கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய சிறுகதை - இரண்டு பொக்கிஷங்கள் (Today's Short Story - Two Treasures)...



இன்றைய சிறுகதை - இரண்டு பொக்கிஷங்கள் (Today's Short Story - Two Treasures)...


ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் அபூர்வமான இரண்டு பொக்கிஷங்கள்...

   

ஆசிரமத்துக்கு அருகே இருந்த ஊர் ஒன்றில் மிகப்பெரிய செல்வந்தன் ஒருவன் இருந்தான். நான்கைந்து வியாபாரங்கள் செய்து வந்தான் அவன்.


அவனது போதாத காலம்.. ஒரு வியாபாரத்தில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. அதைச் சரி செய்வதற்குள் கவனம் பிசகி, மற்ற தொழில்களிலும் அடுத்தடுத்து சரிவுகளைச் சந்தித்தான். பிரச்னைகளைச் சமாளிக்க வாங்கிய கடன்கள் அவனது நிம்மதியைக் குலைத்தன. தொடர்ந்து கடன் மேல் கடனாக வாங்கிக்கொண்டே போனான். அப்படியும் சமாளிக்க முடியவில்லை. ஒருநாள் மொத்தமாக முடங்கிப்போனான். வீடு, வாசல், சொத்து, சுகம் எல்லாம் இழந்து நடு வீதிக்கு வந்துவிட்டான்.


விரக்தியில் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் மோசமான முடிவுக்கும் அவன் வந்திருந்தான்.


அதற்கு முன்னர்.. தனக்கு விடிவு காலம் பிறக்குமா என்று தெரிந்துகொள்ளும் ஏக்கத்திலும், நல்ல காலம் பிறக்கும் என்று தெரியவந்தால், தற்கொலை செய்துகொள்ளும் முடிவை தள்ளிப்போடலாம் என்ற எதிர்பார்ப்பிலும் குருநாதரைச் சந்திக்க வந்தான்.


ஒடுங்கிப்போன மனிதனாக குருவின் முன் நின்றான். குருவை வணங்கினான். ‘‘எனக்கு மறுவாழ்வு கிடைக்குமா ஸ்வாமிகளே’’ என கண்ணீருடன் கைகூப்பிக் கேட்டான்.


அதற்கு முன்பு பலமுறை செல்வந்தனின் தோரணையிலேயே அவனைப் பார்த்திருந்தான் சிஷ்யன். செயல் இழந்தவனாக அவனைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.


அவனுக்கு என்ன ஆலோசனை சொல்லப்போகிறார் குருநாதர் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் சிஷ்யனும் தன் காதுகளைத் தீட்டிக்கொண்டு காத்திருந்தான்.


‘‘இப்போது உன் நிதி நிலைமை எப்படி இருக்கிறது?’’ என்று கேட்டார் குரு.


‘‘மானத்தோடு வாழ்ந்து பழகியவன். அதனால், இருந்த சொத்தையெல்லாம் விற்று கடன்களை அடைத்துவிட்டேன். செல்வமெல்லாம் தொலைந்தது. அதனால் என் மனைவியும் என்னைப் பிரிந்துவிட்டாள். குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவளது பெற்றோரிடம் போய்விட்டாள். உற்றார், உறவினர் யாருமே என்னை மதிப்பதில்லை. மகரயாழ் கையில் இப்போது நயா பைசா இல்லை. மனதில் தெம்பும் இல்லை. உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணம் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்கிறது’’ என்றான் வந்தவன்.


‘‘இனி இழப்பதற்கு எதுவுமில்லை உன்னிடம். ஆனால், இந்த நிமிடம் உன்னிடம் மிச்சமிருப்பது விலைமதிப்பற்ற இரண்டு பொக்கிஷங்கள். எத்தனை கோடிகள் கொடுத்தாலும் அவற்றை ஒருவனால் விலைக்கு வாங்க முடியாது. உனக்கு ஏற்பட்ட தீமைகளின் நன்மையாக அவை உனக்குக் கிடைத்திருக்கின்றன. அவற்றை நீதான் கவனமாக மீட்டெடுக்க வேண்டும். சரியாகப் பயன்படுத்த வேண்டும். உன் வசம் இருக்கும் அந்தப் பொக்கிஷங்களை சரியாகப் பயன்படுத்தினால் நிச்சயம் நீ இழந்த அனைத்தையும் திரும்பவும் அடைவாய். இனி, எதைச் செய்தாலும் அதில் நீ வெற்றி பெறுவாய்’’ என்று கூறினார் குரு.


அவர் பேசப்பேச, எதுவும் புரியாமல் திருதிருவென விழித்தான் எதிரே இருந்தவன்.


குருவின் குரலைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த சிஷ்யனுக்கும் அவரது பேச்சின் பொருள் புரியவில்லை. இழப்பதற்கு இனி எதுவுமே இல்லை என்ற நிலையில் இருப்பவனிடம் அப்படியென்ன பொக்கிஷங்கள் மிச்சமிருப்பதாகக் கூறுகிறார் குருநாதர் என தெரிந்து கொள்ளும் ஆவல் அவனுக்கு அதிகமானது. 


வந்திருந்தவன் அதைக் கேட்கும் முன்னர், சிஷ்யனே குறுக்கிட்டுக் கேட்டுவிட்டான்.


‘‘அப்படி என்ன விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள் அவரிடம் மிச்சமிருக்கின்றன குருவே?’’ என்றான்.


‘‘ஆமாம் ஸ்வாமி. நீங்கள் சொன்னது எனக்கும் விளங்கவில்லை. என்னிடம் அப்படியென்ன மிச்சமிருக்கிறது ஒன்றுக்கும் உதவாத இந்த உயிரைத் தவிர?’’ என்று கேட்டான் வந்திருந்தவனும்.


ஓரமாக நின்றுகொண்டிருந்த சிஷ்யனையும் அருகே அழைத்து, எதிரில் அமரச் சொன்னார் குரு. பொறுமையாகவும் தீர்க்கமாகவும் தன் பேச்சைத் தொடர்ந்தார்.


‘‘தற்கொலை செய்துகொள்ளும் முடிவெடுத்த உன்னை இந்த நிமிடம்வரை தடுத்து நிறுத்திவைத்திருப்பது உனக்குள் மிச்சமிருக்கும் உன் *தன்னம்பிக்கை*. எந்த நம்பிக்கை உன் வெற்றிகள் எல்லாவற்றுக்கும் பக்கபலமாக இருந்ததோ, அதுதான் உன் தோல்விகளால் தொலைந்துபோகாமல் கொஞ்சமேனும் மிச்சமிருக்கிறது. அதுதான் *முதல் பொக்கிஷம்*. துளியாக இருக்கும் அதை நெருப்பாகப் பரவ விடு..’’


தலையசைத்து ஆமோதித்தான் வந்திருந்தவன். சிலையாகிக் கவனித்துக்கொண்டிருந்தான் சிஷ்யன். குரு தொடர்ந்தார்.


‘‘உன்னிடம் இருக்கும் அந்த *இரண்டாவது பொக்கிஷம்* எல்லோருக்கும் எளிதில் கிடைத்துவிடாது. தோல்விகளால்தான் அதை அடையமுடியும். கைவசம் இருக்கும் எல்லாமும் நம்மை விட்டுப் போன பிறகு நம்மிடம் மிஞ்சியிருப்பது அதுவேயாகும்.தோல்விகளைச் சந்திக்க நேர்ந்த ஒவ்வொரு கணத்தையும் திரும்பத்திரும்ப சிந்தித்துப் பார்த்தால் அறியக் கிடைக்கும் அதுவே *அனுபவம்* எனப்படும்’’.


அவர் சொல்லச்சொல்ல உத்வேகம் வந்தது தோற்றுப்போய் வந்திருந்தவனுக்கு. வாழ முடியும் என்ற வைராக்கியம் உருவானது. வெல்ல முடியும் என்ற தன்னம்பிக்கை வெகுண்டெழுந்தது.


அவன் முகரேகைகள் தெரிவித்த பரவசத்தைப் பார்க்கும்போது சிஷ்யனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.


*"வாழ்க்கை வாழ்வதற்கே" என்ற தன்னம்பிக்கையுடன் தொடரவோம் நம் வாழ்க்கை பயணத்தை..


*🌹இது உங்களுக்கான நாள்*🌹


*✍️ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒன்றைக் கற்றுக்கொள்வதற்கும் முன்னேறுவதற்கும் வாய்ப்பிருக்கும்...*


*▪️கடந்து செல்கிறது நமக்கான வினாடிகள்.... நீ கழிக்கப்படுவதற்குள் விழித்துக்கொள்...*


*▪️புதைக்கப்படுவதுதான் கல்லறையென்றால்... ஒவ்வொரு மனிதனின் இதயமும் கல்லறைதான்...*


*▪️வீணான எண்ணங்கள் விசக் கிருமிகள்... உள்ளே அனுமதித்து விட்டால் அதன்பின் அழிப்பது சிரமம்...*


*▪️இன்றைய பொழுது இனிமையான பொழுதாக மலரட்டும்... மன மகிழ்வுடன் சிறு புன்னகையுடன் உன்னால் இதுவரை முடியாத காரியத்தை முழுதாய் முடித்திட தன்னம்பிக்கையுடன் தொடங்குங்கள்...*


*தற்கொலை தவிர், தன்னம்பிக்கை நிமிர்!* 


முதுகெலும்பு இல்லா புழுவும் முன்னேறித் தான் செல்கிறது...! 


முயற்சியோடு பயிற்சி செய்தால் வெற்றியே வரலாறாகிறது....! 


எதிர் நீச்சலோடு மீன்கள் வாழ்வை கடக்கிறது....! 


எதிர்மறை எண்ணங்கள் தவிர்க்க, யாதும் வெற்றியாகிறது....! 


நசுங்கிப்  போகும் நத்தையும், இரு கொம்போடு நகர்ந்து போகிறது....!


நடக்கப் போவதை நம்பிக்கையோடு எதிர் கொண்டால் ஏதும் எளிதாகிறது...! 


சிறு துளைகளை ஏற்று மூங்கில் புல்லாங் குழலாகிறது....! 


சிறு பிரச்னைகளை சீராக்கினால், சிகரமும் தொட சிரமமின்றியாகிறது...! 


உளியால் இடிவாங்கி பாறையும் வணங்கும் சிலையாகிறது....! 


உயிருள்ள மாந்தரும் உழைப்பதால் வாழ்வும் உயர்வாகிறது....! 


இலைகளை மரங்கள் உதிரச்  செய்து தனக்குத் தானே உரமாக்குகிறது....! 


இயலாது ஏதும் இல்லை....!  


யாதும் சாதனையாகிறது...! 


தோல்வியின் பரிசு தற்கொலை என்று எண்ணி விடாதே...! 


வெற்றியின் சிபாரிசு தன்னம்பிக்கை என்று மறந்து விடாதே!





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...  *அவசர செய்தி: அனைத்து Block civil coordinators (BRTE) கவனத...