அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை உடனடியாக உயர்த்த வேண்டும் - அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை...

 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ . பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கை - 12-08-2021 


அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் , அரசின் நலத் திட்ட உதவிகளை மக்களிடம் எடுத்துச் செல்வதிலும் , அரசின் வளர்ச்சி நோக்கங்களை எய்துவதில் இன்றியமையாப் பங்கினை வகிக்கும் பொதுச் சேவையினை நடைமுறைப்படுத்துவதிலும் அடித்தளமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள் , இதேபோன்று , இளம் தலைமுறையினரை பண்பாளர்களாகவும் , சிந்தனையாளர்களாகவும் , செயல் வீரர்களாகவும் ஆக்கும் சக்தி வாய்ந்த கல்வியை கற்றுத் தரும் தன்னலமற்ற பணியை மேற்கொள்பவர்கள் ஆசிரியர்கள்.


இப்படிப்பட்ட உன்னதமான பணியை மேற்கொள்ளும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் முக்கியப் பங்கினை மாண்புமிகு அம்மா அவர்களின் வழிகாட்டுதலோடு நடைபெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு உணர்ந்த காரணத்தினால் , ஓராண்டுக்கு இருமுறை அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு , மத்திய அரசு வாழியர்களுக்கு இணையான ஊதியம் , வீட்டுக் கடன் வசதி என அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.


  இந்தச் சூழ்நிலையில் , கொரோனா பெருந்தொற்று நோயின் தாக்கம் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டதையடுத்து , 1-1-2020 , 1-7-2020 , 1-1-2021 ஆகிய நாட்களிலிருந்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மூன்று அகவிலைப்படியை மத்திய அரசு நிறுத்தி வைத்ததோடு , இது 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் அறிவித்தது. இதனைப் பின்பற்றி தமிழ்நாடு அரசும் அகவிலைப்படியை நிறுத்தி வைத்தது.


தற்போது , மத்திய நிதி அமைச்சகத்தின் 20-7-2021 நாளிட்ட ஆணையின் வாயிலாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 17 விழுக்காட்டிலிருந்து 28 விழுக்காடாக உயர்த்தி அதனை 1-7-20211 முதல் ரொக்கமாக வழங்க மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. இதனைப் பின்பற்றி உத்தரபிரதேசம் , ஜம்மு காஷ்மீர் , ராஜஸ்தான் , அரியானா , ஜார்கண்ட் , கர்நாடகா , புதுச்சேரி அரசுகளும் தங்கள் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இந்தச் சூழ்நிலையில் , நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ள சூழ்நிலையில் , நிதிப் பற்றாக்குறை , வருவாய்ப் பற்றாக்குறை , கடன் பட்டியலிட்டு மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் வெள்ளை அறிக்கையினை வெளியிட்டு இருப்பதைப் பார்க்கும் போது , தங்களுக்கு நியாயமாக வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி வழங்கப்படாதோ என்ற அச்சத்தில் , அரசு ஊழியர்களும் , ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.


பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கு அதிகமாகவும் , டீசல் விலை 95 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்ற சூழ்நிலையில் , காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து செல்கின்ற சூழ்நிலையில் , மத்திய அரசு தங்கள் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை அறிவித்து 20 நாட்கள் கடந்த நிலையில் , தங்களுக்கான அகவிலைப்படியை தமிழ்நாடு அரசு உடனடியாக அதன் அறிவிக்கவேண்டும் என்பதே தமிழ்நாடு அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. எனவே , மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி , மத்திய அரசின் அறிவிப்பிற்கிணங்க , தமிழ்நாடு அரசு தாழியர்கள் , ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 17 விழுக்காட்டிலிருந்து 28 விழுக்காடாக உயர்த்தி அதனை 1-07-2021 முதல் ரொக்கமாக வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 ஓ . பன்னீர்செல்வம் 

கழக ஒருங்கிணைப்பாளர் 

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...