கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனவு மெய்ப்படும்...



கனவு மெய்ப்படும்...


1845ல் எலியாஸ் ஹோவே என்ற பொறியாளர், வழக்கம் போல தன்னுடைய கருவியை வடிவமைத்துக் கொண்டிருந்தார். 95% துல்லியமாக வடிவமைத்துவிட்ட அவருக்கு எஞ்சிய அந்த 5% எப்படி செய்வதென்று தெரியவில்லை.அது முடியாவிட்டால் மொத்தக் கண்டுபிடிப்புமே பயனற்று போய்விடக்கூடும்.என்ன செய்வது என்று சிந்தித்தவாறே உறங்கிப் போனார். ஆழந்து உறங்கியவரின் கனவில் ஒரு அதிபயங்கர நிகழ்வு வந்தது.


ஏதோ ஒரு தீவில், மனித மாமிசம் உண்பவர்களிடம் மாட்டிக் கொள்கிறார் ஹோவே. அவரை அப்படியே தூக்கி கொதிக்கும் வெந்நீரில் போட்டு வேக வைக்குமாறு அந்தக் கூட்டத்தின் தலைவன் ஆணையிடுகிறான்.


ஹோவேயைத் தூக்கி அந்த சுடுகலனில் போடுகிறார்கள்.ஹோவே தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சுகிறார்.கதறுகிறார்.


அதைக் கேட்ட அந்தத் தலைவன்,


"உன்னை விட்டு விடுகிறேன்.ஆனால் அதற்கு நீ ஒரு பணியைச் செய்ய வேண்டும்.அதோ அங்கே ஒரு கருவி உள்ளது.முக்கால்வாசி கருவியை எங்கள் கூட்டத்தவர்கள் வடிவமைத்துவிட்டார்கள்.மீதியை நீ செய்ய வேண்டும்.செய்தால் உனக்கு விடுதலை.இல்லையேல்..." என்று மிரட்ட,


"கண்டிப்பாகச் செய்கிறேன்" என்று ஹோவே கதறுகிறார்.அவரை வெளியே எடுக்கிறார்கள்.


அதோ அங்கே இருக்கிறது அந்தக் கருவி என்று காட்டுகிறார்கள்.அந்தக் கருவி ஒரு துணியால் போர்த்தப்பட்டு மூடிவைக்கப்பட்டுள்ளது.உயிர் மேல் உள்ள பயத்தில் அந்தக் கருவியை நோக்கி ஓடுகிறார் ஹோவே.வேகமாக துணியை எடுக்க, அங்கே அவர் முடிக்க முடியாமல் திணறும் அவருடைய கருவி இருக்கிறது.


"ஆத்தாடி.. இதத்தானே நாமளும் முயற்சிக்கிறோம். இது முடியாதே" என்றெண்ணியபடி ஓடத் துவங்குகிறார்.


அவனைப் பிடியங்கள் என்ற ஆணை பறக்கிறது.ஓடிக் கொண்டிருக்கும் ஹோவே மீது ஈட்டிகள் எறியப்படுகின்றன.அதில் ஒரு ஈட்டி அவரது உடலை துளைக்கிறது.அதை எடுக்கிறார்.எடுத்துப் பார்த்தால் அந்த ஈட்டியின் நுனியில் ஒரு துளை இருக்கிறது.


"கண்டுபிடித்துவிட்டேன்" என்று அலறியபடி அந்த நள்ளிரவில் துள்ளிக் குதித்து எழுகிறார்.தன்னுடைய ஆராய்ச்சிக் கூடத்திற்கு ஓடுகிறார்.தன் கருவியைப் பார்க்கிறார்.அதில் பொருத்தப்பட்ட ஊசியின் நுனிப் பகுதியில் ஒரு துளையைப் போடுகிறார்.நூலைத் அதில் திணிக்கிறார்.கருவியை ஓட வைக்கிறார்.


தையல் மிஷின் எனும் அந்த கருவி அட்டகாசமாகப் பிறந்தது.


தையல் மிஷின் இந்திய குடும்பங்களில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்த கருவி.இது கிராமப்புற பெண்கள் வாழ்க்கையை அப்படியே அலேக்காகப் புரட்டிப் போட்டது.பல லட்சக்கணக்கான தொழில் முனைவோர்களை உருவாக்கியது.


எப்படித்தான் வாழ்வதோ என கலக்கத்தில் இருந்த எத்தனையோ குடும்பங்களை,


"எதைப் பற்றியும் கவலைப்படாதே.என்னை இறுகப் பற்றிக் கொள்.உன்னை காப்பாற்ற வேண்டியது என் கடமை..." 


-- என எப்படியாவது வாழ்ந்து விடலாம் என்ற நம்பிக்கையை தந்தது தையல் மிஷின்.


ஒரே ஒரு ஒற்றை தையல் மிஷின் தரும் தன்னம்பிக்கையை கற்றை கற்றையான புத்தகங்கள் கூட கற்றுத் தராது.


இன்றும் கூட பல அரசுப் பள்ளிகளில் தையல் என்பதை ஒரு பாடமாகவே வைத்திருக்கிறார்கள்.தையல் தெரிந்தால் போதும், அது உறுதியாக உயர்த்தி விடும்.


அப்படியான அந்த மகத்தான தையல் மிஷினை பெருமைப்படுத்த ஜூன் 13 தேசிய தையல் இயந்திர நாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.


இந்த சமூகத்தை, குறிப்பாக பெண்களை மிக தன்னம்பிக்கை உடன், தைரியமாக, பொருளாதார பலம் பெற வைத்துக் கொண்டிருக்கும் அந்த அற்புத கருவி தையல் மிஷின்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...