கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>இடைவெளி வருடம் - எவ்வாறு பயன்படுத்தலாம்?

தொடர்ச்சியாகப் படித்துக் கொண்டிருக்கையில், இடையில் ஒரு வருடம் இடைவெளி விழுதல் என்பது பல மாணவர்களின் வாழ்க்கையில் நடக்கும் விஷயம்தான். ஆனால், அதற்கான காரணம்தான் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது.
மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை, ஒரு மாணவரின் கல்வி இடைவெளி என்பது, கலாச்சார அறிவை வளர்த்துக் கொள்ளவும், பல வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யவும், உலகின் பல இடங்களில் பணிபுரியவும் பயன்படுகிறது. ஆனால் இந்தியாவிலோ காரணங்கள் வேறு.
ஒரு வருட இடைவெளி என்பது தவறில்லை. ஆனால் அந்த காலகட்டத்தில், சவால்களை மதிப்பிட்டு, மிகத் தெளிவான ஒரு முடிவை எடுக்க வேண்டும்.
இடைவெளி வருடம் என்பது 2 முக்கிய காரணங்களுக்கானது என்பதாக வகைப்படுத்தப்படுகிறது,
அதில் ஒன்று, வாழ்வில் என்னவாக ஆகப் போகிறோம் என்பதை தீர்மானம் செய்வது. இன்னொன்று, தங்களின் தொழிலைப் பற்றி ஒரு தெளிவான பார்வை மற்றும் அறிவைப் பெறுவது.
இளநிலை அல்லது முதுநிலை ஆகியவற்றில் எதைப் படிக்கும்போதும், இது நிகழலாம். சில நேரங்களில் பட்டப் படிப்பை முடித்தப்பிறகான காலகட்டத்தில், தங்களுக்கான எதிர்கால வேலையை தேர்வு செய்வதில் சிலருக்கு குழப்பம் நேரலாம் மற்றும் துறையை மாற்ற விரும்பலாம். சில மாணவர்கள் ஐஐடி-ஜேஇஇ தேர்வை மீண்டும் எழுதுவதையும்கூட காணலாம். ஏனெனில், அவர்கள் விரும்பிய வளாகம் அல்லது பாடப்பிரிவு கிடைக்காது இருக்கலாம்.
ஒரு வருட இடைவெளி என்பது நமது வாழ்க்கைப் பயணத்தை ஒன்றும் தடுத்துவிடாது என்பதை மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக, ஒவ்வொரு மாணவரும், சிறந்த கல்வி நிறுவனத்தில் படிக்க வேண்டும் என்றே ஆசைப்படுவர். அதன்மூலம், நல்ல வேலைவாய்ப்பை பெறுவது அவர்களின் லட்சியமாக இருக்கும். எனவே, இதுபோன்ற லட்சியங்களை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு, நுழைவுத்தேர்வுகளை எழுதுவது அல்லது பள்ளி மேல்நிலைப் படிப்பில், மதிப்பெண் குறைந்திருந்தால், அதை உயர்த்திக்கொள்ள Improvement எழுதுவது போன்ற பணிகளை செய்யலாம்.
தெளிவு
18 வயதையடைந்த, குறைந்தளவிலான மாணவர்களே, தாங்கள் எந்தப் பாடத்தை படிக்க விரும்புகிறோம் என்ற தமது விருப்பத்தை அறிந்துள்ளார்கள். அங்ஙனம் அறியாதவர்களுக்கு, இந்த இடைவெளி வருடமானது, சரியான விருப்பத்தை தேர்வுசெய்ய உதவும். அதேசமயம், இந்த இடைவெளி வருடத்தில் எடுக்கப்படும் முடிவானது தெளிவாகவும், உறுதியாகவும் இருத்தல் வேண்டும். இருந்தாலும் இருக்கலாம் என்பது போன்று இருக்கக்கூடாது.
LLB படிப்பு தொடர்பானவை
சட்ட மாணவர்களைப் பொறுத்தவரை, LLB படிப்பில் அட்மிஷன் பெற்றபிறகு, இடைவெளி வருடம் என்பது பொதுவான ஒன்றாக இருக்கிறது. டெல்லியைப் பொறுத்தளவில், 30% மாணவர்கள், பள்ளிப்படிப்பை முடித்தப்பிறகு, LLB தேர்வுக்கு தயாராக, 1 வருட இடைவெளி எடுக்கின்றனர். ஏனெனில், அறிவியல் பிரிவில் படித்த பல மாணவர்கள் சட்டப் படிப்பை மேற்கொள்ள நினைக்கின்றனர். ஆனால், சட்டப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் அவர்களுக்கு கடினமாக இருக்கின்றன. இதுபோன்ற சூழல்களில் தேர்ச்சி விகிதமும் அதிகமாக உள்ளது என்பதையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது.
LLB படிப்பில் சேர்க்கைபெறும் பல மாணவர்கள், UPSC, CS, Bank PO or SSB போன்ற தேர்வுகளுக்கும் தயாராகிறார்கள்.
சிக்கல்கள்
இடைவெளி வருடம் விடும் மாணவர்களுக்கு கல்விக்கடன் விஷயத்தில் சிக்கல் உள்ளது. இந்தவகை மாணவர்கள், கல்விக் கடனுக்காக வங்கிகளை நாடும்போது, வங்கிகள் தயங்குகின்றன. எனவே, வலுவான காரணங்கள் இல்லாமல், தேவையற்ற இடைவெளியை தவிர்க்கவும்.
