்டையை உப்புநீரில் கொப்பளிப்பதும் நல்லது. இதைத் தொற்றாளர் மட்டுமல்லாமல் வீட்டில் உள்ள அனைவரும் மேற்கொள்ளலாம். இவை எல்லாமே கரோனா தொற்றாளர்களுக்கு ஆற்றலைக் கொடுப்பதோடு நோய் எதிர்ப்பாற்றலையும் மேம்படுத்தும். கரோனா மறுபடியும் தொற்றாத அளவுக்குப் பாதுகாப்பு கொடுக்கும்.


- கு.கணேசன்.

பொதுநல மருத்துவர்,

தொடர்புக்கு: gganesan95@gmail.com


நன்றி:  ‘தமிழ் இந்து’ நாளிதழ்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...