தமிழ்நாட்டைத் தாக்கும் வெப்ப அலை - எச்சரிக்கைப் பதிவு - சில மருத்துவ அறிவுரைகள் - Dr.A.B.ஃபரூக் அப்துல்லா...

 


தமிழ்நாட்டைத் தாக்கும் வெப்ப அலை 


அலர்ட் பதிவு 


சில மருத்துவ அறிவுரைகள் 


Dr.A.B.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை 


தமிழகத்தில் இந்த கோடை காலத்தில் வெப்ப அலை மிக கொடூரமாக வீசி வருகிறது. 

கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் நிலவி வருகிறது. 

இதனால் மக்கள் பெருந்துன்பத்திற்கு ஆளாகி வருகிறோம். 


இதனை எதிர்கொள்ளும் விதமாக சில மருத்துவ யோசனைகளை / அறிவுரைகளை பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு. 


வெப்ப அலையால் நம் உடலுக்கு நேரும் முதல் பிரச்சனை 

நம் உடல் சூடாகுதல். இதை Hyperthermia என்கிறோம். ஆகவே, உடல் சூடாவதை தடுப்பதற்கு நாம் எடுக்கும் நடவடிக்கைகள் முதல் இடம் பிடிக்கின்றன. 


உடல் சூடாவதை தடுப்பது எப்படி? 


1. தண்ணீர்பஞ்சம் இல்லாத ஊர்களில், தினமும் இரண்டு வேளை குளிர்ந்த நீரில் குளிக்கலாம்


2. தண்ணீர் பஞ்சம் நிலவும் ஊர்களில் ,  ஒரு வேளை குளிர்ந்த நீர் குளியல் மற்றும் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை கை கால் முகம் போன்றவற்றை கழுவலாம். 

இது உடலின் உஷ்ணத்தை தணிக்க உதவும்.


3. வெப்பத்தை உள்ளயே தக்க வைக்கும் உடைகளான கம்பளி / லினன் போன்ற உடைகளை தவிர்க்க வேண்டும். 

ஜீன்ஸ் அணிவதை தவிர்ப்பது நல்லது. 

பருத்தி ஆடைகளை அணிவது சிறந்தது. 

வெப்பத்தை தக்க வைக்கும் கருப்பு நிற ஆடைகளை தவிர்ப்பது சிறந்தது. 


4. வீட்டை விட்டு வெளியே செல்லும் போது குடை / தொப்பி எடுத்துச் செல்ல வேண்டும். முடிந்த வரை , வெயில் நம் உடல் மீது நேராக படாதவாறு பார்த்துக் கொள்வது நல்லது. 


5. வெயில் தனல் அதிகமாக இருக்கும் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே  செல்வதை முடிந்த வரை தவிர்க்கலாம்.  வெளியே சென்று விளையாடுவதை காலை நேரம் மற்றும் மாலை நேரத்திற்கு தள்ளி வைக்கலாம். 


அடுத்த நடவடிக்கை. 

இதை மீறியும்   சூடான நம் உடலை எப்படி குளிர் படுத்துவது என்பது.


நாம் வீட்டிற்கு உள்ளேயே இருந்தாலும்.

வெப்ப சலனம் நம்மை கட்டாயம் பிரச்சனைக்குள்ளாக்கும் 


காரணம்.. சூரியனின் வெப்பமானது மூன்று முறைகளில் நம் மீது தாக்கலாம்


ஒன்று - conduction 

இரண்டாவது - convection 

மூன்றாவது - radiation 


இதில் முதலாவதாக இருக்கும் conductionக்கு நாம் ஏற்கனவே சூடான ஒரு பொருளோடு தொடர்பில் இருந்தால் நடப்பது. அதாவது , வெயிலில் நின்ற ஒரு  பைக் மீது நாம் ஏறி உட்கார முற்படும் போது , அதன் வெப்பம் நமக்கும் பரவும். 


இதை தவிர்க்க முடிந்த வரை நிழலில் வண்டியை நிறுத்தலாம் அல்லது சீட்டில் உட்காரும் முன் நல்ல கடினமான துணியை விரித்து உட்காரலாம்


இரண்டாவது வகை

convection 

அதாவது காற்றை சூடாக்கி விட்டால் போதும். அதனுடன் தொடர்பில் இருக்கும் நமக்கும் வெப்பம் கடத்தப்படும். 

