கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பிளஸ் டூ மதிப்பெண் முறையால் திருப்பம் - 'தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்கள் உயர் கல்வியில் அதிக இடங்களைப் பெறுவர்'...

 


பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பான கணக்கீட்டினை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. `அரசுப் பள்ளி மாணவர்கள் பலன் பெறும் நோக்கிலேயே இவை வடிவமைக்கப் பட்டுள்ளன. இதனால் சி.பி.எஸ்.இ மாணவர்களுக்குப் பின்னடைவு ஏற்படலாம்' என்கின்றனர் கல்வியாளர்கள். 


என்ன நடக்கிறது பள்ளிக் கல்வித்துறையில்?

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் காரணமாக, கடந்த ஜூன் 1ஆம் தேதி சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து `தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வை நடத்தலாமா?' என்பது குறித்து பெற்றோர், மாணவர்கள், கல்வியாளர்கள் எனப் பல தரப்பிலும் அரசு கருத்துகளைக் கேட்டறிந்தது.


இதில் 80 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர், `தேர்வு வேண்டாம்' என்ற நிலையில் உறுதியாக இருந்ததால், பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படுவதாக கடந்த ஜூன் 5 ஆம் தேதி தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதன்பிறகு, `சி.பி.எஸ்.இ பாணியிலேயே மதிப்பெண் கணக்கிடப்படுமா?' என்ற கேள்வி எழுந்தபோது, இதற்கான வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.


கணக்கீட்டு முறை சரியா?

பிளஸ் 2 மதிப்பெண்ணை கணக்கிடுவது தொடர்பாக, ஜூன் 26 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், ` மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை ஆய்வு செய்வதற்காக பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர், சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழு, தனது அறிக்கையை அரசுக்கு அளித்துள்ளது. 10, 11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு, அதற்கான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 12ஆம் வகுப்புக்கான இறுதி மதிப்பெண்களைக் கீழ்க்கண்ட விகிதாசார அடிப்படையில் வழங்க வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது' எனத் தெரிவித்திருந்தார்.


அதன்படி, 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில், (உயர் மதிப்பெண் பெற்ற 3 பாடங்களுடைய சராசரி) 50 சதவிகிதமும் 11ஆம் வகுப்புத் தேர்வில் 20 சதவிகிதமும் 12ஆம் வகுப்புத் தேர்வில் 30 சதவிகிதமும் (செய்முறைத் தேர்வில் 20 மதிப்பெண் மற்றும் அக மதிப்பீட்டுத் தேர்வில் 10 மதிப்பெண்) என கணக்கில் எடுத்துக் கொள்ள உள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார்.


கொரோனா காலத்தில் செய்முறை தேர்வில் பங்கு பெற இயலாத மாணவர்களுக்கு அவர்களின் பிளஸ் 1 செய்முறைத் தேர்வு பெற்ற மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இதன்படி, மதிப்பெண் கணக்கிடப்பட்டு வரும் ஜூலை 31ஆம் தேதிக்குள் வெளியிடப்பட உள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.


இதில், `தமக்குக் குறைவாக மதிப்பெண் உள்ளதாகக் கருதும் மாணவர்கள், அவர்கள் விரும்பினால் 12 ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வினை எழுத வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவ்வாறு நடத்தப்படும் தேர்வில் அவர்கள் பெற்ற மதிப்பெண்ணே இறுதியாகக் கருதப்படும்' எனவும் அறிவிப்பு வெளியானது.


யாருக்கு பாதிப்பு?

அரசின் அறிவிப்பால், `தங்களுக்கு எத்தனை மதிப்பெண் வரப் போகிறது?' என்பதை மாணவர்கள் முன்கூட்டியே தீர்மானித்து விட்டதால், `எந்தப் பொறியியல் கல்லூரியில் சேரலாம், எந்தப் பாடப் பிரிவுகளுக்கு எதிர்காலம்?' என்பது தொடர்பான விசாரணைகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேநேரம், அரசின் மதிப்பீடு கணக்கு முறை குறித்து சில கேள்விகளை முன்வைக்கிறார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார்.


இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், ``சி.பி.எஸ்.இ-யில் பத்தாம் வகுப்பினை முடித்த மாணவர்கள் பலரும் பிளஸ் 1 வகுப்பில் அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்காக மாநில அரசின் பாடத் திட்டத்தில் சேர்ந்து படிப்பது வழக்கம். காரணம், சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வில் அதிகப்படியான மதிப்பெண்ணை வாங்க முடியாது என்பதுதான். அங்கு 70 சதவிகித மதிப்பெண் வாங்குகிறவர்கள், நமது பாடத்திட்டத்தில் சேர்ந்து 80 சதவிகித மதிப்பெண்ணை வாங்குவார்கள். தற்போது மதிப்பெண் கணக்கீட்டின்படி சி.பி.எஸ்.இ மாணவர்களின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டால் அவர்கள் பாதிப்புக்கு ஆளாவார்கள்," என்கிறார்.


`சி.பி.எஸ்.இ வாரியம், பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீட்டுக்கு பிளஸ் 2 வகுப்புத் தேர்வுகளில் இருந்து 40 சதவிகிதமும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வுகளில் இருந்து தலா 30 மதிப்பெண்ணையும் எடுக்க உள்ளது. அதுவே, தமிழ்நாடு அரசு பத்தாம் வகுப்பில் இருந்து 50 சதவிகிதம் எடுப்பதால், மாநில அரசின் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண் வரும், இதனால் சி.பி.எஸ்.சி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்' என்பதைத்தான் கல்வியாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.


தொடர்ந்து பேசிய ரவிக்குமார் எம்.பி, ``அரசு கணக்கீட்டின்படி மதிப்பெண்ணை பெற விரும்பாதவர்களுக்கு சில வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. `மாணவர்கள் தேர்வு எழுத விரும்பினால் அதில் பெறும் மதிப்பெண்ணே இறுதியானது' என அரசு கூறியுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மதிப்பெண் முறை என்பது தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மட்டும்தான் எனவும் தேர்வு எழுத முன் வருகிறவர்களுக்கு அந்த மதிப்பெண்ணே இறுதி என்பது சரியான ஒன்றல்ல. `அரசின் மதிப்பெண் கணக்கீட்டைவிட அந்த மாணவர் குறைவான மதிப்பெண் பெற்றால் என்ன செய்வது?' என்ற கேள்வியும் எழுகிறது. இதில் எந்த மதிப்பெண் அதிகமோ அதன்படி வரிசைப்படுத்துவதுதான் சரியானதாக இருக்கும்," என்கிறார்.


8 லட்சம் மாணவர்கள்

அதேநேரம், ரவிக்குமாரின் கூற்றை மறுத்துப் பேசும் மூத்த கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி. ``மாநில அரசின் மதிப்பீட்டு முறை என்பது மிகச் சரியானது. எந்தவொரு கணக்கீட்டு முறையை எடுத்துக் கொண்டாலும் 100 சதவிகித மாணவர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் இருக்கப் போவதில்லை. அரசு அறிவிப்பதற்கு முன்பு வரையில் கணக்கீடு முறை எப்படி இருக்கலாம் எனக் கருத்து கூறலாம். ஆனால், அறிவித்த பிறகு இதையெல்லாம் மாற்றலாம் எனக் கூறுவது மாணவர்கள் மத்தியில் குழப்பத்தையே ஏற்படுத்தும்," என்கிறார்.


மேலும், ``தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 7 லட்சத்து 90 ஆயிரம் மாணவர்கள் பிளஸ் 2 படித்து வருகின்றனர். அதேநேரம், சி.பி.எஸ்.இயில் 40 ஆயிரம் மாணவர்கள் பிளஸ் 2 படிக்கின்றனர். அரசின் கணக்கீட்டு முறையால் நமது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அதிகப்படியான பலன்கள் கிடைக்கப் போகின்றன. கடந்தமுறை சி.பி.எஸ்.இ மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை வாங்கியதால் உயர் கல்வியில் அதிகப்படியான இடங்களைப் பிடித்தனர். இந்தமுறை அந்த இடங்களை அரசுப் பள்ளி மாணவர்கள் பிடிக்க உள்ளனர்," என்று அவர் கூறினார்.


