கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இளையோரிடத்தில் அதிகரித்து வரும் HIV தொற்று

 


கர்நாடக மாநிலத்தில் இளையோரிடத்தில்  அதிகரித்து வரும் ஹெச் ஐ வி தொற்று 


கர்நாடகா வழி பாடம் கற்போம் 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை 


2023 - 2024 ஆம் வருடம்

44,500 எச்.ஐ.வி தொற்றாளர்கள் என்றிருந்த நிலையில் தற்போது 2025-2026 இல் 

66,600 என்று எண்ணிக்கை கூடியுள்ளது. 

இந்தத் தொற்றாளர்கள் அனைவரும் 18-35 வயதுக்குட்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது. 


கர்நாடகாவில் தற்போது 

2.60 லட்சம் எச்.ஐ.வி தொற்றாளர்கள் இருக்கிறார்கள் 

அதில் 2.05 லட்சம் பேர் மட்டுமே சிகிச்சையில் இருக்கிறார்கள். 

54000 பேர் எந்த சிகிச்சை வளையத்துக்குள்ளும் இல்லாமல் தங்களுக்கு தொற்று இருந்தும் அது குறித்த விழிப்புணர்வு இன்றி இருக்கிறார்கள். 


இவர்கள் மூலம் தான் தொற்று பிறருக்கு 

- பாதுகாப்பற்ற உடலுறவு 

- பாதுகாப்பற்ற ஊசி ஏற்றிக் கொள்ளுதல் 

போன்ற வழிகளில் பரவி வருகிறது என்கின்றது ஆய்வு. 


ஹெச். ஐ.வி. 90களில் பரவத் துவங்கிய போது அது 30+ வயதினரிடையே அதிகம் கண்டறியப்பட்டு வந்தது. 


இப்போது 18+ முதல் 35 வயதுக்குள் அதிகமாகக் கண்டறியப்பட்டு வருவதன் காரணங்கள் இதோ..


1. ஆன்லைன் டேட்டிங் ஆப்களின் வருகை 


ஆன்லைன் டேட்டிங் ஆப்கள் பல உள்ளன. அவற்றின் வழியாக ஊர் பேர் தெரியாத ஆள் யாரென்றே தெரியாதவர்கள் கூட 

பிணைப்பு ஏற்படுகிறது. 

இந்தப் பிணைப்பு பிறகு "ஹூக் அப்" எனும் பிரச்சனைக்குரிய கலாச்சார சீர்கேட்டுக்கு வழிவகுக்கிறது.  ஹூக் அப் என்றால் 

கொஞ்ச நாள் டேட்டிங் ஆப்களில் பழகியவருடன் உடலுறவு கொள்ளுதல். 

இதை "டிஜிட்டல் ஹூக் அப்" என்கிறார்கள்


இதனுடன் 


2. கெம் செக்ஸ் கலாச்சாரம் 


ஆன்லைன் ஆப்கள் மூலம் இணைந்த இது போன்ற ஜோடிகள் உடலுறவில் ஈடுபடும் போதும் அதற்கு முன்பு மெத்தாம்பிடமின், கொகயன் போன்ற போதை வஸ்துக்களை உட்கொண்டு அதன் மூலம் எந்த ஒரு தடை உணர்வோ அச்ச உணர்வோ இல்லாமல் தங்குதடையின்றி உடலுறவு கொள்ளுதல் நிலை தான் கெம் செக்ஸ் ( CHEM - மருந்து SEX - உடலுறவு) 

தன்னிலை மறந்த நிலையில் காண்டம் ( ஆணுறை) பெண்ணுறை போன்றவற்றை உபயோகிப்பதில்லை, உபயோகித்தாலும் அது கிழியுறுவதைக் கண்டுகொள்வதில்லை ஆகிய அலட்சியங்களால் 

ஹெச்.ஐ.வி உள்ளிட்ட பால்வினை நோய்கள் பரவுகின்றன. 


3. ஒருவருக்கு பலருடன் ஒரே நேரத்தில் தொடர்பு


ஒருவர் ஒருவருடன் உறவில் இருக்கும் போதே பலருடனும் அதே சமயத்தில் உறவில் ஈடுபடும் போது பால்வினை தொற்றுகள் எளிதில் பரவும் வாய்ப்பாக அமைந்து விடுகின்றன 


4. ஆண்களுக்குள் உறவில் ஈடுபடுபவர்களிடம் சதவிகித அளவில் சற்று அதிகமாக ஹெச் ஐ வி தொற்று பரவி வருவதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


5. சுத்தமற்ற ஊசிகள் / ஒருவர் பயன்படுத்திய ஊசியை பயன்படுத்தி போதை மருந்துகளை ஏற்றும் பழக்கம் இருப்பவர்கள் (PEOPLE WHO INJECT DRUGS) 


6. இளையோரிடத்தில் பாதுகாப்பற்ற உடலுறவு குறித்தும், பால்வினை நோய்களின் பரவல் குறித்தும் போதுமான விழிப்புணர்வின்மை 


என்று பல காரணங்கள் இதற்குப் பின்பு உள்ளன. 


இளையோரிடத்தில் பால்வினை நோய்ப்பரவல் அதிகரித்திருப்பது ஏன்? 


முன்பெல்லாம் குறிப்பிட்ட சில இரவு விடுதிகள், சில நைட் கிளப்கள், சிவப்பு விளக்குப் பகுதிகள் ஆகிய இடங்களில் 

இருந்து மட்டுமே ஹெச்.ஐ.வி உள்ளிட்ட நோய்கள் பரவும் என்பது பொதுவான நம்பிக்கையாகவும், பொது சுகாதார ரீதியாக அந்த இடங்களைக் குறிவைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது போதுமானதாக இருந்தது. 


விபச்சாரத்தில் ஈடுபடுவோரிடையே 

ஹெச் ஐ வி , பால்வினை நோய் பரிசோதனைகள், கட்டாய ஆணுறை உபயோகிப்பு , சுய உதவிக் குழுக்கள் ஆகியவை அமைக்கப்பட்டு விழிப்புணர்வு அதிகரித்தது. 


ஆனால் தற்போது இந்த ஆன்லைன் ஹூக் அப் கலாச்சாரம் - உடலுறவில் ஈடுபட மேற்கூறிய இடங்கள் தேவையில்லை

 மாறாக ஆன்லைன் மூலம் ஜோடிகள் கிடைத்து, எளிதில் எந்த இடத்திலும் உடலுறவு கொள்ளும் நிலைக்கு பரவலாக்கம் ஆகியுள்ளது. பொது சுகாதார ரீதியாக நோய் தொற்று அடைந்தவர் யார்? 

அவரிடம் இருந்து யார் யாருக்கெல்லாம் பரவியது என்று சரியான மேற்பார்வை செய்ய இயலாமல் போகிறது. 


இவற்றைத் தடுக்க தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? 


- செக்ஸ் குறித்த  கல்வி வளர் இளம் பருவத்தில் இருந்து கட்டாயமாக்கப்பட வேண்டும். 

- பாதுகாப்பற்ற உடலுறவு கர்ப்பத்திலும் பால்வினை நோய்களிலும் எய்ட்ஸிலும் கொண்டுய்க்கும் எனும் செய்தி பரவலாக்கப்பட வேண்டும்

- போதை வஸ்து நுகர்வு அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தெளிவாக பள்ளிகள் கல்லூரிகள் தோறும் பரப்புரை ஆற்றப்பட வேண்டும். 

- குறிப்பாக ரத்த நாளம் வழி ஊசி மூலம் போதை பொருள் ஏற்றிக் கொள்வதும். ஊசிகளை பகிர்ந்து கொள்வதும் மிகவும் ஆபத்தானது. ஹெச் ஐ வி , ஹெப்பாடைட்டிஸ் பி போன்ற நோய்கள் பரவும் அபாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட வேண்டும் 

- ஆன்லைன் ஆப்கள் மூலம் ஜோடிகள் சேருவது அதிலும் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடுவது என்பது ஆபத்தானது. இது குறித்தும் விழிப்புணர்வு அவசியம். 


தொடர்ந்து தொற்றுக்குள்ளாகி அதுகுறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும் 54000 பேரைக் கண்டறியும் பொருட்டு 

மாநிலம் முழுவதும் உள்ள நிறுவனங்கள், கல்வி மையங்களில் தன்னார்வமாக ஹெச் ஐ வி பரிசோதனை செய்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 


விழிப்புணர்வை ஏற்படுத்துவது நம் கடமை

விழித்துக் கொள்வது அவரவர் பொறுப்பு 


ஆதாரங்கள் 

1. NACO SANKALAK sixth edition 2024 report 


நன்றி 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர்

சிவகங்கை


திறமையால் பிறவிக் குறைபாட்டை வென்ற மாவீரன்

 


தன் திறமையால் 

பிறவிக் குறைபாட்டை வென்ற மாவீரனின் கதை. 


ஜூன் 24,1987 

தென் அமெரிக்க கண்டத்தில் 

அர்ஜெண்டினா நாட்டின் 

ரொசாரியோ நகரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த குழந்தைக்கு 

லியோனல் மெஸ்ஸி என்று பெயர் சூட்டினார் அவரது தந்தை ஜோர்ஜ் .


லியோனெல்- பிரெஞ்சு- பொருள் - குட்டி சிங்கம் 

மெஸ்ஸி - இத்தாலி - பொருள் - அறுவடை செய்பவன் 


பெயர் வைத்தது போலவே

லியோனெல் பிறந்ததில் இருந்து தனது சக நண்பர்களைப் போல வயதுக்கேற்றாற் போல வளர்ச்சி காணாமல் "குட்டியாகவே" இருந்தார். 


அர்ஜென்டினாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் பரிசாக வழங்கப்படுவது எது என்றால் கேட்டால் 

தயக்கமே இல்லாமல் அது

"கால் பந்து" தான். 


குட்டையாக இருந்தாலும் 

சிங்கம் சிங்கம் தான். 

கால்பந்தாட்ட களத்தில் எதிர் அணியினர் அமைக்கும் கோட்டைகளை லாவகமாகக் கடந்து சென்று கோல் அடிப்பதில் 

இவரது ஆட்ட நேர்த்தி என்பது 

குழந்தைப் பருவத்திலேயே பிரபல்யம். 


அவரது குடும்பத்தினருக்கு 

அவர் சரியான அளவில் 

உடல் வளர்ச்சியைக் காணவில்லை என்பதை பத்தாம் வயதிலேயே ஒட்டியே உணர்ந்தனர். .


அவரது பதினோறாம் வயதில் 

அந்த செய்தி அவரது குடும்பத்தில் பேரிடியாக இறங்கியது.


ஆம்... மூளையில் பிட்சுசுவரி சுரப்பி எனப்படும் நாளமில்லா சுரப்பியில் இருந்து உடலின் வளர்ச்சியைத் தூண்டும் முக்கியமான ஹார்மோனான

"உடல் வளர்ச்சிக்கான ஹார்மோன்" (GROWTH HORMONE) சரியான அளவில் சுரக்கவில்லை என்பது உறுதியானது. 


