கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பள்ளி பஸ் உதவியாளருக்கும் "லைசென்ஸ்': அறிமுகமாகிறது புதிய நடைமுறை

பள்ளி மாணவ - மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், டிரைவர்கள் மட்டுமின்றி, பள்ளி பஸ்சின் உதவியாளர்களுக்கும், "லைசென்ஸ்' கட்டாயம் என்ற விதிமுறையை அமல்படுத்த, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.
சென்னையைச் சேர்ந்த பள்ளி மாணவி ஸ்ருதி, பள்ளி பஸ்சில் இருந்த ஓட்டையில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தாள். இதையடுத்து, பள்ளி பஸ்களின் பாதுகாப்பு, உறுதித்தன்மை குறித்து, இரு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு, தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளி பஸ்களும், தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. பள்ளி வாகனங்களின் டிரைவர்களை பரிசோதிக்கும் வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகள், உதவியாளர்களை கண்டுகொள்வதில்லை. உதவியாளர்களுக்கும், போக்குவரத்து விதிமுறைகளை எடுத்துக் கூற வேண்டும் என, பல தரப்பில் கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து, பள்ளி வாகன உதவியாளர்களும், "லைசென்ஸ்' பெற வேண்டும் என்ற விதிமுறையை அமல்படுத்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

திருப்பூர் வடக்கு ஆர்.டி.ஓ., வெங்கிடரமணி கூறியதாவது: பள்ளி வாகனங்களில் செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பள்ளி வாகன நடத்துனர், உதவியாளர்களுக்கும், "லைசென்ஸ்' வழங்குவது குறித்து, மோட்டார் வாகன விதிகளின்படி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை, அரசுக்கு வைக்கப்பட்டு, உயரதிகாரிகளின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அடுத்த மாத துவக்கத்தில் இருந்து, இதை நடைமுறைப்படுத்த, தமிழக அரசு அறிவிப்பு வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. நடத்துனர் அல்லது உதவியாளரின் வயது தகுதியாக, 18 முதல், 50 நிர்ணயிக்கப்படும். "லைசென்ஸ்' பெற விரும்புவோர், முதலுதவி குறித்து முழு பயிற்சி பெற்று, அரசு அங்கீகரித்த நிறுவனங்களிடம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் மட்டுமே உதவியாளர், "லைசென்ஸ்' பெற தகுதி உடையவராக இருப்பர். இவ்வாறு அவர் கூறினார்.

>>>சிறப்பு மென்பொருள் பொருத்தாத மடிக்கணினி: மன வருத்தத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள்

சிறப்பு மென்பொருள் பொருத்தப்படாத, மடிக் கணினிகள் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டதால், அவற்றை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நுங்கம்பாக்கத்தில் உள்ள, சிறுமலர் காது கேளாதோர் மற்றும் பார்வையற்றோருக்கான பள்ளியில் மடிக் கணினி வழங்கும் விழா, நேற்று நடந்தது. இதில், 24 காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கும், 16 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும், அமைச்சர் வளர்மதி, மடிக் கணினிகளை வழங்கினார். இந்த மடிக் கணினிகளில், மாற்றுத் திறனாளி மாணவர்கள் பயன்படுத்துவதற்கு வசதியான, ஜாஸ், என்.வி.டி.ஏ., ஆகிய சிறப்பு மென்பொருள்கள் பொருத்தப்படவில்லை. இதனால், மடிக் கணினி பெற்ற மாணவர்கள், அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சிறப்பு மென்பொருள், மடிக் கணினியில் பொருத்தப்பட்டு இருந்தால், ஒவ்வொரு எழுத்தையும், அவர்கள் தட்டச்சு செய்யும் போது, அந்த மென்பொருள் குரல் எழுப்பும். இந்த ஒலி மூலம், மடிக் கணினியில் தட்டச்சு செய்தல், இயக்குதல் உள்ளிட்ட செயல்களை, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் எளிதாக செய்ய முடியும்; மடிக் கணினியை விரைவாக இயக்க முடியும். இது குறித்து, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, உயரதிகாரிகளிடம் கேட்ட போது, "மென்பொருளை வடிமைக்கும் வேலைகள், விரைவாக நடந்து கொண்டிருக்கின்றன. கூடிய விரைவில் பணிகள் முடிந்தவுடன், மாணவர்களிடம் ஒப்படைப்போம்' என்றனர்.

>>>ஊழியர் பற்றாக்குறையால் சான்றிதழ் சரிபார்ப்பு பணி பாதிப்பு: தேர்வு துறை இயக்குனரக மெத்தனம் தீருமா?

