எரிபொருள் மற்றும் பேட்டரி தீர்ந்ததால் செயலிழந்தது 'மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்' (Mars Orbiter Mission - MOM) என்று அலுவல்பூர்வமாகவும், 'மங்கள்யான்' (Mangalyaan) என்று பரவலாகவும் அழைக்கப்பட்ட செயற்கைக்கோள் (The satellite officially called 'Mars Orbiter Mission (MOM) and popularly called 'Mangalyaan' crashed due to running out of fuel and batteries)...
இந்திய விண்வெளித்துறையில் மைல் கல்லாக கடந்த 8 ஆண்டுகளாக செவ்வாய்கிரக சுற்றுப் பாதையில் வலம் வந்து கொண்டிருந்த மங்கள்யான் விண்கலம் தமது பயணத்தை நிறைவுசெய்துவிட்டது.
இஸ்ரோ எனப்படுகிற இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமானது கடந்த 2013-ல் விண்வெளித்துறையின் உச்சத்தை தொட்டது. ரூ450 கோடி செலவில் மங்கள்யான் விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது இஸ்ரோ. மங்கள்யான் விண்கலத்தை பிஎஸ்எல்வி-25 ராக்கெட் விண்ணுக்கு சுமந்து சென்றது. இதில் 15 கிலோ எடை கொண்ட கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன.
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு, அதன் மீது படிந்துள்ள தாதுக்கள் மற்றும் மீத்தேன் குறித்து ஆய்வு மேற்கொள்ள மங்கள்யான் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து செவ்வாய் கிரகத்தை அடைந்த 4-வது விண்கலம் என்ற பெருமைக்குரியது நமது மங்கள்யான்.
மங்கள்யான் விண்கலமானது 2014-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. மங்கள்யான் விண்கலம் பல்வேறு தகவல்களையும் தொடர்ந்து அனுப்பி வந்தது. இதனால் மங்கள்யானுக்கு அடுத்தடுத்த விண்கலத்தை அனுப்புகிற முயற்சிகளையும் இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தின் மிகப் பெரிய நிலவான போபோஸை மங்கள்யான் படம் எடுத்து அனுப்பி இருந்தது. செவ்வாய் கோளில் இருந்து 7,200 கி. மீட்டர் தொலைவிலும், சந்திரனிடமிருந்து 4,200 கி. மீட்டர் தொலைவிலும் இருப்பது போபோஸ். இந்த போபோஸ், விண்கற்களால் உருவானது; இதில் தண்ணீர் இருக்கிறது; விண்கற்கள் மோதலில் இருந்து இது உருவாகி இருக்கலாம் எனவும் கருதப்பட்டது.
இதனிடையே மங்கள்யான் விண்கலத்துடனான தொடர்புகள் தற்போது துண்டிக்கப்பட்டுள்ளன. விண்வெளியில் அண்மையில் உருவான மிக நீண்ட கிரகணம் ஒன்றால் மங்கள்யான் விண்கலத்தின் எரிபொருள் தீர்ந்து போயிருக்கலாம் என கருதப்படுகிறது. தற்போதைய நிலையில் மங்கள்யான் விண்கலத்துடனான அனைத்து தொடர்புகளும் இல்லாமல் போய்விட்டது.
இதனால் கடந்த 8 ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டு பல்வேறு தகவல்களை அனுப்பி வந்த மங்கள்யானின் விண்வெளிப் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.
மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் : மங்கள்யான் செயற்கைக்கோளுடன் 8 ஆண்டுகளுக்கு பின் தொடர்பு துண்டிப்பு...
இந்தியா அனுப்பிய செவ்வாய் சுற்றுவட்ட கலனின் எரிபொருள் மற்றும் பேட்டரி தீர்ந்து விட்டிருப்பதால் அதன் பணிகளை மேலதிகமாகத் தொடர முடியாத நிலை உண்டாகி இருக்கும் என்று கணிக்கப்படுவதாக பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
ஆறு மாதங்கள் மட்டுமே இயங்கக்கூடிய வகையில் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள், சுமார் எட்டு ஆண்டு காலம் பூமிக்குத் தரவுகளை அனுப்பியுள்ளது.
'மங்கள்யான்' என்று பரவலாக அறியப்படும் இந்தியாவின் செவ்வாய் சுற்று வட்டக் கலன் 450 கோடி ரூபாய் செலவில் 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் தேதி பிஎஸ்எல்வி - சி 25 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.
2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி செவ்வாய்க்கு மேலே இருக்கும் அதன் சுற்றுவட்டப் பாதையில் முதல் முயற்சியிலேயே நிலை நிறுத்தப்பட்டது.
