இந்த அம்மன் படம் வீட்டில் இருந்தால் திருஷ்டிகள் விலகும்; பணவரவு பெருகும்!
மீன் செல்வத்தின் அடையாளம். அதன்மீது வீற்றிருப்பது போன்ற அம்பாளின் திருக்கோலம் அபூர்வமானது; மிகவும் விசேஷமானது. இந்த அம்பிகையின் படம் வீட்டில் இருந்தாலே சகல சம்பத்துகளும் வந்து சேரும்; வீட்டில் செல்வம் வற்றாமல் நிறைந்திருக்கும்' என்பது நம்பிக்கை. இந்த அம்பிகையை `ஐஸ்வர்ய மகா கெளரி' எனப் போற்றுகின்றன ஞானநூல்கள்!
ஆம்! வீட்டில் எப்போதும் பணம் புழங்க வேண்டும்; கடன் பிரச்னைகள் விரைவில் தீரவேண்டும் என விரும்புகிறீர்களா? எனில், மகா சக்தியை ஐஸ்வர்ய மகாகெளரியாக தியானித்து வழிபடவேண்டும். இந்த கெளரிதேவியின் அருளால் வீட்டில் உள்ள திருஷ்டி தோஷம் முற்றிலும் விலகும். குலதெய்வங்களின் திருவருளும் பரிபூரணமாகக் கிடைக்கும்!
அகத்திய மாமுனிவர் ஐஸ்வர்ய மகா கெளரி வழிபாடு குறித்து அருளியுள்ளார். அதுபற்றி அறியும் முன் இந்த தேவியின் தோற்றம் குறித்து புராணங்கள் சொல்லும் தகவலை அறிவோம்.
முன்பு ஒருமுறை பெரும் ஊழி ஏற்பட்டது. ஊழிக்காலம் முடிந்ததும் மீண்டும் படைப்புகள் நிகழ்ந்தன. அப்போது அலைகடலின் நடுவில் சுவர்ணலிங்கம் தோன்றியது.
தேவர்களும், முனிவர்களும், அசுரர்களும், நாகர்களும் அதை வணங்கிப்போற்றினர். அந்த லிங்கத்திலிருந்து பொன் மேனியராக சிவபெருமான் வெளிப்பட்டார். அவரைத் தழுவிய பொற்கொடியாக சக்தியும் தோன்றினாள். அவளைத் தேவர்கள் `சுவர்ண வல்லி' எனப் போற்றினர்.
கடல் அரசனும் நாகலோக வாசிகளும், அந்த அம்பிகையைத் தங்கள் உலகுக்கு வந்து இருக்கும்படி வேண்டினர். அம்பிகையும் பாதாள லோகம் சென்று தங்கினாள். அவள் அருளால் பூமியில் தங்கம், இரும்பு, வெள்ளி முதலான உலோகங்கள் விளைந்தன.
இதற்குப் பிறகு, தேவர்கள் ஒருமுறை செல்வம் வேண்டி தவம் புரிந்தனர். அவர்களுக்கு அருளும் பொருட்டு, பாதாளத்திலிருந்து வெளிப்பட்டாள் அம்பிகை. பொன்மயமான பிரகாசத்துடன், கடல் பரப்பில் பெரிய மீன் மீது அமர்ந்த நிலையில் தோன்றினாள் சுவர்ண மகா கெளரி.
அந்த அன்னை, தம்முடைய திருக்கரங்களில் ஞானத்தைக் குறிக்கும் தாமரை, போகத்தைக் குறிக்கும் நீலோற்பல மலர், நோயற்ற வாழ்வுடன் ஆயுள் விருத்தியைத் தரும் அமிர்தக் கலசம், செல்வங்களின் வடிவமான பணப்பேழை ஆகியவற்றை ஏந்தியபடி காட்சி தந்தாள்!
அவளை வணங்கிப் போற்றிய அனைவருக்கும் அள்ளக் குறையாத செல்வம் தந்து அருள்பாலித் தாள். அன்னையின் அந்த அற்புத வடிவை பொன்னால் செய்து அனைவரும் வழிபடத் தொடங்கினர். அதுவே ஐஸ்வர்ய கெளரி வழிபாடாகத் தொடர்கிறது.
இந்த அம்பிகையின் படம் வீட்டில் இருந்தாலே சகல சம்பத்துகளும் வந்து சேரும். வீட்டில் செல்வம் வற்றாமல் நிறைந்திருக்கும்; ஏதேனும் ஒருவகையில் பணவரவு இருந்து கொண்டே இருக்கும்; கடன் பிரச்னைகள் ஏதேனும் இருப்பின், இவளை வழிபடத் தொடங்கியதும் மெள்ள மெள்ள கடன்சுமை குறையும். திருஷ்டி தோஷங்கள் முற்றிலும் விலகும்.
ஏதேனும் காரணங்களால் குலதெய்வ வழிபாடு விடுபட்டுப் போனவர்களுக்கு, அந்த வழிபாட்டைத் தொடர வழிவகை பிறக்கும். குலதெய்வத்தின் பூரண அருள் கிடைக்கும் என்கின்றன ஞானநூல்கள்.
இந்த தேவியை ஆவணி மாத வளர்பிறை திருதியை வழிபடுவது விசேஷம். அன்பர்கள் சிலர், மாசி மாதத்திலும் வழிபடுவார்கள். மட்டுமன்றி, அம்பாளுக்கு உகந்த ஞாயிற்றுக் கிழமைகளிலும், பெளர்ணமி தினங்களிலும்கூட இந்த அம்பிகையை வழிபட்டு வரம் பெறலாம்.
அன்று விளக்கேற்றிவைத்து, ஐஸ்வர்ய மஹா கெளரியின் படத்துக்குச் சந்தன - குங்குமத் திலகம் வைத்து, மலர்கள் சாற்றி அலங்கரிக்க வேண்டும். அவள் கடலில் தங்க மீனின் மீது தோன்றினாள் அல்லவா? அந்தக் கோலத்தில்... தாமரையும் நீலோத்பலமும், அமிர்தக் கலசமும், பணப் பேழையும் கொண்டவளாக மனதில் தியானித்து வணங்கலாம். சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடலாம்.
இந்த அம்மனை வழிபடுவதால் வீண் விரயங்களும் மனச் சலனங்களும் விலகும். பாடுபட்டு சம்பாதித்த பணம் கையைவிட்டுப் போகாமல் பயன் தந்து சுகமளிக்கும்; சொத்தும் பொருளாதாரமும் பன்மடங்கு பெருகும்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.