மத்திய அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களுக்குக் கிடைக்கப்பெறும் குறிப்பிடும்படியான பணப் பலன்களின் விவரம்:
*1. உறுதியான ஓய்வூதியம்*
* பணி ஓய்வுக்கு முன், கடைசி 12 மாதங்களில் பெற்ற சம்பளத்தில், 50 சதவீதம் ஓய்வூதியம். இது, 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு கிடைக்கும். அதற்கு குறைவாக பணியாற்றியவர்களுக்கு அதற்கேற்ப மாறும். குறைந்தபட்சம், 10 ஆண்டுகள் பணி செய்திருக்க வேண்டும்.
*2. குடும்ப ஓய்வூதியம்*
* ஓய்வூதியதாரரின் மறைவுக்குப் பின், அவர் பெற்ற ஓய்வூதியத்தில், 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக அவருடைய குடும்பத்துக்கு கிடைக்கும்.
*3. குறைந்தபட்ச ஓய்வூதியம்*
* குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு, மாதத்துக்கு குறைந்தபட்சம் 10,000 ரூபாய் உறுதியான ஓய்வூதியமாக கிடைக்கும்.
*4. விலைவாசிக்கு ஏற்ப மாறும்*
* தற்போது அரசு ஊழியர்களுக்கு, தேசிய நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையில், டி.ஏ., எனப்படும் அகவிலைப்படி மாற்றி அமைக்கப்படுகிறது. புதிய திட்டத்தில், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் இதுபோல் அகவிலைப்படி மாற்றி அமைக்கப்படும்.
*5. மொத்த ஓய்வூதியப் பலன்*
* ஓய்வு பெறும்போது, கிராஜுவிடி எனப்படும் பணிக் கொடையுடன், கூடுதலாக ரொக்கப் பலனும் கிடைக்கும். பணி ஓய்வின்போது பெற்ற மாத சம்பளத்தில், அடிப்படை ஊதியம் மற்றும் டி.ஏ., ஆகியவற்றில், 10ல் ஒரு பங்கு ரொக்கப் பலனாக கிடைக்கும். நிறைவு செய்த ஒவ்வொரு ஆறு மாதப் பணியின் அடிப்படையில் இது வழங்கப்படும். இதனால், உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் குறையாது.
*6. விருப்பத் தேர்வு மற்றும் ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களுக்கும் பலன்*
* இந்தத் திட்டம், 2025 ஏப்., 1 முதல் அறிமுகம் செய்யப்படும். மத்திய அரசு ஊழியர்கள், என்.பி.எஸ்., அல்லது யு.பி.எஸ்., திட்டத்தில் எதை வேண்டுமானாலும் தங்களுடைய சுய விருப்பத்தில் தேர்வு செய்து கொள்ளலாம். மேலும், *கடந்த, 2004 முதல் அமலில் இருந்து வரும், என்.பி.எஸ்., திட்டத்தின் கீழ் இருந்து, ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களும் புதிய திட்டத்துக்கு மாறிக் கொள்ளலாம். அதற்கேற்ப ஏற்கனவே கொடுக்கப்பட்ட தொகை ஈடு செய்யப்படும்.