இதைத்தவிர, கல்வி நிறுவனத்தில் இடம் பெறுவதிலும், பணிவாய்ப்புகளை பெறுவதிலும், இடைவெளி விடும் மாணவர்கள் பின்னேற்றத்தை சந்திக்கலாம் எனவும் சிலர் எச்சரிக்கிறார்கள். ஏனெனில் சில கல்வி நிறுவனங்கள், இடைவெளி விடும் மாணவர்களை சீந்துவதில்லையாம். எனவே, இடைவெளிக்குப் பதிலாக, நமக்கு விருப்பமான முதுநிலைப் படிப்பை மேற்கொள்ளலாம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சில நிறுவனங்கள் வளாகத் தேர்வுக்கு செல்கையில், ஒரு மாணவர் தனது இடைவெளி வருடத்தில் என்ன செய்தார் என்று கேட்கின்றன. ஏதேனும் குறுகியகால படிப்புகள் அல்லது வேலை செய்தாரா போன்ற சரியான காரணங்களை எதிர்பார்க்கின்றன. சரியான காரணங்கள் இல்லையெனில் அந்த மாணவர் நிராகரிக்கப்படுகிறார்.
பெற்றோர் மற்றும் உறவினர் ஆதரவு
நுழைவுத் தேர்வுகள் போன்றவற்றுக்கு தயாராகும் இடைவெளி காலத்தில் பெற்றோரின் ஆதரவு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. பெற்றோரின் ஆதரவு என்பது, வருட இடைவெளி விடும் ஒரு மாணவர் சாதிப்பதற்கான ஒரு மிகப்பெரிய உந்துதல். மேலும், சரியான வழிகாட்ட தெரிந்த பெற்றோராக இருந்தால், இன்னும் கூடுதல் பலம்.
பல பெற்றோர்கள் விபரம் புரியாமல், தங்களை சுற்றியிருப்பவர்கள் சொல்வதைக் கேட்டு பயப்படுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, 1 வருடம் வீணாகிறதே என்கிற கவலை. எனவே, வருட இடைவெளி எண்ணமிருக்கும் மாணவர்கள், தங்கள் பெற்றோரிடம் இதுகுறித்து தெளிவாகப் பேசி, அவர்களுக்கு புரிந்துணர்வை வழங்கி, அவர்களின் ஆதரவைப் பெற வேண்டும்.
பயிற்சி வகுப்புகள்
இடைவெளி வருடத்தில், நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராகும்போது, ஒரு மாணவர், தனக்கு கோச்சிங் வகுப்புகள் தேவை என்றுறு நினைத்தால் அதை வைத்துக்கொள்வதில் தவறில்லை. உதாரணமாக, பள்ளி மேல்நிலைப் படிப்பில் கணிதப்பாடம் படிக்காத ஒரு மாணவர், ஐஐஎம் -ல் எம்பிஏ சேர விரும்பினால், பகுப்பாய்வு மற்றும் திறனாய்வு தொடர்பாக அவருக்கு பயிற்சி தேவைப்படலாம். அதேசமயம், ஒரு நல்ல பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதும் முக்கியமானது. இல்லையெனில், காலமும், பணமும் வீண்.
கோச்சிங் வகுப்புகள் இல்லாமலேயே, அதனுடைய மெட்டீரியல்களை வைத்து தாமாகவே படித்துக்கொள்ளும் ஒரு முறையும் உண்டு. அதேசமயத்தில், சற்று கூடுதல் கவனமுடன் இருக்க வேண்டும். சிலருக்கு கோச்சிங் வகுப்புகள் செல்வது கூடுதல் நம்பிக்கையை கொடுக்கும்.
இறுதியாக...
ஒருவருக்கு ஒரு லட்சியம் இருந்தால், அதிலேயே கவனம் செலுத்தி சாதிக்க முயல வேண்டும். லட்சியத்தில் தெளிவும் இருக்க வேண்டும். இடைவெளி வருடமானது, தெளிவு பெறுவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பு.
அதேசமயம், ஒரு மாணவர் தான் இதுவாகத்தான் ஆவேன் என்ற உறுதியான திட்டம் எதுவுமின்றி, கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொள்வேன் என்ற மனநிலையில் உள்ளனர். இதுவும் ஒருவகையில் நன்றே. ஏனெனில், எந்த ஒரு செயலுக்கு அதற்கேற்ற பலன் நிச்சயம் உண்டு. எனவே, ஒரு வருடத்தை வீணாக்க வேண்டிய அவசியமில்லை என்றும் சில நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஒரு மாணவர், தனது திறமை பற்றியும், நடைமுறை சாத்தியக்கூறுகள் பற்றியும் தெளிவானப் புரிதலைக் கொண்டிருக்க வேண்டும். மாணவர்கள் தங்களுக்குள் தேவையற்ற கற்பனைகளை வைத்துக்கொள்ளக்கூடாது. வெறும் நுழைவுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது மட்டுமே வாழ்க்கையின் சாதனையல்ல. தெளிவான சிந்தனையும், லட்சியமும், சமூக சீர்திருத்த நோக்குமே வாழ்வின் சிறப்புகள் என்பதை உணர வேண்டும்.

