கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>டி.என்.பி.எஸ்.சி முறைகேடு... நீளும் பட்டியல்: தவிக்கும் போலீஸ்

டி.என்.பி.எஸ்.சி., முறைகேடு தொடர்பாக இதுவரை, 12 பேர் கைதாகியுள்ள நிலையில், மீண்டும் பட்டியல் நீளும் என்பதால், கைது படலம் முடிந்து, விசாரணை எப்போது நிறைவடையும் என போலீசார் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் முனிசிபல் கமிஷனர், சார் பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர் உள்ளிட்ட, பல்வேறு பதவிகளில் காலியாக இருந்த, 3,631 பணியிடங்களுக்கு, ஆகஸ்ட் 12ம் தேதி, டி.என்.பி.எஸ்.எஸ்.சி., குரூப்- 2 தேர்வு நடந்தது.
தமிழகம் முழுவதும், 6.40 லட்சம் பேர் தேர்வு எழுதினர். ஈரோடு, அரூர் மையங்களில், தேர்வுக்கு முன்னாலேயே வினாத்தாள் வெளியானது. இரு மாவட்ட கலெக்டர்களின் அறிக்கையை வைத்து, குரூப்- 2 தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஈரோடு டவுன் போலீசார் விசாரித்து, 10 பேரை கைது செய்தனர்.
முக்கிய குற்றவாளியாக தேடப்பட்ட, சென்னையைச் சேர்ந்த பாலன், வினாத்தாளை தனக்கு, திருவள்ளூரைச் சேர்ந்த தியாகராஜன் கொடுத்ததாக கூறினார். தியாகராஜன், வினாத்தாளை தனக்கு, ஆந்திராவை சேர்ந்த ஆனந்த ராவ் கொடுத்ததாகக் கூறினார். அவரைப் பிடிக்க, தனிப்படை போலீசார், 10 நாளாக, தேடுதல் வேட்டை நடத்தினர்.
விசாகப்பட்டினத்தில் கைது செய்யப்பட்ட ராவ், ஈரோடு கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சர்க்கரை நோயாளியான அவர், சோர்வாக உள்ளதால், அவரை காவலில் எடுத்து விசாரிக்க, நீதிமன்றத்தில் நாளை, போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர். ஆந்திராவில் இருந்து அழைத்து வரும்போது, போலீசாரிடம், வினாத்தாள் அச்சான அச்சக ஊழியர் ஒருவர் கொடுத்ததாக, ராவ் கூறியுள்ளார்.
இவ்வழக்கில் கைதாகும் ஒவ்வொருவரும், வேறொருவரை கை காண்பிப்பதால், எப்போது விசாரணை நிறைவடையும் என்று தவிக்கும் நிலை, போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. வெளிமாநில ஆட்கள் சம்பந்தப்பட்டுள்ளதால், ஒவ்வொருவரையும் கைது செய்ய, பல நாள் தேடுதல் வேட்டை நடத்த வேண்டியுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., வினாத்தாள், ஆந்திரா மற்றும் மேற்கு வங்கத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து சென்னை அலுவலகத்துக்கு வரும் வழியில், வினாத்தாள் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் அடைந்துள்ளோம். எந்தவித பாதுகாப்பும் இல்லாமல், வினாத்தாள் அனுப்பப்பட்டுள்ளது.
இதில், டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படும். இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. நீண்ட தூரப்பயணம், மொழிப்பிரச்னை என, பல்வேறு சங்கடங்களை பொருட்படுத்தாமல், தனிப்படையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

>>>கிரானைட் குவாரியில் பல்கலை., தேர்வுத்தாள் கிடைத்தது எப்படி?

