மொபைல் போன் சிக்னல் கிடைக்காததால், மரத்தில் ஏறி மாணவர்கள், 'ஆன்லைன்' வகுப்பை கவனிக்கின்றனர்.
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஒன்றியம் முள்ளுக்குறிச்சி அருகே பெரப்பஞ்சோலை, பெரியகோம்பை ஊராட்சிகள் உள்ளன. இங்கு, 20க்கும் மேற்பட்ட மாணவர்கள், கல்லுாரி, பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். தற்போது ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், ஆன்லைன் வாயிலாக பாடம் நடத்தப்படுகிறது. பெரப்பஞ்சோலை, பெரியகோம்பையில் மொபைல்போன் டவர்கள் இல்லை. பேசுவதற்கே சரியாக சிக்னல் கிடைக்காது. பாடம் சம்பந்தப்பட்ட வீடியோ, ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க வேண்டும் என்றால், 5 கி.மீ., துாரம் உள்ள பகுதிக்கு செல்ல வேண்டும்.
இதனால், மாணவர்கள், அந்த கிராமத்தில் உயரமாக உள்ள ஆலமரத்தின் கிளைகள் மீது அமர்ந்து, ஆன்லைன் வகுப்புகளை கவனித்து வருகின்றனர். தினமும் காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை உயிரை பணயம் வைத்து, ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பது, மாணவர்களின் பெற்றோரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஓராண்டாகவே இப்பகுதி மாணவர்கள், ஆலமரத்தில் அமர்ந்து தான் வகுப்புகளை கவனித்து வருகின்றனர். மாணவர்களின் நலன்கருதி, அப்பகுதியில் மொபைல்போன் டவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.