இதை Growth Hormone Deficiency என்று அழைக்கிறோம். 

இதன் விளைவாக உடலின்  வளர்ச்சி என்பது அதிகபட்சம் 140 செண்ட்டிமீட்டரில் தடை படும். 

கால்பந்தாட்ட வீரனுக்குத் தேவையான தசை வளர்ச்சியோ எலும்பு வலிமையோ கிடைக்காது. 


ஒட்டுமொத்த குடும்பமே நொறுங்கிப் போனது. 


அசாத்தியமான கால்பந்தாட்டத் திறனைக் கொண்டிருக்கும் ஒரு சிறுவனின் எதிர்காலம் - பிறவிக் குறைபாட்டினால் பாதிக்கப்படப்போவது கண்கூடாகத் தெரிந்தது. 


அக்கால அர்ஜென்டினாவில்

வளர்ச்சிக்கான ஹார்மோன் சிகிச்சை என்பது பிரபலமானதாகவும் இல்லை. 

எளிதில் கிடைக்கக் கூடியதாகவும் இல்லை. 


பிரதிமாதம்  900 முதல் 1500 டாலர்கள்

செலவு புடிக்கும் சிகிச்சைக்கு அந்த ஏழைத் தகப்பனால் எப்படி வழி செய்ய முடியும்? 


மெஸ்ஸிக்கு தேவைப்படும் உதவியை 

குடும்பத்தாலோ சுற்றத்தாராலோ 

அவர் விளையாடிய உள்ளூர் அணியாலோ செய்ய இயலவில்லை. 


எனவே, 13 வயதுச் சிறுவனான மெஸ்ஸியை அழைத்துக் கொண்டு 

ஸ்பெய்ன் நாட்டில் உள்ள பார்சிலோனா மாகாணத்திற்கு சென்றார் அவரது தந்தை. 


அங்கு பார்சிலோனா கால்பந்து கிளப் சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான அணியாகும். 

அந்த அணியின் பயிற்சி மற்றும் அணி மேலாண்மை செயலாளராக இருந்த கார்லஸ் ரெக்சாக் அவர்கள் பார்க்க ஒரு ஆட்டத்தில் விளையாடினார் 


இவரது மிரட்டலான ஆட்டத்திறனையும் 

எதிரிகளிடம் பதுங்கிப் பாயும் திறனையும் 

பந்தை லாவகமாக அங்கும் இங்கும் கொண்டு செல்லும் நேர்த்தியும் பார்த்து விட்டு "அசாத்தியமான திறன்" கொண்டவனாக இருக்கிறானே என்று வியந்தார். இவரை உடனே இந்த கிளப்பிற்குள் புக் செய்யலாம் என்று முடிவு செய்தார். 


ஆனால் பார்சிலோனா அணியின் ஏனைய நிர்வாகக் குழுவினருக்கு இவரது முடிவில் உடன்பாடு ஏற்படவில்லை. 


- வெளிநாட்டு வீரர் 

- வயது மிகவும் குறைவாக உள்ளது. 

- கூடவே பிறவு வளர்ச்சிக் குறைபாட்டு நோய் உள்ளது . அதனால் போதிய வளர்ச்சி இல்லை 

- அவரது மருத்துவ செலவுக்கும் சேர்த்து செலவு செய்ய வேண்டும். 


இத்தனை அஃகன்னாக்கள் இருப்பதால் 

வேண்டாம் என்றே முடிவு செய்தனர். 

போர்ட் கமிட்டியின் இந்த முடிவு, மெஸ்ஸிக்கும் அவரது தந்தைக்கும் அவரது செயலாளர்களுக்கும் பின்னடைவாக அமைந்தது. 


டிசம்பர் 14, 2000

பொம்பேயா டென்னிஸ் கிளப் 

உள்ளே 

பார்சிலோனா டெக்னிக்கல் மேனேஜர் 

ரெக்சாக்குடன் மெஸ்ஸியின் மேனேஜர்கள் 

நீண்ட நேரம் பேசிய பிறகு 

உடன்படிக்கை எட்டப்பட்டது. 


ரோக்சாக்குக்கு மெஸ்ஸியை விட மனசில்லை. 

எனவே, போர்டு கமிட்டியின் முடிவையும் மீறி மெஸ்ஸிக்காக ரிஸ்க் எடுக்கிறேன் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட எத்தனித்தார். 


ஒப்பந்தம் கையெழுத்தாக 

சரத்துகளை எழுத அங்கே காகிதங்கள் கூட தயார் செய்து வைக்கப்பட்டிருக்கவில்லை. 


எனவே, அங்கிருந்த பேப்பர் நேப்கினை எடுத்து அதில் ஒப்பந்த உடன்படிக்கையை எழுதி கையெழுத்திட்டு 

மெஸ்ஸியின் தந்தையிடம் கொடுத்து

"இனி உங்களின் மகன் எங்களின் அணிக்கு விளையாடுவான்" என்றார். 


நெருப்பை வயிற்றில் கட்டிக் கொண்டிருந்த தந்தையின் வயிற்றில் பால் வார்த்த முடிவல்லவோ அது. 


மெஸ்ஸியின் மருத்துவ செலவு முழுவதையும் பார்சிலோனா கிளப் ஏற்கும் என்பதும் முக்கியமான ஒப்பந்தமாகும். 


அதற்கடுத்து 

மெஸ்ஸி, அவருடன் அவரது குடும்பமும் 

ஸ்பெயினுக்கு இடம்பெயரவும் பார்சிலோனா உதவி செய்தது. 


இதன் மூலம் 

மெஸ்ஸி சரியான உடல் வளர்ச்சியை அடைந்தார். 140 செமீட்டர் உயரம் தான் வளருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முறையான ஹார்மோன் சிகிச்சை கிடைத்து 170 செமீட்டர் என்ற அளவை எட்டினார். 



 தனக்கு வாழ்வளித்த பார்சிலோனா அணியில் 2000 முதல் 2021 வரை தொடர்ந்தார். 


அதற்குப் பின்பும் 

அங்கேயே தொடர்ந்து தனது ஓய்வை அந்த அணியில் இருந்தே அறிவிக்க வேண்டும் என்று விரும்பினார். 


ஆனால், பார்சிலோனா அணி நிர்வாகத் திறமையின்மையால் பொருளாதார நலிவுறுதலைச் சந்தித்தது. கிளப்களை நிர்விக்கும் கடுமையான பொருளாதாரம் சார்ந்த நெறிமுறைகளின்  விளைவாக மெஸ்ஸியை அந்த அணியால் தக்க வைக்க இயலவில்லை. 


இத்தனைக்கும் மெஸ்ஸி பணமே வாங்காமலும் விளையாடத் தயாராக இருந்தும், நெறிமுறைகள் சாதகமாக இல்லாததால் கடினமான இதயத்துடனும் கண்ணீருடனும் தனக்கு வாழ்வு தந்த பார்சிலோனாவைப் பிரிந்து  தற்போது இண்டர்மியாமி சிஎஃப் (INTERMIAMI CF) 

அணிக்கு விளையாடி வருகிறார். 


சிறுவனாக சரியான வளர்ச்சி அடைய இயலாமல் 

பொருளாதாரத்திலும் உடல் நிலை சார்ந்தும் பாதிப்பில் இருந்தாலும், 


தனது தனித்திறமையின் காரணமாகவும் 

பார்சிலேனா அணியின் மேலாளர் கார்லஸ் ரெக்சாக்கின் நம்பிக்கை காரணமாகவும் 

இன்று கால்பந்தாட்ட உலகின் மன்னனாக இருந்து வருகிறார் .


 குட்டி சிங்கமான லியோனெல்

கோல்களையும் கோப்பைகளையும் 

அறுவடை செய்யும் மெஸ்ஸியாக மாறியது 

நமக்கெல்லாம் உத்வேகம் தரும் கதை என்றால் அது மிகையாகாது. 


பின்குறிப்பு :- தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாவட்ட அளவிலான ஆரம்ப கால தலையீடு மையங்கள் இயங்கி வருகின்றன. அங்கு குழந்தைகள் நல நிபுணர்கள் குழந்தைகளின் வளர்ச்சிக் குறைபாட்டைக் கண்டறிந்து " பிறவி வளர்ச்சிக்கான ஹார்மோன் குறைபாடு" இருப்பின் அவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 

"ஹார்மோன் சிகிச்சை" இலவசமாக வழங்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


நன்றி


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை



மருந்துகளின் உறை மீது QR Code அச்சிடுவது கட்டாயம்



மருந்துகளின் உறை மீது QR Code அச்சிடுவது கட்டாயம்


போலி மருந்துகளின் புழக்கத்தைத் தடுக்க, QR Code அச்சிடுவதை கட்டாயமாக்கிய ஒன்றிய அரசு


போலி மருந்துகளின் புழக்கத்தைத் தடுக்க, அனைத்து வகையான தடுப்பூசிகள், புற்றுநோய் மருந்துகள், போதைப்பொருள்/மனநல மருந்துகள் ஆகியவற்றின் முதன்மைப் பேக்கிங்கில் QR Code அச்சிடுவதை ஒன்றிய அரசு கட்டாயமாக்கியது. QR Code-ஐ ஸ்கேன் செய்தால், மருந்தின் விவரங்களை நுகர்வோரே சரிபார்த்துக்கொள்ள முடியும். 2027 ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது.


"மணம் இல்லாத கொலையாளி" – கார்பன் மோனாக்சைடு, "மூச்சுப்பாதையை எரிக்கும் விஷம்" – அமோனியா! எப்படி கையாள வேண்டும்?

 


"மணம் இல்லாத கொலையாளி" – கார்பன் மோனாக்சைடு, "மூச்சுப்பாதையை எரிக்கும் விஷம்" – அமோனியா! எப்படி கையாள வேண்டும்?


"The odourless killer" – Carbon monoxide; "The poison that burns the airways" – Ammonia! How should they be handled?



நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு மூச்சும் உடலுக்கு ஆக்சிஜனை கொண்டு சென்று உயிரைத் தாங்குகிறது. ஆனால் சில வாயுக்கள் இந்த செயல்முறையை அமைதியாக சிதைத்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன. அவற்றில் மிகவும் ஆபத்தானது கார்பன் மோனாக்சைடு (Carbon Monoxide). இதற்கு நிறமோ, மணமோ, சுவையோ கிடையாது. அதனால்தான் இதை "Silent Killer" என்று அழைக்கிறார்கள். இந்த வாயு பொதுவாக மூடிய அறைகளில் ஜெனரேட்டர் இயக்கும்போது, கார் அல்லது லாரி இன்ஜின் புகை அதிகமாக இருக்கும் இடங்களில், நிலக்கரி அடுப்பு பயன்படுத்தும் வீடுகளில், தீ விபத்து ஏற்பட்ட கட்டிடங்களில், மற்றும் காற்றோட்டம் குறைவான இடங்களில் அதிகமாக காணப்படுகிறது. இந்த வாயு உடலுக்குள் சென்றவுடன், இரத்தத்தில் ஆக்சிஜனை சுமந்து செல்லும் ஹீமோகுளோபினுடன் ஆக்சிஜனை விட பல மடங்கு வலிமையாக ஒட்டிக்கொள்கிறது. இதனால் உடலில் ஆக்சிஜன் இருந்தாலும் அது செல்களுக்கு சென்று சேர முடியாது. குறிப்பாக மூளை மற்றும் இதயம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பாதிக்கப்படுகின்றன. முதலில் தலைவலி, சோர்வு, மயக்கம் போன்றவை தோன்றும். ஆனால் வாயுவை தொடர்ந்து சுவாசித்தால் சில நிமிடங்களிலேயே மயக்கம், கோமா, ஏன் மரணம் கூட ஏற்படலாம்.



மற்றொரு பக்கம், அமோனியா (Ammonia) முற்றிலும் வேறுவிதமாக தாக்குகிறது. இதற்கு மிகவும் கடுமையான நாற்றம் இருக்கும். அமோனியா பொதுவாக உரத் தொழிற்சாலைகள், குளிர்பதன அமைப்புகள், ஐஸ் தொழிற்சாலைகள், ரசாயன தொழிற்சாலைகள் மற்றும் சில சுத்தம் செய்யும் திரவங்கள் பயன்படுத்தப்படும் இடங்களில் காணப்படுகிறது. நாம் அமோனியாவை சுவாசிக்கும்போது அது மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரலின் ஈரப்பதத்துடன் கலந்து ஒரு காரத் தன்மை கொண்ட பொருளாக மாறி, சுவாசப் பாதையின் செல்களை எரிச்சலடையச் செய்கிறது. அதனால் கண்களில் நீர் வடிதல், மூக்கெரிச்சல், இருமல் போன்றவை ஆரம்பிக்கும். அதிக அளவு அமோனியா உடலுக்குள் சென்றால், காற்றுக்குழாய் மற்றும் நுரையீரல் வீங்கி, ஆக்சிஜன் உள்ளே செல்லும் பாதையே குறுகிவிடும். இதனால் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.


எளிமையாகச் சொன்னால், கார்பன் மோனாக்சைடு உடலுக்குள் ஆக்சிஜன் செல்லும் "வாகனத்தை" திருடுகிறது; அமோனியா ஆக்சிஜன் செல்லும் "சாலையையே" சேதப்படுத்துகிறது. கார்பன் மோனாக்சைடு இரத்தத்தை தாக்கி ஆக்சிஜன் போக்குவரத்தை தடுக்கிறது; அமோனியா சுவாசப் பாதையை தாக்கி ஆக்சிஜன் நுழைவதை தடுக்கிறது. இரண்டின் முடிவும் ஒன்றே – உடலுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் உயிருக்கு ஆபத்து ஏற்படுவது.


சுவாரஸ்யமான ஒரு உண்மை என்னவென்றால், தீ விபத்துகளில் உயிரிழக்கும் பலர் தீக்காயத்தால் அல்ல; புகையில் இருக்கும் கார்பன் மோனாக்சைடு விஷத்தன்மையால் உயிரிழக்கிறார்கள். அதேபோல், அமோனியா கசிவு சில நிமிடங்களிலேயே ஆரோக்கியமான ஒருவருக்குக் கூட கடுமையான மூச்சுத்திணறலை ஏற்படுத்த முடியும். அதனால்தான் இந்த இரண்டு வாயுக்களும் "கண்ணுக்குத் தெரியாத எதிரிகள்" என்று அழைக்கப்படுகின்றன.


எப்படி கையாள வேண்டும்?


கார்பன் மோனாக்சைடு அல்லது அமோனியா விஷத்தன்மை சந்தேகிக்கப்பட்டால், முதலில் அந்த நபரை உடனடியாக திறந்த காற்றோட்டம் உள்ள இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். மூடிய இடத்தில் இருந்தால் கதவுகளையும் ஜன்னல்களையும் திறக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர் மயக்கத்தில் இருந்தால், பாதுகாப்பாக பக்கவாட்டில் படுக்க வைத்து அவசர மருத்துவ உதவியை அழைக்க வேண்டும். மருத்துவமனையில் ஆக்சிஜன் சிகிச்சை அளிக்கப்படும்; கார்பன் மோனாக்சைடு விஷத்தன்மையில் சில நேரங்களில் Hyperbaric Oxygen Therapy கூட தேவைப்படலாம். அமோனியா கண் அல்லது தோலில் பட்டிருந்தால், உடனடியாக அதிக அளவு சுத்தமான நீரால் கழுவ வேண்டும். மிக முக்கியமாக, பாதிக்கப்பட்டவரை காப்பாற்றச் செல்லும் நபரும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் அந்த இடத்திற்குள் நுழையக் கூடாது, ஏனெனில் பல விபத்துகளில் காப்பாற்றச் சென்றவர்களும் அதே விஷ வாயுவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


நினைவில் கொள்ளுங்கள்: தீயை நாம் பார்க்க முடியும், புகையை நாம் உணர முடியும். ஆனால் கார்பன் மோனாக்சைடு மற்றும் அமோனியா போன்ற வாயுக்கள் பல நேரங்களில் உயிருக்கு ஆபத்தை அமைதியாக ஏற்படுத்துகின்றன. அதனால் விழிப்புணர்வும், உடனடி மருத்துவ உதவியும் உயிரைக் காப்பாற்றும் மிகப் பெரிய ஆயுதங்களாகும்.


இன்று உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் அனைவரும் குணம் அடைய இறைவனிடம் வேண்டிக்கொள்வோம்..


 

பொது பணியிட மாறுதல் வெளிப்படையாக நடத்தப்படும் - அமைச்சர் அருண்ராஜ்

 


பல்வேறு பதவிகளில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களுக்கும் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் பொது பணியிட மாறுதல் கலந்தாய்வின் மூலம் வெளிப்படையாக நடத்தப்படும் என்றும் காலி பணியிடங்களின் விபரம் கலந்தாய்விற்கு முன்னதாகவே துறை இணைய தளத்தில் முழுமையாக வெளியிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் மாண்புமிகு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர். கோ.க. அருண்ராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.


இது குறித்த கடிதம்


>>>  தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



டாக்டர். கோ.க. அருண்ராஜ் 

மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்


தலைமைச் செயலகம், சென்னை -600 009.


அலுவலக கடித எண்.05/2026, நாள் - 27.05.2026


சுற்றறிக்கை


பெரருள்


மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை - பணியிட மாறுதல் வேண்டி மாண்புமிகு அமைச்சர் அலுவலகத்தை நாடும் பணியாளர்கள் - உயர் அலுவலர்களின் அனுமதியின்றி அணுகுவது குறித்து - சில அறிவுரைகள் வழங்குதல் – குறித்து.


மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவின்படி மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் பல்வேறு பதவிகளில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களுக்கும் பொது பணியிட மாறுதல் கலந்தாய்வின் மூலம் வெளிப்படையாக நடத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும் காலி பணியிடங்களின் விபரம் கலந்தாய்விற்கு முன்னதாகவே துறை இணைய தளத்தில் முழுமையாக வெளியிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மாண்புமிகு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்


நகல் - 1) அரசு செயலர்,

மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை. தலைமைச் செயலகம், சென்னை -600 009.


2) இயக்குநர், மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம், கீழ்பாக்கம், சென்னை.


3) இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம், சென்னை-6.


4) இயக்குநர், பொது சுகாதாரம் மற்றம் நோய்த்தடுப்பு மருந்துத்துறை, சென்னை-6.


சின்னம்மை நோய் (Chicken Pox) குறித்த முழுமையான தகவல்கள்

 


சின்னம்மை நோய் (Chicken Pox) குறித்த முழுமையான தகவல்கள் 


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை

தற்போதைய வெயில் காலத்தில் சின்னம்மை தொற்றுக்கு உள்ளாகி வருவதைக் காண்கிறோம். 


"Chich-Pois" எனும் பிரெஞ்சு மொழிச் சொல்லுக்கு "பச்சை பட்டாணி" ( Chick peas) என்று பொருள். 


சின்னம்மை ஏற்படும் போது உடல் முழுவதும் பச்சை பட்டாணி அளவில் கொப்புளம்  தோன்றியதால் "சிக்கன் பாக்ஸ்" என்று அழைக்கப்படுகிறது. மற்றபடி நாம் உண்ணும் சிக்கனுக்கும் இந்த சின்னம்மைக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. 

 

பொதுவாக 

சின்னம்மைக்கு எந்த  மருத்துவ சிகிச்சையும்  தேவை இல்லை எனும் மூடநம்பிக்கை இன்னும் நமது சமூகத்தில் நிலவி வருகிறது.

அதைப் போக்கும் முகமாக இந்த விழிப்புணர்வுக்  கட்டுரை அமையும். 


சின்னம்மை எனும் சிக்கன் பாக்ஸ் - வேரிசெல்லா சோஸ்டர் வைரஸ் மூலம் உண்டாகும் தொற்று நோயாகும். 


காற்றின் மூலம் பரவும் தொற்று நோய் என்பதால் தொற்றுக்குள்ளானவர் தும்மும் போதும் இருமும் போதும் அருகில் இருந்து அதை சுவாசிப்பவர்களுக்கு எளிதில்  பரவி விடும். 


இதனோடு கொப்புளங்கள் தோன்றும் நிலை வரும் போது தோலோடு தோல் உரசுவதாலும் தொற்றுப் பரவல் நடக்கிறது.


வைரஸ் தொற்று உடலுக்குள் சென்றதில் இருந்து நோயின் அறிகுறி தொடங்க சராசரியாக இரண்டு வாரங்கள் எடுக்கும்.


காய்ச்சல்

உடல் சோர்வு 

தொண்டை வலி

தலை வலி ஆகியன முதல் ஐந்து முதல் ஏழு நாட்கள் இருக்கும். 


அதன்பின், உடல் முழுவதும் சிவப்பு நிற படை தோன்றி நெஞ்சுப் பகுதி, பின்புறம், முகம் என கொப்புளங்கள் உருவெடுத்து உடல் முழுவதும் பரவும். 


இரண்டாவது வாரத்தின் முடிவில் கொப்புளங்கள் சருகாகி விழுந்து விடும். 


கொப்புளங்கள் தோன்றுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பில் இருந்து, அவை சருகாகி விழும் வரை பிறருக்குத் தொற்றுப் பரவும் நிலையில் இருக்கும். 


ஏன் சின்னம்மைக்கு மருத்துவ சிகிச்சை அவசியம்   ? 


பொதுவாக குழந்தைகளுக்கு இந்தத் தொற்று ஏற்படும் போது பெரிய பாதிப்புகள் இன்றி மறையும் என்பது உண்மை தான். ஆனால் வளர் இளம் பருவத்தினர், வயது வந்தோர், முதியோர், கர்ப்பிணிகள், எதிர்ப்பு சக்தி குன்றியோர்க்கு ஏற்படும் போது நோயின்  தீவிரமாக வெளிப்படும். 


முறையான சிகிச்சை அளிக்காவிட்டால் 

சிலருக்கு நிமோனியா எனும் தீவிர நுரையீரல் தொற்று , எண்கஃபாலைட்டிஸ் எனும் மூளை அழற்சி , கொப்புளங்களில் பாக்டீரியா தொற்று ஆகியவை ஏற்படலாம். 


சின்னம்மைக்கு 

ஏசைக்ளோவிர்/ வேல்ஏசைக்ளோவிர் ஆகிய மாத்திரைகள் சிறப்பாக செயல்பட்டு நோயின் தீவிரத்தையும் நோயின் காலத்தையும் குறைக்கக் கூடியதாக உள்ளன. 


முக்கியமாக இந்த மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரையின் கீழ், தோல் படை மற்றும் கொப்புளங்கள் தோன்றத் துவங்கிய 24 மணிநேரத்திற்குள் எடுக்கும் போது சிறந்த பலனைத் தருகிறது.  


இதுவன்றி சின்னம்மை ஏற்பட்டு குணமானவர்களுக்கு, வைரஸின் ஒரு பகுதி அவர்களின் நரம்பு மண்டலத்தில்  நெடிய துயில் நிலைக்குச் சென்று அமைதி காத்திருக்கும். தனக்கான தோதான சூழல் வரும் போது ( அந்த நபரின் எதிர்ப்பு சக்தி குறையும் போது) மீண்டும் உயிர்ப்பு பெற்று அக்கி எனும் ஹெர்பிஸ் சோஸ்டர் நோயை ஏற்படுத்தும். அக்கி என்பது தோலில் திராட்சை பழம் போல தோற்றம் கொண்ட ஒன்றோடு ஒன்று நெருங்கி ஒட்டி இருக்கும் கொப்புளங்களுடன் கடுமையான வலியை ஏற்படுத்தக் கூடிய நோயாகும். 


ஒரு வயதுக்குள் சின்னம்மை ஏற்பட்டிருந்தாலும் சரி, அந்த நபர் முதியவராக ஆன பின்பும் கூட அதாவது அறுபது வயதைக் கடக்கும் போது மீண்டும் வெளிவந்து அக்கியை ஏற்படுத்தலாம்.

அந்த நோய்க்கும், 

ஏசைக்லோவிர் மருந்தை உடனடியாகக் கொடுப்பதன் மூலம் நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த முடியும்.


சின்னம்மை கண்ட ஆரோக்கியமான நிலையில் உள்ளவர்களில் 20% பேருக்கும், எதிர்ப்பு சக்தி குன்றியோரில் 50% பேருக்கும் அவர்கள் வாழ்வின் பிற்பகுதியில் அக்கி ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்பதை அறிக. 


யாருக்கெல்லாம் சின்னம்மை தீவிரத்துடன் வெளிப்படும் வாய்ப்பு உள்ளது? 


எதிர்ப்பு சக்தி குன்றச் செய்யும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறிப்பாக அதிக அளவில் ஸ்டீராய்டு மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள், 


புற்று நோய் சிகிச்சையில் இருப்பவர்கள், மனித எதிர்ப்பு சக்தி குன்றச் செய்யும் வைரஸ் தொற்றுக்கு உள்ளானோர், கர்ப்பிணிமார்கள், கட்டுப்பாடற்ற நீரிழிவு இருப்பவர்கள், குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள், குறைவான எடை கொண்ட ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட குழந்தைகள், ஒரு வயதுக்குட்பட்ட சிசுக்கள், 60+ வயதைத் தாண்டிய முதியோர் 

ஆகியோருக்கு சின்னம்மை தொற்று ஏற்படும் போது தீவிரத்துடன் வெளிப்படக்கூடும். எனவே அதிக கவனம் தேவை. உடனடியாக சிகிச்சை தொடங்கப்பட வேண்டும். 


சின்னம்மை ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள வழிகள் உள்ளனவா? 


ஆம். சின்னம்மைக்கு எதிரான தடுப்பூசியை நமது குழந்தைகளுக்கு 

முதல் தவணை - 12 முதல் 15 மாதங்களுக்குள்ளும் 

இரண்டாவது தவணையை  - 4 முதல் 6 வயதிலும் வழங்கலாம். 


இந்தத் தடுப்பூசி 70 முதல் 90%  தொற்றுகளைத் தடுக்கவும், 95% தீவிரத் தொற்றுகளைத் தடுக்கும் ஆற்றல் கொண்டிருக்கிறது. 


இந்தத் தடுப்பூசியை, 

சின்னம்மை ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்த குழந்தைக்கு மூன்று நாட்களுக்குள் வழங்கினால் நோயின் தீவிரம் குறைவதைக் காணலாம். 


எனது குழந்தைக்கு சின்னம்மை தடுப்பூசி போட்டும் சின்னம்மை வந்து விட்டதே. ஏன்? 


சின்னம்மை தடுப்பூசி நோய்த் தொற்றை 70-90% தடுக்கும் என்று ஆய்வுகளில் நிரூபணமாகியிருப்பதால், 10-30% பேருக்கு தடுப்பூசி போட்டிருந்தாலும் தொற்று ஏற்படலாம். ஆயினும் தீவிர நோய் நிலை ஏற்படாமல் தடுப்பூசி காக்கும். 


இதுவரை சின்னம்மை தொற்று ஏற்படாத வயது வந்தோரும் கூட இந்தத் தடுப்பூசியை இரண்டு தவணை - நான்கு மாத இடைவெளியில் போட்டுக் கொள்ளலாம். 


அக்கிக்கு எதிரான தடுப்பூசியும் 50+ வயதினருக்குக் குறிப்பாக நீரிழிவு மருத்துவப் பயனாளிகளுக்கென சந்தையில் உள்ளது. 

தேவைப்படுவோர் அக்கி ஏற்படாமல் இருக்க இந்தத் தடுப்பூசியை இரண்டு தவணை -  இரண்டு முதல் ஆறு மாத இடைவெளியில் பெற்றுக் கொள்ளலாம். 


வீட்டில் ஒருவருக்கு சின்னம்மை ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும்? 


சின்னம்மை ஏற்பட்டவரிடம் இருந்து வீட்டில் பிறருக்கும் தொற்று பரவாமல் இருக்க - தொற்று கண்டவரைத் தனிமைப் படுத்த வேண்டும். நோயின் அறிகுறிகள் தோன்றிய ஒருவரை தனிமைப்படுத்துவதற்குப் பெயர் "ISOLATION" ஆகும். 


கொப்புளங்கள் தோன்றியதில் இருந்து அவை சருகாகி உலரும் வரை இந்தத் தனிமைப்படுத்துதல் தொடர வேண்டும். 


இதற்கடுத்த படியாக, 

தொற்று கண்ட நபருடன் நேரடித் தொடர்பில் இருந்த அவரது வீட்டினர் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். 

தொற்று கண்டவருடன் தொடர்பில் இருந்து, இன்னும் நோயின் அறிகுறிகள் தோன்றாதவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதை "QUARANTINE" என்கிறோம். 


தற்காலத்தில் இந்த குவாரண்டைன் என்பது சரியாகப் பின்பற்றப்படுவதில்லை.  அதனால் தொற்றுப் பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. 


பொதுவாக ஒரு குடும்பத்தில் முதலில் தொற்று கண்டவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவும் போது, இரண்டாவது தொற்று கண்டவருக்கு முன்னவரை விட தீவிரமாக நோய் வெளிப்படுவதைக் காண முடிகின்றது. 


இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில், சின்னம்மை தொற்று வீட்டில் உள்ள முதியோர்களுக்கும் அதிகமாக ஏற்பட்டு தீவிரத் தொற்றை ஏற்படுத்துகிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. 


கொப்புளங்கள் தோன்றிய  24 மணிநேரத்திற்குள், அவர்களுக்கு ஏசைக்லோவிர் / வால்ஏசைக்லோவிர் மருத்துவ சிகிச்சை கிடைத்திடச் செய்ய வேண்டும். 


- தொற்று கண்டவரின் விரல் நகங்களை வெட்டி விட வேண்டும்.  கைகளில் துணி கையுறை அணிவிக்கலாம். இது கொப்புளங்களில் ஏற்படும் அரிப்பின் போது அதிகமாக சொரிந்து காயம் ஏற்படாமல் தடுக்க உதவும். 

- அரிப்பு ஏற்படும் போது காலமைன் லோசன் தடவலாம்.

வேறு எந்த வலி நிவாரணி களிம்போ வேறு வகையான தைலங்களோ தடவுதல் கூடாது. 

- தினமும் லேசான  வெந்நீரில் உடலை ஒத்தி எடுக்கலாம். இது கொப்புளங்கள் மீது பாக்டீரியா தொற்று ஏற்படாமல் தடுக்க உதவும். 

- நீராகாரங்களாகப் பருகக் கொடுக்கலாம். 

- அரிப்புக்கும் காய்ச்சலுக்கும் மருத்துவர் பரிந்துரையில் சிகிச்சை எடுக்க வேண்டும்

- கொப்புளங்கள் சருகாகி உலர்ந்ததும் குளியல் போட்டு விட்டு வீட்டை விட்டு வெளியே வரலாம். 


அபாய அறிகுறிகள் குறித்த கவனம் தேவை - 

சின்னம்மை ஏற்பட்டவருக்கு இரண்டாவது வாரத்தில் 

- பிதற்றல் நிலை 

- அதீத தலை வலி

- வலிப்பு 

- மூர்ச்சை நிலை 

- மூச்சுத் திணறல் 

- தலை சுற்றல் 

- வயிற்று வலி

ஆகியன ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை வழங்கிட வேண்டும். 


சின்னம்மை தானே என்று லேசாக எடுத்துக் கொள்ளாமல் 

அதற்கு வழங்க வேண்டிய மருத்துவ சிகிச்சையையும் 

அதற்குரிய சரியான வழிகாட்டுதல்களையும் கடைபிடித்தால் நோயின் தீவிரத்தையும் 

காலத்தையும் அதன் பாதிப்புகளையும் நம்மால் குறைத்திட முடியும். 


