அகவிலைப்படி உயர்வால் அடுத்த மாதத்தில் இருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்க உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை சரிகட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 2020 முதல் அகவிலைப்படி (DA) உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. 2019ம் ஆண்டு இறுதியில் அடிப்படை சம்பளத்தில் அகவிலைப்படி 17 சதவீதமாக இருந்தது. இதில், 2020 ஜனவரியில் 4 சதவீதமும், ஜூனில் 3 சதவீதமும், 2021 ஜனவரியில் 4 சதவீதமும் என மொத்தம் 11 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதனால், இப்போது 17 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 28 சதவீதமாக உயரும். மேலும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், சுமார் 15 சதவீதம் உயர்ந்து 32 சதவீத கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் கணிசமாக உயர உள்ளது. உதாரணமாக, அடிப்படை பணியில் உள்ளவர்களை எடுத்துக் கொண்டால், அவர்களின் அடிப்படை ஊதியமாக 18,000 இருக்கும். 15 சதவீத அகவிலைப்படி உயர்வு என்றால் மாதத்திற்கு 2,700ம், ஆண்டிற்கு 32,400ம் சம்பளத்தில் உயரும். இதன் மூலம், 50 லட்சம் மத்திய பணியாளர்களும், 61 லட்சம் பென்சன்தாரர்களும் பலன் அடைவார்கள். இதுதவிர, இரவு நேர பணிப்படி முறையிலும் மத்திய அரசு மாற்றம் செய்ய உள்ளது.