➤10, 12-ஆம் வகுப்பு மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார் படுத்த நடவடிக்கை
➤கல்வித்தொலைக்காட்சி, ஆன்லைனில் நடத்தப்படும் பாடங்களில் இருந்து ஒவ்வொரு மாத இறுதியிலும் WhatsApp மூலம் அலகுத் தேர்வு நடத்த வேண்டும்.
10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகுத்தேர்வு நடத்தப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்படவில்லை. எனினும், கல்வித் தொலைக்காட்சி மூலமாகவும், ஆன்லைன் வகுப்புகள் மூலமும் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில், வாட்ஸ்அப் மூலமாக மாதம்தோறும் அலகு தேர்வுகள் நடத்த தமிழக பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்திருக்கிறது. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள், மாணவர்களுக்கென தனி வாட்ஸ்அப் குழுக்கள் அமைப்பது, மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவது குறித்து ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, மாணவர்களுக்கு தனியாகவும், மாணவியருக்கு தனியாகவும் வாட்ஸ்அப் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் குழுவில் வினாத்தாள்களை அனுப்பி மாணவர்கள், வினாத்தாளைப் பார்த்து அதற்கு உரிய விடைகளை தனித்தாளில் எழுதி, அதில் பெற்றோர் கையொப்பம் பெற்று, அதை பி.டி.எப்., பைலாக மாற்றி அனுப்ப வேண்டும்.
மாணவர்களின் அந்த விடைத்தாளில் பெயர், தேர்வுத்துறையால் வழங்கப்பட்டுள்ள பதிவு எண் இடம்பெற வேண்டும் என்றும், ஆசிரியர்கள் விடைத்தாள்களை வாட்ஸ்அப் மூலம் திருத்தி அதற்கான மதிப்பெண்களை வழங்குவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அலகு தேர்வுகளை நடத்துவதன் மூலம், மாதம் தோறும் மாணவர்களின் கல்வித்திறனை மதிப்பீடு செய்ய இந்தத் திட்டம் மிகவும் பயனுடையதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கல்வி தொலைகாட்சி வாயிலாக ஜூன் மற்றும் ஜூலை ஆகிய 2 மாதங்களுக்கான நடத்தி முடிக்கப்பட்ட பாட பகுதிகளுக்கு அலகுத் தேர்வை நடத்த வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை 50 மதிப்பெண்களுக்கு நடத்த வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.