>>>டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது - வாழ்த்து கடிதத்துடன் அழைப்பிதழ்

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள, 363 ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் தேவராஜனின், வாழ்த்து கடிதத்துடன், தனித்தனியே அழைப்பிதழும் அனுப்பப்பட்டுள்ளன.
விருது பெறும் ஆசிரியர்களுக்கு, அழைப்பிதழ் அனுப்பப்படும் முறை, 12 ஆண்டுகளுக்குப் பின், இந்த ஆண்டு தான் நடந்துள்ளது. பள்ளியின் வளர்ச்சியிலும், கல்வித் தர வளர்ச்சியிலும், தன்னை முழுமையாக ஈடுபடுத்தி, சிறப்பாக செயல்படும் ஆசிரியருக்கு, "டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது" வழங்கப்படுகிறது. சென்னை, சேத்துப்பட்டில் உள்ள, எம்.சி.சி., பள்ளியில், நடக்கும் விழாவில், 363 ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் சிவபதி, விருதுகளை வழங்குகிறார்.
இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் கூறியதாவது: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனரின் வாழ்த்து கடிதத்துடன் கூடிய அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. விருது பெறும் ஆசிரியருக்கு, 12 ஆண்டுகளுக்கு முன், இதுபோல் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. அதன்பின், இந்த ஆண்டு தான், அழைப்பிதழ் வழங்கப்படுகிறது.
ராதாகிருஷ்ணன் விருது பெறுவதை, ஒவ்வொரு ஆசிரியரும், தம் வாழ்நாள் சாதனையாக கருதுகின்றனர். எனவே, விருதுபெறும் நிகழ்ச்சியைக் காண, மனைவி, பிள்ளைகள், உடன் பிறந்தவர்கள் என, பலரையும் அழைத்து வருவர். விழா நடக்கும் அரங்கிற்குள், சம்பந்தப்பட்ட ஆசிரியரைத் தவிர, வேறு யாரையும் விடுவதில்லை. உடற்பயிற்சி ஆசிரியர்களை, அரங்க நுழைவாயிலில் நிறுத்தி, அதிக கெடுபிடிகளை செய்வதே, பள்ளிக்கல்வித் துறையின் வாடிக்கையாக இருக்கும்.
ஆனால், இந்த ஆண்டு, அதுபோல் எவ்வித அவமரியாதைக்குரிய செயலும் நடக்காது என, அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "விருது பெறுபவர், உடன் வருபவர் என, அனைவரையும் கணக்கிட்டு, 2,500 சாப்பாட்டிற்கு, "ஆர்டர்" வழங்கியுள்ளோம். ஆசிரியருக்கான போக்குவரத்து பயணப்படி உள்ளிட்டவற்றை, உடனடியாக வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளோம்" என்றார்.

