கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>காமராஜ் பல்கலை பி.ஏ. தேர்வு முடிவு வெளியீடு

மதுரை காமராஜ் பல்கலை பி.ஏ., ஆங்கிலம் பட்டப்படிப்பு (அல் பருவம்) ஏப்ரல் 2012ம் ஆண்டு தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. www.mkudde.org என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், மதிப்பெண் சான்று வரும் வரை காத்திருக்காமல், அக்டோபர் 10ம் தேதிக்குள், விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். விவரங்களுக்கு இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, கூடுதல் தேர்வாணையர் (பொறுப்பு) சாரதாம்பாள் தெரிவித்துள்ளார்.

>>>குரூப்-2 வினாத்தாள் விவகாரம்: சி.பி.சி.ஐ.டி. விசாரணை துவக்கம்

குரூப்-2 வினாத்தாள் அவுட் ஆன விவகாரத்தில், சி.பி.சி.ஐ.டி., விசாரணை நேற்று துவங்கியது. சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளிகளை காவலில் எடுத்து, மீண்டும் விசாரிக்க, தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரத்தை, ஈரோடு மற்றும் தர்மபுரி போலீசார், விசாரணை நடத்தினர். வழக்கில் தொடர்புடைய, 24 பேரை கைது செய்து விசாரித்ததில், விசாகப்பட்டினத்தில், ஆனந்தராவ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், வடமாநிலங்களைச் சேர்ந்த பலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதனால், இவ்வழக்கை, சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்றி, டி.ஜி.பி., உத்தரவிட்டார். கோவை சி.பி.சி.ஐ.டி., - டி.எஸ்.பி., ராஜராஜன் தலைமையில், ஐந்து இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு, தர்மபுரி மாவட்டத்தில் பதிவான வழக்கு தொடர்பான ஆவணங்களை, சி.பி.சி.ஐ.டி., போலீசார், நேற்று பெற்றுள்ளனர். அந்த ஆவணங்களில் உள்ள, குற்றவாளிகளின் வாக்குமூலத்தை, ஆய்வு செய்து வருகின்றனர்.
சில குற்றவாளிகளின் வாக்குமூலம், முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. எனவே, கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டவர்களை, மீண்டும் காவலில் எடுத்து விசாரித்து, புதிதாக வாக்குமூலம் பெறும் முடிவில், தனிப்படை போலீசார் உள்ளனர்.

>>>திறனறிவுத் தேர்வில் பழைய பாடத்திட்டத்தில் கேள்விகள்

தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு, நேற்று முன்தினம் நடந்த திறனறிவு தேர்வில், பழைய பாடத்திட்டத்தில் கேள்விகள் கேட்கப்பட்டன. இதன் காரணமாக தேர்வை எழுதிய மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
எட்டாம் வகுப்பு முடித்து 9ம் வகுப்புக்கு செல்லும் கிராம மாணவர்களுக்கு, 8ம் வகுப்பில் படித்த பாடங்கள் அடிப்படையில் பள்ளி கல்வித் துறை சார்பில் ஆண்டுதோறும் திறனறிவு தேர்வு நடத்தப்படும்.
கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் தலா 25 கேள்விகள் வீதம் 75 கேள்விகளும், பொது அறிவு பகுதியில் 25 கேள்விகளும் இடம் பெறும். இதில், தேர்ச்சி பெற்று, மாவட்டத்தில் முதல் 100 (50 மாணவர்கள், 50 மாணவிகள்) இடங்களை பெறும் மாணவர்களுக்கு பிளஸ் 2 வரை ஆண்டுதோறும் ரூ.ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
இந்தாண்டுக்கான தேர்வு ஞாயிறு (செப்.23) நடந்தது. மாவட்டத்தில் தலா 600 மாணவர்கள் வீதம் பங்கேற்றனர். தேர்வில், அறிவியல், சமூக அறிவியல், கணிதம் பாடங்களில் இடம் பெற்ற கேள்விகள், சமச்சீர் கல்வி பாடத்திட்ட அடிப்படையில் இல்லாமல், அதற்கு முந்தைய பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டன. இதனால், மாணவர்கள் அதிர்ச்சிடைந்தனர்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக விருதுநகர் மாவட்ட சட்டச் செயலாளர் பழனிக்குமார் கூறியதாவது: தேர்வில் இடம்பெற்ற கேள்விகள் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்திலிருந்து கேட்கப்படவில்லை. கணிதத்தில் பழைய பாடத்திட்டத்தில் இருந்த 2 அடிமானம், 5 அடிமானம் பகுதிகள், சமச்சீர் பாடத்திட்டத்தில் இல்லை. அதிலிருந்து கேள்விகள் இடம் பெற்றன.
சமூக அறிவியல், அறிவியல் பாடங்களில் அனைத்து கேள்விகளும் பழைய பாடத்திட்டத்தில் இடம்பெற்றவை. இதனால், தேர்ச்சி விகிதம் பாதிக்கும், என்றார். சங்க மாவட்ட செயலாளர் கணேசன் கூறுகையில், மறுதேர்வு நடத்தி, கல்வி உதவி தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். தேர்வில் வெற்றி பெற்றதற்கான சான்றும் வழங்கப்பட வேண்டும் என்றார்.

