சேலம் மாவட்டம் எடப்பாடி கல்வி மாவட்டத்தில் 10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவன், மதிப்பெண் சான்றிதழை திருத்தி வழங்கி அரசுப்பள்ளியில் சேர்ந்து பிளஸ் 2 வரை முடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, நடப்பாண்டு பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மாணவர்களின் 10ம் வகுப்பு மதிப்பெண் 50 சதவீதம், பிளஸ் 1 வகுப்பு மதிப்பெண் 20 சதவீதம், பிளஸ் 2 அகமதிப்பீட்டு மதிப்பெண் 30 சதவீதம் என கணக்கிட்டு, மதிப்பெண் வழங்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக மாணவர்களின் அனைத்து மதிப்பெண் சான்றிதழ்களும் பதிவேற்றும் பணி நடந்து வருகிறது.
இதனிடையே, சேலம் மாவட்டம் எடப்பாடி கல்வி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப்பள்ளியில், 10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவன், மதிப்பெண் சான்றிதழை திருத்தி, பிளஸ் 1 சேர்க்கை பெற்றுள்ளார். தற்போது அந்த மாணவன் பிளஸ் 2 முடித்துள்ள நிலையில், சான்றிதழ் பதிவேற்றத்தின் போது இந்த முறைகேடு கண்டறியப்பட்டுள்ளது. இத்தகவல் வேகமாக பரவி வருகிறது. அதேசமயம், இந்த விவகாரத்தை எப்படி கையாள்வது என தெரியாமல் கல்வித்துறை அதிகாரிகள் தவித்து வருவதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கல்வித்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, எடப்பாடி பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவன், கடந்த 2018-19ம் கல்வியாண்டில் அங்குள்ள ஆண்கள் பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினான். இதில் ஆங்கிலம் உள்பட 2 பாடத்தில் தோல்வியடைந்தான். தொடர்ந்து, சிறப்பு தேர்வெழுதிய மாணவன், மீண்டும் ஆங்கிலத்தில் 31 மதிப்பெண் பெற்று தோல்வியடைந்தான். பின்னர், ஆன்லைன் மூலம் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்த மாணவன், அதில் 31 என்ற மதிப்பெண்ணை 35 ஆக மாற்றியுள்ளான். அத்துடன் பெயில் என இருந்த F-ஐ, பாஸானது போல P என மாற்றியுள்ளான்.
அதேசமயம், சான்றிதழில் மதிப்பெண் எழுத்தால் எழுதப்பட்டிருந்ததை மாற்றவில்லை. தொடர்ந்து மாணவன் அதே பள்ளிக்கு பிளஸ் 1 சேர்க்கைக்கு வந்துள்ளார். அப்போது, அங்கிருந்த ஆசிரியர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை சரிவர கவனிக்காமல், மாணவனுக்கு கலைப்பிரிவில் பிளஸ் 1 சேர்க்கை வழங்கினர். சிறப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்ததால், அசல் மதிப்பெண் சான்றிதழ் வர தாமதமாகும் என மாணவன் தெரிவித்துள்ளான். இதனால், ஆசிரியர்களும் அப்போது அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அதன் பின்னர், வகுப்பு ஆசிரியர் பலமுறை கேட்டும், அந்த மாணவன் மட்டும் அசல் மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை.
இந்நிலையில் தற்போது, பிளஸ் 2 மதிப்பெண்ணை கணக்கிட, மாணவர்களின் 10ம் வகுப்பு சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட மாணவனின் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை சரிபார்த்த போது, அதில் எண்ணால் உள்ள மதிப்பெண்ணுக்கும், எழுத்தால் உள்ள மதிப்பெண்ணுக்கும் வித்தியாசம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மாணவனிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், ஆங்கில பாடத்தில் தேர்ச்சி பெறாத நிலையில், மதிப்பெண் சான்றிதழை திருத்தி பிளஸ் 1 சேர்க்கை பெற்றது உறுதி செய்யப்பட்டது. மேலும், மாணவனின் உறவினர் ஒருவர், மதிப்பெண் சான்றிதழை திருத்தி வழங்கியதாக அவர் கூறியுள்ளார். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், சம்பந்தப்பட்ட மாணவன் அரசியல் பிரமுகரின் நெருங்கிய உறவினர் என்பதால், மேலும் சிக்கல் எழுந்துள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் சேலம் மாவட்ட கல்வித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.