>>>அறிவின் திருவே.... குருவே....: இன்று ஆசிரியர் தினம்

மறைந்த ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப். 5ம் தேதி, இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. மாணவரின் வெற்றி, தோல்வியில், பெற்றோர்களை விட ஆசிரியர்களுக்கே அதிக பங்கு உள்ளது. மாணவர்களை, சிறந்த மனிதராக மாற்றுவது ஆசிரியர் தான். வாழ்க்கை என்றால் என்ன, சமூகத்தில் மாணவரின் பங்கு ஆகியவற்றை ஆசிரியர்கள் தான் சொல்லித் தருகின்றனர். ஆசிரியரின் பழக்க வழக்கங்கள், அப்படியே மாணவரையும் தொற்றிக்கொள்ளும். எனவே, பொறுப்பை உணர்ந்து மாணவருக்கு ஆசிரியர், உண்மையான வழிகாட்டியாக இருக்க வேண்டும். தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்ட ஆசிரியரால் தான், சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும்.

எப்படி வந்தது: சிறந்த கல்வியாளராகவும், தத்துவ மேதையாகவும் திகழ்ந்த ராதாகிருஷ்ணன், 1962, மே 13ம் தேதி இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியாக பதவியேற்றார். அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டுமென அவரது மாணவர்கள் அனுமதி கேட்டனர். அதற்கு அவர், தனது பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடினால், பெருமை என கூறினார். ஆசிரியர் தொழிலில் இருந்த ஈடுபாடு காரணமாக, அவர் இவ்வாறு கூறினார். முன்னாள் ஜனாதிபதி கலாம், "சிறந்த ஆசிரியர் என்பவர், சிறப்பாக கற்பிப்பவர் மட்டுமல்ல, கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராக இருக்க வேண்டும்; அவரால் தான் மாணவரின் மனதில், நன்னெறிகளை வளர்க்க முடியும்' என்கிறார்.

ஏன் இந்த முரண்பாடு: தற்போது ஆசிரியர் - மாணவர் உறவில் பல பிரச்னைகள் எழுகின்றன. இந்த உறவு, பள்ளிகளைத் தாண்டியும் தொடர வேண்டும். ஆசிரியர், மாணவர் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால் விரும்பத்தகாத சம்பவங்களை தடுக்கலாம். பட்டதாரி ஆசிரியரை விட, ஆரம்பப்பள்ளி ஆசிரியரின் பணி இன்றியமையாதது. ஏனெனில், குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது எளிதான விஷயமல்ல.

உங்கள் கடமை: மற்ற பணிகளைப் போல, ஆசிரியர் பணியில் சாதித்து விட முடியாது. பொறுமை, அர்ப்பணிப்பு, கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தால்தான், தரமான கல்வியை அளிக்க முடியும். மாணவரைப் போல, ஆசிரியரும் அறிவை பெருக்கிக்கொள்ள தயங்கக் கூடாது. தற்போது ஆசிரியர் ஆவதற்கு, தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இது வரவேற்கத்தக்க விஷயம். கல்விக்கு தான் அரசு, அதிக நிதி ஒதுக்குகிறது. இந்த நிதி, உண்மையில் கல்வியை வளர்க்க பயன்பட வேண்டும்.

