கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TETOJAC சார்பில் 31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 29.07.2024, 30.07.2024 மற்றும் 31.07.2024 ஆகிய மூன்று நாட்கள் சென்னையில் நடைபெற்ற DPI தொடர் முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விரிவான அறிக்கை...

 

டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் 31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 29.07.2024, 30.07.2024 மற்றும் 31.07.2024 ஆகிய மூன்று நாட்கள் சென்னையில் நடைபெற்ற டி.பி.ஐ தொடர் முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து TETOJAC மாநில உயர்மட்டக்குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விரிவான அறிக்கை...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்)


04.08.2024


*மூன்று நாட்கள் பேரெழுச்சியுடன் நடந்த டி.பி.ஐ. முற்றுகைப் போராட்டம்!*


*பள்ளிக்கல்வித்துறைச் செயலருடன் சுமூகமாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள்!*


*டிட்டோஜாக்கின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு!*


தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் 31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 29.07.2024, 30.07.2024, 31.07.2024 ஆகிய மூன்று நாட்கள் சென்னையில் பள்ளிக்கல்வித்துறையின் தலைமை அலுவலகமான டி.பி.ஐ வளாகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவதென 14.07.2024 அன்று திருச்சியில் நடைபெற்ற டிட்டோஜாக் மாநில ஆலோசனைக் கூட்டத்தில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், டிட்டோஜாக்கில் இணைந்துள்ள 12 ஆசிரியர் சங்கங்களின் மாநில நிர்வாகிகள், டிடோஜாக்கின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், 12 இணைப்புச் சங்கங்களின் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர்.


இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மூன்று நாட்கள் முற்றுகைப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்காக 12 இணைப்புச் சங்கங்களின் நிர்வாகிகளும் கண்துஞ்சாது களப்பணியாற்றினர். மூன்று நாட்கள் டி.பி.ஐ முற்றுகைப் போராட்டம் என்ற கடுமையான களப்போராட்ட முடிவிற்கு டிட்டோஜாக் பேரமைப்பு ஏன் வந்தது என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எடுத்த எடுப்பிலேயே இப்படியொரு களப்போராட்டத்தை நடத்த டிட்டோஜாக் முடிவெடுக்கவில்லை என்பதை இந்த இடத்தில் நாம் சுட்டிக்காட்டியாக வேண்டும்.


30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் பேரமைப்பு வட்டார அளவில், மாவட்ட அளவில் பல போராட்டங்களை எழுச்சியுடன் நடத்தியது. கோரிக்கைகள் நிறைவேறாத நிலையில் 13.10.2023 அன்று சென்னையில் மாநில அளவிலான ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தத் தீர்மானித்தது. மாநிலம் முழுவதுமிருந்து பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்னை புறப்படத் தயாரான நிலையில், கோரிக்கைகள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த 12.10.2023 அன்று மாண்புமிகு.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்களை அழைத்தார். 


அமைச்சரது அழைப்பின் பேரில் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் போராட்டத் தேதிக்கு முதல் நாள் மாலை பேச்சுவார்த்தைக்குச் சென்றனர். இப்பேச்சுவார்த்தையில் மதிப்புமிகு.பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களும், மதிப்புமிகு.தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களும் பங்கேற்றார்கள். 1 மணி 45 நிமிடங்கள் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில் டிட்டோஜாக் முன்வைத்த 30 கோரிக்கைகள் தொடர்பாகவும் ஒவ்வொன்றாக விரிவாக விவாதிக்கப்பட்டது. பேச்சுவார்த்தையின் முடிவில் டிட்டோஜாக் முன்வைத்த 30 கோரிக்கைகளில் 12 கோரிக்கைகள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக உரிய ஆணைகள் வெளியிடப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.


இதனடிப்படையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் மீது பெரும் நம்பிக்கை கொண்டு டிட்டோஜாக் பேரமைப்பு 13.10.2024 அன்று சென்னையில் நடத்தவிருந்த மாநில அளவிலான ஆர்ப்பாட்டத்தை ஒரு நல்லெண்ண அடிப்படையில் பேச்சுவார்த்தை விளக்கக் கூட்டமாக நடத்த முடிவெடுத்தது. அதன்படி 13.10.2023 காலை 10 மணிக்கு டிட்டோஜாக் சார்பில் சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நடைபெற்ற 5000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தை விளக்கக் கூட்டத்தில் ஆசிரியர் இயக்க வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வாக மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை இயக்குநரும், மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநரும் அக்கூட்டத்தில் பங்கேற்று முதல் நாள் பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகள் தொடர்பாக பொதுமேடையிலேயே அறிவித்தனர். இதனால் மாநிலம் முழுவதும் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் மத்தியில் நியாயமான 30 கோரிக்கைகளில் முதற்கட்டமாக கோரிக்கைகளாவது நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.


