வருத்தப்படாதீர்கள்... பள்ளியில் இடமில்லை - மாணவர் சேர்க்கையில் அசத்தும் அரசு தொடக்கப் பள்ளி...
`அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி கிடைக்காது' என்று கருதி, தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் கொண்டுபோய் சேர்க்கும் பெற்றோர்கள் அதிகரித்துவிட்ட காலமிது. ஆனால், கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ஒருவர், `வருத்தப்படாதீர்கள்... பள்ளியில் இடமில்லை' என்று கூறி 60 மாணவர்களின் பெற்றோர்களை திருப்பி அனுப்பிய நிகழ்வு, ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கரூர் மாவட்டத்தில் உள்ள காந்திகிராமம் அருகில் உள்ள நரிக்கட்டியூரில் இயங்கி வருகிறது, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி. இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியையாக விஜயலலிதா பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2002-ம் ஆண்டு இங்கு பணிக்கு வரும்வரை, வெறும் 5 மாணவர்கள், ஓராசிரியர் என்று இழுத்து மூடப்படும் நிலையில் இருந்தது இந்தப் பள்ளி. ஆனால், தன் சீரிய முயற்சியால் எண்ணற்ற வசதிகளை இங்கு ஏற்படுத்தியுள்ளார் விஜயலலிதா.
விளைவு, தற்போது இந்தத் தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை, 563. இந்தக் கல்வி ஆண்டில் மட்டும் 209 புதிய மாணவர்களைச் சேர்த்து, அரசு உயர்நிலை, மேல்நிலை, தனியார் பள்ளிகளையே மிரள வைத்திருக்கிறார். அதோடு, இந்தப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க வந்த 60 பெற்றோர்களிடம், `சீட் இல்ல... கூடுதல் மாணவர்கள் படிக்கும் அளவிற்கு பள்ளியில் போதிய இடவசதி இல்ல' என்று அன்பாக மறுத்து, அனுப்பி ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்.
தலைமை ஆசிரியை விஜயலலிதாவிடம் பேசினோம்.
``நான் இந்தப் பள்ளிக்கு வந்தப்ப, வெறும் 5 மாணவர்கள் இருந்தாங்க. கடின முயற்சியால் அந்த வருஷமே எண்ணிக்கையை 38 மாணவர்களாக்கினேன். கல்வி கற்பிக்கும் முறை, கரூரிலேயே விமரிசையா ஆண்டு விழாவை கொண்டாடுறது என்று திறம்பட செயல்பட்டோம். இதனால், ஒவ்வொரு வருடமும் எங்க பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. கடந்த 2013-ம் ஆண்டு 7 ஆசிரியர்கள் பணியிடங்களை வாங்கினோம். இடவசதி இல்லைன்னாலும், மூன்று கட்டடங்கள் இருக்கு. இப்போ மாணவர்களின் எண்ணிக்கை 563 ஆக உயர்ந்துள்ளது.
இந்த வருடம் மட்டும் 209 மாணவர்களை புதிதாக சேர்த்துள்ளோம். தமிழக அளவில், எனக்குத் தெரிந்து ஓர் அரசு தொடக்கப்பள்ளியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில அதிகபட்சமா 1000 மாணவர்கள் படிக்கிறாங்க. அதற்குப் பிறகு, தமிழகத்திலேயே அதிக மாணவர்கள் படிக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி எங்க பள்ளிதான். இட வசதி இருந்தா, நாங்களும் 1000 மாணவர்களைத் தாண்டி சேர்க்க முடியும்.
இந்த வளர்ச்சிக்குக் காரணம், பள்ளியின் கட்டமைப்பையும், கல்வி கற்பிக்கும் முறையையும் நாங்க செம்மைப்படுதியதுதான். எல்லா வகுப்பறைகளிலும் ஸ்மார்ட் போர்டுகள், ஸ்மார்ட் டி.விகளை வைத்திருக்கிறோம். அதேபோல், கம்ப்யூட்டர், லேப்டாப்புகளும் உள்ளன. எல்லா கிளாஸ் ரூம்களிலும் கற்றல், கற்பித்தலுக்கான உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன. வீடியோ வாயிலாகவும் மாணவர்களுக்கு எளிமையாகவும், புதுமையாகவும், அவர்களுக்கு பிடிக்கும்படியும் பாடம் நடத்துறோம். அதேபோல், 5 வகுப்புகளிலும், 5 பாடங்களுக்கும் கண்காட்சி நடத்துறோம்.