கவுரவம்: ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தன்று, கல்வித் துறையில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இவற்றை ஜனாதிபதியே வழங்கி கவுரவிக்கிறார். இது ஆசிரியர்களுக்கு கிடைக்கும் பெரிய கவுரவம்.


>>>சி.பி.எஸ்.இ. தகுதித்தேர்வு - தமிழக அரசு பள்ளிகளில் வேலை கிடையாது

"சி.பி.எஸ்.இ., நடத்திய, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், மத்திய அரசுப் பள்ளிகளில் மட்டுமே, பணியில் சேர முடியும். தமிழக அரசுப் பள்ளிகளில் நியமனம் செய்ய முடியாது" என, ஆசிரியர் தேர்வு வாரியம், திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.
"தேசிய அளவிலான ஆசிரியர் தகுதித் தேர்வை, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது. இத்தேர்வை ஏற்காத மாநிலங்கள், தனியாக ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்திக் கொள்ளலாம்" என, மத்திய அரசு, ஏற்கனவே தெரிவித்துள்ளது. அதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வை (டி.இ.டி.,) நடத்தும் பொறுப்பை, ஆசிரியர் தேர்வு வாரியத்திடம், தமிழக அரசு வழங்கியது.
கடந்த, ஜூலை 12ம் தேதி நடத்தப்பட்ட இத்தேர்வில், எதிர்பார்த்த அளவிற்கு தேர்ச்சி சதவீதம் அமையாததால், கடந்த ஆண்டு, ஜூன் மாதம், சி.பி.எஸ்.இ., நடத்திய, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக தேர்வரை, ஏன் பரிசீலனை செய்யக் கூடாது என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய அரசு பாடத் திட்டம், தரம் வாய்ந்ததாக உள்ளது என்ற காரணமும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்த தகவல்: சி.பி.எஸ்.இ., நடத்தும், டி.இ.டி., தேர்வு, மத்திய அரசு பாடத்திட்டபடி நடக்கிறது. எனவே, அத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர், கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட, மத்திய அரசுப் பள்ளிகளில் மட்டுமே, பணியில் சேர முடியும். அவர்களை, தமிழக அரசுப் பள்ளிகளில் சேர்க்க முடியாது.
தமிழக அரசு நடத்தும், டி.இ.டி., தேர்வு, மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடக்கிறது. எனவே, தமிழக அரசுப் பள்ளிகளில் பணியில் சேர வேண்டும் எனில், டி.ஆர்.பி., நடத்தும், டி.இ.டி., தேர்வைத்தான் எழுத வேண்டும். இவ்வாறு, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

>>>செப்டம்பர் 05 [September 05]....

  • இந்திய ஆசிரியர் தினம்
  • இந்தியாவின் 2வது ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த தினம்(1888)
  • இந்திய சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை பிறந்த தினம்(1872)
  • புனிதர் அன்னை தெரசா இறந்த தினம்(1997)
  • மோல்டா, பிரிட்டானியாவால் பிடிக்கப்பட்டது(1800)

>>>எரிசக்தி சேமிப்பு ஓவியப்போட்டி-2012 தொடர்பான தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் தகவல்கள் [Painting Competition on Energy Conservation-2012 - DEE Proceedings & Informations]

>>>பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களின் 01-09-2012 அன்றைய மதுரை களப்பணி ஆய்வு குறிப்புரை

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

From 01.01.2025 applications all types of leave through Kalanjiyam App only – DSE Proceedings

  01.01.2025 முதல் களஞ்சியம் செயலி மூலமாக மட்டுமே ஓய்வூதிய கருத்துருக்களும், அனைத்து வகை விடுப்புகளும் விண்ணப்பிக்க வேண்டும் - பள்ளிக்கல்வி ...