கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கம்பம் நகருக்குள் புகுந்த அரிசி கொம்பன் (Arisikomban) யானை - மீண்டும் தனது வாழ்விடத்தை (மூணாறு) நோக்கிச் செல்ல ஆயத்தமா? (Rice Kompan elephant that entered the city of Kambam; Ready to go back to his habitat (Munnar))?

 

கம்பம் நகருக்குள் புகுந்த அரிசி கொம்பன் (Arisikomban) யானை - மீண்டும் தனது வாழ்விடத்தை (மூணாறு) நோக்கிச் செல்ல ஆயத்தமா? (Rice Kompan elephant that entered the city of Kambam; Ready to go back to his habitat (Munnar))?


``அரிசி கொம்பன் யானை அது வாழ்விடமான மூணாறு சின்னக்கானல் பகுதியை நோக்கி செல்லவே மேகமலையில் இருந்து இறங்கி லோயர்கேம்ப் வந்து கம்பம் பகுதிக்குள் புகுந்துள்ளது. விரைவில் வனப்பகுதியில் சென்றுவிடும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை" - வனத்துறை அறிவிப்பு



அரிசி கொம்பன் யானை



இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், சாந்தாம்பாறை ஊராட்சிகளில் கடந்த 5 ஆண்டுகளில் 12 உயிர்களை காவு வாங்கிய அரிசி கொம்பன் என்ற யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. அதன் பின்னர் கழுத்தில்  சாட்லைட் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு தமிழக - கேரள எல்லை பகுதியான தேக்கடி பெரியாறு புலிகள் காப்ப பகுதியில் விடப்பட்டது. 


முதலில் அரிசி கொம்பனை பிடித்து பாலக்காடு பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்தில் விட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதற்கு எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து தேக்கடி பெரியாறு புலிகள் காப்பக பகுதியில் விட முடிவெடுக்கப்பட்டது. அதன்படி தமிழக - கேரள எல்லைப் பகுதியில் மங்கள தேவி கண்ணகி கோயில் செல்லும் நுழைவு வாயில் பகுதியில் யானை விடப்பட்டது. 


இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட இரவங்கலாறு வனப்பகுதியில் நுழைந்து  அங்கிருந்து மேகமலை ஹைவேஸ் பகுதியில் கடந்த 2 வாரங்களாக சுற்றித்திரிந்தது. வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.


இந்நிலையில் அரிசி கொம்பன் யானை மேகமலையின் வடக்குப் பகுதியில் இறங்கி இரவோடு இரவாக லோயர்கேம்ப் பகுதிக்கு வந்தது. நேற்று காலை லோயர்கேம்ப்பில் இருந்து கம்பம் நகர் பகுதிக்குள் வந்தது. கம்பம் கூலத்தேவர் தெரு பகுதியில் வந்த யானையை கண்டு அப்பகுதியினர் கூச்சலிட்டவாறு ஓடிச் சென்றனர். 



>>> கம்பம் நகருக்குள் அரிசிக் கொம்பன் யானையின் நகர்வலம் (காணொளி 1)...


மேலும் பலர் யானையை பார்த்து கூச்சலிட்டனர். இதனால் வேகமாக ஓடிய யானை சாலையில் நின்றிருந்த சேர் ஆட்டோவை இடித்து தள்ளிவிட்டு ஓடியது.  ஒருவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தேனி மாவட்ட வனத்துறையினர் யானையை கம்பம், கம்பம் மெட்டு இடையே வனப்பகுதியில் விரட்ட முயன்றனர்.  யானை மலை அடிவாரப்பகுதியில் புளியந்தோப்பில் முகாமிட்டு இருந்தது.



>>> கம்பம் நகருக்குள் அரிசிக் கொம்பன் யானையின் நகர்வலம் (காணொளி 2)...




இதுகுறித்து வனத்துறையினரிடம் பேசியபோது, “யானையை விரட்டக் கூடாது, அதன்போக்கிலேயே விட வேண்டும். குறிப்பாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பார்த்து கொள்ள வேண்டும் என்பதால் கவனமாக செயல்பட வேண்டியுள்ளது. 