ஆனால், இந்நிகழ்விற்குப் பின்பு இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் ஏற்றுக்கொண்ட 12 கோரிக்கைகள் தொடர்பாக எவ்வித ஆணைகளும் தொடக்கக்கல்வித்துறையால் பிறப்பிக்கப்படவில்லை. டிட்டோஜாக்கின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் இது தொடர்பாக பலமுறை முயன்றும் ஆணைகளைப் பெற இயலவில்லை.


இந்தச் சூழலில் தான் தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றும் 90 சதவீத ஆசிரியர்களின் முன்னுரிமையைப் பாதிக்கும் வகையிலும், பதவி உயர்வைப் பாதிக்கும் வகையில் ஊட்டுப் பதவிகளில் மாற்றம் செய்தும், குறிப்பாகத் தொடக்கக்கல்வித் துறையில் மிகப்பெரும்பான்மையாகப் பணியாற்றும் 80 சதவீதப் பெண்ணாசிரியர்களின் பதவி உயர்வைப் பறிக்கும் வகையிலும் அரசாணை: 243 நாள்: 21.12.2023 தமிழக அரசால் வெளியிடப்பட்டது. 12.10.2023 அன்று மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகள் தொடர்பாக ஆணைகள் வெளிவரும் என்று எதிர்பார்த்த தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு எதிர்பாராத விதமாக அரசாணை: 243 வெளியிடப்பட்டது தலையில் இடிதாக்கியதைப் போன்று இருந்தது. இதனால் மாநிலம் முழுவதும் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பும், அதிருப்தியும் ஏற்பட்டது.


இதனைத் தொடர்ந்து டிட்டோஜாக் பேரமைப்பு அரசாணை 243 ஐ ரத்து செய்தல் உள்ளிட்ட 31 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தி 19.02.2024 அன்று சென்னையில் மாபெரும் உண்ணவிரதப் போராட்டத்தை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக அரசாணை 243 தொடர்பாக டிட்டோஜாக் பேரமைப்பை அன்றைய பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அதன்படி 20.02.2024 அன்று சென்னையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பள்ளிக்கல்வித்துறை செயலாளரும், தொடக்கக்கல்வி இயக்குநரும் கலந்து கொண்டார்கள். 1 மணி 30 நிமிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்பு மீண்டும் ஒருமுறை டிட்டோஜாக் அமைப்பை அழைத்துப் பேசுவதாகவும் கூறினார். ஆனால், இறுதிவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கமலேயே அரசாணை 243ன் படி பொதுமாறுதல் கலந்தாய்வை நடத்த ஆணை பிறப்பித்தார்.


பொதுவாக ஒரு துறையில் வெளியிடப்படும் அரசாணை என்பது அந்தத் துறையின் வளர்ச்சிக்கும், அதில் பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்கும், அந்தத் துறையின் பயனாளிகளுக்கும் பயன் தருவதாக இருக்க வேண்டும். ஆனால், இங்கு அதற்கு நேர் மாறாக அரசாணை 243 வெளியிடப்பட்டது. தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றும் 5 சதவீத ஆசிரியர்களுக்குக் கூட பயன்தராத ஒரு அரசாணையை, 95 சதவீத ஆசிரியர்களுக்குக் கேடு விளைவிக்கும் அரசாணையை, மாணவர்களின் நலனுக்கு குந்தகம் ஏற்படுத்தும் அரசாணை 243 ஐ வெளியிட்டு விட்டு, இந்த அரசாணை ஆசிரியர்களுக்குப் பயன் தரக்கூடியது என்று தொடக்கக்கல்வித்துறைக்குச் சம்பந்தமில்லாத சில ஆசிரியர் சங்கங்கள் கூறுவதைச் சரி என்று ஏற்றுக் கொண்டதால் அது தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம் என டிட்டோஜாக் பேரமைப்பு கருதுகிறது.


எனவேதான் நடைபெற்ற முற்றுகைப் போராட்டம் என்பது தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் மீது திணிக்கப்பட்ட போராட்டம் என்று டிட்டோஜாக் பேரமைப்பு கூறுகிறது.


எனவேதான் மூன்று நாள் முற்றுகைப் போராட்டம் தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் உள்ளக் குமுறலை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் உணர்த்தும் வகையில் அமைந்திருந்தது. இதுவரை இல்லாத அளவிற்கு ஆசிரியர்கள் ஆவேசத்தின் வார்ப்படங்களாய், குறிப்பாகப் பெண்ணாசிரியர்கள் உணர்ச்சிப் பிழம்பாய் களத்தில் நின்று போராடினர்.


