ஆசிரியர்களைக் குறைசொல்வது நியாயமில்லை - ச.சீ.இராஜகோபாலன் (நன்றி - இந்து தமிழ் திசை)...
தொடக்கப் பள்ளிகளும் ஆசிரியர்களும் விமர்சிக்கப்படுவதுபோல் வேறு எந்த நிலை ஆசிரியரோ, அரசு ஊழியர்களோ மக்கள் கவனத்தை ஈர்ப்பதில்லை. செவிவழிச் செய்திகளைக் கொண்டு, வேறு ஆதாரங்கள் ஏதுமின்றி, ஒரு பிரிவினரை ஒட்டுமொத்தமாகக் கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல. உடல்நலக் குறைவு ஏற்படும் வரை மாநகராட்சி மற்றும் அரசு தொடக்கப் பள்ளிகளுக்குச் சென்றுவந்துள்ளேன்.
பல இடர்ப்பாடுகளுக்கு இடையில் ஆசிரியர்கள் அரும்பணியாற்றிவருவது கண்டு மகிழ்ந்துள்ளேன். குழந்தைகளுக்குக் கற்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில், புதுமைகளைப் புகுத்திய ஆசிரியர்களைக் கண்டுள்ளேன். தொடக்க நிலையில், பெரும்பான்மையான ஆசிரியர்கள் பெண்களே. கல்வித் தரத்தைப் பேணும் பொறுப்பு கல்வித் துறையினுடையது. அதற்கென உதவிக் கல்வி அலுவலர் முதல் இயக்குநர் வரை அதிகாரிகள் உள்ளனர். வகுப்புவாரிப் பாடத்திட்டம் வகுக்கப்பட்டு, வகுப்புக்கொரு ஆசிரியர் இல்லாமல், பல்வகுப்புக் கற்பித்தல் தொடரும் வரை குறைபாடுகளுக்கு ஆசிரியர்கள்மீது பழிசொல்வது நியாயமல்ல.
- ச.சீ.இராஜகோபாலன்,
மூத்த கல்வியாளர்,
சென்னை-93.