காணாமல் போன போன் ஆஃப்லைனில் இருந்தாலும் கண்டுபிடிக்கலாம் - கூகுள் ஃபைண்ட் மை டிவைஸ் அப்டேட்...
கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஃபைண்ட் மை டிவைஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த அப்டேட் ஆப்பிளின் ஃபைண்ட் மை டிவைஸ் வழங்குவதை போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.
புது அப்டேட் மூலம் ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்களின் காணாமல் போன சாதனங்களை எளிதில் கண்டறிய முடியும். குறிப்பிட்ட சாதனம் ஆஃப்லைனில் இருந்தாலும் இந்த அம்சம் சீராக இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் ஃபைண்ட் மை டிவைஸ் போன்றே, கூகுளின் அப்டேட் செய்யப்பட்ட ஃபைண்ட் மை டிவைஸ் சேவையும் ப்ளூடூத் சிக்னல்களை கொண்டு காணாமல் போன சாதனங்களை கண்டறியும்.
இதன் மூலம் அருகாமையில் உள்ள ஆண்ட்ராய்டு சாதனங்களில் இண்டர்நெட் இணைப்பு இல்லை என்றாலும், கண்டறிய முடியும். தற்போது இந்த அம்சம் ஆண்ட்ராய்டு 9 மற்றும் அதற்கு பின் வெளியான வெர்ஷன்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. கூடுதலாக பிக்சல் 8, பிக்சல் 8 ப்ரோ என தேர்வு செய்யப்பட்ட சாதனங்களிலும் இந்த அம்சம் உள்ளது. மேலும், காணாமல் போன சாதனம் தொலைந்து போனாலும் அதனை ஃபைண்ட் மை டிவைஸ் மூலம் கண்டுபிடித்துவிட முடியும்.
புதிய ஃபைண்ட் மை டிவைஸ் நெட்வொர்க்கின் நோக்கம் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தான் என்று கூகுள் குறிப்பிட்டுள்ளது. காணாமல் போன சாதனங்களின் லொகேஷன் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்பட்டு விடும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இதன் மூலம் கூகுள் மற்றும் இதரானவர்கள் லொகேஷன் விவரங்களை இயக்க முடியாது.