இது நாம் வீட்டினுள் இருந்தாலும் சரி , நம்மை தாக்கியே தீரும். 

பொதுவாக அடைக்கப்பட்டு நிறுத்தப்பட்ட கார் போன்ற வாகனங்களுக்குள் சென்ற உடன் தாக்கும் வெப்பம் இந்த வகை. 


நமது வீட்டின் ஜன்னல்களில் தண்ணீரில் முக்கிய துண்டுகளை காயப்போடலாம். இதன் மூலம் வீட்டினுள் வரும் காற்று சிறிது ஈரப்பதம் கலந்து வரும். 


நாம் போடும் மின்விசிறி. வெளியே இருக்கும் வெப்பக்காற்றையும் மேலே சூடான தளத்தின் காற்றையும் நம் மீது தள்ளும். 

அதனால் தான் என்ன வேகமாக ஃபேன் சுழன்றாலும் வெப்பம் தணியாமல் இருக்கும். 


கார் உபயோகிப்பவர்கள்

 கார் கண்ணாடிகளை உடனே நன்றாக திறந்து விட வேண்டும். 

ஏசியை உடனே போடுவதை தவிர்க்க வேண்டும். காரணம் அந்த ஏசி மெசினும் 100 டிகிரிக்கு மேல் சூடாகி இருக்கும். அதில் இருந்தும் வெப்பக் காற்றே வரும். 


மூன்றாவது Radiation 

இதற்கு காற்று போன்ற எந்த கடத்தியும் தேவையில்லை . மின் காந்த அலைகளான இந்த வெப்பம் நம்மை நேரடியாக தாக்கி நம் உடலை சூடாக்கும். 

நம் வீட்டில் கிச்சனில் உபயோகப்படுத்தும் மைக்ரோ வேவ் அவன் இந்த முறையில் தான் இயங்குகிறது. 


இந்த முறையில் சூடாகும் நம் 

உடல் எப்படி இந்த சூட்டை தானாக தணித்துக்கொள்கிறது ? 


அதற்கு காரணம் "Evapouration" எனும் தற்காப்பு முறை 


அதிகமாக உடல் சூடானால், நமது உடலில் வேர்வை அதிகமாக சுரக்கும். அந்த வேர்வை உடலை குளிர்விக்க முயற்சிக்கும்.(sweating)  மேலும் உடலுக்குள் உள்ள உஷ்ணத்தை நமது நுரையீரல் வெளியிடும் மூச்சுக்காற்று வழி அனுப்ப முயலும்(expiration) 


இப்படி நம் உடல் அதிக நீர்ச்சத்தை உபயோகித்து குளிர்விப்பதால் ஏற்படும் பிரச்சனை 

Dehydration - நீர் சத்து குறைதல்..


இதை எப்படி அறியலாம்? 


- நாக்கு வரண்டு போதல்

- சிறுநீர் அடர் மஞ்சளாக செல்லுதல்

- தசைப்பிடிப்பு 

- தலை சுற்றல்

- கை கால் தளர்வு 


போன்ற அறிகுறிகளால் அறியலாம்


இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் ?


1. எளிதான வழி - தண்ணீரைப் பருகுவது.


நமது சிறுநீரகங்கள் சரியாக இயங்க குறைந்தபட்சம் ஒருவரின் எடைக்கு  கிலோ ஒன்றிற்கு முப்பது மில்லி லிட்டர் தண்ணீர் ஒரு நாளைக்கு பருகி ஆக வேண்டும். 


உதாரணம் 

60 கிலோ எடை உள்ள ஒருவர் எந்த வேலையும் செய்யாமல் வீட்டிலேயே இருந்தாலும் சரி. வெயில் காலமோ குளிர்காலமோ அவர் 


60 ( கிலோ) × 30( மில்லி) = 1800 மில்லி லிட்டர் தண்ணீர் குறைந்த பட்சம் பருக வேண்டும். 


இந்த தண்ணீரின் உட்கொள்தல் அளவு அவர் செய்யும் வேலைகள் பொறுத்து அதிகமாகும். 