பி.ஆர்.பி., கிரானைட் நிறுவனத்தின், கிடங்கில் இருந்த பெட்டிகளில் பதுக்கி வைத்திருந்த, மதுரை காமராஜ் பல்கலை தேர்வுத் தாள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மதுரை, இடையபட்டி பி.ஆர்.பி நிறுவனத்திற்கு சொந்தமான கிடங்கில், மதுரை வடக்கு துணை தாசில்தார், நைனல் ராஜ்குமார் தலைமையில், கற்கள் அளவிடும் பணி நேற்று முன்தினம் நடந்தது. அங்கு ரகசிய அறை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த அறையில் இருந்த, மூன்று பெட்டகங்களை உடைத்த போது, ஒன்றில், மதுரை காமராஜ் பல்கலையின், எழுதாத, 249 தேர்வுத் தாள்கள், வரிசை எண்களுடன் கட்டுக்கட்டாக இருந்தன. இது குறித்து, இடையபட்டி கிராம நிர்வாக அதிகாரி கீதா, ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார்; போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் (பொறுப்பு) பிச்சுமணி வெளியிட்ட அறிக்கை: மதுரை கருப்பாயூரணிக்கு அருகில், பல்கலைக்கு உட்பட்ட இணைவிப்பு கல்லூரிகளுக்குள் ஒன்றாக இருந்த, எஸ்.பி., அறிவியல் மற்றும் கலைக் கல்லூரிக்கு, மதுரை காமராஜ் பல்கலையால், நவம்பர் 2010 மற்றும் ஏப்ரல் 2011க்கான பருவத் தேர்வுகளுக்காக, வழங்கப்பட்ட விடைத்தாள்களில் உபயோகப்படுத்தியது போக மீதி விடைத்தாள்கள் தான், தற்போது கிடைத்துள்ளன.
எஸ்.பி., அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியை, பி.ஆர்.பி., நிறுவனம் டிசம்பர் 2011ல் கிரையம் பெற்றுள்ளதாக, இக்கல்லூரியின், முன்னாள் தலைவர் சக்ரவர்த்தியை தொடர்பு கொண்ட போது, போனில் தெரிவித்தார்.
இக்கல்லூரி தற்போது இயங்கவில்லை. கல்லூரி வசம் மீதமிருந்த விடைத்தாள்களை பல்கலை வசம், திரும்ப ஒப்படைக்காமல் இருந்துள்ளனர். அவையே, தற்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

>>>கல்வித்துறை அலுவலகம் முற்றுகை: தனியார் பள்ளிகள் முடிவு

தமிழகத்தில், தனியார் பள்ளிகளிடம் இருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை, சில கட்டுப்பாடுகளை தளர்த்தி அனுமதிக்கக் கோரி, அக்டோபர், 10ம் தேதி, சென்னையில் உள்ள, கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்துள்ளதாக, தனியார் பள்ளிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
திருவாரூரில், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் சங்கம் சார்பில், அரசுப் பொதுத் தேர்வில், நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கும், அதிகளவில் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற, அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலர் நந்தகுமார், விருதுகளை வழங்கினார். பின் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், 1,500 பள்ளிகள் அனுமதி பெறாமல் இயங்கி வருவதாக, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளியில், எந்த அசம்பாவிதங்கள் நடந்தாலும், அதற்கு பள்ளி நிர்வாகி தான் பொறுப்பு என, காஞ்சிபுரத்தில், அந்த மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். தனியார் பள்ளி நிர்வாகிகள் கார் கண்ணாடியை ஏற்றிவிட்டு, காரில் சென்றது ஒரு காலம்.
தற்போது எதற்கெடுத்தாலும், நிர்வாகிகள் தான் காரணம் என்பதால், மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எப்படி பள்ளியை நடத்துவது என்பதில் கவலையாக இருந்தாலும், ஒரே குறிக்கோளாக உள்ளனர். அரசு பள்ளிகளை விட, தனியார் பள்ளிகளில் தரமான கல்வி அளிப்பதால், அரசுப் பதவிகளில் உள்ளவர்கள், தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்.
தமிழகத்தில், தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை, அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனால், பள்ளி நிர்வாகிகள், மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். கல்விக் கட்டணத்தைக் குறைத்துள்ளதால், தனியார் பள்ளிகளை நடத்த முடியாமல், இருந்த பொருட்களை அடமானம் வைத்து, வறட்டு கவுரவத்திற்கு பள்ளிகளை நடத்தி வரும் நிர்வாகிகளுக்கு, அரசு மறுவாழ்வு அளிக்க வேண்டும்.
போதிய கட்டணத்தை நிர்ணயித்து அரசு முடிவு வெளியிடவும், சில கட்டுப்பாடுகளை தளர்த்தி தனியார் பள்ளிகளிடம் இருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை வழங்கக்கோரியும், சமச்சீர் கல்விக்கான பாடப் புத்தகங்களை தனியார் பதிப்பகங்கள் வெளியிடவும், தனியாரிடம் இருந்து வாங்கவும் அரசு அனுமதியளிக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்டோபர், 10ம் தேதி, சென்னையில் உள்ள மெட்ரிக் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்துள்ளோம்.

