கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மத்திய அரசு ஊழியர்களுக்கு 7சதவீத அகவிலைப்படி உயர்வு

சம்பள கமிஷன் பரிந்துரைப்படி ஆண்டுதோறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அப்போதைய விலைவாசி உயர்வை பொறுத்து அதிகரித்து வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி இந்த நிதி ஆண்டுக்கான அகவிலைப்படி 7 சதமாக உயர்த்தப்பட்டது.
இது தொடர்பாக கடந்த வாரம் நடந்த அதிகார குழு கூட்டத்தில், மம்தா ஆதரவு விலகல் காரணமாக அமைச்சர்கள் குழுக்கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் பொருளாதார விவகாரத்திற்கான அமைச்சரவை குழு மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர்கள் குழு இன்று கூடியது. இந்த கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வு குறித்து முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

72 சதமாக உயரும் :
அமைச்சர் குழு முடிவின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. ஏற்கனவே கடந்த முறை 7 சதம் உயர்த்தப்பட்டு சம்பள விகிதப்படி அகவிலைப்படி 58 முதல் 65 சதமாக உயர்ந்தது. தற்போது மீண்டும் 72 சதமாக உயர்கிறது. இதன் மூலம் அரசுக்கு இந்த நிதி ஆண்டில் ரூ. 7 ஆயிரத்து 400 கோடி அரசுக்கு கூடுதல் செலவு ஆகும்.

>>>செப்டம்பர் 25 [September 25]....

  • மொசாம்பிக், பாதுகாப்பு படையினர் தினம்
  • தமிழ் நாடக எழுத்தாளர் உடுமலை நாராயணகவி பிறந்த தினம்(1899)
  • அல்ஜீரிய மக்கள் ஜனநாயகக் குடியரசு அமைக்கப்பட்டது(1962)
  • பாஸ்கோ நூனியெத் தே பால்போவா, பசிபிக் பெருங்கடலை முதன் முதலில் கண்ட ஐரோப்பியர் ஆவர்(1513)

>>>அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் வாபஸ்

சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு பாடப் பிரிவிற்கு, விரைவில் அங்கீகாரம் பெற்றுத் தரப்படும் என, பதிவாளர் உறுதியளித்ததை தொடர்ந்து, மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை திரும்பப் பெற்றனர்.
சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டு வரும், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்பிற்கு, அங்கீகாரம் கிடையாது. இதைக் கண்டித்து, மாணவர்கள் கடந்த, 17ம் தேதி முதல், தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.  ஆனால், பல்கலைக்கழக நிர்வாகம் கூறிய சமாதானத்தை ஏற்க மறுத்து, மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனால், பல்கலை நிர்வாகம் வரும், 7ம்தேதி வரை விடுமுறை அறிவித்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு,போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன், பல்கலைக்கழக துணைவேந்தர் ராமநாதன், பதிவாளர் மீனாட்சி சுந்தரம், எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், இன்ஜினியரிங், கலை மற்றும் அறிவியல் பிரிவுகளுக்கு, ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு பாடத்திற்கு, அரசு அங்கீகாரமான இணைத் தகுதியை, ஆறு மாதங்களுக்குள் பெற்றுத் தரப்படும் என, உறுதியளிக்கப்பட்டது.
மேலும், அரசு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு ஏற்றுக்கொள்ள பல்கலைக் கழகம் நடவடிக்கை எடுக்கும் என, பதிவாளர் மீனாட்சி சுந்தரம் கையெழுத்திட்டு போராட்டக் குழு மாணவர்களிடம் உறுதி மொழி வழங்கினார்.
அதையேற்று, மாணவர்கள் தொடர் உண்ணாவிரதத்தை, நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு முடித்துக் கொண்டு கலைந்து சென்றனர்.

>>>சுற்றுச்சூழல் விருதுக்கு பள்ளிகள் விண்ணப்பிக்கலாம்

மதுரை மாவட்டத்தில், சுற்றுச்சூழல் நண்பன் திட்டத்தில், பள்ளிகள் விபரம் பதிவு செய்யப்படுகின்றன. சிறந்த பள்ளிகளுக்கு விருது வழங்கப்படும்.
பசுமை திட்டம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் செயல்படும் பள்ளிகள், www.environment.tn.nic.in என்ற இணையதளத்தில், மாணவர்கள் எண்ணிக்கை, பள்ளி தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவற்றைப் பதிவு செய்ய வேண்டும். பின், ஒவ்வொரு பள்ளிக்கும், தனித்தனி மின்னஞ்சல் முகவரி அளிக்கப்படும்.
அதில், மன்ற நடவடிக்கை, செயல்பாடுகளை பள்ளிகள் வெளியிட வேண்டும். சிறப்பாக செயல்படும் பள்ளிக ளுக்கு, விருது வழங்கப்படும். இதற்கான பதிவுகளை, ஒரு வாரத்துக்குள் பள்ளிகள் மேற்கொள்ள வேண்டும் என, சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி தெரிவித்தார்.