`அரசு பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம்`

``எந்த வகையில் என விவரிக்க முடியுமா?" என்றோம். `` பிளஸ் 2 மாணவர்கள் தேர்வு எழுதியிருந்தால்கூட இந்தளவுக்கு மதிப்பெண் வந்திருக்கப் போவதில்லை. இதனால் முதல் தரமான உயர்கல்வி நிறுவனங்களில் கடும் போட்டி நிலவப் போகிறது. அதேநேரம், மதிப்பெண் கணக்கீட்டில் `டெசிமல் முறை' வருவதையே சிறப்பான ஒன்றாகப் பார்க்கிறோம்.


உதாரணமாக, ஒரு மாணவருக்கு 91.716 என மதிப்பெண் வருகிறது என்றால், அதையே அரசு கொடுக்க வேண்டும். இதை 92 என மாற்றிக் கொடுக்கக் கூடாது. காரணம், மாணவர் சேர்க்கை முறைகள் கணினி மயமாகிவிட்டன. பிளஸ் 2 மதிப்பெண்ணை டெசிமலுடன் கொடுப்பது தொடர்பாக அரசு இன்னமும் முடிவெடுக்கவில்லை. ஐ.ஐ.டி, ஜே.இ.இ போன்றவற்றில் 7 டெசிமல் வரையில் மதிப்பெண்ணைக் கணக்கிடுகின்றனர். இதனை நாமும் கணக்கில் எடுத்துக் கொண்டால் ரேங்க் முறையில் எந்தவித சிரமமும் வரப் போவதில்லை. அவ்வாறு செய்யாவிட்டால் ஒரே மதிப்பெண்ணில் ஏராளமான மாணவர்கள் வரக் கூடிய சூழல் வரலாம்.


உதாரணமாக, ஒரு மாணவர் 10ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்ணும் பிளஸ் 2 வகுப்புகளில் எடுத்த மதிப்பெண்ணும் 50:30 என்பதால் முழுமையான எண்ணாக வரலாம். அதுவே, பிளஸ் 1 வகுப்பில் 70 மார்க்குக்கு 60 மதிப்பெண் எனக் கணக்கிட்டால் டெசிமலில்தான் வரும். இந்த அடிப்படையில் கொடுப்பதால் எந்தவொரு மாணவருக்கும் நிறை, குறைகள் இருக்கப் போவதில்லை. அதேநேரம், சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. காரணம், சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணில் அவர்கள் 30 சதவிகிதம்தான் எடுக்கின்றனர்.


அதுவே, நாம் 50 சதவிகிதம் எடுக்க உள்ளோம். சி.பி.எஸ்.இ-யில் 72 சதவிகித மதிப்பெண்ணை ஒருவர் வாங்கினால், நமது மாணவர்களுக்கு 82 சதவிகிதம் என 10 மதிப்பெண்கள் கூடுதலாக கிடைக்கும். இதனால் வேளாண் படிப்புகள், பொறியியல், கால்நடை மருத்துவம் போன்ற படிப்புகளுக்குச் செல்லும்போது மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கும்" என்கிறார் ஜெயப்பிரகாஷ் காந்தி.


50 கல்லூரிகளுக்குத்தான் போட்டி

இதனால் பொறியியல் படிப்புகளில் தாக்கம் ஏற்படுமா?" என்றோம்.


``தமிழ்நாட்டில் 461 கல்லூரிகளில் 50 கல்லூரிகளுக்குள்தான் கடுமையான போட்டி இருக்கும். இந்த முறை டாப் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. காரணம், பத்தாம் வகுப்பு தேர்வில் நமது அரசுப் பள்ளி மாணவர்கள் சிறப்பான மதிப்பெண்ணை எடுத்துள்ளனர். அதையெல்லாம் கவனித்த பிறகுதான் தமிழ்நாடு அரசு இப்படியொரு கணக்கீட்டு முறையைக் கொண்டு வந்துள்ளதாகப் பார்க்கிறேன். இதனால் தரம் குறையும் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. உண்மையாகவே பிளஸ் 2 தேர்வு எழுதியிருந்தால் 80 சதவிகித மாணவர்களுக்கு இப்படியொரு மதிப்பெண் கிடைக்கப் போவதில்லை. இதை போனஸ் மதிப்பெண்ணாகத்தான் பார்க்கிறேன். இதனால் உயர் கல்வியில் தரம் என்பது கேள்விக்குறியாகும் என்பது உண்மைதான்.