>>>மதிப்பெண் சான்றிதழ் இன்றி தத்தளிக்கும் மாணவர்கள்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி, மூன்று மாதங்களுக்கு மேலாகியும், மதிப்பெண் பட்டியல் கிடைக்காமல் சில மாணவர்கள் பரிதவிக்கின்றனர்.
மதுரை திருமங்கலம் அருகே, சாத்தங்குடி சத்திரிய நாடார்கள் உயர்நிலைப் பள்ளி, சமீபத்தில் தரம் உயர்த்தப்பட்டது. கடந்த மார்ச்சில் முதன்முறையாக, 42 மாணவர்கள், பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி, 39 பேர் தேர்ச்சி பெற்றனர். அனு, முத்துக்குமார், சுபாஷ்கரனுக்கு மட்டும், தேர்வு முடிவு வரவில்லை.
பள்ளியிலும், அதிகாரிகளிடமும் பெற்றோர் முறையிட்டனர். அதற்கு, ஜூன் 22ல், தேர்வு முடிவுடன், மதிப்பெண் பட்டியல் கிடைக்கும் என்றனர்; அன்றும், மதிப்பெண் பட்டியல் வரவில்லை. மீண்டும், சென்னை அரசு தேர்வுத் துறை இயக்குனர் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு, 39 பேருக்கு மட்டுமே போட்டோவுடன் கூடிய மதிப்பெண் பட்டியல் கிடைத்தது; மூன்று மாணவர்களுக்கு, அப்போதும் மதிப்பெண் பட்டியல் கிடைக்கவில்லை.
அதிகாரிகளிடம் வலியுறுத்தியதால், மூவரும் தேர்ச்சி என தெரிவித்து, மதிப்பெண்ணை குறித்துக் கொள்ளும்படி கூறினர். அதிகாரப்பூர்வ மதிப்பெண் சான்று தரவில்லை. அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், அம்மாணவர்கள், மதிப்பெண் பட்டியல் இல்லாமலேயே, திருமங்கலம் அரசு, தனியார் பள்ளிகளில் சேர்ந்தனர்.
மூன்று மாதம் கடந்த நிலையில், கல்வித் துறை அதிகாரிகள் மூலம் தேர்வுத் துறை இயக்குனரகத்திற்கு தெரிவிக்கப்பட்டும், தேர்வு முடிவும் அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை; மதிப்பெண் பட்டியலும் கிடைத்தபாடில்லை. எனவே, பிளஸ் 1 வகுப்பில் அனுமதித்த பள்ளிகள், மாணவர்களை வெளியே அனுப்பி விட்டனர்; அதிகாரிகள் சமாதானம் செய்து, மீண்டும், பள்ளியில் மாணவர்களை சேர்த்துள்ளனர்.
தேர்வுத் துறை மெத்தனத்தால் மாணவர்கள், திரிசங்கு நிலையில் தத்தளிக்கின்றனர்; பெற்றோருக்கும் நிம்மதி இல்லை.

>>>மேலாண்மைத் துறையில் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க...

சென்னையில் உள்ள Institute for Financial Management and Research (IFMR) நிறுவனத்தில் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பொது மேலாண்மை மற்றும் நிதித்துறை மேலாண்மை சான்றிதழ் படிப்புகளுக்கு IFMR நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. 9 மாதங்கள் நடக்க உள்ள இந்த சான்றிதழ் படிப்புகளுக்கு 180 மணி நேரம் வகுப்புகள் வார கடைசியில் நடைபெறும்.
விண்ணப்பங்களை www.ifmr.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 500 ரூபாய்க்கு Institute for Financial Management and Research என்ற பெயரில் வரைவோலையாக எடுத்து அனுப்பவும். விண்ணப்பங்களை அனுப்ப அக்டோபர் மாதம் 1ம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வகுப்புகள் அக்டோபர் மாதம் 13ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு Institute For Financial Management and Research, 24, Kothari Road, Nungambakkam, Chennai-600 034 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். அல்லது 044-28303400 என்ற அலுவலக எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

