கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பிறவிக் காது கேளாமை குறைபாடும், காக்ளியார் இம்ப்ளாண்ட் சிகிச்சையும் - மருத்துவர் அ.ப.ஃபரூக் அப்துல்லா (Congenital Deafness and Cochlear Implant Treatment - Dr. A.B. Farook Abdulla)...



பிறவிக் காது கேளாமை குறைபாடும், காக்ளியார் இம்ப்ளாண்ட் சிகிச்சையும் - மருத்துவர் அ.ப.ஃபரூக் அப்துல்லா (Congenital Deafness and Cochlear Implant Treatment - Dr. A.B. Farook Abdulla)...


 சமீபத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் இந்திய பிரிவு வெளியிட்ட "உலக காது கோளாமை குறித்த விழிப்புணர்வு நாள்" புகைப்படத்தில் கேரளாவைச்  சேர்ந்த  மருத்துவ மாணவியான செல்வி. ரிஸ்வானாவின் படம் இடம்பெற்றது. 


இதிலென்ன ஸ்பெசல்? 


தற்போது இறுதி ஆண்டு மருத்துவம் பயிலும் ரிஸ்வானா பிறக்கும் போதே காது கேளாமை நோயால் பாதிக்கப்பட்டவர்.


அவரது தந்தை மற்றும் தாயின் கடும் உழைப்பு மற்றும் போராட்டத்தாலும் 

சாதுர்யமாக அறிவோடு விழிப்புணர்வோடு செயல்பட்டு மகளுக்கு இருந்த கேட்டல் திறன் குறைபாட்டை உடனே கண்டறிந்து அதற்குரிய நவீன சிகிச்சையான காக்லியார் இம்ப்ளாண்ட்டை பொருத்தி அவர்களது மகள் நன்றாக கேட்கவும் பேசவும் படிக்குமாறு செய்து தற்போது அவர் மருத்துவராகவும் வரப்போகிறார் என்று எண்ணும் போது நவீன மருத்துவ அறிவியலின் முக்கியத்துவத்தையும் காது கேளாமை குறித்த விழிப்புணர்வை நாம் அனைவரும் பெற்றிருப்பது முக்கியம் என்பது புலப்படும். 


தமிழ்நாட்டைப் பொருத்தவரை 

பிறவியிலேயே காது கேளாமை நோய்க்கு உள்ளான குழந்தைகளை பிறந்த உடனேயே கண்டறிய 

மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவ மனைகள் , மருத்துவக் கல்லூரிகளில் 

இதற்கென பிரத்யேகமான மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 


அங்கு OTO ACOUSTIC EMISSION செவி ஒலி உமிழ்வு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒலிபுகா அறையில் பிறந்த குழந்தைகளுக்கு காது கேட்கும் திறன் இலவசமாக பரிசோதிக்கப்படுகிறது. 


இவ்வாறு பிறந்த குழந்தைக்கு மூன்று மாதத்திற்குள் காது கேட்கிறதா இல்லையா என்பதை அறிந்து கொண்டால் 


ஒருவேளை நம் குழந்தைக்கு காது கேட்கும் திறன் பிறவியிலேயே இல்லாமல் இருந்தால் (CONGENITAL DEAFNESS) 

கவலைப்படத் தேவையில்லை 


தமிழ்நாட்டில் பிறவிக் காது கேளாமை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு  காக்லியார் இம்ப்ளாண்ட் எனும்  நவீன செயற்கை செவிப்புலன் மீட்கும் கருவியை பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்கு இலவசமாக பொருத்தும் திட்டத்தை நாட்டிலேயே முதல் மாநிலமாக  2009 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழ்நாட்டில் செயல்முறைப் படுத்தினார். 


தமிழ்நாட்டைப் பின்பற்றி 

கேரளாவில் 2012ஆம் ஆண்டு இந்த திட்டம் தனியார் பங்களிப்போடு செயல்பாட்டுக்கு வந்தது. 