இன்னும் வெப்ப சலனம் நிலவும் காலங்களில் 30 மில்லி லிட்டர் என்பது 60 மில்லி லிட்டர்  அளவு குறைந்தபட்ச தேவையாக  மாறும்.


உங்கள் பள்ளி செல்லும் குழந்தையின் எடை 20 கிலோ என்றால் 

இந்த வெப்ப சலனத்தில் அவர்களின் குறைந்த பட்ச தேவை ஒரு கிலோவுக்கு 60 மில்லி லிட்டர் என்று கொண்டால் 


20 (கிலோ) * 60 ( மில்லி லிட்டர் ) = 1200 மில்லி லிட்டர். 

அதாவது 1.2 லிட்டர் கட்டாயம் பருக வேண்டும் 


வளர்ந்த ஆணும் பெண்ணும் 

பொதுவாக , 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் பருகுவது சிறந்தது. 


இந்த தண்ணீரை 

இளநீராக, மோராக, லஸ்ஸியாக , பழச்சாறாக எப்படி வேண்டுமானாலும் பருகலாம். 


செயற்கை குளிர்பானங்கள், ரசாயன கலர் பொடிகள் கலந்த கலவைகளை தவிர்ப்பது நல்லது. 


குளிர் நீர் பருகுவது சிறந்தது. அதிலும் ஃப்ரிட்ஜில் வைத்து கால் மணி நேரம்  முதல் அரை மணி நேரத்தில் எடுத்து பருகினால் சரியான குளிர்ச்சி இருக்கும். 


ஆற்று மணல் பரப்பி அதில் நீர் ஊற்றி அதன் மீது வைத்த

மண்பானையில் கொதிக்க வைத்து ஆறவைத்த நீரை ஊற்றி குளிர்வித்து குடிப்பது சிறந்தது.


மிக அதிகமான குளிர்ச்சி தரும் நீரை பருகுவது தொண்டைக்கு கேடு விளைவிக்கும்.


சரி..இப்போது வெப்ப சலனத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு என்ன முதலுதவி செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.


1. வெப்ப சலனத்தால் பாதிக்கப்பட்டவரை உடனே நல்ல குளிர்ச்சியான இடத்துக்கு அல்லது நிழலான பகுதிக்கு மாற்ற வேண்டும். 


2. அவரது மேலாடைகளை கழற்றி விட வேண்டும். நன்றாக உடலில் காற்று பட வேண்டும். 


3.அவரை காலை நீட்டி படுக்க வைக்க வேண்டும். 


4. காற்றாடி / மின்விசிறியை இயக்கி குளிர்விக்க வேண்டும். 


5. சுற்றி ஆட்கள் நின்று கொண்டு காற்று அவருக்கு செல்வதை தடுக்கக்கூடாது.


6. தண்ணீரில் நனைத்த துணியைக்கொண்டு உடல் முழுவதும் ஒத்தடம் கொடுக்க வேண்டும். 


7.கால்களை சிறிது உயரத்தூக்கி வைக்க வேண்டும்


8. சிறிது நினைவு திரும்பியதும் அமர வைத்து.. தண்ணீரை வழங்க வேண்டும். 


9.     911 / 108 க்கு அழைத்து உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்து பரிசோதிக்க வேண்டும் 


இதுவே வெப்ப சலனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்ய வேண்டிய முதல் உதவி. 


ஹை அலர்ட் தேவைப்படும் வகுப்பினர்

பின்வருமாறு 


1. குழந்தைகள் 

2. முதியோர்கள்

3. நீரிழிவு / ரத்த கொதிப்பு நோயாளிகள் 

4.கர்ப்பிணிகள்

5. வெயிலில் நின்று வேலை செய்யும் தொழிலாளிகள் 

6. அதிகமாக பயணம் செய்பவர்கள் 


முடிந்த வரை வெப்ப சலனத்தில் இருந்து நம்மையும் நம்மை சார்ந்தோரையும் பாதுகாப்போம் 


நிழல் தரும் மரங்களை நம்மால் இயன்ற அளவு வளர்த்து பின்வரும் சந்ததியினர் இதுபோன்ற வெப்ப சலனங்களில் நிழல் தேடி அலையாதவாறு காப்போம்


நன்றி 


Dr.A.B.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...