>>>பள்ளி, கல்லூரி வாகன ஓட்டிகளுக்கு கண் பரிசோதனை சான்று: தமிழக அரசு

"தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி வாகன டிரைவர்களுக்கு, அரசு மருத்துவமனையில், போக்குவரத்து அலுவலர்கள் முன்னிலையில், கண் பரிசோதனை செய்து, சான்று பெற வேண்டும்" என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரிகளில், மாணவ, மாணவியரை ஏற்றிச் செல்வதற்கு, பஸ், மினி பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களை பயன்படுத்துகின்றனர். மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. "பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு நிலை குறித்து, சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலர், போலீசார், வருவாய் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும், பள்ளி வாகனங்களுக்கு சான்றிதழ் வழங்குவதற்கு, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், ஒரு கமிட்டி அமைக்கப்படும்" என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது, "பள்ளி, கல்லூரி வாகன டிரைவர்கள், கண் மற்றும் உடல் நிலை குறித்து, அரசு மருத்துவமனையில், சான்று பெற வேண்டும். கண் பார்வை குறைபாடு, கண் பாதிப்பு உள்ளவர்களை, டிரைவர் பணியில் அமர்த்தக் கூடாது" என, புது நிபந்தனை விதித்துள்ளது.
பத்து ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்களை, பள்ளி வாகன டிரைவர்களாகவும், டிரைவர்கள் மற்றும் உதவியாளர்கள், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவன அடையாள அட்டை அணிந்தும், மிதமான வேகத்தில் வாகனத்தை இயக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, வட்டார போக்குவரத்து அலுவலர் ஒருவர் கூறியதாவது: பள்ளி, கல்லூரி வாகனங்களில், மாணவர்களை ஏற்றிச் செல்லும்போது, அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதில், மாணவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். பள்ளி வாகனங்களை ஒழுங்குபடுத்தும் வகையில், டிரைவர்களுக்கு கண் பரிசோதனை செய்து, சான்று வழங்க வேண்டும் என, அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், 11 போக்குவரத்து மண்டலங்கள், 66 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், 50 மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகங்கள் உள்ளன. இதில், மண்டல போக்குவரத்து இணை ஆணையர் தலைமையிலான, வட்டார போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோர், பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு நிலை குறித்து, அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். அவ்வாறு, ஆய்வு மேற்கொள்ளும்போது, விதிமுறைகளை மீறி இருந்தால், வழக்கு பதிவு செய்து, அபராதம் விதிக்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.

>>>சி.பி.எஸ்.இ பள்ளிகள் கட்டண விவகாரம் - தீர்ப்பு தள்ளிவைப்பு

கல்விக் கட்டணத்தை அரசு நிர்ணயிக்கக் கூடாது என உத்தரவிடக் கோரி, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல், சென்னை ஐகோர்ட் தள்ளி வைத்துள்ளது.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகள் நிர்வாக சங்கம் சார்பில் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "பள்ளிகளில் கல்விக் கட்டணம் வசூலிப்பதை ஒழுங்குபடுத்தும் சட்டமானது, மாநில பாடத் திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகளுக்கு தான் பொருந்தும். சி.பி.எஸ்.இ., பள்ளிகள், தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் வராது.
எனவே, கல்விக் கட்டண ஒழுங்குமுறை சட்டமானது, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு பொருந்தாது. அதனால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு கட்டணத்தை நிர்ணயிக்க, கல்விக் கட்டண நிர்ணயக் குழுவுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை.
ஆனால், அதிகாரவரம்பை மீறி, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சிலவற்றுக்கு கட்டணத்தை குழு நிர்ணயித்துள்ளது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கவோ, அதை அமல்படுத்தவோ தடை விதிக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
இதுபோன்று, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் தரப்பிலும் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தமிழக அரசின் சட்டம், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும் பொருந்தும் எனக் கூறி, பெற்றோர் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுக்களை, நீதிபதிகள் பானுமதி, சுப்பையா அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்" விசாரித்தது. பள்ளிகள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, என்.ஆர்.சந்திரன், சோமயாஜி, முத்துகுமாரசாமி, சங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சுந்தரேசன், பெற்றோர் சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன், அரசு தரப்பில் அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி ஆஜராகினர்.
அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "கல்விக் கட்டணத்தை ஒழுங்குபடுத்த, தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. இந்தச் சட்டப் பிரிவுகள் அனைத்துப் பள்ளிகளுக்கும் பொருந்தும். அந்தப் பள்ளிகள் மாநில பாடத் திட்டத்தை பின்பற்றினாலும் சரி, வேறு எந்த போர்டின் பாடத் திட்டத்தை பின்பற்றினாலும் சரி.
சி.பி.எஸ்.இ., பள்ளிகளாக இருந்தாலும், அதை துவங்க வேண்டும் என்றால், மாநில அரசின் அனுமதி பெறப்பட வேண்டும்" என கூறப்பட்டுள்ளது. இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இவ்வழக்கின் மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல், "டிவிஷன் பெஞ்ச்" தள்ளிவைத்தது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...