நன்றி இந்து தமிழ் 

மறையாத கட்டுக் கதைகள் - 3 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை





மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை, பெற்றோர்களின் அனுமதி பெற்ற பின் மாணவர்களுக்கு வழங்கிடுமாறு அறிவுறுத்தல்




 சுகாதாரத் துறையிலிருந்து பெறப்படும் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை, பெற்றோர்களின் அனுமதி பெற்ற பின் மாணவர்களுக்கு வழங்கிடுமாறு அறிவுறுத்தல்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



ந.க. எண்.09077/அ5/2024, நாள் 06.10.2025


அறிவிப்பு


6 OCT 2025 


திருச்சிராப்பள்ளி


சுகாதாரத் துறையிலிருந்து பெறப்படும் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை, பெற்றோர்களின் அனுமதி பெற்ற பின் மாணவர்களுக்கு வழங்கிடுமாறு அனைத்து வகை உயர் மேல்நிலை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.


06/10/25


மாவட்டக் கல்வி அலுவலர் 

திருச்சிராப்பள்ளி


பெறுநர்


அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்/மேல்நிலை பள்ளித் தலைமை ஆசிரியர்கள், திருச்சிராப்பள்ளி கல்வி மாவட்டம்.



மார்பகப் புற்று நோயைக் கண்டறிய சுயமாக செய்து கொள்ளும் எளிய பரிசோதனை குறித்த விளக்கம்

 


மார்பகப் புற்று நோயைக் கண்டறிய சுயமாக செய்து கொள்ளும் எளிய பரிசோதனை குறித்த செய்முறை விளக்கம் 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை 


சுய மார்பகப் பரிசோதனை 


இருபது வயதைக் கடந்த அனைத்து மகளிரும் மாதம் ஒருமுறை 

தங்களின் மாதவிடாய் காலம் முடிந்து ஒரு வாரத்திற்குப் பிறகு பின்வரும் சுய மார்பகப் பரிசோதனையை கட்டாயம் செய்யவும் 


முதல் படி 

பாருங்கள் 


முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்று கொண்டு தங்களின் இருபக்க தோள்பட்டைகளையும் நேராக வைத்துக் கொண்டு கைகளை கீழே தொங்க விட்டுக் கொள்ளுங்கள். 

இப்போது தங்களின் இருபக்க  மார்பகங்களிலும் 

அளவிலோ

வடிவத்திலோ

நிறத்திலோ ஏதேனும் மாற்றத்தை காண்கிறீர்களா? 

ஏதேனும் வீக்கத்தைக் காண்கிறீர்களா? 


இப்போது உங்களின் இரு கைகளையும் மேலே தூக்கிக் கொண்டு மேற்கூறியவற்றைப் பார்க்கவும். 


இரண்டாவது படி 

உணர்தல்


தங்களின் தோள்பட்டைப் பகுதிக்குக் கீழ் தலையைணையை வைத்துப் படுத்துக் கொண்டு, தங்களின் இடது கையை வைத்து வலது புற மார்பகத்தையும் 

வலது கையை வைத்து இடது புற மார்பகத்தையும் தொட்டு உணர்ந்து பாருங்கள். 


மூன்றாவது படி 

உணர்தல் 


உங்களின் நடு மூன்று விரல்களின் உள்ளங்கைப் பகுதியைக் கொண்டு அங்குலம் அங்குலமாக தங்களின் மார்பகங்களை அழுத்திப் பரிசோதனை செய்யுங்கள். 


தங்களின் மூன்று விரல்களையும் தட்டையாக சேர்த்து வைத்துக் கொண்டு சீரான அழுத்தத்தைக் கொடுத்து இந்த பரிசோதனையைச் செய்யுங்கள்.  


சிறிய சிறிய வட்ட வடிவில் தங்களின் விரல்களை வைத்து அழுத்திப் பார்க்க வேண்டும். இவ்வாறு தங்களின் மார்பகம் முழுமையையும் பரிசோதனை செய்திருக்க வேண்டும். 


ஒவ்வொரு முறை வட்ட வடிவில் அழுத்தம் தருவதற்கு இடையிலும் விரல்களை எடுக்காமல் தொடர்ந்து பரிசோதனை செய்யவும். 


வெளிப்புறத்தில் இருந்து சுற்றுப் பகுதிகளை பரிசோதனை செய்து கொண்டே உட்பக்கம் வந்து இறுதியில் முலைக் காம்பு வரை அழுத்தம் தந்த பரிசோதனை செய்திருப்பதை உறுதி செய்யவும். 


இந்தப் பரிசோதனையில் 

ஏதேனும் வீக்கம், 

கட்டி இருப்பது போன்ற உணர்வு, தோல் பகுதி ஆரஞ்சுப் பழ தோல் போன்று தடிமனாக இருத்தல் போன்றவற்றை பரிசோதிக்கவும்


அப்படியே அந்தப் பக்கம் இருக்கும் 

கக்கம் (Arm pit) பகுதியை அழுத்தி அங்கு ஏதேனும் கழலை வீக்கம் இருக்கின்றதா? என்பதை பரிசோதிக்கவும். 


நான்காவது படி 

உணர்தல் 


தங்களது முலைக்காம்பை மெதுவாகப் பிதுக்கிப் பார்க்க வேண்டும். 

முலைக் காம்பில் இருந்து 

நீர் போன்ற , பால் நிற அல்லது மஞ்சள் நிற திரவமோ அல்லது ரத்தமோ வெளியேறுகிறதா என்பதைப் பார்க்கவும். 


ரத்தம் வெளியேறுவது புற்று

நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். 


ஐந்தாவது படி

பார்த்தல் & உணர்தல் 


மேற்கூறிய அனைத்து படிநிலைகளையும் மற்றொரு மார்பகத்திலும் செய்ய வேண்டும்.


ஏதேனும் வித்தியாசமாகத் தெரிந்தால் உடனே தங்களின் மருத்துவரை நாட வேண்டும். 


இந்தப் பரிசோதனையை மாதம் ஒரு முறை செய்வதன் மூலம்  தங்கள் மார்பகங்களில் நேரும் மாற்றங்களை உடனே இனங்கண்டு மருத்துவ உதவியை நாட முடியும். 


முப்பது வயதைக் கடந்தோர்

வருடம் ஒருமுறையேனும் மருத்துவரிடம் நேரடி மார்பகப் பரிசோதனை  செய்து கொள்வது நல்லது. 


விரைவான நோய் கண்டறிதல் மூலம்

துரிதமான சிகிச்சை அளித்து

வியத்தகு முன்னேற்றம் அடைந்து

முழுமையான நோய் குணம் பெற முடியும். 


எனதருமை தாய்மார்களே சகோதரிகளே இன்றே தொடங்கிடுவீர் சுய மார்பகப்பரிசோதனையை... 


நன்றி 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை





கல்லீரல் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது? சரி செய்வது எப்படி?

 


கல்லீரல் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது? சரி செய்வது எப்படி? - Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 


கல்லீரல் நோய் முற்றி 

நடிகர் அபினய் அவர்கள் இறந்திருப்பது 

சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது. 


அவரை இழந்து வாடும் அவர்தம் சொந்தங்கள் மற்றும் நண்பர்களுக்கு 

ஆழ்ந்த இரங்கல்களைப் பதிவு செய்து இந்த விழிப்புணர்வுக் கட்டுரையைத் தொடங்குகிறேன். 


கல்லீரல் நோய் என்றாலே அது மது அருந்துவதால் தான் வந்திருக்கும் என்று பலரும் நினைக்கின்றனர். 


இருபது வருடங்களுக்கு முன்பு, 

கல்லீரல் நோய் என்று ஒருவர் வந்தால் 

அவர் அளவுக்கு மீறி மது அருந்தியதால் அவருக்கு கல்லீரல் நோய் வந்திருக்க நூற்றுக்கு நூறு சதவிகிதம் வாய்ப்பு அதிகம். 


ஆனால் இப்போது 

கல்லீரல் நோய் ஏற்படுவதற்கு 

மது மட்டுமே காரணமன்று. 

மதுவுடன் சேர்த்து 

அதிக மாவும் இனிப்பும் உடல் உழைப்பின்மையும் உறக்கமின்மையும் மன அமைதியின்மையும் இப்போது காரணமாகி இருக்கின்றன. 


ஆம்... 

கல்லீரலை பாதிக்கும் 

கல்லீரலில் கொழுப்பு படியும் நோய் 

இரண்டு வகைப்படும் 


முதல் வகை

மதுவினால் ஏற்படுவது 

இதை "ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் நோய்" 


இரண்டாவது வகை

மது அல்லாத காரணங்களால் 

ஏற்படும் "ஃபேட்டி லிவர் நோய்"

வளர்சிதை மாற்ற காரணிகளால் இந்த நோய் ஏற்படுவதால் இதற்கு "MAFLD" 

METABOLIC ASSOCIATED FATTY LIVER DISEASE என்று அழைக்கப்படுகிறது.


பெரும்பாலும் நாற்பதுகளை நெருங்கும்/தாண்டிய  ஆணோ பெண்ணோ 

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்கும் போது தற்செயலாக 

தென்படும் "ஃபேட்டி லிவர்" என்ற கண்டுபிடிப்பு 


இப்போது இந்த நோய் இருபது முதல் முப்பது வயது மக்களுக்கும் தென்பட ஆரம்பித்திருக்கிறது. 


உங்களது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ரிப்போர்ட்டில்  Fatty liver ( grade 1 /2) என்று குறிப்பிடப்பட்டிருக்கலாம் அல்லது Hepatomegaly with fatty changes என்று குறிப்பிடப்பட்டிருக்கலாம். 


கல்லீரலில் அதிகமான கொழுப்பு தேங்குவதால் ஏற்படும் நிலை தான் இந்த "கல்லீரலில் கொழுப்பு படியும் நோய்" 


நிறைய பேருக்கு தற்செயல் கண்டுபிடிப்பாக தென்படுவதால்  இது "நார்மல்" என்று ஆகிவிடாது. 


 கல்லீரல்  அடிவாங்குகிறது என்பதும். 

அது எழுப்பும் கூக்குரலாகவே இந்த நோயைக் கருத்தில் கொள்ள வேண்டும். 


பொதுவாக கல்லீரல் ஒரு கல்லுளி மங்கன் போன்ற உறுப்பு. 

எதற்கும் அசையாத ஸ்ட்ராங்கான ஒரு உறுப்பு. 


தான் உண்டு. தன் வேலையுண்டு என்று அதன் வேலையைப் பார்க்கும். 


அமிலத்தன்மை கொண்ட மதுவைக்கூட செரிமானம் செய்யும் தன்மை கொண்டது. 

கல்லைக்கூட  செரிமானம் செய்யக்கூடியது.


ஆனால் அப்படிப்பட்ட ஸ்ட்ராங்கான ஒரு உறுப்பையே அசைத்துப்பார்க்கக் கூடியது இந்த "கல்லீரல் கொழுப்பு படியும் நோய்". . 


