தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தை திருத்தி அமைத்து துணைத் தலைவர், உறுப்பினர் செயலர் உள்ளிட்ட உறுப்பினர்களையும் நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதற்கான அறிவிப்பைமுதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தில் கடந்த 2016ம் ஆண்டு முதல், மன்றத்தின் துணைத் தலைவர் பதவி நிரப்பப்படாமலும், உயர்கல்வி மன்றம் திருத்தி அமைக்கப்படாமலும் இருப்பதால் அதை திருத்தி அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான உத்தரவை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அதன்படி திருத்தி அமைக்கப்பட்ட தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் தலைவராக உயர்கல்வித்துறை அமைச்சரும், துணைத் தலைவராக பேராசிரியர் ராமசாமியும், உறுப்பினர் செயலராக பேராசிரியர் கிருஷ்ணசாமியும், பணி வழி உறுப்பினர்களாக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், ஆளுநரின் செயலாளர், உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர், பல்கலைக் கழக மானியக் குழுவின் செயலாளர், கல்லூரிக் கல்வி இயக்குநர் மற்றும் தொழில் நுட்பக் கல்வி இயக்குநர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தகுழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் ராமசாமி, அழகப்பா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகப் பணியாற்றியவர். இவர் அறிஞர் அண்ணா விருது, ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர். மேலும், கடந்த 2006ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி, இதே பதவியில் பேராசிரியர் ராமசாமியை நியமித்தார். அந்த பதவியில் 2006 முதல் 2011ம் ஆண்டு வரை அவர் நீடித்தார். தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதும் பல்வேறு விருதுகளும் பெற்றவர்...