எங்கள் பள்ளியில எந்த அறையிலும், வளாகத்திலும் தூசியைப் பார்க்கமுடியாது. `சுத்தத்தின் அவசியம்' குறித்து மாணவர்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துறோம். அதேபோல், கழிவறைகளை சுத்தமாக வைத்திருக்க மாணவர்களை பழக்கியிருக்கோம். பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்துவிட்டோம். இரண்டு ஸ்டீல் வாட்டர் பாட்டில்களில் ஒவ்வொரு மாணவரும் தண்ணீர் கொண்டுவர வலியுறுத்துகிறோம். மாணவர்கள் லீவு போடக்கூடாது என்பதை வலியுறுத்துகிறோம். அதையும் மீறி கட்டாயமாக லீவு எடுக்க வேண்டுமென்றால், அதற்கு உரிய முறையில் அனுமதி பெற வேண்டும் என்பதை கட்டாயமாக்கினோம்.
மதிய உணவு பையை ஒவ்வொரு வாரமும் சுத்தம் செய்ய சொல்லியிருக்கோம். மாணவர்கள் கட்டாயம் மதிய உணவு பையில் ஸ்பூன், துண்டு கொண்டு வர சொல்லியிருக்கோம். மதிய உணவில் தினமும் ஒரு கீரை கொண்டு வரச் சொல்லி, மாணவர்களின் சத்தான உணவுப் பழக்கத்தை உறுதி செய்றோம். அதனாலதான், தனியார் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பிள்ளைகளைக்கூட பல பெற்றோர்கள் இங்கே கொண்டு வந்து சேர்க்கிறாங்க.
15 கிலோமீட்டர்கள் தாண்டியுள்ள கிராமங்களில் இருந்தெல்லாம், அவர்களே ஆட்டோ வைத்து தங்கள் பிள்ளைகளை எங்கப் பள்ளியில் படிக்க அனுப்புறாங்க பெற்றோர். எங்கப் பள்ளிக்கு தினமும் 20 ஆட்டோக்கள் பிள்ளைகளை கொண்டு வந்து விட்டு, மாலையில் அழைத்துப் போக இயங்கி வருது. ப்ளீஸ், உங்க பிள்ளைகளை கொண்டு வந்து இங்கே சேருங்க' என்று நாங்கள் வீடு வீடாக போய் கெஞ்சி கேன்வாஸ் செய்தது ஒருகாலம். ஆனா, கடந்த சில வருடங்களா, `பள்ளியில் இடமில்லை' என்று நாங்கள் பிள்ளைகளை சேர்க்க வரும் பெற்றோர்களை அன்போடு கூறி, அனுப்பும் நிலை ஏற்பட்டிருக்கு. இந்த வருடமும் அப்படி, `இடமில்லை' என்று கூறி, 60 பெற்றோர்களை திருப்பி அனுப்பிருக்கோம்.
இப்படி சிறப்பாக செயல்பட்டதால, 2011-ம் ஆண்டு மாநில அளவிலும், 2014-ம் ஆண்டு தேசிய அளவிலும் நல்லாசிரியர் விருது வாங்கினேன். மூன்று ஆண்டுகள் மாநில அளவில் சிறந்த தொடக்கப் பள்ளியாக எங்க பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டு மாநில அளவில் சிறந்த தொடக்கப் பள்ளியா விருது பெற்றோம். இதைத் தவிர, தனியார் அமைப்புகள் கொடுத்த விருதுகள் ஏராளம். சமீபத்தில் எங்க பள்ளிக்கு விசிட் அடித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எங்க பள்ளியை பார்த்து வியந்து பாராட்டினார். `என்ன உதவி தேவை'னு கேட்டார். `இன்னும் மூன்று ஆசிரியர்களும், கூடுதல் தூய்மைப் பணியாளர்களும், கணினிகளும் தேவை'னு சொல்லியிருக்கிறோம். கூடுதல் வசதி கிடைத்தால், எங்க பள்ளியின் தரத்தை இன்னும் அதிகப்படுத்துவோம்" என்கிறார் விஜயலலிதா.
மகிழ்ச்சி!