கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தீக்காயங்கள் இல்லாத பாதுகாப்பான தீபாவளிக் கொண்டாட்டம்

 தீக்காயங்கள் இல்லாத பாதுகாப்பான தீபாவளிக் கொண்டாட்டம்


தீக்காயங்கள் இல்லாத 

பாதுகாப்பான தீபாவளியை 

சொந்தங்கள் அனைவருக்கும் 

வேண்டியவனாக இந்தக் கட்டுரையைத் தொடங்குகிறேன்.


தீக்காயங்களைத் தவிர்க்கும் வழிகளை முதலில் கூறிவிடுகிறேன். 


- ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் வெடி / மத்தாப்பு கொளுத்தும் இடங்களில் இல்லாமல் இருப்பது நல்லது. 


முதல் காரணம் 

வெடி மத்தாப்பில் இருந்து வரும் புகை அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தலாம்


இரண்டாவது காரணம் 

ஊர்ந்து தவழ்ந்து கொண்டிருக்கும் குழந்தைகள் துருதுருவென ஓடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் 

தன்னை அறியாமல் பட்டாசின் மீது கால் வைத்தோ கை வைத்துத் தொட்டோ தீக்காயம் ஏற்படலாம். 


பட்டாசு மத்தாப்பு வைக்கும் நேரத்தில் பெரியவர்களின் கவனம் அவர்கள் மீது குறையும் வாய்ப்பு உள்ளது


- ஒரு நேரத்தில் வலப்பக்கம் புஸ்வானம் இடப்பக்கம் மற்றொரு புஸ்வானம் என்று இரு மத்தாப்புகளை வைப்பது ஆபத்து

ஒரு நேரத்தில் ஒரு மத்தாப்பு அல்லது வெடியை வைப்பதே சரி


- நீண்ட ஊதுபத்தி வைத்து வெடிகளை வைப்பதே சரி. 


- புதிதாகத் திருமணமாகி தலை தீபாவளி கொண்டாடும் மாப்பிளைகளே,  தங்களது வீரத்தைப் பரைசாற்றும்  விதமாக கையில் வெடி வைத்து வெடிக்க வேண்டாம்.

பாதுகாப்பாக வெடி வெடிக்கவும். 


- வெடிக்காத மத்தாப்பு அல்லது வெடிகள் இருப்பின் அதன் மீது மண் அல்லது நீரை ஊற்றி விடவும். 

- எப்போதும் வெடி மத்தாப்பு வைக்கும் போது அருகில் ஒரு வாளி தண்ணீர் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும் 

- எளிதில் தீப்பற்றும் 

பட்டு உடைகள்/ ஜரிகை உடைகள் / ஷால்கள் / லுங்கிகள் அணிந்து மத்தாப்பு வெடி வைக்க வேண்டாம்.


- குழந்தைகளை பெரியவர்கள் மேற்பார்வையின்றி வெடி மற்றும் மத்தாப்பு வைக்க ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். அவர்கள் வெடி மருந்துகளை வைத்து ஆல்ப்ரெட் நோபல் போல ஆராய்ச்சி செய்து பெரிய பிரளயத்தையே கிளப்பி விடுவார்கள் ஜாக்கிரதை. 


- வெடியை அடுத்தவர் மீதோ- நாய் உள்ளிட்ட மிருகங்கள் மீதோ வீசி வதை செய்வது தவறு. 

நாம் அவ்வாறு வெடியை வீசும் போது நாய் தறிகெட்டு ஓடி பைக் ஓட்டி வருபவரை கீழே தள்ளி விட வாய்ப்புண்டு. 


- வெடிக்காத வெடியை கையில் ஒருபோதும் எடுக்காதீர்கள். நீங்கள் கையில் எடுக்கும் பொன்னான தருணத்தில் படார் என்று வெடிக்கக் காத்திருக்கும்.


இத்தனை விஷயங்களுக்குப் பின்பும் 

வெடி மத்தாப்பினால் தீக்காயம் பட்டு விட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்? 