தேர்வுத்துறை இயக்குனரகத்தில், பணியாளர் பற்றாக்குறை காரணமாக, சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணிகள் தேக்கமடைந்துள்ளன. வரும் ஆண்டுகளில், "ஆன்-லைன்' மூலம் பணிகள் நடக்கும்போது, இப்பணி சீராகும் என்கின்றனர். அதுவரை, இப்பிரச்னையை கையாள வழி என்ன என்ற கேள்வி தொடர்கிறது.

பள்ளிக்கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், பல்வேறு துறைகளில், தேர்வுத்துறை மிகவும் முக்கியமானது. 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் உட்பட, ஆண்டுக்கு, 40 தேர்வுகளை நடத்தி, சான்றிதழ்களை தரும் பெரும் பணியை, இத்துறை செய்து வருகிறது. இத்துறையில் உள்ள பிரச்னைகளை, அமைச்சரோ, உயர் அதிகாரிகளோ எவரும் கண்டுகொள்ளாததால், நாளுக்கு நாள், ஊழியர்கள் மத்தியில் புகைச்சல் அதிகரித்து வருகிறது.

காலி பணியிடங்கள்: தற்போதைய நிலையில், இயக்குனரகத்தில், 250 பேர் பணியாற்றி வருகின்றனர். இன்னும், 250 பணியிடங்கள் வரை காலியாக இருப்பதாக, ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: பத்து ஆண்டுகளுக்கு முன், பள்ளி பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை, ஐந்து லட்சத்திற்குள் இருந்தது. இப்போது, 10ம் வகுப்பு பொதுத்தேர்வை, 10.5 லட்சம் பேரும், பிளஸ் 2 தேர்வை, 8.5 லட்சம் பேரும் எழுதுகின்றனர். ஆனால், இப்போதும் பணியாளர் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை. மாறாக, காலிப் பணியிடங்கள், ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தேங்கும் சான்றிதழ்கள்: கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவ, மாணவியரின் பள்ளிச் சான்றிதழ்கள், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் சேரும் மாணவ, மாணவியரின் பள்ளிச் சான்றிதழ்கள், அரசுப் பணிகளில் சேர்வோரின் பள்ளிச் சான்றிதழ்கள் ஆகியவற்றின் உண்மைத்தன்மையை சரிபார்த்து, அனுமதி வழங்கும் பணி, தேர்வுத்துறையிடம் உள்ளது. பல்வேறு அரசுத் துறைகளில் இருந்தும், பல்கலைகளில் இருந்தும், சான்றிதழ்கள் பண்டல் பண்டலாக வருகின்றன. ஆனால், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த சான்றிதழ்கள் சரிபார்க்கப்படாமல் அப்படியே, முடங்கிக்கிடப்பதாகக் கூறப்படுகிறது.

காத்தாடும் பிரிவுகள்: இயக்குனரகத்தில், 54 பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும், காலிப் பணியிடங்கள் உள்ளன. இதை நிரப்புவதற்கோ, அதிகரித்துள்ள தற்போதைய பணிகளுக்கு ஏற்ப, கூடுதல் பணியிடங்களை ஏற்படுத்தவோ, அதிகாரத்தில் உள்ளவர்கள் அக்கறை காட்டுவதில்லை என, ஊழியர்கள் வருத்தப்படுகின்றனர்.

இயக்குனர் பதில்: பணியாளர்கள் பற்றாக்குறை குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி கூறியதாவது: காலிப் பணியிடங்களை நிரப்ப, நடவடிக்கை எடுத்து வருகிறோம். குறிப்பாக, டி.என்.பி.எஸ்.சி., மூலம், இளநிலை உதவியாளர்களை நிரப்ப கேட்டுள்ளோம். தேர்வுத்துறையின் பல்வேறு பணிகளை, "ஆன்-லைன்' மூலம் செய்ய ஆரம்பித்திருக்கிறோம். இதனால், வரும் ஆண்டுகளில், ஊழியர்களின் பணிப்பளு படிப்படியாக குறையும். சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை, அந்தந்த கல்வி நிறுவனங்கள், தேர்வுத்துறையின் இணையதளத்திலேயே பார்ப்பதற்கு ஏற்ப, நடவடிக்கை எடுக்க உள்ளோம். தினக்கூலி ஊழியர்களுக்கு, விரைவில் சம்பள நிலுவையை வழங்க, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு இயக்குனர் கூறினார்.

