தமிழகத்தில், தனியார் பள்ளிகளிடம் இருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை, சில
கட்டுப்பாடுகளை தளர்த்தி அனுமதிக்கக் கோரி, அக்டோபர், 10ம் தேதி,
சென்னையில் உள்ள, கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்துள்ளதாக,
தனியார் பள்ளிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
திருவாரூரில், தமிழ்நாடு நர்சரி,
பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் சங்கம் சார்பில், அரசுப் பொதுத் தேர்வில், நூறு
சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கும், அதிகளவில் மதிப்பெண் பெற்ற
மாணவர்களுக்கும், விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற, அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலர்
நந்தகுமார், விருதுகளை வழங்கினார். பின் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில், 1,500 பள்ளிகள் அனுமதி பெறாமல் இயங்கி வருவதாக, கல்வித் துறை
அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளியில், எந்த அசம்பாவிதங்கள் நடந்தாலும், அதற்கு பள்ளி
நிர்வாகி தான் பொறுப்பு என, காஞ்சிபுரத்தில், அந்த மாவட்ட கலெக்டர்
அறிவித்துள்ளார். தனியார் பள்ளி நிர்வாகிகள் கார் கண்ணாடியை ஏற்றிவிட்டு,
காரில் சென்றது ஒரு காலம்.
தற்போது எதற்கெடுத்தாலும், நிர்வாகிகள் தான் காரணம் என்பதால், மிகுந்த
அச்சத்தில் உள்ளனர். எப்படி பள்ளியை நடத்துவது என்பதில் கவலையாக
இருந்தாலும், ஒரே குறிக்கோளாக உள்ளனர். அரசு பள்ளிகளை விட, தனியார்
பள்ளிகளில் தரமான கல்வி அளிப்பதால், அரசுப் பதவிகளில் உள்ளவர்கள், தங்கள்
பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்.
தமிழகத்தில், தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை, அரசு நிறுத்தி
வைத்துள்ளது. இதனால், பள்ளி நிர்வாகிகள், மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர்.
கல்விக் கட்டணத்தைக் குறைத்துள்ளதால், தனியார் பள்ளிகளை நடத்த முடியாமல்,
இருந்த பொருட்களை அடமானம் வைத்து, வறட்டு கவுரவத்திற்கு பள்ளிகளை நடத்தி
வரும் நிர்வாகிகளுக்கு, அரசு மறுவாழ்வு அளிக்க வேண்டும்.
போதிய கட்டணத்தை நிர்ணயித்து அரசு முடிவு வெளியிடவும், சில
கட்டுப்பாடுகளை தளர்த்தி தனியார் பள்ளிகளிடம் இருந்து பறிக்கப்பட்ட
உரிமைகளை வழங்கக்கோரியும், சமச்சீர் கல்விக்கான பாடப் புத்தகங்களை தனியார்
பதிப்பகங்கள் வெளியிடவும், தனியாரிடம் இருந்து வாங்கவும் அரசு அனுமதியளிக்க
வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்டோபர், 10ம் தேதி, சென்னையில் உள்ள
மெட்ரிக் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்துள்ளோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.