சமீபத்தில் என்னை உடல் பருமன் என்று சந்தித்த 10 வயது பாலகனுக்கு  ஃபேட்டி லிவர் இருந்தது. மிரண்டு தான் போனேன். 

அவன் எங்கே மது அருந்தினான்? 

மது என்றால் என்னவென்றே அவனுக்குத் தெரியாது.. 


ஆனாலும் அவனது கல்லீரலில் எப்படி கொழுப்பு ஏறியது? 


கல்லீரலில் கொழுப்பு சேருவது இயற்கையானதா? நல்லதா? 


கல்லீரலில் கொழுப்பு சேருவது இயற்கையானது அன்று. 


நல்லதன்று. 


 நிச்சயம் கெட்டது.


 இதை மட்டும் மனதில் நன்றாக இருத்திக் கொள்வோம்.


எதனால் கல்லீரலில் கொழுப்பு சேருகிறது??


கல்லீரலின் பிரதான வேலைகளுள் சில


-க்ளூகோசை -> கொழுப்பாக( triglyceride ) மாற்றி உடலில் சேமிப்பது. 

-லைபோ புரதங்களை உருவாக்குவது 

- ரத்த உறைதலுக்குத் தேவையான காரணிகளை உருவாக்குவது 

- எதிர்ப்பு சக்திக்குத் தேவையான ஆண்டிபாடிகளை உருவாக்குவது 

- ப்ளாஸ்மா புரதங்களை உருவாக்குவது 

- கொழுப்பை செரிமானம் செய்யத் தேவையான பித்த நீரை சுரப்பது 


என்று 

கல்லீரலை சமையல் கூடத்துடன் ஒப்பீடு செய்யலாம்.  


ஒரு உதாரணம் கூறுகிறேன்...


ஒரு கிலோ மாவு வாங்கிக் கொடுத்தால் நமது அம்மா அதில் நமக்கு இட்லி சுட்டுத்தருவார்.

( ஏன் அப்பா சுட மாட்டாரா? அம்மா தான் சுட வேண்டுமா.. என்று கேட்டு விடாதீர்கள். இது  கதை மட்டுமே. வீட்டில் கணவர் மனைவி இருவருமே உணவு சமைக்கலாம்.) 


மீதம் மாவை குளிர் சாதனப்பெட்டியில் வைப்பார். 


ஒரு கிலோ மாவு மூன்று நாளைக்கு வரும் என்பது நம் அம்மாவுக்குத் தெரியும். 


அடுத்த மூன்று நாட்களுக்கு மாவு புதிதாக வாங்கத் தேவையில்லை. ஏனெனில் ஃபிரிட்ஜில் தான் மாவு இருக்கிறதே..! 


ஆனால் அடுத்தநாளும் மறதி கொண்ட நம் அப்பா தெரியாமல் ஒரு கிலோ மாவு வாங்கி வந்துவிட்டால் அம்மா என்ன செய்வார்??


இந்த ஒரு கிலோ புது மாவை ஃபிரிட்ஜில் வைப்பார். ஆக அடுத்த ஆறு நாட்களுக்கு மாவு கைவசம் இருக்கும். 


இப்படி தேவைக்கு மீறி மாவு இருந்தும் தினமும் யாரோ ஒருவர் மாவு/ பரோட்டா என வாங்கி வந்துவிட்டால்.. நம் அம்மா என்ன தான் செய்வார் பாவம்..!!


ஃப்ரிட்ஜும் ஒரு அளவுக்கு மேல் இடம் கொள்ளாது. 

ஒரு கட்டத்துக்கு மேல் கிச்சனே அலங்கோலமாகி விடும். 


இந்த சினாரியோவை நமது கல்லீரலுக்கும் சிந்தித்து பாருங்கள்


மாவுச்சத்து ஒரு வரைமுறைக்குள் இருந்தால் உடல் அதை சக்திக்கு உட்கொண்டுவிடும். 


அது வரம்பு மீறிச் சென்றால் நம் கல்லீரல் அதைக் கொழுப்பாக மாற்றி தொப்பையில், தொடை, இடுப்பு , மார்பு பகுதிகளில் சேமிக்கும். 


மீண்டும் மீண்டும் அதிக மாவுச்சத்து சாப்பிட்டால் , உண்ட வீட்டையே ரெண்டாக்கிய கதையாய் தன்னை உற்பத்தி செய்த கல்லீரலிலேயே கொழுப்பு படிந்து சேர ஆரம்பித்துவிடும். 


ஆக, ஃபேட்டி லிவருக்கு காரணம் அதிக மாவுச்சத்து தான். கொழுப்பு அல்ல 


உங்கள் கல்லீரலில் கொழுப்பு படிவதைப்பார்த்தவுடன் நீங்கள் உண்ணும் மாமிசம் / முட்டை/ பால் போன்றவற்றை  நிறுத்தி விட்டு அதற்குப்பதிலாக அதிகமதிகம் சோறு/ கோதுமை / மைதா என்று உண்பீர்களானால் நிச்சயம் உங்களது ஃபேட்டி லிவர் பிரச்சனை குறையாது. 

அதிகமாகவே செய்யும். 


ஃபேட்டி லிவர் பிரச்சனையில் கொழுப்பு கல்லீரலில் படிவதால்


இந்த கொழுப்பு படிந்துள்ள இடங்கள், நார்மல் கல்லீரலை விட அதிக ஒலி அலையை பிரதிபலிக்கும். அதனால் அந்த இடங்கள் நார்மல் கல்லீரலை விட பழுப்பாகவோ கருப்பாகவோ இருக்கும். 


இதில் grade I என்பது கல்லீரலில் ஆங்காங்கே கொழுப்பு படிந்து காணப்படுவது. நார்மல் கல்லீரலில் கொழுப்பு படியாது. இது ஆரம்ப நிலை. 

 

Grade II என்பது கல்லீரலில் கொழுப்பு அதிகமாக படிவதால், போர்டல் சிறை சரியாக புலப்படாமல் போகும் (portal vein)  இது அடுத்த கட்டம்  


Grade III என்பது கொழுப்பு அதிகமாக கல்லீரலில் படிவதால் உதரவிதானம் (diaphragm) சரியாக புலப்படாது .இது முற்றிய நிலை. 


எனினும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் 

கிரேடிங் செய்யப்படுவது மருத்துவருக்கு மருத்துவர் மாறுபடுகிறது. 


எனவே, என்னைப் பொருத்தவரை 

கிரேடு 2 மற்றும் அதற்கு மேல் கிரேடிங் செய்யப்படும் மக்கள் - 

கட்டாயம் ஃபைப்ரோ ஸ்கேன் (FIBRO SCAN) எனும் இன்னும் துல்லியமான ஸ்கேன் செய்து கல்லீரல் பாதிப்பின் அளவை இன்னும் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். ஃபைப்ரே ஸ்கேன் மூலம் எவ்வளவுக்கு எவ்வளவு கல்லீரல் திசு பாதிப்புக்குள்ளாகி தழும்பாகி இருக்கிறது என்பதை அறிய முடியும். 


இந்த கல்லீரலில் படியும் கொழுப்பானது,  பின்னாளில் கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தி


மது அருந்தாதவர்களுக்கு வரும் கல்லீரல் கொழுப்பு படியும் நோயாக மாறலாம் (NON ALCOHOLIC STEATO HEPATOSIS) இதை சுருக்கமாக  NASH என்று அழைக்கிறோம். 

இத்தகைய நிலையில், கல்லீரல் செல்கள் தொடர்ந்து இடற்பாட்டுக்கு உள்ளாகி மரணமடைந்து தழும்புகளாக மாறிவிடும். 


இவ்வாறு சிறுகச் சிறுக  மீளுருவாக்கம் செய்ய இயலாத நிலையை அடைந்து சுருங்க ஆரம்பித்து விடும். இது கல்லீரல் அழற்சி நோய் (Cirrhosis) எனப்படும். இந்த அளவுக்கு முற்றிய நோயை ரிவர்ஸ் செய்ய இயலாது. 


இது பின்னாளில் கல்லீரல் புற்றுநோய்(HEPATO CELLULAR CARCINOMA)  அல்லது கல்லீரல் செயலிழப்பு(LIVER FAILURE)  வரை இட்டுச்செல்லும் ஆபத்து இருக்கிறது.


நம்மை பயமுறுத்தும் செய்தி யாதெனில்  மேலை நாடுகளில் இருபது வயதைக்கூட எட்டாத பள்ளி செல்லும் பிள்ளைகளிடம் செய்த ஆய்வுகளில் அவர்களில் பெரும்பாலானோருக்கு மது அருந்தாதவர்களுக்கு ஏற்படும் ஃபேட்டி லிவர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


உண்மையில் நம் நாட்டிலும் அதே அளவு பிரச்சனை இருக்கக்கூடும் ஆனால் யாரும் இங்கு பரிசோதனைக்கான முக்கியத்துவத்தை கொடுப்பதில்லை என்பதால் இருக்கும் பிரச்சனை வெளியே தெரிவதில்லை. 


நாமும் தற்போது ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரம், சாக்லேட், கேக் என்று ரீபைன்டு கார்போஹைட்ரேட்டுகளை வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்கிறோம். 

இதன் கேடுகளை அறிந்தால் நாம் அப்படி செய்யமாட்டோம் என்றே நினைக்கிறேன்.


குழந்தைகள் எதை உண்ண வேண்டும் . எதை உண்ணக்கூடாது என்பதில் பெற்றோரின் கவனம் என்றும் இருக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 


மேலும், ஃபேட்டி லிவரை அதன் ஆரம்ப நிலையில்   ரிவர்ஸ்/ சரி செய்ய  இயலும்..


எப்படி??


ஃபேட்டி லிவர் எப்படி வந்தது என்பதை அறிந்தோம் அல்லவா..


பிரச்சனை - மாவுச்சத்து அடங்கிய உணவுகளை அளவின்றி தின்றதால் வந்தது. 


அதை உடனே நிறுத்த வேண்டும். 

தினமும் உட்கொள்ளும் மாவுச்சத்தின் அளவைப்

பாதியாகக் குறைக்க வேண்டும் 


இனிப்பு சுவை தரும் அனைத்து உணவுகளையும்  பண்டங்களையும்  நிறுத்த வேண்டும். 


குறை மாவு 

தேவையான புரதம் 

தேவையான ஆரோக்கியமான கொழுப்பு   உணவு முறைக்கு  மாறுவது உங்களுக்கு நன்மை பயக்கும். 


எப்படி???? 


1. மாவுச்சத்து குறைத்து உண்பதால் மேற்கொண்டு க்ளூகோஸ் கொழுப்பாக மாற்றம் அடைவது நின்று விடும்.


2. இந்த உணவு முறையில், நியூட்ரிசனல் கீடோசிஸ் நிலையில், உடல் கொழுப்பை எரிப்பதால், கொஞ்சம் கொஞ்சமாக உள்ளுறுப்புகளில் மண்டிக்கிடக்கும் கொழுப்பும் கரைய ஆரம்பித்து விடும். 


