கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அப்பா - அனைவரும் படிக்க வேண்டிய கதை...



 அப்பா - அனைவரும் படிக்க வேண்டிய கதை...


அப்பா, சுவற்றைப் பிடித்துக் கொண்டு வீட்டின் ஹாலில் நடந்து கொண்டிருந்தார். அவர், வயதானவராகவும் பலவீனமாகவும் இருந்ததால் அவருக்குப் பிடிமானம் தேவைப்பட்டது. அப்படி சுவற்றில் கை வைத்து நடக்கும் போது, கையின் அச்சு சுவற்றில் பட்டு அதன் நிறம்  மங்கத் தொடங்கியது. 


இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த என் மனைவியின் முகத்தில் மாற்றம் தெரிந்தது. அப்பாவின் கால்களும் பலவீனமாக இருந்ததால் ஒரு நாள், கால்களுக்கு எண்ணெய்  மசாஜ் செய்துவிட்டு அதே கைகளுடன் சுவற்றைப் பிடித்துக் கொண்டு தன் அறையை நோக்கி நடந்து கொண்டிருந்தார். எண்ணெயுடன் கூடிய கைகளால் சுவற்றைப் பிடித்து நடந்ததில் சுவர் மிகவும் மோசமாக தெரிந்தது.  இதைக் கண்ட என் மனைவி மிகவும் கோபமடைந்து என்னிடம் அதை வெளிப்படுத்தினாள். 

நான் உடனே என் தந்தையின் அறைக்குச் சென்று வழக்கத்திற்கு மாறான தொனியில், “அப்பா உங்களால் சுவற்றைத் தொடாமல் நடக்க முடியாதா?” என்று கேட்டேன்.  நான் பேசிய தொனி அவருக்கு மிகவும் வருத்தத்தை உண்டாக்கியது.  *இத்தனைக்கும் இது அவர் சுயமாக சம்பாதித்து கட்டிய வீடு* எண்பது வயது முதியவர், குழந்தை போன்ற முகத்துடன் வெட்கித் தலை குனிந்தார். 


அந்த நிமிடமே நான், அவரிடம் அப்படி பேசி இருக்கக் கூடாது என்று உணர்ந்தேன்.  ஆனால், அதை அவரிடம் வெளிப்படுத்தவில்லை. பின்னர், அப்பா சுவற்றைப் பிடிக்காமல் நடந்தார்.  ஒரு நாள் அப்படி நடக்கும் போது உடல் சமநிலையை இழந்து கீழே விழுந்து, படுத்த படுக்கையாகிவிட்டார்.  ஒரு சில நாட்களில் அவர் இறந்தும் போனார்.  சுவற்றில் அவருடைய கைகளின் பதிவைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் என் இதயம் ஒரு வித வலியை உணர்ந்தது. 


நாட்கள் கடந்து விட்டன. ஒரு நாள் என் மனைவி வீட்டிற்கு வர்ணம் பூசப்பட வேண்டும் என்று வற்புறுத்தினாள்.  வர்ணம் பூசுவதற்கு பெயிண்டர்களும் வந்துவிட்டனர்.  என் ஐந்து  வயது மகன், தன் தாத்தாவை மிகவும் நேசித்தவன்.  என் தந்தையின் கைரேகைகளை    அழிக்கக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்தான்.  பெயிண்டர் ஒரு யோசனை சொன்னார். “ சார் நான் கைரேகைகளை அழிக்காமல், அதைச் சுற்றி அழகாக வண்ணம் தீட்டி தனித்துவமாக வடிவமைத்துக் காட்டுகிறேன்.. உங்களுக்கு அது மிகவும் பிடிக்கும்.” 

 என் மனைவியும் அதற்கு சம்மதித்தாள். 


அவர் உறுதியளித்தபடி பார்ப்பவர்கள் வியக்கும் வண்ணம் , அப்பாவின் கை முத்திரையை அழிக்காமல் தனித்துவமாக வடிவமைப்புகளை உருவாக்கினார்.  எப்போதெல்லாம் வர்ணம் தீட்ட வேண்டுமோ அப்போதெல்லாம் கைரேகையை சுற்றி, அதே வடிவமைப்பை அழகாக உருவாக்கினோம். 