இதனை சரிசெய்யும் வகையில் இணைப்பு பாடப் பயிற்சிகளை (Bridge courses) கொடுக்க வேண்டும். முதல் கல்வியாண்டையும் 3 மாதங்கள் வரையில் நீட்டிக்க வேண்டும். அடுத்ததாக, கர்நாடக மாநிலத்தில் அடுத்த 10 நாளில் உயர்கல்வியில் படிக்கும் அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயம் போடப்படும் என அறிவித்துள்ளனர். இதைப் பின்பற்றி தமிழ்நாடு அரசும் நமது மாணவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசியை செலுத்த வேண்டும். இதன்பிறகு கல்லூரிகளைத் திறந்து இணைப்புப் பாடத்தில் தேர்வெழுத வைத்து அதன்பிறகு வகுப்புகளைத் தொடங்க வேண்டும். அப்போதுதான் பிளஸ் 2 தேர்வில் இழந்ததை இதில் சரிக்கட்ட முடியும். தரத்தையும் நம்மால் சரிசெய்ய முடியும். மாணவர்களின் எதிர்காலத்திலும் சிக்கல் வரப் போவதில்லை," என்கிறார்.


எந்தெந்த பாடப் பிரிவுகளுக்கு டிமாண்ட்?

``இந்தமுறை எந்தப் படிப்புகளுக்கு டிமாண்ட் வரப் போகிறது?" என்றோம். `` பொறியியல் படிப்பில் கணிப்பொறி அறிவியல் மீது மோகம் அதிகரித்துள்ளது. கணிதம் தவிர்த்து இயற்பியல், வேதியியல் எடுத்துப் படித்த மாணவர்கள்கூட, `நாங்கள் கணிப்பொறி அறிவியல் படிக்க முடியுமா?' எனக் கேட்கின்றனர். அனைத்துமே கணிணிமயம், ரோபோடிக், செயற்கை நுண்ணறிவு என அந்தத் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகமாக உள்ளதுதான் பிரதான காரணமாக உள்ளது. மாணவர்களும் பெற்றோரும் இதனை நோக்கி நகரத் தொடங்கி விட்டனர்.


ஒருகாலத்தில் இ.சி.இ, மெக்கானிக் படிப்புகளுக்கு இருந்த போட்டி, தற்போது கணிப்பொறி பக்கம் திரும்பிவிட்டது. இதைத்தவிர, பி.காம் படிப்புக்கு அதிகப்படியான போட்டி இருக்கப் போகிறது. தற்போது மாணவர்களும் அதிகம், மதிப்பெண்ணும் அதிகம் என்பதால் போட்டியும் கடுமையாக இருக்கும். இதுதவிர, கடந்த ஆண்டைவிட எம்.பி.சி, எஸ்.சி மாணவர்களும் அதிகப்படியான மதிப்பெண்ணை வாங்க உள்ளனர். கடந்த ஆண்டு சிலர் 120, 130 என கட் ஆஃப் பெற்றனர். அதுவே, இந்த முறை 160 முதல் 180 வரையில் உயரப் போவதை அறிய முடிகிறது. எவ்வளவு மதிப்பெண் வரப் போகிறது என்பதை மாணவர்களும் முடிவு செய்துவிட்டனர். அதனை வைத்து, `எனக்கு நல்ல கல்லூரி கிடைக்குமா?' என கேட்கின்றனர். எனவே, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த மதிப்பீட்டு முறை மிகப் பெரிய வரப்பிரசாதமாக மாறியுள்ளது" என்கிறார்.

நன்றி: பிபிசி தமிழ்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Government of Tamil Nadu has notified heat waves as a State Disaster & ex-gratia of 4 lakhs to the victims

 தமிழ்நாடு அரசு வெப்ப அலைகளை மாநில பேரிடராகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு 4 லட்சம் நிவாரணமாகவும் அறிவிப்பு The Government of Tamil Nadu has n...