மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட தமிழ்நாட்டின் நிலப் பயன்பாடு, வேலைவாய்ப்பு, நீர்வளம், தெருநாய்கள் மேலாண்மை வரைவு கொள்கையை ஆவணங்களும், காலை உணவு, புதுமைப்பெண், எண்ணும் எழுத்தும் ஆகிய திட்டங்களின் மதிப்பீட்டாய்வுகளும் முதலமைச்சர் அவர்களிடம் சமர்ப்பிப்பு
Submission to the Chief Minister of Tamil Nadu's draft policy on land use, employment, water resources, stray dogs management prepared by the State Planning Committee and the evaluation of breakfast, Puthumai Penn, Ennum Ezhuthum Schemes
மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட வரைவு கொள்கையை ஆவணங்கள் மற்றும் மதிப்பீட்டாய்வுகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் மாநில திட்டக் குழுவின் செயல் துணைத் தலைவர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன் அவர்கள் சமர்ப்பித்தார்
>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
மாநில திட்டக்குழு மதிப்பீட்டு அறிக்கைகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு
மாநில திட்டக்குழு தயாரித்த மதிப்பீட்டு அறிக்கைகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாநில திட்ட குழுவானது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்படும் ஓர் உயர் மட்ட ஆலோசனைக் குழுவாகும். தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னோடி மக்கள் நல திட்டங்களை மதிப்பீட்டு ஆய்வு செய்தல், அரசு ஆளுகையில் எழும் புதிய தேவைகளுக்கு ஏற்ப கொள்கை முடிவுகளை எடுப்பதிலும், பல்வேறு ஆய்வுகள் நடத்தி அறிக்கை தயாரிப்பதிலும் தனது பங்களிப்பை மாநில திட்ட குழு நல்கி வருகிறது.
இந்த நிலையில், மாநில திட்டக் குழுவின் செயல் துணைத் தலைவர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன் , மாநில திட்ட குழுவால் தயாரிக்கப்பட்ட நான்கு வரைவு கொள்கை ஆவணங்கள் மற்றும் ஐந்து ஆய்வறிக்கைகள் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று சமர்ப்பித்தார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் என். முருகானந்தம், மற்றும் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா ஆகியோர் உடன் இருந்தனர்.
1. தமிழ்நாட்டுக்கான நிலையான நிலப் பயன்பாட்டு கொள்கை:-
தமிழ்நாட்டின் நிலையான நிலப் பயன்பாட்டுக் கொள்கையானது, நகரமயமாதல், கால நிலையில் ஏற்படும் மாற்றங்கள், பொருளாதார வளர்ச்சி உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு நீண்டகால நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதையே நோக்கமாக கொண்டுள்ளது.
இக்கொள்கையானது தமிழ்நாட்டின் நிலப்பரப்பினை நகர்ப்புற வளர்ச்சிக்கான பகுதி, பாதுகாக்கப்பட வேண்டிய சுற்றுச்சூழலுக்கான பகுதி, வேளாண் நடவடிக்கைகளுக்கான விளைநிலப்பகுதி என வகைப்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், வேளாண் நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கவும், விரைவாக நகரமயமாக்கும் பகுதிகளை வளர்க்கவும் அறிவுறுத்துகிறது. நிலையான வளர்ச்சி இலக்குகளை, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் வளங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகளை மேம்பட்ட நிலையான நடைமுறைகள் மூலம் எய்திடும் நோக்கில் சீரமைக்க இக்கொள்கை வலியுறுத்துகிறது.
துறை சார் வல்லுநர்களின் அறிவுரைகள் மற்றும் வரையறுக்கப்பட்ட கால இடைவெளியில் நடத்தப்படும் சீராய்வு கூட்டங்கள் வாயிலாக பொறுப்புணர்வு மிக்க வளங்குன்றா நிலப்பயன்பாட்டினை ஊக்குவித்து மாநிலத்தின் சமூக பொருளாதார வளர்ச்சியை முன்னோக்கிய பாதையில் இக்கொள்கையானது எடுத்துச் செல்லும்.
