தசம எண்களில் பிளஸ் 2 மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டுள்ளன.தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக, பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவதாக அரசு அறிவித்தது. இதையடுத்து, 10, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 70 சதவீதம், பிளஸ் 2 செய்முறைத் தேர்வில் 30 சதவீதம் என்ற விகிதத்தில் மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் இதுவரை 80, 70 என்பதுபோல முழுமையான மதிப்பெண்களாக வழங்கப்பட்டன. தற்போதைய கணக்கீட்டின்படி பெரும்பாலும் இறுதி மதிப்பெண்கள் 70.11 என்பதுபோல தசம எண்களுடன் சேர்ந்து வரும். மாணவர்கள் உயர்கல்வியில் சேரும்போது பாதிப்பு அடைவதைத் தவிர்க்க மதிப்பெண் சான்றிதழில் தசம விகிதங்கள் அப்படியே குறிப்பிடும் வகையில், புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக, பிளஸ் 2 உயிரியல் பாடத்தில் ஒரு மாணவரின் இறுதி மதிப்பெண் கூட்டுத்தொகை 78.74 என்று வந்தால் அது முழு மதிப்பெண்ணாக 79 என மாற்றப்படாமல் 78.74 என்று தசம எண்ணாகவே மதிப்பெண் சான்றிதழில் குறிப்பிடப்படும்.
இந்தப் புதிய நடைமுறை நடப்பு ஆண்டு அமலுக்கு வருகிறது. கட் ஆஃப் மதிப்பெண் கணக்கீட்டின்போது இதுபெரிதும் உதவியாக இருக்கும் எனக் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.