தற்போது மத்திய அரசின்  சமூக நீதித்துறை (ADIP SCHEME)  சார்பாக காக்ளியார் இம்ப்ளாண்ட் சிகிச்சைக்கு பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கு ரூபாய் ஏழு லட்சம் வரை நிதி ஒதுக்கப்படுகிறது. 


ஒரு காக்ளியார் இம்ப்ளாண்ட் பொருத்த சுமார் ஏழு லட்சம் ரூபாய் செலவு ஆகும் என்ற சூழ்நிலையில் 

தமிழ்நாட்டில் இந்த திட்டத்தின் கீழ் மொத்த செலவினத்தையும் அரசு ஏற்று இதுவரை ரூபாய் 327 கோடி இதன் பொருட்டு செலவிடப்பட்டு 4101 குழந்தைகளுக்கு காக்லியார் இம்ப்ளாண்ட் பொருத்தப்பட்டுள்ளது. 


பள்ளி சிறார் நலன் பேணும் மருத்துவர்கள் அடங்கிய குழு கடந்த எட்டு ஆண்டுகளில் பல்லாயிரம் காது கேளாத குழந்தைகளை அடையாளம் கண்டு இந்த சிகிச்சைக்கு உட்படுத்தி செவிப்புலனை மீட்க உதவியுள்ளனர். 


தங்களது குழந்தைக்கு காது சரியாக கேட்காமல் இருப்பதாக உங்களுக்குத் தோன்றினால் அருகில் இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை பிரிவை உடனே அணுகவேண்டும். 


எத்தனை விரைவாக காது கேளாமையை கண்டறிகிறோமோ அத்தனை நல்லது


காக்ளியார் இம்ப்ளாண்ட் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சையை ஒரு வயது கடந்த குழந்தைகளுக்கு செய்ய முடியும். 


ஆயினும் ஒன்றரை வயதுக்குள் இந்த கருவி பொருத்தப்படும் போது சீக்கிரமாகவே குழந்தை நன்றாக கேட்டு  பேசி படிக்க ஆரம்பிக்கும். கற்றலில் எந்த பிரச்சனையும் வராது. 


அப்படியே தள்ளிப்போனாலும் மூன்று வயதுக்குள்ளாவது காக்ளியார் இம்ப்ளாண்ட் பொருத்தப்பட்டால் சிறப்பான முடிவுகள் கிடைக்கும். 


அதிகபட்சம் இந்திய வரம்புப்படி ஐந்து வயதுக்கு மேல் இந்த இம்ப்ளாண்ட்  பொருத்தப்படுவதில்லை. காரணம் பிறவிக்குறைபாட்டிற்கு அதற்கு மேல் இம்ப்ளாண்ட் பொருத்துவதால் பெரிய பலனில்லை. 


காக்ளியார் இம்ப்ளாண்ட் தற்போது முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பொருத்தப்படுகிறது 


இம்ப்ளாண்ட் பொருத்தப்பட்ட பின் பேச்சுப் பயிற்சி மொழிப்பயிற்சி வழங்கப்பட வேண்டும் 


இவ்வாறாக குழந்தைகளுக்கு கேட்டல் திறன் அதிகரிக்கும் போது கற்றலும் பேச்சும் சிறப்பாக அமையும் 

அவர்களது எதிர்காலமும் வளம் பெறும். 


உங்களுக்கு அருகில் இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரியின் காது மூக்கு தொண்டைப் பிரிவு மருத்துவர்களை  அணுகி தேசிய காதுகேளாமை தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு திட்டத்தின் நோக்கம் மற்றும் பலன்களைப் இலவசமாகப் பெற்றிடுங்கள் 


விரைவில் பிறவிக் காது கேளாமையைக் கண்டறிவோம்

விரைவில் காக்ளியார் இம்ப்ளாண்ட் பொருத்துவோம் 


செவிப்புலனை  குழந்தைகளுக்கு வழங்கிடுவோம்

அவர்களின் எதிர்காலத்தைக் காத்திடுவோம்


நன்றி 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

07-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: மருந்து ...