குளித்தலை அருகே அய்யர்மலை ரோப்காரில் அந்தரத்தில் சிக்கி தவித்த பக்தர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரோப் கார் இருபுறங்களிலும் செல்ல முடியாமல் நடுவழியில் நின்றதால் பக்தர்கள் கூச்சலிட்டனர்.கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் புகழ்பெற்ற ரத்தினகிரி கோயில் அமைந்துள்ளது. மலைப்பகுதியில் செங்குத்தான படிக்கட்டுகள் அமைந்துள்ளதால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மலை உச்சியில் ஏறி சுவாமி தரிசனம் செய்ய சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து கடந்த 2011ம் ஆண்டு ரூ.2 கோடி மதிப்பில் ரோப்கார் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.இதையடுத்து ஆட்சிமாற்றத்திற்கு பிறகு கிடப்பில் போடப்பட்ட ரோப்கார் அமைக்கும் பணிகள் தற்போது நிறைவடைந்தது. தற்போது ரோப்கார் சேவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் மகிழ்ச்சியுடன் ரோப்காரில் பயணம் செய்து மலை உச்சியில் உள்ள ரத்தினகிரி கோயிலில் சுவாமி தரிசனம் செய்து வந்தனர்.ரோப்காரில் ஒருவழியாக செல்லும்போது 4 பெட்டிகளில் 8 நபர்கள் அமர்ந்து செல்லும் வகையிலும் அதேபோல் எதிர்புறமும் 8 நபர்கள் அமர்ந்து செல்லும் வகையிலும் ரோப்கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் பக்தர்கள் ரோப்காரில் பயணம் செய்து வந்தனர். இன்று மதியம் ரத்தினகிரி கோயிலில் உச்சிகால பூஜைக்காக அய்யர்மலை உச்சிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்த விராலிமலை பகுதியை சேர்ந்த 3 பெண் பக்தர்கள் ரோப்காரில் அமர்ந்து அங்கிருந்து புறப்பட்டுள்ளனர்.அதேபோல் மலை அடிவாரத்தில் இருந்து சில பக்தர்கள் ரோப்காரில் சென்றனர். அப்போது சுமார் 5 அடி தூரத்தில் சென்றுகொண்டிருக்கும்போது அதிவேக காற்றின் காரணமாக இடையில் சிக்கிக்கொண்டது. இதன் காரணமாக ரோப்காரில் சென்ற பக்தர்கள் பதற்றமடைந்து கூச்சலிட்டனர். தகவலறிந்து ரோப்காரில் சென்ற பக்தர்களை மீட்கும் பணியில் காவல்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நன்றி : தினகரன்