ஆதார் சேவைகளுக்கு அதிக கட்டணம் வசூலித்தால் ரூ.50,000 அபராதம்...
ஆதார் பதிவு செய்வது மற்றும் அதில் திருத்தங்கள் மேற்கொள்வது போன்ற சேவைகளுக்கு ஆதார் மையங்கள் அதிக கட்டணம் வசூலித்தால், அவை சஸ்பெண்ட் செய்யப்படுவதோடு, 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மத்திய தகவல் தொழிநுட்ப இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் லோக்சபாவில் தெரிவித்தார்.
இது தொடர்பாக லோக்சபாவில் தாக்கல் செய்த எழுத்துப் பூர்வ பதிலில் அவர் கூறியதாவது:
ஆதார் எண்ணை பதிவு செய்தல் மற்றும் திருத்தம் செய்தல் ஆகியவை பொது சேவை மையங்கள், இ-- - சேவை மையங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பட்டியலிடப்பட்ட வங்கிகள் போன்ற துறைகளில் பதிவு செய்துள்ள ஏஜன்சிகள் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஏஜன்சிகள், மிகவும் கவனத்துடன், கண்டிப்பான அளவுகோல்களை வைத்து தேர்வு செய்யப்படுகின்றன.
இவர்கள் கைரேகை, கருவிழி பதிவு, முகவரி மாற்றம் போன்ற சேவைகளுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தால் விசாரிக்கப்படும்.
அவை உறுதிப்படுத்தப்பட்டால், அந்த ஏஜன்சியை, யு.ஐ.டி.ஏ.ஐ., எனும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சஸ்பெண்ட் செய்வதோடு, 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கும்.
அதிக கட்டணம் தொடர்பான புகார்களை யு.ஐ.டி.ஏ.ஐ., இணையதளத்தில் தெரிவிக்கலாம் அல்லது 1947 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளலாம்.