சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 3 நாட்களில் இருக்கைகளை தாண்டி 2 மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளதால், அரசிடம் கூடுதல் வகுப்பறைகள், ஆசிரியர்களை கேட்டுப் பெற நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும்நிலையில், அரசு உத்தரவுப்படி ஜூன் 14 முதல் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளன.
தனியார் பள்ளி மோகத்தால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வரும் இக்காலக்கட்டத்தில் ஆச்சரியப்படுத்தும் விதமாக காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
நடுநிலைப்பள்ளியாக இருந்த இப்பள்ளி, 2013-2014-ம் கல்வியாண்டில் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது 6 ஆசிரியர்களும் 218 மாணவர்களும் இருந்தனர். அதே ஆண்டு புதிதாக தலைமைஆசிரியராக பொறுப்பேற்ற ஆ. பீட்டர்ராஜா முயற்சியால் 2014- 2015-ம் கல்வியாண்டில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டது.
தரம் உயர்த்தப்பட்டதில் இருந்தே 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை இப்பள்ளி பெற்று வருகிறது. இதனால் மாணவர் எண்ணிக்கையும் படிப் படியாக உயர்ந்தது. கடந்த ஆண்டே 1,490 மாணவர்கள் படித்தனர். 45 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். கரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்ட மாணவர்கள் சேர்க்கை ஜூன் 14-ம் தேதி தொடங்கியது. 200 இடங்களே உள்ள 6-ம் வகுப்பிற்கு மூன்று நாட்களில் 400-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த ஆண்டு பலர் தங்களது குழந்தைகளுக்கு இடம் கிடைக்காமல் திரும்பிச் சென்றனர். ஆனால் இந்த ஆண்டு விண்ணப்பிக்கும் அனைவரையும் சேர்த்து கொள்ள பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் ஆ. பீட்டர்ராஜா கூறுகையில், ‘‘ ஆசிரியர்கள், கட்டிட வசதி அடிப்படையில் 6-ம் வகுப்பில் 200 மாணவர்களே சேர்க்க முடியும். இருந்தாலும் இந்தாண்டு அரசு பள்ளிக்கு வருவோர் அனைவரையும் சேர்த்து கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால் விண்ணப்பிக்கும் அனைவரையும் சேர்க்க உள்ளோம். தற்போது ஆன்லைன் வகுப்பு என்பதால் பெரிதாக சிரமம் இருக்காது. பள்ளி திறப்புக்குள் கூடுதல் வகுப்பறைகள், ஆசிரியர்களை அரசிடம் கேட்டு பெறவோம்,’’ என்று கூறினார்.