3. நாம் உணவிலேயே தேவையான அளவு கொலஸ்ட்ராலை கொடுத்து விடுவதால் கல்லீரல் தினமும் கஷ்டப்பட்டு கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்ய வேண்டியது இல்லை. இது அதன் பணிச்சுமையை வெகுவாக குறைத்து விரைவில் நலம் பெற உந்து சக்தியாக அமையும். 


உங்களின் உறவினர்களில் யாருக்கேனும் ஃபேட்டி லிவர் இருப்பின் அவருக்கு இந்த டயட்டை பரிந்துரை செய்யுங்கள். 


அவரது கல்லீரலை பிரச்சனை தீவரமாவதற்குள் காக்க ஒரு வாய்ப்பு வழங்குங்கள். 


ஃபேட்டி லிவர் பிரச்சனையை கொலஸ்ட்ரால் மாத்திரைகளாலோ வேறு எந்த குறுக்கு வழியிலோ சரி செய்ய இயலாது. 


எதைத் தின்றதால் அது வந்ததோ

அதை நிறுத்த வேண்டும்.  


சிரோசிஸ் அல்லாத 

ஆரம்ப நிலைகளில்  இருக்கும் ஃபேட்டி லிவர் பிரச்சனை  "குறை மாவு நிறை கொழுப்பு"  உணவுமுறையால் கட்டுப்படும் வாய்ப்பு அதிகம். 


சிரோசிஸ் / முற்றிய ஃபேட்டி லிவர் இருப்பவர்கள் - குடல் மற்றும் கல்லீரல்  நோய் சிறப்பு நிபுணரின் கண்காணிப்பில் தொடர் சிகிச்சை எடுக்க வேண்டும். 


சிரோசிஸ் நோய் ஏற்படும் போது 

கல்லீரல் ஆல்புமின் உற்பத்தியை குறைப்பதால், 

வயிற்றுப் பகுதியில் நீர் கோர்த்து வயிறு வீங்கும், 

உடல் மெலிந்து போகும், 

உணவுக் குழாயில் ரத்த நாளங்கள் புடைப்பு ஏற்படுத்தி பின்னாளில் வெடிப்பு ஏற்பட்டு ரத்தக் கசிவு உண்டாகலாம். 

எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் அடிக்கடி கிருமித் தொற்று ஏற்படலாம். 


சிரோசிஸ் நோயில் மஞ்சள் காமாலை ஏற்படவும் செய்யலாம்.  ஏற்படாமலும் இருக்கலாம். 

கல்லீரல் பாதிப்பு என்றாலே மஞ்சள் காமாலை இருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. 


சிரோசிஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு 

சிகிச்சையாக "கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை" நிவாரணமாக இருக்கிறது. 

இறந்த கொடையாளரிடம் இருந்து எடுத்து வைக்கும் கல்லீரல் மாற்று சிகிச்சை, உயிருள்ள உறவினரிடம் இருந்து  கல்லீரலின் ஒரு பகுதியை எடுத்து வைப்பது இரண்டாவது வகை. 

இந்த சிகிச்சை முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் இலவசமாக செய்யப்படுகிறது. 

தனியார் மருத்துவமனைகளில் முப்பது லட்சம் வரை செலவினம் வருகிறது. 


இவையன்றி, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய இயலாதோருக்கு சிரோசிஸ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வயிற்றில் சுரக்கும் நீரை வெளியேற்றுதல், அவ்வப்போது எண்டோஸ்கோபி செய்து ரத்த நாள வெடிப்புகளுக்கு சுருக்கு முடிச்சு போடுதல், கல்லீரலுக்கு உகந்த மருந்துகளை உண்ணுதல் ஆகியவற்றின் மூலம் சிகிச்சை அளிக்கப் படுகிறது. 


புரதச்சத்து மிக்க, கொழுப்புச் சத்து குறைவான, மாவுச்சத்து குறைவான உணவு முறை பரிந்துரைக்கப்படுகிறது. 


மது, சிகரெட் போன்ற தீய பழக்கங்கள் இருப்பின் அவற்றை விட்டொழிக்க வேண்டும். 


தினமும் ஒரு மணிநேரம் நடைபயிற்சி 

எட்டு மணிநேர உறக்கம் 

மன அமைதி பேணும் வாழ்வியல் 

இவையும் கல்லீரல் நலம் பேண முக்கியம். 


சிரோசிஸ் என்பது முடிவுரை அன்று. 

முறையான மருத்துவ சிகிச்சைகள் மூலமும் கண்காணிப்பு மற்றும் சிறப்பான கவனிப்பு  

மூலம் சிறந்த வாழ்வையும் ஆயுள் நீட்சியையும்  உறுதி செய்ய முடியும் 


நன்றி 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை



005 Ink Compatible for Epson Printers : M3140, M3170, M1120, M1140, M1180, M2140, M1140 / M1170 / M1180 Black - Twin Pack Ink Bottle 120ml Each Bottle




https://amzn.to/3WQCGYw


மருத்துவம் சார்ந்த ஓராண்டு சான்றிதழ் படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவ / மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்



 மருத்துவம் சார்ந்த ஓராண்டு சான்றிதழ் படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவ / மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்


The District Collector informed that students who are interested in enrolling in one-year medical certificate courses can apply.


கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள மருத்துவம் சார்ந்த ஓராண்டு சான்றிதழ் படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவ / மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



அனைத்து மாவட்ட மருத்துவக் கல்லூரிகளிலும் மருத்துவம் சார்ந்த ஓராண்டு சான்றிதழ் படிப்புகளில் சேர விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது.

"நோயாளிகள்" என அழைப்பதற்கு பதிலாக "மருத்துவ பயனாளிகள் / மருத்துவ பயனாளர்கள்" என்னும் சொல்லை பயன்படுத்த அரசாணை வெளியீடு



"நோயாளிகள்" என அழைப்பதற்கு பதிலாக "மருத்துவ பயனாளிகள் / மருத்துவ பயனாளர்கள்" என்னும் சொல்லை பயன்படுத்த அரசாணை வெளியீடு 


அரசாணை (நிலை) எண் : 426, நாள் : 30-09-2025 - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மருத்துவர்களையும், மருத்துவமனைகளையும் நாடி வருபவர்களை "நோயாளிகள்" என அழைப்பதற்கு பதிலாக இனிவரும் காலங்களில் "மருத்துவ பயனாளிகள் / மருத்துவ பயனாளர்கள்" என்னும் சொல்லை பயன்படுத்த வேண்டும் என அரசு ஆணையிடுகிறது 


Government Order G.O. (Ms) No.: 426, Dated: 30-09-2025 - As per the instructions of the Hon'ble Chief Minister, instead of calling those visiting doctors and hospitals as "Patients" The government mandates that the term "Medical Beneficiaries" be used in future.


Medical beneficiaries instead of Patients - G.O.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


இறந்து 3 நாட்கள் ஆன மாணவிக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி பணம் பறித்ததாக மருத்துவமனை மீது புகார்

 

இறந்து மூன்று நாட்கள் ஆன மாணவிக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி பணம் பறித்ததாக மருத்துவமனை மீது புகார்



கூடுதலாக 10,023 மருத்துவ இடங்களை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்


கூடுதலாக 10,023 மருத்துவ இடங்களை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்


நாடு முழுவதிலும் உள்ள மத்திய, மாநில மருத்துவக் கல்லூரிகளில் 2029ம் ஆண்டுக்குள் கூடுதலாக 10,023 மருத்துவ இடங்களை சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல். 


5,000 முதுகலை இடங்கள் மற்றும் 5,023 இளங்கலை இடங்களை சேர்க்கும் இத்திட்டத்திற்கு ரூ.15,034.50 கோடி நிதி ஒதுக்கீடு.


Heart Attackன் பொழுது உட்கொள்ளும் Loading Dose குறித்த விரிவான விளக்கம்

 


ஹார்ட் அட்டாக்கின் போது உட்கொள்ளும் லோடிங் டோஸ் குறித்த விரிவான விளக்கம்


லோடிங் டோஸ் என்றால் என்ன? 


லோடிங் டோஸை நெஞ்சு வலி ஏற்பட்டவரே உடனே போட்டுக் கொள்ளலாமா? 


லோடிங் டோஸின் சாதக பாதகங்கள் என்ன? 


வாங்க பார்க்கலாம். 


லோடிங் டோஸ் என்றால் என்ன? 


எந்த ஒரு நோய் நிலைக்கும் 

உடனடி அவசர சிகிச்சையாக உடனடி தீர்வுக்காக உயிர்காக்கும் நடவடிக்கைக்காக

வழக்கமாக வழங்கப்படும் அளவுகளை விட சில மடங்கு அதிகமான அளவில் மருந்தை உடனே வழங்குவது "லோடிங் டோஸ்" எனப்படும். 


லோடிங் டோஸை நெஞ்சு வலி ஏற்பட்டவரே உடனே போட்டுக் கொள்ளலாமா? 


முதல் வழி


ஒருவருக்கு நெஞ்சுப்பகுதியில் வலி ஏற்பட்டவுடன் 

அவர் உடனே மருத்துவமனைக்கு விரைந்திட வேண்டும். 


அங்கு அவருக்கு ஈசிஜி எடுக்கப்பட வேண்டும். அதில் ஈசிஜியில் ரத்த நாள அடைப்புக்கான மாற்றம் கண்டறியப்பட்டால் 

உடனே மருத்துவரின் வழிகாட்டுதலின் படி லோடிங் டோஸ் வழங்கப்படும். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பெரிய மருத்துவமனைக்கு விரைந்திட வேண்டும். 


ஈசிஜியில் மாற்றம் இல்லாமலும் இதய ரத்த நாள அடைப்பு (NON STEMI)  இருக்கலாம். அப்போதும் மருத்துவரின்/ மருத்துவ ஊழியர்களின்   அறிவுரையின் பேரில் லோடிங் டோஸ் உட்கொள்ளலாம்.


சந்தேகத்தின் பலன்  நோயாளியின் உயிரைக் காப்பதற்கு வழங்கப்பட வேண்டும். 


இரண்டாம் வழி


அருகில் பெரிய மருத்துவமனைகள் இல்லாத சூழ்நிலையில் 

ஈசிஜி எடுக்க இயலாத சூழ்நிலையில், 


தனக்கு வந்திருப்பது 

இதய ரத்த நாள அடைப்பாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக இருப்பின் 

லோடிங் டோஸ் மாத்திரைகளை சுயமாக உட்கொண்டு விட்டு பெரிய மருத்துவமனை நோக்கி விரைந்திடலாம். 


இங்கும் சந்தேகத்தின் பலன் உயிரைக் காப்பதற்கு வழங்கப்படுகிறது. 