2.தமிழ்நாடு வேலைவாய்ப்பு கொள்கை 2023:-
இந்த கொள்கை ஆவணம், தற்போதைய தொழிலாளர் சந்தையின் பல முக்கியமான சிக்கல்களுக்கான தீர்வுகளை முன் வைக்கிறது. இவற்றில், படித்த இளைஞர்களிடையே அதிக வேலையின்மை விகிதம், கல்வி, திறன் மேம்பாடு, உழைப்பிற்கான உத்வேகம் மற்றும் வேலை வாய்ப்புகள் ஆகியவற்றிற்கு இடையே உள்ள குறிப்பிடத்தக்க பொருத்தமற்ற தன்மை ஆகியன முக்கியமானவைகள் ஆகும்.
மேலும், பொருத்தமான தீர்வுகளை வகுப்பதற்கான முக்கிய வழிமுறைகளை இந்த கொள்கை ஆவணம் முன் நிறுத்துகிறது. சராசரி வருவாயை உயர்த்துவதற்கும் மற்றும் பொருளாதாரத்தின் துரிதமான வளர்ச்சிக்கும், உற்பத்தி திறன் சார்ந்த வேலைகள் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை இலக்காகக் கொண்ட 10 ஆண்டு செயல் திட்டத்தின் அவசியத்தை இந்த கொள்கை ஆவணம் முன் நிறுத்துகிறது.
3.தமிழ்நாடு மாநில நீர்வளக் கொள்கை:-
மாநில நீர் மேலாண்மையில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில் பல்நோக்கு அணுகுமுறையுடன் தமிழ்நாடு நீர்வளக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் சுத்தமான நீர் கிடைப்பதை உறுதி செய்யவும், நீர்வளங்களை பாதுகாத்து மேம்படுத்தவும், ஆக்கபூர்வமான நீர் பயன்பாட்டிற்காகவும் சிறப்பான உத்திகளை இக்கொள்கை எடுத்துரைக்கிறது. மேலும், தமிழ்நாட்டில் நீர்வளத்தினை மேம்படுத்திட, நீர்வள ஆதார ஆணையம், நீர் கொள்கை ஆராய்ச்சி மையம், ஒருங்கிணைந்த நீர்இருப்பு தகவல் அமைப்பு போன்ற பல முன்னெடுப்புகளை இக்கொள்கை பரிந்துரைக்கிறது.
4.சமூக (தெரு) நாய் மேலாண்மை மற்றும் ஒழுங்குமுறைக்கான வரைவுக் கொள்கை
சமூக நாய்களை நிர்வகிப்பதற்கான ஒரு முழுமையான அணுகுமுறையினை இக்கொள்கை கொண்டுள்ளது. மனிதாபிமான கருத்தடை முறைகள், ஒழுங்கமைக்கப்பட்ட தடுப்பூசி திட்டங்கள், கைவிடப்பட்ட நாய்களுக்கான பிரத்யேக தங்குமிடங்கள் நிறுவுதல் போன்ற நிலையான செயல்திட்டங்களை பரிந்துரைக்கிறது.
மேலும், வளர்ப்பு நாய்களை பதிவிற்கான விதிகள், நாய்கடிகளை அறிக்கையிடுதல் மற்றும் வணிகரீதியலான நாய் இனப்பெருக்க நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துதல் ஆகிய பரிந்துரைகளும் இடம்பெற்றுள்ளன. பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையில் இணக்கமான சூழலை உருவாக்கும் நோக்குடன் இக்கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்:
இத்திட்டத்தினால் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களிடம் ஏற்படும் தாக்கம்
இந்த ஆய்வின் இரண்டாம் கட்ட இடைநிலை அறிக்கையானது, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் மாணவர்களின் கல்வி மற்றும் உடல்செயல்பாடுகளில் ஏற்பட்ட தாக்கம் குறித்து, இவ்வாண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்ட மதிப்பீட்டையும், கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட அடிப்படைஆய்வு மதிப்பீட்டையும் ஒப்பீட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை நடப்பு கல்வியாண்டில் புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்களின் மதிப்பீட்டையும் உள்ளடக்கியுள்ளது.