முற்றுகைப் போராட்டத்தை ஒடுக்க தமிழ்நாடு அரசு காவல்துறையை ஏவிவிட்டது. இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு டெஸ்மா, எஸ்மா காலத்தில் கூட இல்லாத அளவிற்கு ஆசிரியர்களை பணியாற்றும் பள்ளிகளிலேயே ஆசிரியர்கள் கற்பித்தல் பணி செய்து கொண்டிருந்தபோதே காவல்துறை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற நிகழ்வு என்பது வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக விழுந்துவிட்டது. சங்கப் பொறுப்பாளர்களை கொடுங்குற்றவாளிகளைப் போல நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்து காவல் நிலையங்களுக்கு கொண்டு சென்ற நிகழ்வு என்பது எந்த சட்டப்பிரிவின் கீழ் சரியானது என்பதை தமிழக அரசுதான் கூற வேண்டும். அதேபோன்று முற்றுகைப் போராட்டத்திற்கு வாகனங்களில் வந்த பெண்ணாசிரியர்களை கண்ட இடத்தில் நிறுத்தி மண்டபங்களில் இரவு முழுவதும் சிறை வைத்த நிகழ்வும் சட்டவிரோத நிகழ்வுகளாகும். அதேபோன்று கல்வித்துறை அலுவலர்கள் மூலம் ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்தால் "ஊதியத்தைப் பிடிப்போம்" என்றும் "கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் மிரட்டிய செயல் ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயலாகும். இத்தனை இடர்களையும் தாண்டி, தடைகளைத் தகர்த்து சென்னைக்கு வருகை தந்த ஆசிரியர்களை ரயில் நிலையங்களிலும், பேருந்து நிறுத்தங்களிலும், கண்ட இடங்களிலும் கைது செய்தது காவல்துறை. இத்தனை இடர்பாடுகளையும் தாண்டி டி.பி.ஐ முற்றுகைப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்றார்கள் என்றால் ஆசிரியர்களின் கோபத்தையும், நியாயத்தையும், போராட்ட வலிமையையும் தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும். இத்தனை அடக்குமுறைகளையும் தாண்டி முதல் நாள் முற்றுகைப் போராட்டத்தில் 5000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், இரண்டாம் நாள் முற்றுகைப் போராட்டத்தில் 4500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், மூன்றாம் நாள் முற்றுகைப் போராட்டத்தில் 5500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பங்கேற்றார்கள் என்பதுதான் போராட்டத்தின் வெற்றி, டிட்டோஜாக் பேரமைப்பின் வலிமை.


அதுமட்டுமல்ல டி.பி.ஐ. முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொள்ள இயலாதவர்கள் தற்செயல் விடுப்பெடுத்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்று போராட்டம் தொடங்குவதற்கு முதல் நாள் தான் டிட்டோஜாக் அறிவித்தது. அதனை ஏற்று மாநிலம் முழுவதும் மூன்று நாட்களில் கல்வித்துறை அலுவலர்களின் அச்சுறுத்தலையும் மீறி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தற்செயல் விடுப்பு எடுத்தார்கள் என்பது டிட்டோஜாக் பேரமைப்பின் 31 அம்சக் கோரிக்கைகளின் மீது தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு உள்ள ஆதரவு நிலையை வெளிப்படுத்துகிறது. பல மாவட்டங்களில் பெரும்பாலான ஒன்றியங்களில் மிகப் பெரும்பாலான ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்த நிலையில் அன்றையதினம் பள்ளிகளை நடத்த இயலாத நிலை தான் ஏற்பட்டது. எனவே, தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக டிட்டோஜாக் மட்டுமே உள்ளது என்பதை தமிழ்நாடு அரசு உணர வேண்டும்.


மூன்று நாள் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்ட பின்பு புதிதாகப் பொறுப்பேற்ற மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் அவர்கள் இரண்டு முறை டிட்டோஜாக் அமைப்பை அழைத்துப் பேசினார். 22.07.2024 அன்று முற்பகல் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் அவர்கள் புதிதாகப் பொறுப்பேற்ற நிலையிலும் அனைத்துக் கோரிக்கைகளையும் விரிவாகக் கேட்டறிந்து நமது கோரிக்கைகளின் நியாயத்தைப் புரிந்து கொண்டு சாதகமான முறையில் கோரிக்கைகளின் மீது நடவடிக்கை மேற்கொள்வதாகக் கூறியது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. இருப்பினும் கோரிக்கைகள் தொடர்பாக உத்திரவாதமான அறிவிப்புக்கள் இல்லாததால் கடந்த கால அனுபவங்களைக் கணக்கில் கொண்டு முற்றுகைப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என டிட்டோஜாக் அறிவித்தது.