இதய ரத்த நாள அடைப்பு ஏற்பட்டு நெஞ்சு வலி வரும் போது 

லோடிங் டோஸ் மாத்திரைகளாக


ஆஸ்பிரின் (ASPIRIN) - 300 மில்லிகிராம் 


க்ளோபிடோக்ரெல் (CLOPIDOGREL) - 300 மில்லிகிராம்


அடோர்வாஸ்டாட்டின் (ATORVASTATIN) - 80 மில்லிகிராம் 


மேற்கூறிய மாத்திரைகளை ஒன்றாக வழங்கப்படுகிறது. 


மேற்கூறிய மாத்திரைகளே "இதய ரத்த நாள அடைப்பிற்கான லோடிங் டோஸ்" ஆகும் 


ஆஸ்பிரினும் க்ளோபிடோக்ரெலும் 

ரத்த தட்டணுக்களை ஒன்றிணைந்து ரத்தக் கட்டியை மேலும் வளர விடாமல் தடுக்கின்றன. 


அடோர்வாஸ்டாட்டின் மாத்திரை 

- பிளவுற்ற ரத்த நாளத்தை மேலும் பிளவுறாமல் அதன் ஸ்திரத்தன்மையை அதிகரிக்கிறது


இவையன்றி வேறு மாத்திரைகளை லோடிங் டோஸாக பாவிக்க வேண்டாம். 


குறிப்பாக "ஐசோ சார்பைடு டை நைட்ரேட்" எனும் மாத்திரையை லோடிங் டோஸாக இது போன்ற நேரங்களில் உபயோகிக்குமாறு தகவல்கள் வெளிவருகின்றன. 


அது ஆபத்தில் முடியலாம். 


காரணம் 

நைட்ரேட் வகை மருந்துகள் 

இதயத்தின் ரத்த நாளங்களை விரிவடையச் செய்வதுடன் 

உடலில் உள்ள சிரைகளை விரவடையச் செய்கின்றன. இதன் மூலம் 

இதயத்தை நோக்கி அதிக ரத்தம் வருவதை தடுக்கின்றன. 

மேலும் இவ்வாறு சிரைகளை விரிவடையச் செய்வதால் ரத்த அழுத்தம் வெகுவாகக் குறையும். 


மாரடைப்புகளில் இதயத்தின் கீழ்ப்புற சுவர் தசைகளுக்கு (INFERIOR WALL MYOCARDIAL INFARCTION) ஊட்டமளிக்கும் தமனியில் அடைப்பு ஏற்பட்டால் 

இதயத்தின் வலப்பக்க வெண்ட்ரிகிள் அடங்கிய தசைகள் செயல்திறன் குன்றும். 

இதனால் ஏற்கனவே ரத்த அழுத்தமும் இதயத்துடிப்பும் குறைவாக இருக்கும். 


இந்த நிலையில் நைட்ரேட் மாத்திரை உட்கொள்ளப்பட்டால் மேலும்  ரத்த அழுத்தம் குறைந்து அது இதயத்துக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். 


எனவே நைட்ரேடஸ் வகை மருந்துகளை ஐசியூ வசதி உள்ள இடங்களில் மருத்துவரின் கண்காணிப்பில் ஏற்பட்டிருப்பது 

எந்த வகையான மாரடைப்பு என்பதை அறிந்து வழங்குவதே சரி 


மேலும் ஆணுறுப்பு விரைப்புத்தன்மைக்காகவும் / நுரையீரல் தமனி உயர் ரத்த அழுத்த நோயிலும் ( PULMONARY ARTERIAL HYPERTENSION)  உட்கொள்ளப்படும் சில்டினாஃபில்/ டடலாஃபில்  உள்ளிட்ட மருந்துகள் உட்கொள்வோர் நைட்ரேட் மாத்திரைகளை உட்கொண்டால் அபாயகரமான தாழ் ரத்த அழுத்தநிலை ஏற்படும். 


மேலும் இந்த மாத்திரைகளை உட்கொண்டு விட்டதால் முழு நிவாரணமும் கிடைத்து விடும் என்ற தவறான நம்பிக்கையில் வீட்டிலேயே இருந்து விடக்கூடாது. இது கோல்டன் ஹவரான ஒரு மணிநேரத்திற்கு மட்டுமே தனது பணியைச் செய்யும். 

எனவே உடனே பெரிய மருத்துவமனைகளுக்கு விரைந்திட வேண்டும். 


மேற்சொன்ன மாத்திரைகள் நாம் பெரிய மருத்துவமனைகளை அடையும் வரை  நேரத்தை நமக்கு வழங்கக் கூடியவையாக இருக்குமேயன்றி இந்த மாத்திரைகள் முழு சிகிச்சையன்று


ஒருவருக்கு இதய ரத்த நாள அடைப்பு ஏற்படாமல் இந்த லோடிங் டோஸ் மாத்திரைகளை போட்டு விட்டால் ஏற்படும் சாதக பாதக அம்சங்கள் என்ன? 


இதற்கு தமிழ்நாடு பொது சுகாதாரத் துறையினால் கடந்த 27.6.2023 அன்று முதல் "இதயம் காப்போம்" திட்டத்தின் கீழ் 

தமிழ்நாட்டில் உள்ள 

துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் லோடிங் டோஸ் ஸ்டாக் வைக்கப்பட்டுள்ளது. 


நெஞ்சு வலி என்று வரும் நோயாளிகளுக்கு 

இந்த லோடிங் டோஸ் வழங்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பரிந்துரைக்கப்படுகிறது. 


ஜூன் 2023 முதல் மே 2024 வரை செய்யப்பட்ட ஆய்வில், நெஞ்சு வலி ஏற்பட்டு வந்த

6090 நோயர்களுக்கு லோடிங் டோஸ் வழங்கப்பட்டு பெரிய மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

 அவர்களுள் 953 (16%) பேருக்கு இதய ரத்த நாள அடைப்பு மீட்பு  சார்ந்த மேல் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. 

சிகிச்சை வழங்கப்பட்டவர்களில், 56% பேருக்கு ஆஞ்சியோ கிராஃபி செய்யப்பட்டது. 

 39% பேருக்கு ரத்தக் கட்டியைக் கரைக்கும் த்ராம்போலைசிஸ் சிகிச்சையும், 23% பேருக்கு ஸ்டெண்ட் பொருத்துதலும், 8% பேருக்கு பைப்பாஸ் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. 


இதன்விளைவாக, லோடிங் டோஸ் வழங்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டவர்களில் 97.7% பேர் உயிர்பிழைத்ததும் 

2.2% பேர் மட்டுமே இறந்தது குறிப்பிடத்தக்கது. 


லோடிங் டோஸ் வழங்கப்பட்டு மேல் சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்ட  

ஐந்து பேரில் ஒருவருக்கு இதய ரத்த நாள அடைப்பு சார்ந்த மேல் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. 


சரி மீதி உள்ள நான்கு பேருக்கு இதய அடைப்பு ஏற்படாமலும் லோடிங் டோஸ் வழங்கப்பட்டதே அதனால் பிரச்சனை இல்லையா? 


இதய ரத்த நாள அடைப்பைப் பொருத்தவரை ஏற்கனவே கூறியது போல, லோடிங் டோஸாக வழங்கப்படும் மாத்திரைகள் ரத்த உறைதலைத் தடுப்பவை. 

எனவே 


- முதியோர்கள்

- ரத்த உறைதல் குறைபாடு இருப்பவர்கள் 

- இரைப்பைப்  புண்/ குடல் புண் இருப்பவர்கள் 

- புற்று நோய் இருப்பவர்கள் 

- கல்லீரல் நோய் இருப்பவர்கள்

- சமீபத்தில் மூளை ரத்தக்கசிவு ஏற்பட்டவர்கள் ஆகியோருக்கு அதீத ரத்தப் போக்கை ஏற்படுத்திடும் வாய்ப்பு உள்ளதையும் கருத்தில் கொள்ள வேண்டும். 


சாதகங்கள் என்ன? 


மேற்கூறிய சிக்கல்கள் இல்லாத, 

இளைய வயதில் இருப்பவர்கள் குறிப்பாக 40-55 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தங்களுக்கு வந்திருப்பது அசாதாரணமான நெஞ்சு வலி என்று தோன்றும் போது சந்தேகப்பட்டு லோடிங் டோஸ் எடுப்பதால் 

பாதகங்களை விட சாதகம் அதிகம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 


லோடிங் டோஸ் 

உயிர்காக்கும் முதல் சிகிச்சை 


அதை 

மருத்துவமனை சென்றபின் உட்கொள்ளலாமா..

நோயாளி தானே உட்கொள்ளலாமா..

என்பது சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொருத்து அமைகிறது. 


சாதக பாதக அம்சங்களை சீர்தூக்கிப் பார்த்து 

சுயமாக லோடிங் டோஸ் உட்கொள்வதை செய்ய முடியும். 


இயன்றவரை, 

மருத்துவமனைக்கு விரைந்து செல்வதும், 

இதய ரத்த நாள அடைப்பை மருத்துவர் வழி உறுதி செய்து கொண்டு லோடிங் டோஸ் எடுப்பதும் பரிந்துரைக்கப்படுகிறது. 


லோடிங் டோஸ் என்பது முதல் சிகிச்சையே அன்றி அது முழுமையான சிகிச்சை அன்று. 


எனவே கீழ்காணும் இரண்டு  செயல்திட்டங்கள் உங்களுக்காக


நெஞ்சு வலி-> மருத்துவமனை விரைதல் -> ஈசிஜி / ட்ரோபோனின்-> இதய ரத்த நாள அடைப்பு உறுதி செய்யப்படல்-> லோடிங் டோஸ் -> த்ராம்போலைசிஸ்/ ஆஞ்சியோ ப்ளாஸ்டி-> ஸ்டெண்டிங்/ பைப்பாஸ் 


இரண்டாவது செயல்முறை


மருத்துவமனைகள் அருகில் இல்லாத இடம் / இரவு 


நெஞ்சு வலி -> வந்திருப்பது இதய ரத்த நாள அடைப்பு என்று சந்தேகம் அதிகமாக இருப்பது -> முதியோர்/ கல்லீரல் நோய் / இரைப்பைப் புண்/ புற்று நோய் ஆகியன இல்லை என்பதை உறுதி செய்தல் -> சந்தேகத்தின் பலனை உயிர்காக்க வழங்கி லோடிங் டோஸ் எடுத்துக் கொள்ளுதல்-> பெரிய மருத்துவமனைக்கு ஒரு மணிநேரத்திற்குள் விரைதல் 


மேற்கூறிய இரண்டில் முதல் வழி அதிகம் பரிந்துரைக்கப்பட்டது 

எனினும் தங்களது சூழ்நிலை பொருத்து முடிவெடுக்கவும்


நன்றி 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Dr. Radhakrishnan Awardக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

டாக்டர். இராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்  >>> தரவிறக்கம் செய்...