கற்றல்-கற்பித்தலில் உள்ள இடைவெளியை தவிர்க்க 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாதந்தோறும் பணிகள் வழங்க கல்வித்துறை திட்டமிட்டு இருக்கிறது.
படைப்பாற்றலை வளர்க்க பணிகள் இதுதொடர்பாக பள்ளிக்கல்வி துறை ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி, வானொலி வாயிலாக ஆடியோ பாடங்கள், வாட்ஸ்-அப், கூகுள் மீட் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டாலும், சில இடங்களில் கற்பித்தல், கற்றல் செயல்பாட்டில் சில குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.
கற்றல், கற்பித்தல் செயல்பாட்டில் இடைவெளியை தவிர்க்கவும், சீரான தன்மையை உறுதிசெய்யவும் பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலை (எஸ்.சி.இ.ஆர்.டி.) அறிவுறுத்தி இருக்கிறது. அந்தவகையில் 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கும் விதமாக சில பணிகள் (அசைன்மெண்ட்) வழங்க மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலிடம் கேட்கப்பட்டது. 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள்
1 முதல் 5-ம் வகுப்பு வரை;
1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வாழ்த்து அட்டைகளை தயாரித்தல், கலைப்படைப்புகளை உருவாக்குதல், சொந்தமாக புதிய வார்த்தைகளை எழுதுதல் போன்ற பணிகள் வழங்கப்பட உள்ளது. ஒரு மாதத்துக்கு ஒரு பாடத்துக்கு குறைந்தபட்சம் 2 திட்டங்கள் வழங்கப்படும். இவ்வாறு செய்யும்போது மாணவர்களின் ஆர்வம் தூண்டப்படும். தேவைப்பட்டால், மாணவர்கள் ஆசிரியர்களின் உதவியையும் பெறலாம்.
6 முதல் 8-ம் வகுப்பு வரை
6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கட்டுரை எழுதுதல், சில பயணங்களில் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல், புகைப்படங்கள், வரைபடங்கள் உருவாக்குவதல் போன்ற பணிகள் வழங்கப்படும்.
9 மற்றும் 10-ம் வகுப்பு வரை
9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட தலைப்புகளில் இருந்து திட்டங்கள் உருவாக்குதல், எழுதுதல், புத்தக மதிப்பாய்வு செய்தல், குறைந்த செலவு அல்லது செலவே இல்லாத பொருட்களை கொண்டு எளிய பரிசோதனைகள் போன்ற பணிகளை செய்ய மாணவர்கள் கேட்கப்படுவார்கள்.
உறுதி செய்யவேண்டும்
இதுதொடர்பாக ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு பாடவாரியாக பணிகள் தயார் செய்யப்பட்டு அந்தந்த பள்ளி தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு அனுப்பப்படும். அதனை ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு பகிரவேண்டும்.
மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட நோட்டு புத்தகங்களில் இது தொடர்பான பணிகளை எழுதி ஆசிரியர்களுக்கு சமர்ப்பிக்கலாம். ஆசிரியர்கள் எல்லா வேலைகளையும் ஒரேநேரத்தில் செய்யும்படி குழந்தைகளை வலியுறுத்தக்கூடாது. ஆசிரியர்கள் வாராந்திர அடிப்படையில் பணிகளை மாணவர்களுக்கு கொடுத்து, அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்யவேண்டும். மாணவர்கள் இந்த பணிகளை சமர்ப்பிப்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதிசெய்யவேண்டும். மாணவர்கள் சமர்ப்பித்த பணிகளை பராமரிக்க ஆசிரியர்களை அறிவுறுத்தவேண்டும். இவ்வாறு அதில் அவர் உத்தரவிட்டுள்ளார்.