அதன்பின்பு முதல் இரண்டு நாட்கள் முடிவடைந்த நிலையில் 30.07.2024


அன்று இரண்டாவது முறையாக டிட்டோஜாக் உயர்மட்டக்குழு உறுப்பினர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அதனடிப்படையில் 30.07.2024 அன்று பிற்பகல் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் அவர்களும், புதிதாகப் பொறுப்பேற்ற தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களும் பங்கேற்றனர். அரசாணை 243 தொடர்பாக விரிவாக டிட்டோஜாக் உயர்மட்டக்குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்திய செயலாளர் அவர்கள், டிட்டோஜாக் அமைப்பின் மற்ற கோரிக்கைகள் தொடர்பாகவும், குறிப்பாக 12.10.2023 அன்று டிட்டோஜாக் அமைப்புடன் மாண்புமிகு.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக ஆலோசனை நடத்தினார்.


பேச்சுவார்த்தையின் முடிவில் தான் புதிதாக பொறுப்பேற்றுள்ளதால் டிட்டோஜாக்கின் கோரிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து பொருத்தமான ஆணைகள் வெளியிட ஆகஸ்ட் 31 வரை கால அவகாசம் வேண்டும் எனவும், கோரிக்கைகள் தொடர்பாக தன்னை மீண்டும் வந்து சந்திக்குமாறும் தெரிவித்தார். இருப்பினும் கோரிக்கைகள் தொடர்பாக உத்தரவாதமான அறிவிப்பேதும் இல்லாத சூழலில் மூன்றாம் நாள் முற்றுகைப் போராட்டம் தொடரும் என மாநில டிட்டோஜாக் உயர்மட்டக்குழு அறிவித்தது.


மூன்றாம் நாள் முற்றுகைப் போராட்டம் பேரெழுச்சியுடன் நடைபெற்று முடிந்த நிலையில் 31.07.2024 அன்று இரவு 7 மணி முதல் 8 மணி வரை தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில அலுவலகத்தில் நடைபெற்ற டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு கூட்டத்தில் மூன்று நாள் முற்றுகைப் போராட்ட நிகழ்வுகள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. அடக்குமுறைகளை எதிர்கொண்டு நெஞ்சுறுதியோடு போராட்டக் களத்திற்கு வருகை தந்து களப்போராளிகளாகக் களத்திலே நின்று போராட்டத்தை வெற்றியடையச் செய்த ஆசிரியர்களுக்கும், போராட்டத்தை வெற்றியடையச் செய்வதற்காக இமைப்பொழுதும் சோராமல் களப்பணியாற்றிய டிட்டோஜாக் இணைப்புச் சங்கங்களின் மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகளுக்கும் மாநில டிட்டோஜாக் உயர்மட்டக்குழு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும், மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் அவர்களின் சிறப்பான அணுகுமுறை மற்றும் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள சூழல் ஆகியவற்றை விரிவாக விவாதித்த மாநில உயர்மட்டக்குழு எதிர்வரும் ஆகஸ்டு இரண்டாவது வாரத்தில் திருச்சியில் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் டிட்டோஜாக் இணைப்புச் சங்கங்களின் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்கும் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி டிட்டோஜாக்கின் அடுத்த கட்ட செயல்பாடுகளைத் தீர்மானிப்பதென முடிவு செய்துள்ளது. டிட்டோஜாக் பேரமைப்பைப் பொறுத்துவரை முன்வைத்துள்ள 31

கோரிக்கைகளும் நியாயமானவை. எனவே, 31 கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என டிட்டோஜாக் வலியுறுத்துகிறது.


 குறிப்பாக அரசாணை 243 முற்றிலுமாக ரத்து செய்வதையே டிட்டோஜாக் ஏற்றுக்கொள்ளும் என்பதையும் இங்கு வலியுறுத்திக் குறிப்பிட விரும்புகிறோம். மேலும், 12.10.2023 அன்று மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகளுக்கான ஆணைகள் உடனடியாக வெளியிடப்பட வேண்டும். இதுவே டிட்டோஜாக் பேரமைப்பின் உறுதியான நிலைப்பாடு. நம் கோரிக்கைகளுக்கு சரியான தீர்வு உரிய காலத்திற்குள் கிடைக்கவில்லை என்றால் டிட்டோஜாக் பேரமைப்பு இறுதி வரை உறுதியாகக் களத்தில் நின்று போராடும்.


*டிட்டோஜாக் மாநில அமைப்பு அதிகாரப்பூர்வ அறிக்கை.*

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Live Webinar Link for Head Masters and English Teachers

தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான Live Webinar Link  (THOOTHUKKUDI, VILLUPURAM, SALEM, DHARMAPURI, ERODE, TANJAVUR Dt only) ...