''தற்போதைக்கு செவ்வாய் சுற்றுவட்டக் கலனில் எரிபொருள் இல்லை; அதன் பேட்டரியும் தீர்ந்துவிட்டது; செவ்வாய் சுற்றுவட்ட கலனுடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டு விட்டது,'' என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி முகமையான இஸ்ரோவின் வட்டாரங்கள் பிடிஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளன.
எனினும் இஸ்ரோ தலைமையகம் இது குறித்து அலுவல்பூர்வ அறிவிப்பு எதையும் இதுவரை வெளியிடவில்லை.
செவ்வாய் சுற்றுவட்டக் கலனின் பேட்டரி தீர்ந்துவிடக் கூடாது என்பதற்காக, கடந்த காலங்களில் சூரிய கிரகணம் உண்டான நேரங்களில், அதன் சுற்றுவட்டப் பாதை மாற்றப்பட்டது.
''ஆனால் கடைசியாக செவ்வாயில் உண்டான சூரிய கிரகணம் ஏழரை மணி நேரம் நீடித்தது. அதில் இருந்த எரிபொருள் அனைத்தும் அந்த செயற்கைக்கோளால் (மங்கள்யான்) பயன்படுத்தப்பட்டுவிட்டது,'' என்று ஓர் இஸ்ரோ அதிகாரி பிடிஐ முகமையிடம் கூறியுள்ளார்.
செவ்வாய் சுற்றுவட்டக் கலனின் பேட்டரிகள் ஒரு மணி நேரம் 40 நிமிடம் ஏற்படக் கூடிய சூரிய கிரகணத்தை கையாளும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன. நீண்ட நேரம் உண்டாகும் கிரகணங்களால் பேட்டரியின் ஆற்றல் பாதுகாப்பான அளவைவிடக் கீழே சென்று விடும்,'' என்று இன்னொரு இஸ்ரோ அதிகாரி பிடிஐ செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.
மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்
'மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்' (Mars Orbiter Mission - MOM) என்று அலுவல்பூர்வமாகவும், 'மங்கள்யான்' என்று பரவலாகவும் அழைக்கப்பட்ட இந்தியாவின் செவ்வாய் சுற்றுவட்டக் கலன் ஐந்து முக்கியப் பாகங்களைக் கொண்டிருந்தது.
மார்ஸ் கலர் கேமரா, தெர்மல் இன்ஃப்ரா ரெட் இமேஜிங் ஸ்பேக்ரோமீட்டர், மீத்தேன் சென்சார், மார்ஸ் எக்சோஸ்பியரிக் நியூட்ரல் கம்போசிஷன் அனலைசர், லைமன் ஆல்ஃபா போட்டோமீட்டர் ஆகியவை அவை.
மார்ஸ் கலர் கேமரா மட்டுமே இதுவரை ஆயிரத்துக்கும் மேலான படங்களை அனுப்பியுள்ளது. செயற்கைக்கோளின் நீள்வட்ட வடிவிலான சுற்றுவட்டப் பாதை செவ்வாயை தூரத்தில் இருந்து விரிவாகவும், அருகில் இருந்து தெளிவாகவும் படம் எடுக்க உதவியாக இருந்தது.
இந்தியாவின் முதல் முயற்சி
சூரிய மண்டலத்தின் வேறு ஒரு கோளுக்கு சென்று ஆராயும் இந்தியாவின் முதல் முயற்சியாக மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் அமைந்தது.
அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் மட்டுமே செவ்வாய் கோளுக்கு விண்கலனை வெற்றிகரமாக அனுப்பியிருந்த நிலையில், 2014-ல் நான்காவதாக இந்தியாவும் இணைந்தது. முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்பிய முதல் நாடு என்ற சாதனையை இந்தியா படைத்தது.
முன்னதாக நிலவுக்கு சந்திரயான் 1 & 2 ஆகிய விண்வெளி ஆராய்ச்சித் திட்டங்களை இந்தியா முன்னெடுத்தது.
2009இல் மேற்கொள்ளப்பட்ட சந்திரயான்- 1 திட்டம் வெற்றிகரமாக அமைந்தது. ஆனால் 2019இல் மேற்கொள்ளப்பட்ட சந்திரயான்- 2 திட்டம், அதன் லேண்டர் (தரையிறங்கு கலன்) விழுந்து நொறுங்கியதால் தோல்வியில் முடிந்தது.
இஸ்ரோவால் செவ்வாயில் அடுத்தகட்ட ஆராய்ச்சி எப்போது மேற்கொள்ளப்படும் என்பது குறித்து இந்திய அரசு இதுவரை எந்த உறுதியான தகவலையும் வெளியிடவில்லை.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...