14 மணிநேரத்தில் 800 முறை நிலநடுக்கம் - அவசரநிலையை அறிவித்தது ஐஸ்லாந்து அரசு (800 earthquakes in 14 hours - Iceland government declares emergency)...
உலகின் மிகவும் அமைதியான நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் 2008 முதல் இன்றுவரை முதலிடத்தை தக்கவைத்திருக்கும் ஐஸ்லாந்து (Iceland) நாட்டில், கடந்த 14 மணிநேரத்தில் 800 முறை நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது, எந்த நேரத்திலும் அங்கு எரிமலை வெடிக்கலாம் என்ற அபயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஐஸ்லாந்தின் தென்மேற்கு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் (Reykjanes peninsula) ஏற்பட்ட இந்த தொடர்ச்சியான நிலநடுக்கங்களில், மிகப்பெரிய நிலநடுக்கம் கிரிண்டாவிக் (Grindavik) வடக்கே 5.2 ரிக்டர் அளவில் பதிவாகியிருக்கிறது.
அதையடுத்து, ஐஸ்லாந்து வானிலை அலுவலகம், `அடுத்த சில நாள்களில் எரிமலை வெடிப்பு நிகழலாம்' என எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதன்காரணமாக அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் சிவில் பாதுகாப்பு மற்றும் அவசரநிலை மேலாண்மைத் துறை, ``கிரின்டாவிக்கின் வடக்கே, சுந்த்ஞ்சுகாகிகரில் (Sundhnjukagigar) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, சிவில் பாதுகாப்புக்கான அவசரநிலையை தேசிய காவல்துறைத் தலைவர் பிரகடனப்படுத்துகிறார்" என்று தெரிவித்திருக்கிறது. மேலும், இப்போது ஏற்பட்டிருக்கும் நிலநடுக்கம் இன்னும் பெரிய அளவில் மாறி, எரிமலை வெடிப்புக்கு வழிவகுக்கலாம் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
சுமார் 4,000 பேரைக் கொண்டிருக்கும் கிரிண்டாவிக், இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து தென்மேற்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால், எரிமலை வெடிப்பு ஏற்பட்டால் உடனடியாக மக்களை வெளியேற்றுவதற்கான திட்டங்களும் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. அவற்றின் ஒருபகுதியாக, கிரிண்டாவிக்கில் அவசரகால முகாம்கள் திறக்கப்பட்டு, பாதுகாப்புக்காக ரோந்துக் கப்பலான தோர் (Thor) அங்கு நிறுத்தப்பட்டிருக்கிறது.
கூடவே, மூன்று இடங்களில் தகவல் மையங்களும் திறக்கப்பட்டிருக்கின்றன. மேலும் முன்னெச்சரிக்கையாக, க்ரிண்டாவிக் அருகே உள்ள பிரபல சுற்றுலா தலமான ப்ளூ லகூன் (Blue Lagoon) மூடப்பட்டிருக்கிறது. கடந்த அக்டோபர் மாதத்தின் பிற்பகுதியிலிருந்து இதுவரை சுமார் 24,000-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஐஸ்லாந்தில் ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிண்டாவிக் நகரில் இருந்து வடக்கு மற்றும் தெற்கு நோக்கி செல்லும் சாலைகள் நிலநடுக்கத்தால் சேதம் அடைந்துள்ளன. இதன் காரணமாக போலீஸார் சாலைகளை மூடியுள்ளனர். இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமம் அடைந்துள்ளனர். இந்த தொடர் நிலநடுக்கங்கள் காரணமாக மிகப் பெரிய எரிமலை வெடிப்பு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. இதையடுத்து, அவசர நிலையை ஐஸ்லாந்து அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. இந்த இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
ஐஸ்லாந்து நாட்டின் அதிகாரிகள் வெளியிட்டிருக்கும் அதிகாரபூர்வ செய்திக் குறிப்பில், இந்த நில அதிர்வுகளால் நாட்டில் எரிமலை வெடிப்புகளும் ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளனர். பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஐஸ்லாந்தில் 33 எரிமலைகள் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஐஸ்லாந்தில் இதுவரை சுமார் 24,000-க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் 2010-இல் ஐஸ்லாந்தின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட மிகப் பெரிய எரிமலை வெடிப்பு காரணமாக உலகம் முழுவதும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதும், இதையடுத்து ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் தவித்ததும் நினைவுகூரத்தக்கது.