>>>டி.என்.பி.எஸ்.சி வினாத்தாள் வ்ழக்கு: விசாரணை தீவிரம்

டி.என்.பி.எஸ்.சி. வினாத்தாள் வெளியான வழக்கு விசாரணை, சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. முறைகேடாக வெளியான வினாத்தாளை பயன்படுத்தி, தேர்வு எழுதியவர்களை கண்டுபிடித்து, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., பரிசீலித்து வருகிறது.
தமிழகத்தில், கடந்த மாதம், 12ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., குரூப்2 தேர்வை நடத்தியது. தமிழகம் முழுவதும் சுமார் 6.40 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வுக்கு முன், ஈரோடு மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில், வினாத்தாள் வெளியானதாக புகார் எழுந்தது; இதனால், தேர்வு ரத்து செய்யப்பட்டது.
தேர்வுக்கு முன், வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக, வழக்கு பதிவு செய்த போலீசார், இதுவரை, ஒரு பெண் உட்பட, 24 பேரை கைது செய்து, விசாரணை நடத்தினர். முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட, சென்னையைச் சேர்ந்த பாலனிடம் நடத்திய விசாரணையில், திருவள்ளூரைச் சேர்ந்த தியாகராஜனிடம் இருந்து வினாத்தாள் வாங்கியதாக தெரிவித்தார்.
தியாகராஜன் கொடுத்த தகவலை அடுத்து, விசாகப்பட்டினம் சென்ற போலீசார், ஆந்திராவைச் சேர்ந்த ஆனந்தராவை கைது செய்தனர். ஆனந்தராவை, போலீஸ் காவலில் எடுத்து விசாரித்ததில், விசாகப்பட்டினத்தில், ஷூ மார்ட் வைத்து நடத்தி வரும் கக்கூன் என்பவர் பெயரை கூறியதால், கக்கூனை கைது செய்ய, புவனேஸ்வர் செல்ல போலீசார் முடிவு எடுத்திருந்தனர்.
ஆனாலும், முக்கிய குற்றவாளியை, தனிப்படை போலீசார் கண்டறிய முடியாமல் திணறினர். இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை, நேற்று முன்தினம், சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ் கூறியதாவது: வினாத்தாள் வெளியான வழக்கு, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டு, விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. முன்கூட்டியே வெளியான வினாத்தாளை பயன்படுத்தி, எத்தனை பேர் தேர்வு எழுதினர் என்பது குறித்து, விரிவாக ஆய்வு செய்யப்படும்.
அப்போது தான், எத்தனை தேர்வர்கள் முறைகேட்டில் தொடர்புடையவர்கள் என்பது பற்றி தெரிய வரும். டி.என்.பி.எஸ்.சி., ஆய்வுக்குப் பின், முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
வரும், நவ., 4ம் தேதி நடக்கும் மறு தேர்வில், முறைகேட்டில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அனுமதி மறுப்பது, வேறு வகையான தண்டனைகள் எவை என்பது குறித்து முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

>>>என்.எஸ்.எஸ்.,மாணவர்களை வேலை வாங்கக் கூடாது

என்.எஸ்.எஸ்., முகாம்களால், நூறு நாள் வேலை திட்டத்துக்கு இடையூறு கூடாது, என ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கலை நிகழ்ச்சிகள், ஊர்வலங்கள் நடத்துவதற்கு மட்டுமே என்.எஸ்.எஸ். மாணவர்களை பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய அரசின் இளைஞர் விவகாரம், விளையாட்டு துறையின் கீழ் பள்ளி, கல்லூரிகளில் நாட்டு நலப்பணித் திட்டம் (என்.எஸ்.எஸ்) செயல்படுத்தப்படுகிறது.
கிராமத்திலோ, புறநகர் பகுதியிலோ இத்திட்ட முகாம்களில் தூய்மை படுத்துதல், மரம் வளர்ப்பு,மேடை நிகழ்ச்சிகள், சமூக பிரச்னைகள், கல்வி, விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் பல வேலைகளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு முகாமுக்கு 25 மாணவர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதற்காக, ஒரு பள்ளிக்கு 11,250 ரூபாய், நிதி வழங்கப்படுகிறது. காலாண்டு தேர்வு முடிந்த நிலையில், தற்போது முகாம்கள் நடத்தப்பட உள்ளன.இதில், மாணவர்களை கட்டாயப்படுத்தி, முள்வெட்டுதல், புல் வெட்டுதல், கிராமங்களை சுத்தம் செய்தல் போன்ற வேலைகளை செய்யக் கூடாது.
அதற்கென நூறு நாள் திட்ட பயனாளிகள் உள்ளனர். அவர்களின் வேலையை கெடுக்கும் வகையில், கிராம வேலைகளில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது. பெரும்பாலும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கலை நிகழ்ச்சிகள், ஊர்வலங்கள் நடத்த வேண்டும், என உத்தரவிடப்பட்டுள்ளது.
என்.எஸ்.எஸ்., ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும், நடத்தப்படும் முகாமுக்குரிய ரூபாய், அந்த கல்வியாண்டு ஏப்ரல் மாதத்துக்குள் வந்து விடும். ஆனால், கடந்த ஆண்டு செலவழித்த நிதி இதுவரை வரவில்லை. கேட்டால், முறையான பதிலும், இல்லை. வேறு வழியின்றி கையில் உள்ள பணத்தை போட்டு, இந்த ஆண்டு முகாம் நடத்தும் நிலை உள்ளது, என்றார்.

>>>செப்டம்பர் 24 [September 24]....

  • கம்போடியா அரசியலமைப்பு தினம்
  • முகமது நபி, மெக்காவில் இருந்து மதினாவிற்கு இடம்பெயர்ந்தார்(622)
  • அமெரிக்க சுப்ரீம்கோர்ட் நிறுவப்பட்டது(1789)
  • இலங்கை வங்கி அமைக்கப்பட்டது(1840)
  • ஹோண்டா நிறுவனம் அமைக்கப்பட்டது(1948)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...