17 வயது பள்ளி மாணவனை கோவை அழைத்துச் சென்று தனியாக வீடு எடுத்து தங்கியிருந்த தனியார் பள்ளி ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது...
சென்னை அருகே பள்ளி மாணவனுடன் தங்கியிருந்த ஆசிரியை, போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கேளம்பாக்கம் அடுத்த பொன்மார் கிராமத்தை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவன், சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தான். கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்மாணவன் பள்ளியில் இருந்து வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவனது பெற்றோர், அவனை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால், தாழம்பூர் போலீசில் புகார் அளித்தனர்.
இகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், காணாமல்போன மாணவனை பல இடங்களில் தேடி வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக இருந்தவருடன் மாணவனுக்கு தொடர்பு இருந்ததும், அந்த ஆசிரியை ஒன்றரை மாதத்திற்கு முன்பு வேலையை விட்டு நின்று கோயம்புத்தூர் சென்று விட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அந்த ஆசிரியையின் அலைபேசி எண்ணை வைத்து அவர் கோயம்புத்தூரில் இருப்பதை உறுதிப்படுத்தினர்.
பின்னர், கோயம்புத்தூர் போலீசாருடன் தொடர்புகொண்டு அந்த ஆசிரியை தங்கி இருந்த இடத்தை சோதனை செய்தபோது அவருடன் காணாமல் போன மாணவனும் இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் இருவரையும் அழைத்து வந்து விசாரித்ததில், கன்னியாகுமரி மாவட்டம், வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் ஆசிரியை எப்சிபா (28). இவர், கடந்த 2018ல் திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்வதும் தெரியவந்தது. மேலும், மதுராந்தகம் அருகே ஒரத்தி பகுதியில் வேலை செய்தவர் ராஜினாமா செய்து பின்னர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிக்கு சேர்ந்துள்ளார்.
அப்போது, பள்ளியில் படிக்கும் மாணவனுடன் சகஜமாக பழகியதும், தனக்கு தேவையான பொருட்களை அவ்வப்போது வாங்கி வரச் சொல்லியும், தான் தங்கியிருந்த அறைக்கு மாணவனை அழைத்து சென்றபோது, அவன் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் கூறிய ஆசிரியை, இந்த பிரச்னை வெளியே தெரிந்தால் அசிங்கமாகி விடும் என்று நினைத்து வேலையை ராஜினாமா செய்து விட்டு கோயம்புத்தூர் சென்று விட்டதாகவும், ஆனால், மாணவன் விடாமல் தன்னை தேடி வந்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியதால் வேறு வழியின்றி அவனுடன் இருந்ததாகவும் தெரிவித்தார்.
இருப்பினும், ஆசிரியையுடன் இருந்த மாணவன் மைனர் என்பதால், இவ்வழக்கு தாம்பரம் சிட்லபாக்கம் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியை எப்சிபாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* சிக்கியது எப்படி?
ஆசிரியை எப்சிபா, மாணவனை கோவைக்கு அழைத்து வந்த பின்னர் சுமார் ஒரு வார காலம் தனது செல்போனை பயன்படுத்தாமல் இருந்துள்ளார். சமீபத்தில்தான் செல்போனை பயன்படுத்தி, தோழிகளிடம் தகவல் கூறியுள்ளார். அப்போது, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள காரமடையில் தனியாக வீடு எடுத்து, மாணவனுடன் தங்கியுள்ளேன், இதை வெளியில் சொல்ல வேண்டாம் எனக்கூறியுள்ளார். இதன்பிறகு போலீசார், அந்த ஆசிரியையின் செல்போன் டவரை கண்காணித்து அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.