நான்கு மாத சம்பளம் பாக்கி: ஊழியர் பற்றாக்குறையை சரிகட்ட, தினக்கூலி அடிப்படையில், ஓய்வுபெற்ற ஊழியர், 40 பேரை, இயக்குனரகம் நியமித்தது. இவர்களுக்கு, தினச்சம்பளம் வெறும், 200 ரூபாய். இவர்களுக்கு, கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இதனால், அவர்களும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

>>>பத்தாம் வகுப்பு தனித்தேர்வு: அக்டோபர் 15ல் துவங்குகிறது

அடுத்த மாதம் நடக்கும், 10ம் வகுப்பு தனித்தேர்வு அட்டவணையை, தேர்வுத்துறை நேற்று வெளியிட்டது. பத்தாம் வகுப்பு பழைய மற்றும் புதிய பாடத் திட்டத்தின் அடிப்படையிலான தனித்தேர்வு, அக்டோபர், 15ம் தேதி துவங்கி, 26ம் தேதி வரை நடக்கிறது. ஓ.எஸ்.எல்.சி., பழைய பாடத்திட்ட தேர்வுகளும், மேற்கண்ட தேதிகளில் துவங்கி, முடிகின்றன. மெட்ரிக் தேர்வுகள், அக்டோபர், 15ல் துவங்கி, 29ம் தேதி வரையும், ஆங்கிலோ இந்தியத் தேர்வுகள், 15ல் துவங்கி, 26ம் தேதி வரையும் நடக்கின்றன.

அதிக தேர்வர் பங்கேற்கும், 10ம் வகுப்பு தேர்வு அட்டவணை:


15.10.12 மொழி முதல் தாள்

16.10.12 மொழி இரண்டாம் தாள்

18.10.12 ஆங்கிலம் முதல் தாள்

19.10.12 ஆங்கிலம் இரண்டாம் தாள்

22.10.12 கணிதம்

25.10.12 அறிவியல்

26.10.12 சமூக அறிவியல்

>>>பாடப்புத்தகத்தில் "பென்னிக்குக்': பள்ளிக்கல்வித்துறை பரிசீலனை

பள்ளி பாடப்புத்தகத்தில் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் "பென்னிக்குக்' வாழ்க்கை வரலாற்றை சேர்ப்பது தொடர்பாக பள்ளி கல்வித்துறை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையை, ஆங்கிலேய பொறியாளர் பென்னிக்குக் கட்டினார். தொழில்நுட்பம் வளராத காலகட்டத்தில், எடுத்த காரியத்தை நிறைவேற்றுவதற்காக தனது சொத்துக்களை விற்று, அணையை கட்டியவர். அவரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என, அரசிற்கு கோரிக்கை வைத்தனர். இதன்படி, பென்னிக்குக் வரலாற்றை, பாடப்புத்தகங்களில் சேர்ப்பது தொடர்பாக, அரசு, தீவிரமாக பரிசீலித்து வருகிறது. வரும் கல்வியாண்டில் பென்னிக்குக் வாழ்க்கை வரலாறு, பள்ளி பாடப்புத்தக்கத்தில் இடம் பெற உள்ளது.

>>>விளையாட்டு திறனை ஊக்குவிக்க "டிரக்கிங்'

மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்க மலைகளில் "டிரக்கிங்' பயிற்சியளிக்க விளையாட்டுத்துறை முடிவுசெய்துள்ளது. தமிழகத்தில் விளையாட்டு துறை சார்ந்த பள்ளிகள், விடுதிகள் உள்ளன. இங்கு ஏழாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவர்கள் தங்கி இலவசமாக படித்துவருகின்றனர். நடப்பு கல்வியாண்டில், ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களின் உடல், மனத்திறன் குறித்த ஆய்வு செய்ய விளையாட்டு துறை முடிவு செய்துள்ளது. இதன்படி மாணவர்களுக்கு ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு ஆகிய மலைவாசஸ்தலங்களில் மலையேற்ற பயிற்சியளிக்கப்படவுள்ளது. இதன் மூலம் விளையாட்டு வீரர்களின் மனநிலையை அறிந்து, அதற்கேற்றபடி பயிற்சியளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, விளையாட்டு விடுதி மாணவர்களை குழுக்களாக அழைத்து சென்று "டிரக்கிங்' பயிற்சி தர விளையாட்டு துறை ஏற்பாடுகளை செய்துவருகிறது.

>>>ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விண்ணப்பம் வினியோகம்

மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (டி.இ.டி.,) விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகின்றன. அக்.,14ல் டி.இ.டி., மறுதேர்வு நடக்கிறது.
இதற்கு விண்ணப்பித்திருந்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. ஆசிரியர் பட்டய பயிற்சி மற்றும் பி.எட்., முடித்து விண்ணப்பிக்காமல் அல்லது ஏற்கனவே விண்ணப்பித்து, நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம். சி.இ.ஓ., அலுவலகத்தில் அக்., 28 வரை விண்ணப்பம் வினியோகிக்கப்படும். ஏற்கனவே விண்ணப்பிக்க தவறியவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்,

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...