புதுமைப்பெண்திட்டமதிப்பீடு:-
இந்த ஆய்வு, இத்திட்டத்தின் செயல்பாடு, சவால்கள், மாணவிகளின் விழிப்புணர்வு நிலை, திட்ட உதவியின் பயன்பாட்டு முறைகள், கல்லூரி மாணவியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இடையே புதுமைப்பெண் திட்டம் ஏற்படுத்திய சமூக பொருளாதார தாக்கங்கள் ஆகியவற்றை மதிப்பீடு செய்வதாகும். இத்திட்டம் சமூக பொருளாதார வகையில் விளிம்பு நிலையிலுள்ள சமூகத்தைச் சார்ந்த மாணவிகளுக்கு உயர்கல்வி பெற பெரிதும் உதவிபுரிந்துள்ளது.
எண்ணும் எழுத்தும் திட்டம் செயலாக்கத்தின் மீதான மதிப்பீட்டு ஆய்வு:-
இந்த மதிப்பீட்டு ஆய்வில், துவக்கக்கல்வியின் தரத்தினை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வரும் "எண்ணும் எழுத்தும்" திட்டத்தின் நடைமுறை செயல்பாடுகள் ஆழ்ந்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் செயல்பாடுகள் தொடர்பான தரவுகளைப் பெற்றும், ஆசிரியர் பயிற்றுநர்களுடன் நேர்காணல்கள்
மேற்கொண்டும், இத்திட்டத்தின் விளைவு இந்த ஆய்வில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மதிப்பீட்டு ஆய்வு, எண்ணும் எழுத்தும் திட்டத்தின் செயலாக்கத்தை செம்மைப்படுத்துவதையும் மற்றும் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியின் பயனை அதிகப்படுத்துவதையும் குறிக்கோள்களாகக் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய விரிவான மறு ஆய்விற்கான அடித்தளத்தை வழங்குகிறது.
நகர்ப்புற வெப்பத்தீவு தமிழ்நாட்டின் வெப்பப்பகுதிகளின் பகுப்பாய்வு மற்றும் தணிப்பு உத்திகள்:-
இந்த அறிக்கையானது, நகர்புற வெப்பதீவு விளைவுகளை மதிப்பீடு செய்ய மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளை தெரிவிக்கிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள வெப்பமண்டலங்களை கண்டறிந்து வெப்பப்பகுதிகளை அடையாளம் காணவும், நகரமயமாதலால் மற்றும் காலநிலை மாற்றத்தால் அதிகரித்து வரும் வெப்பத்தின் தாக்கத்தை புரிந்து கொள்ளவும் உதவுகிறது. நகர்ப்புற வெப்ப தாக்கங்கள், தமிழ்நாட்டிற்கென வடிவமைக்கப்பட்ட செயல்படுத்தப்கூடிய தணிப்பு உத்திகள் மற்றும் நிலையான நகர்ப்புற திட்டமிடலை இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
தமிழ்நாடு வெப்பதணிப்பு அறிக்கை:-
தமிழ்நாட்டில் கோடைகாலமான மார்ச் முதல் ஆகஸ்ட் மாதங்களில் வெப்ப அலை வீச்சின் காரணமாக அதிகப்படியான வெயிலின் தாக்கத்தினை சந்தித்து வருகின்றது. மனிதர்களின் வாழ்விடங்களிலும், பணிபுரியும் அலுவலகம் தொழிற்சாலை உள்ளிட்ட இடங்களிலும் உடல் மற்றும் உள நலனுக்கு ஊறு விளைவிக்காத வகையில் வெப்பத்தணிப்பு செய்யப்பட வேண்டியது அவசியமானதாகும். இந்த அறிக்கையானது, குளிர்விக்கும் தொழில் நுட்பம் வழங்க்கும் முதலீட்டாளர்கள் மற்றும் நிதி சேவையில் உள்ள நிறுவனங்களுக்கு உதவும் வகையில் அளிக்கும் வகையில் வணிக ரீதியான மற்றும் நிதி சார் மாதிரிகளையும் கொண்டுள்ளது.
மாநில திட்ட குழுவால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையானது, வெப்ப தணிப்பு முறைகளை நடைமுறைப்படுத்துதல் மற்றும் ஒழுங்குமுறை படுத்துதல் உள்ளிட்ட முன்னெடுப்புகளை முன்மொழிகிறது. தமிழ்நாடு வெப்பதணிப்பு அறிக்கை (DCS) முன்னெடுப்புக்கென மாநில திட்ட அறிக்கை குறுகிய, நடுத்தர நீண்டகால உத்திகளுடன், அரசு துறைகளில் பொறுப்புகள் மற்றும் பங்களிப்பு விவரங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.