நாடு முழுவதும் கரோனா பரவலால் கல்லூரிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்களுக்கு இணைய வழியில் பாடங்கள் மற்றும் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதிய கல்வியாண்டுக்கான கால அட்டவணை மற்றும் வழிகாட்டுதல்களை பல்கலைக்கழக மானியக்குழு (UGC) தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்விவரம்: கரோனா வைரஸ் பரவல் சூழலில் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தும் விவகாரத்தில் கடந்தாண்டு வழங்கப்பட்ட வழிமுறைகளை கல்வி நிறுவனங்கள் பின்பற்றிக் கொள்ளலாம். அதேநேரம் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் நேரடி அல்லது இணையவழியில் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் கட்டாயம் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.
சிபிஎஸ்இ மற்றும் மாநில தேர்வு வாரியங்கள் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை ஜூலை 31-ம் தேதிக்குள் வெளியிட உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
எனவே, இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை ஆகஸ்ட் மாதம் தொடங்கி செப்டம்பர் 30-ம் தேதிக்குள் கல்லூரிகள் முடிக்க வேண்டும். முதலாமாண்டு வகுப்புகள் அக்டோபர் 1-ம் தேதிக்குள் தொடங்க வேண்டும். நடப்பு கல்வி ஆண்டு 2022 ஜூலை 31-ம் தேதியுடன் நிறைவுபெறும். அதற்கு ஏற்ப கல்வியாண்டு கால அட்டவணையை உயர் கல்வி நிறுவனங்கள் சூழலின் தீவிரம் பொறுத்து வடிவமைத்துக் கொள்ளலாம். கல்லூரிகளில் சேர்க்கை ஆணை பெற்ற மாணவர்கள் அக்டோபர் 31-ம் தேதிக்குள் விலகிவிட்டால் முழுக் கல்விக் கட்டணத்தையும் நிர்வாகம் வழங்க வேண்டும்.
கூடுதல் தகவல்களை யுஜிசியின் இணையதளத்தில் (www.ugc.ac.in) அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே பொறியியல் கல்லூரிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஏஐசிடிஇ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.