தீக்காயம் ஏற்பட்ட பகுதியை உடனே 

குழாய் நீரைத் திறந்து விட்டு அதில் காட்ட வேண்டும். சுமார் இருபது நிமிடங்கள் தொடர்ந்து தீக்காயம் பட்ட இடத்தை குளிர்விக்க வேண்டும். 


தீக்காயம் என்பது உஷ்ணத்தால் ஏற்படும் காயமாகும். 

அதை எவ்வளவு விரைவில் குளிர்விக்கிறோமோ... 

எவ்வளவு நீண்ட நேரம் குளிர்விக்கிறோமோ...

அவ்வளவு நல்லது


கம்பி மத்தாப்பு பத்த வைக்கும் போது சுமார் 2000 டிகிரி செல்சியஸை எட்டுகிறது. இத்தகைய வெப்பம் தோலில் படும் போது உடனே தீக்காயம் உண்டாகி விடும்

 

எனவே தீக்காயம் பட்ட இடத்தை 

உடனே குழாய் நீரைத் திறந்து விட்டு காட்டி இருபது நிமிடங்கள் குளிர்வியுங்கள். 


தீக்காயங்கள் மீது 

டூத் பேஸ்ட் 

மை 

க்ரீம்

வெண்ணெய் 

உள்ளிட்ட எதையும் பூசக் கூடாது. 

இது எதுவும் தீக்காயம் குணமாக உதவாது. இன்னும் பிரச்சனைகளையே வரவழைக்கும். 


தீக்காயத்தின் மீது துணியை வைத்து சுற்றுவது,  

பேண்டேஜ் வைற்று சுற்றுவது, 

கட்டு போடுவது இவையனைத்தும் தவறு. 


மருத்துவரை சந்திக்கும் முன் 

தீக்காயத்தின் மீது சுத்தமான ப்ளாஸ்டிக் பை வைத்து மூடிக்கொள்ளலாம். ப்ளாஸ்டிக் பை 

தீக்காயத்தில் ஒட்டாது. மற்ற அனைத்தும் புண்ணுடன் ஒட்டிக் கொண்டு அவற்றை எடுக்கும் போது தீக்காயம் இன்னும் மோசமாகும். 


தீக்காயம் மீது ஐஸ் கட்டி வைப்பது 

ஐஸ் தண்ணீரை ஊற்றுவது தவறு. 

ஐஸ் மூலம் கிடைக்கும் அதீத குளிர்ச்சி தீக்காயத்தை இன்னும் பிரச்சனையாக்கும். 


தீக்காயங்கள் மீது ஒட்டியிருக்கும் துணியை ஒருபோதும் எடுக்க முயற்சிக்க வேண்டாம். அது காயத்தின் ரணத்தை இன்னும் அதிகமாக்கி விடும்.

அந்தத் துணியுடன் சேர்த்தே நீரில் குளிர்விக்க வேண்டும். 


கண்களில் மத்தாப்புத் துகள் வெடியின் துகள் விழுந்து விட்டால் ஒரு போதும் கண்களைக் கசக்கக் கூடாது. 

மேற்கூறியது போலவே நீரை கண்களில் ஊற்றி குளிர்விக்க வேண்டும். 

ஐஸ் ஒருபோதும் உபயோகிக்கக் கூடாது. 

காயம்பட்ட கண்களின் மீது சுத்தமான துணியை வைத்துக் கொண்டு 

உடனே கண் நல மருத்துவரை சந்திக்க விரைந்திட வேண்டும். 


மேற்கூறிய

பாதுகாப்பான முறைகளைப் பின்பற்றி மத்தாப்பு வெடிகளை வெடித்து

தீக்காயங்களற்ற 

பாதுகாப்பான தீபாவளிப் பண்டிகையை அனைவரும் கொண்டாடிட வேண்டுகிறேன் 


நன்றி 


அனைவருக்கும் எனதினிய

தீபாவளி நல்வாழ்த்துகள் 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns