தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து ஒன்று முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கடந்த மாதம் பருவமழை பாதிப்பால் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதால் பாடத்திட்டத்தை நடத்துவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. பாடத்திட்டம் நடத்த அவகாசம் தரும் வகையில், இந்தாண்டு அரையாண்டு தேர்வு விடுமுறை இல்லை என பள்ளிகல்வித்துறை வட்டாரங்கள் தகவல் கூறியுள்ளன. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என தெரிகிறது. அரையாண்டு தேர்வு விடுமுறை இல்லை என பரவும் தகவலால் பள்ளி மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு பள்ளிகள் திறப்பு என்பது மிகவும் காலதாமதமாக தொடங்கப்பட்டது. குறிப்பாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து சற்று தாமதமாக எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் தொடங்கப்பட்டன. கடந்த செப்டம்பர் மாதம் முதல் சுழற்சி முறையில் படிப்படியாக அனைத்து வகுப்புகளும் துவங்கப்பட்டன. திங்கள் முதல் சனி வரை ஆறு நாட்களுக்கு பள்ளிகள் வேலைநாட்களாக செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தொடர் மழை காரணமாகவும் பல நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதால் குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை கூட நடத்தி முடிக்க முடியாத நிலைதான் தற்போது அனைத்து பள்ளிகளிலும் இருக்கிறது.
எனவே இந்த பாடத்திட்டங்களை நடத்தி முடிக்க வேண்டியதன் காரணமாகவும் ஏற்கனவே இந்த ஆண்டு, காலாண்டு அரையாண்டு தேர்வு நடத்தப்படாததன் காரணமாக அரையாண்டு தேர்வு விடுமுறையை ரத்து செய்ய பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது
வழக்கமாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக அரையாண்டு தேர்வு விடுமுறை என்பது தொடங்கி ஜனவரி முதல் வாரம் வரை அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்படும்.
இந்த அரையாண்டு விடுமுறைக்கு மாணவர்கள் காத்திருந்தனர். வழக்கமாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையுடன் இணைந்து, 10 நாள் வரை அரையாண்டு தேர்வு விடுப்பு வழங்கப்பட்டு வந்தது.
ஆனால், நடப்பு கல்வியாண்டில் டிசம்பர் 20ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையில் திருப்புதல் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சனிக்கிழமைகளில் வருவதால் அன்று மட்டும் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கின்றனர். அரையாண்டு தேர்வு விடுமுறை இல்லை என பரவும் தகவலால் பள்ளி மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.