கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மூளையைத் தின்னும் அமீபா குறித்த மருத்துவரின் கட்டுரை...



மூளையைத் தின்னும் அமீபா குறித்த மருத்துவர் Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா அவர்களின் கட்டுரை...


 கேரளாவின் மலப்புரத்தில் குட்டையில் குளித்த ஐந்து வயது சிறுமி மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு இறந்திருக்கிறாள். 


இறப்பிற்கான காரணமாக இருந்தது 

"நிக்லேரியா ஃபவுலேரி" (Naeglaria fowleri)  எனும் ஒரு செல் உயிரி. 


அமீபா என்று உயிரியலில் படித்திருப்போம் தானே..? 

அந்த வகையைச் சேர்ந்த 

பாக்டீரியாக்களை உணவாக உட்கொள்ளும் ஒரு செல் உயிரி இது. 


இந்த நிக்லேரியா  -  அசுத்தமான குளம் , குட்டை , முறையாக க்ளோரினேற்றம் செய்யப்படாத நீச்சல் குளங்கள் போன்றவற்றில் காணப்படும். 


குறிப்பாக குளிர்ச்சியான நீரை விடவும்  வெப்பமான வெதுவெதுப்பான நீரில் வாழும் தன்மை கொண்டவை. 


இந்த அமீபாக்கள் தேங்கியிருக்கும் நீரின் கீழ்ப்பகுதியில் இருக்கும் சேறு சகதியில் வாழும்.  குளிக்கும் போது கலக்கும் போது மேலே எழும்பி நீரில் கலந்திருக்கும். 


இத்தகைய அமீபாக்கள் வாழும்  நீரில் குளிக்கும் போது மூக்குக்குள் நீர் புகும் நிலை ஏற்படும் போது 


மூக்கினுள் க்ரிப்ரிஃபார்ம் தகடு என்ற எலும்பு உள்ளது. இந்த எலும்பில் சிறு சிறு ஓட்டைகள் இருக்கும். அதன் வழி நம் நுகர்தலுக்குத் தேவையான நரம்பு கிளை பரப்பி நாசியின் சுவர்களுக்குள் படர்ந்திருக்கும். 


இந்த அமீபா இருக்கும் நீரை மூக்குக்குள் உள்ளிளுக்கும் போது

நுகர்தலுக்கான நரம்பில் ஒட்டிக்கொண்டு மேலே மூளை நோக்கி ஏறிச்செல்லும் தன்மை கொண்டது. 


உள்ளே நுழைந்ததில் இருந்து மூன்று முதல்  பத்து நாட்களுக்குள்

நோய்க்கான அறிகுறிகளை வெளிப்படுத்தும். 


முதலில் தீவிர காய்ச்சல் 

அடங்காத தலை வலி 

என்று ஆரம்பித்து பிறகு 


மூளைக்காய்ச்சல் அறிகுறிகளான

பின் கழுத்துப் பகுதி இறுக்கம்

குமட்டல் / வாந்தி 

தலை சுற்றல் 

வலிப்பு ஏற்படுதல் 

பேதலிப்பு நிலை 

மூர்ச்சை நிலை 

கோமா 

இறப்பு ஏற்படக்கூடும் 


இந்த அமீபா - நரம்புகளின் நியூரான்களைத் தின்று உயிர்வாழும் தன்மை கொண்டது என்பதால் மூளையைச் சிறுகச் சிறுக உணவாக உட்கொள்ளும். இதனால் இதற்கு மூளை திண்ணும் அமீபா என்ற பெயரும் உண்டு. 


பெரும்பாலும் நோயின் அறிகுறிகள் ஏற்பட்ட ஒரு வாரத்திற்குள் மரணம் சம்பவிக்கும்


மரணத்திற்கான முக்கிய காரணம் 

இந்த நோயின் அறிகுறிகள் அனைத்தும் 

பாக்டீரியா எனும் மற்றொரு ஒரு செல் உயிரி ஏற்படுத்தும் மூளைக்காய்ச்சல் போன்றே இருக்கும் என்பதாலும்

இந்த அமீபா தொற்று அரிதிலும் அரிதானது என்பதாலும் 


நோய் கண்டறிதலில் தாமதம் ஏற்படும் வாய்ப்பு உண்டு. 


இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் - வேனில் காலங்களில் குளம் குட்டைகளில், நீச்சல் குளங்களில் அதிகமானோர் நீராடும் வழக்கம் உள்ளது. 


எனவே கட்டாயம் இந்த நோய் குறித்த விழிப்புணர்வு மருத்துவர்களுக்கும் பொது மக்களுக்கும் இருப்பது பல உயிர்களைக் காக்கும். 


இந்தக் கிருமித் தொற்று ஒரு மனிதரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவாது.  


இந்த அமீபா தொற்று - பாக்டீரியா தொற்று போலவே தெரிந்தாலும் 

பாக்டீரியா கொல்லிகள் என்றழைக்கப்படும் ஆண்ட்டிபயாடிக்குகளுக்கு அடங்காது.


இதற்கென பிரத்யேகமான மருந்தாக 

ஆம்ஃபோடெரிசின் - பி என்பது விளங்குகிறது. 

ஆம்... கோவிட் தொற்று ஏற்பட்ட காலத்தில் உப கொள்ளை நோயாக உருவெடுத்த கருப்பு பூஞ்சை ( ம்யூகார் மைகோசிஸ்) தொற்றுக்கு இந்த மருந்து தான் கேட்டது. 