>>> கம்பம் நகருக்குள் அரிசிக் கொம்பன் யானையின் நகர்வலம் (காணொளி 3)...


அரிசி கொம்பன் யானை அது வாழ்விடமான மூணாறு சின்னக்கானல் பகுதியை நோக்கி செல்லவே மேகமலையில் இருந்து இறங்கி லோயர்கேம்ப் வந்து கம்பம் பகுதிக்குள் புகுந்துள்ளது. விரைவில் வனப்பகுதியில் சென்றுவிடும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை “என்றனர்.



>>> நாராயணதேவன்பட்டியில் அரிசிக் கொம்பன் யானையின் நகர்வலம் (காணொளி 4)...


கம்பம் மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள வாழைத்தோட்டத்திற்குள் புகுந்த அந்த யானை அங்கிருந்து இன்று காலை சுருளிப்பட்டியில் உள்ள தோப்பிற்குள் சுற்றித் திரிகிறது.



இந்த யானையை 3 கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக பொள்ளாச்சியில் இருந்து சுயம்பு என்ற கும்கி வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் முதுமலையில் இருந்து 2 யானைகள் வரவழைக்கப்படுகின்றன.


இந்த நிலையில், கம்பம் நகரை விட்டு, சுருளிப்பட்டி கிராமத்தில் 'அரிசி கொம்பன்' புகுந்துள்ளதால் அங்கு 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்ல தொழிலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுருளி அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுருளிப்பட்டி பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.


கம்பம் நகரில் இன்று 2-வது நாளாக 144 தடை உத்தரவு தொடர்கிறது. மேலும் சுருளிப்பட்டி, சுருளி அருவி பகுதிக்கும் விவசாயிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. 6 கி.மீ தொலைவுக்கு முன்பே வனத்துறையினர் மற்றும் போலீசார் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி விடுகின்றனர்.




பொதுமக்கள் அரிசி கொம்பன் யானைக்கு இடையூறு செய்யாமல் இருக்க வேண்டும். படம் பிடிப்பது மற்றும் வீடியோ எடுப்பதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். இது குறித்து தேனி மாவட்ட எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்கரே கூறுகையில் வனத்துறையினர், வருவாய்த்துறையினர், போலீசார் அடங்கிய குழுவினர் யானையை கண்காணித்து வருகின்றனர்.


யானையை காட்டுக்குள் அனுப்பும் வரை பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றார்.


லோயர்கேம்பில் இருந்து கம்பம் நகர் பகுதிக்குள் வந்த யானை நேற்று ஒரு நாள் முழுவதும் கெஞ்சியகுளம் அருகேயுள்ள புளியந்தோப்பில் 7 மணி நேரம் இருந்தது.



>>> கம்பம் நகருக்குள் அரிசிக் கொம்பன் யானையின் நகர்வலம் (காணொளி 5)...


இதையடுத்து இளைஞர் ஒருவர் ட்ரோன் மூலம் வீடியோ எடுக்க முயன்றபோது பதற்றமடைந்த யானை அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வாழைதோப்பில் புகுந்தது.


இரவு முழுவதும் அங்கேயே இருக்கும் என வனத்துறையினர் கணித்திருந்த வேளையில், நேற்று இரவு 12 மணி அளவில் சுமார் 15 கிலோ மீட்டர் நடந்தே பயணித்து சுருளி அருவி செல்லும் சாலையில் தனியார் தோட்டத்திற்கு சென்றது.  இதற்கிடையே பொள்ளாச்சி அருகே டாப் சிலிப்பில் இருந்து சுயம்பு என்ற கும்கி யானை, அரிசி கொம்பனை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்காக அழைத்துவரப்பட்டுள்ளது.


“சூழலை பொருத்து மேலும் இரண்டு கும்கி யானைகள் கொண்டுவரப்படும் எனவும், மூணாறு நோக்கி சென்று கொண்டிருந்த யானை திசை மாறி 15 கிலோ மீட்டர் பயணப்பட்டுள்ளதால், மீண்டும் மேகமலைக்கு செல்லவும் வாய்ப்புள்ளது “ என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...