ஆண்டுகள் ஓடின. என் மகனுக்கு இப்போது திருமணம் ஆகிவிட்டது.  எனக்கும் எழுபது வயது ஆகிவிட்டது.  நான் இப்போது என் தந்தையின் இடத்தில் இருக்கிறேன்.  நானும் பிறர் உதவி இன்றி நடப்பது மிகவும் கடினம்.  நான், என் தந்தையை எப்படி காயப்படுத்தினேன் என்பதை நினைவில் வைத்து அமைதியாக இருந்தேன். 


ஒரு நாள்.. நான், என் அறையை விட்டு வெளியில் வரும் பொழுது என் உடல் சமநிலையை இழந்து கீழே விழுவது போல உணர்ந்தேன்.  உடனே என் மகன் என்னைப் பின்னால் இருந்து பிடித்துக் கொண்டு அன்புடன் சொன்னான், “ அப்பா.. ஏன் நீங்கள் சுவற்றைப் பிடித்துக் கொண்டு அதன் ஆதரவில் நடக்கக்கூடாது? கவனமாக நடந்து செல்லுங்கள் அப்பா..”  


என் மகன் சுவற்றைப் பற்றி கவலைப்படவில்லை.  ஆனால், நான் எனக்கு அருகில் இருந்த சுவற்றில் இருக்கும் என் தந்தையின் கைரேகையைப்  பார்த்தேன்.  அவருடைய முகம் என் முன்னால் வந்தது.  அந்த நொடியே என் மனம் நினைத்தது, நான் அப்பாவிடம் என் மனக்கசப்பைக்  காட்டாமல் நிதானமாக பேசியிருந்தால் இன்னும் கொஞ்ச நாள் உயிருடன் இருந்திருப்பார் என்று உணர்ந்தேன்.  என் கண்களில் நீர் வழிந்தது. 


நான் இதைப் பற்றி எண்ணியபடியே நடந்து சென்றதால் தடுமாறினேன்.  கீழே விழ இருந்த என்னை,  என் பேத்தி தன் தோள்களால் தாங்கிப்  பிடித்து சோபாவில் உட்கார வைத்தாள்.  பிறகு, அவள் தன் பையைத்  திறந்து ஒரு ஓவியப் புத்தகத்தை எடுத்து வந்து, “ தாத்தா..  நான் இன்று ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றேன்.”  என்று சொன்னாள் .  ஓ அப்படியா..  போட்டிக்காக நீ வரைந்ததைக் காட்டு..  பார்க்கலாம்.  என்றேன். சுவற்றில் இருந்த என் அப்பாவின் கை பதிவை,  ஓவியமாகத்  தீட்டியதைக் காட்டினாள்.  மேலும்.. “எங்கள் ஆசிரியர் இந்த ஓவியத்தைப்  பற்றி விளக்கம் அளிக்கும்படி  சொன்னார்.” 


அதற்கு நான், “ இது ஒரு தனித்துவமான வடிவமைப்பால் சுவற்றில் பதிக்கப்பட்ட என் பெரிய தாத்தாவின் கைரேகை” என்று ஆசிரியரிடம்  சொன்னேன்.  ஆசிரியர் என்னைப் பாராட்டியதோடு, 

சிறு குழந்தைகள் உள்ள வீடுகளில் வண்ணக் குறிகள், கை அடையாளங்கள், கீறல்கள், கால் தடயங்கள் மற்றும் வரைபடங்கள் போன்றவற்றை குழந்தைகள் கிறுக்குவார்கள்.  இதைக் கண்ட பெற்றோர்கள் பாராட்டுகிறார்கள். குழந்தைகள் செய்ததைப் பற்றி பேசி பெருமைப்படுகிறார்கள். அதேபோல, வயதானவர்களை நேசிப்பது மற்றும் ஆதரவளிப்பது பற்றியும் ஆசிரியர் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.” என்று சொன்னாள் பேத்தி. 


என் மகன் மற்றும் பேத்திக்கு முன்னால் நான் மிகவும் சிறியவனாக  உணர்ந்தேன்.  நான், என் அறைக்குள் வந்து கதவை மெதுவாக மூடிக்கொண்டு, என் இதயம் லேசாகும் வரை அழுதேன்.                                                

                  * * *  


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...