இந்த அமீபா தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதை 

சரியான நேரத்தில் கணித்து 

மூளை தண்டு வட நீரில் இருந்து இந்த அமீபாவைக் கண்டறிந்து 

உடனடியாக ஆம்ஃபோடெரிசின்- பி  சிகிச்சை வழங்கிட வேண்டும். 


தமிழ்நாட்டில் நிக்லேரியா தொற்றுக்கு உள்ளான 47 வயது நபர் ஒருவருக்கு சரியான நேரத்தில் நோய் கண்டறியப்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கப்பட்டதில் உயிர்பிழைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த அமீபா மூளையின் முக்கிய மண்டலங்களை தின்று முடிப்பதற்குள் விரைவாகக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது அத்தனை எளிதல்ல. 


அதனாலேயே இந்த நோயின் இறப்பு உண்டாக்கும் சதவிகிதம் கிட்டத்தட்ட 100% 


இதுவரை உலகில் ஐநூறுக்கும் குறைவான நோயாளிகளே இந்த அமீபா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக மருத்துவ ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. 


இந்தியாவில் ஐம்பதுக்கும் குறைவான ஆதாரங்களே பதிவாகி உள்ளன. 


எனினும் முறையாகப் ஆவணப்படுத்தப்படாத 

ரிப்போர்ட் செய்யப்படாத

அல்லது தவறுதலாக பாக்டீரியாவினால்/ வைரஸினால் ஏற்படும் மூளைக்காய்ச்சல் என்று ஆவணப்படுத்தப்பட்ட நோயர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். 


இந்தியாவில் இறப்பிற்கான காரணங்களை பிரேதக் கூறாய்வு மூலம் அறிவது மருத்துவ- சட்ட ரீதியான வழக்குகளுக்கு மட்டுமே கட்டாயமாக உள்ளது என்பதால் 

இது போன்ற மூளைக்காய்ச்சல் மரணங்களில் இந்த அமீபா தொற்றின் பங்கு குறித்து நம்மால் சரியான எண்களை அறிய முடியாமல் போகிறது. 


இந்த அமீபா தொற்று  ஏற்படாமல் எப்படி காத்துக் கொள்வது? 


- தேங்கி இருக்கும் குளம் குட்டை கண்மாய் போன்றவற்றின் அடிப்பகுதி சகதியை இயன்றவரை கிளறி விடாமல் குளிப்பது நல்லது


- இத்தகைய தூய்மையற்ற நீரில் மூழ்கிக் குளிப்பதை கட்டாயம் தவிர்த்து விட வேண்டும். இந்த அமீபா மூக்கு துவாரம் வழியாக மட்டுமே மூளையை அடைய முடியும். 


அசுத்தமான தண்ணீரைக் குடிப்பதால் அந்த நோய் ஏற்படுவதில்லை. 


எனவே மூக்குப் பகுதிக்குள் நீர் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 


- நீச்சல் குளங்களில் சரியான முறையில் க்ளோரினேற்றம் செய்யப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். 

நீச்சல் பயிற்சி செய்யும் போது நோஸ் க்ளிப் அணிந்து கொள்வது சிறந்தது. 


- சில நேரங்களில் அசுத்தமான நீரில் 

மூக்கு துவாரங்களைக் கழுவுவதாலும் இந்த தொற்று பரவக்கூடும். இஸ்லாமியர்கள் - தொழுகைக்கு முன்பு செய்யும் ஒளு எனும் தூய்மை செய்யும் முறையில் மூக்கு நாசிக்குள் நீரை உறிஞ்சி சுத்தப்படுத்துவர். அத்தகைய நீர் தூய்மையானதாக இருக்கிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். 


 - இது போன்ற குளம் குட்டை கண்மாய்களில் குளித்த பத்து நாட்களுக்குள் காய்ச்சல் / தலைவலி / கழுத்துப் பகுதி இறுக்கம் / வலிப்பு  போன்றவை ஏற்படின் தாமதம் செய்யாமல் உடனடியாக மருத்துவமனையில் அட்மிட் ஆகி 

மருத்துவரிடம் தாங்கள் எப்போது? எங்கு? குளித்தோம் என்பதை தெளிவுபடுத்திட வேண்டும். 

இது விரைவில் நோயைக் கண்டறிய உதவும். 


குளம், குட்டைகளில் கண்மாய்களில் நீச்சல் குளங்களில் குளிக்கும் அனைவருக்கும் இந்தத் தொற்று ஏற்படுவதில்லை. 


அரிதிலும் அரிதாகவே இந்தத் தொற்று ஏற்படுகிறது. 


அது அவரவர் எதிர்ப்பு சக்தியைப் பொருத்தும் அமைகிறது. 


எனவே இந்தத் தொற்று குறித்த அதீத அச்சம் தேவையற்றது. 

மாறாக நிறைய விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. 


வளர்ந்த நாடுகளில் இந்த அமீபா குறித்தும் அமீபா வாழும் நீர்நிலைகள் குறித்தும் விழிப்புணர்வு அதிகம் இருக்கும். 


வெப்ப மண்டல நாடான நமக்கும் அத்தகைய விழிப்புணர்வு தேவை என்பதே இந்தப் பதிவின் நோக்கம். 


நன்றி 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை



>>> மூளையைத் தின்னும் அமீபா - மூன்று பேர் உயிரிழப்பு - தமிழ்நாடு சுகாதாரத்துறை வழிகாட்டுதல்கள் வெளியீடு...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

₹ 1.1 lakh compensation for insect bite while traveling in bus - Court orders

 பேருந்தில் பயணித்தபோது பூச்சி கடித்ததால் ₹ 1.1 லட்சம் இழப்பீடு - நீதிமன்றம் உத்தரவு ₹ 1.1 lakh compensation for insect bite while traveling...