தேர்தல் பத்திரம் திட்டம் என்றால் என்ன?
தேர்தல் பத்திரங்கள் என்பது, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகளை வழங்குவதற்கான ஒரு வழிமுறையாகும். இது ஒரு உறுதிமொழிப் பத்திரம் போன்றது. கடந்த 2017-18ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தேர்தல் பத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் சட்டப்பூர்வமாக 29, ஜனவரி 2018 அன்று அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம், தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள், வங்கி மூலம் தேர்தல் பத்திரத்தை பெற்றுக்கொள்ளலாம்.
நன்கொடையாளர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்...
இந்தத் தேர்தல் பத்திரங்களில் வாங்குபவரின் பெயர், முகவரி, இந்த நிதி யாரிடம் இருந்து பெறப்பட்டது ஆகிய விவரங்கள் மற்றவர்களுக்குத் தெரியாது என்றும் கூறப்பட்டது. அந்த தனிநபரோ அல்லது கார்ப்பரேட் நிறுவனமோ இந்த பத்திரங்களை கொண்டு தங்களுக்கு விருப்பமான கட்சிகளுக்குத் தேர்தல் நிதி வழங்கலாம். மேலும், அந்த கட்சிகள் 15 நாட்களுக்குள் எந்தவித கட்டுப்பாடுமின்றி இதனை நிதியாக மாற்றிக்கொள்ளலாம். அப்படி இல்லையென்றால், அந்த தேர்தல் பத்திரத் தொகை பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும் என்று அந்த திட்டத்தில் கூறப்பட்டது.
தேர்தல் பத்திரங்களை வெளியிடுவது எஸ்பிஐ...
இந்த தேர்தல் பத்திரங்களை வெளியிடுவது எஸ்பிஐ வங்கியாகும். இந்தப் பத்திரங்களை, குறிப்பிட்ட 29 கிளைகளில் மட்டுமே வாங்கிக் கொள்ளலாம். இதனை ரூ.1,000, 10,000, 1,00,000, 10,00,000, 1,00,00,000 என்று வாங்கிக்கொள்ள முடியும். பொதுவாக இந்தப் பத்திரங்கள் ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் 10 நாட்களுக்குக் கிடைக்கும். இதே பொதுத் தேர்தல் காலத்தில் கூடுதலாக 30 நாட்கள் மத்திய அரசால் அனுமதி வழங்கப்படும்
எந்தக் கட்சிகள் தேர்தல் பத்திரங்களைப் பெற முடியும்?
இந்த தேர்தல் பத்திரங்களை இந்திய குடிமகனாக இருக்கும் யார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். வாடிக்கையாளர்களின் விவரங்களை பூர்த்தி செய்பவர்கள், தங்கள் வங்கிக் கணக்கின் மூலம் நேரடியாக பணம் அனுப்புபவர்கள் இந்த பத்திரங்களை வாங்கிக் கொள்ள முடியும். 1951, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் 29 A, பிரிவின்கீழ் பதிவு செய்யப்பட்ட மற்றும் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் 1% குறைவில்லாத வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சிகள் மட்டுமே இந்த தேர்தல் பத்திரங்களை நன்கொடையாக பெற முடியும்.