>>>லயோலா-வுக்கு சிறுபான்மை அந்தஸ்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, லயோலா கல்லூரிக்கு, ஐந்து ஆண்டு வரையறை செய்து, சிறுபான்மை அந்தஸ்து வழங்கி, உயர்கல்வித் துறை பிறப்பித்த உத்தரவை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, லயோலா கல்லூரியின் (தன்னாட்சி) செயலர், தாக்கல் செய்த மனு: லயோலா கல்லூரி, 1925ல் துவங்கப்பட்டு, 1978ல், தன்னாட்சி அந்தஸ்து பெற்றது. சென்னைப் பல்கலைக்கழகத்தின், இணைப்பு பெற்றுள்ளது; சிறுபான்மை கல்வி நிறுவனம் என, அரசும் அங்கீகரித்துள்ளது.
கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த கல்லூரி என்றாலும், ஜாதி, இனம், மதம், மொழி அடிப்படையில், யாருக்கும் அனுமதி மறுப்பதில்லை. கடந்த, 1998ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையைத் தொடர்ந்து, சிறுபான்மை கல்லூரி என அங்கீகரித்து, அரசிடம் இருந்து தனியாக உத்தரவு பெறும்படி, கல்லூரிக் கல்வி இயக்குனரகம் வற்புறுத்தியது.
இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டுக்குமாக, சிறுபான்மை அந்தஸ்து வழங்கி, உயர் கல்வித்துறை உத்தரவிட்டது. பின், 2007 - 2012 வரை, ஐந்து ஆண்டுகளுக்கு, சிறுபான்மை அந்தஸ்து வழங்கி, உயர் கல்வித் துறை உத்தரவிட்டது. இப்படி, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு வரையறை செய்து, சிறுபான்மை அந்தஸ்து வழங்கிய உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஐசக் மோகன்லாலும், அரசு தரப்பில், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தியும் ஆஜராயினர். இந்த மனு மீது நீதிபதி பால் வசந்தகுமார் பிறப்பித்த உத்தரவு: சிறுபான்மை கல்வி நிறுவனத்துக்கு வழங்கிய, சிறுபான்மை அந்தஸ்தை, அவ்வப்போது புதுப்பிக்க வேண்டுமா என்ற விஷயத்தை, ஏற்கனவே ஒரு வழக்கில் உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
அதில், சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்பட்டு விட்டால், அவ்வப்போது புதுப்பிக்க தேவையில்லை என, கூறப்பட்டுள்ளது. ஆசான் மெமோரியல் அசோசியேஷன் தொடுத்த வழக்கில், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், "அரசு வழங்கிய, சிறுபான்மை அந்தஸ்து செல்லும். ஒரு கல்வி நிறுவனம், அதன் விதிகளுக்கு முரணாக செயல்பட்டால், அந்த கல்வி நிறுவனத்தில் மாற்றம் ஏற்பட்டால், அதற்கு நோட்டீஸ் அனுப்பி, புதிய உத்தரவை, சட்டப்படி பிறப்பிக்கலாம்" எனக் கூறியுள்ளது.
எனவே, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள், இந்த வழக்குக்கும் பொருந்தும். மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்படுகிறது. இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

>>>தத்துவம் படித்தால் எதிர்காலம் உண்டா?

நிஜம், இருப்பு, மதிப்பீடுகள், அறிவு, காரணம், மனம் மற்றும் மொழி ஆகியவைத் தொடர்பான பொது மற்றும் அடிப்படை சிக்கல்கள் குறித்து ஆராய்வதே தத்துவம் என்று ஒரு விளக்கம் தரப்படுகிறது. ஆனால், உண்மையிலேயே, எத்தனை பேர் தத்துவம் படிக்கிறார்கள் மற்றும் எத்தனை கல்லூரிகள் தத்துவப் பாடத்தை கற்பிக்கின்றன.
சிலர் தொழில்முறையாக தத்துவத்தைப் படிக்கிறார்கள். கல்வித்துறை அல்லது தனிப்பட்ட மேலாண்மை ஆகிய நோக்கங்களில் அவர்கள் அதைப் பயன்படுத்துகிறார்கள்.
அதேசமயம், சொந்த விருப்பம் மற்றும் ஆர்வத்தின் பொருட்டு, தத்துவத்தைப் படிக்கும் ஒரு கூட்டம் உண்டு. தொழில்முறையாக தத்துவம் படிப்பவர்களைவிட, ஆர்வத்தின் பேரில் அதை படிப்பவர்கள் சாதிப்பது அதிகம்.
இன்றைய நிலையில், தத்துவப் படிப்பு என்பது எந்தளவிற்கு ஒருவருக்கு நடைமுறை வாழ்வில் உதவுகிறது என்ற ஒரு பெரிய கேள்வி எழுகிறது. இப்பாடப்பிரிவில் போதிய மாணவர்கள் சேர்கிறார்களா? அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கிறதா?
இத்தகைய விஷயங்களை அலசுவதே நாம் இங்கே அலச வேண்டியுள்ளது.
பொதுவான நிலை
தத்துவப் பாடத்தை விரும்பி படிக்கும் மாணவர்கள், பொதுவாக, கருத்து வளம், வெளிப்படுத்தும் திறன் மற்றும் பகுப்பாய்வு போன்றவற்றில் திறமையாளவர்களாக இருப்பார்கள். அவர்களில் சிலர், பட்டப்படிப்பை முடித்தப் பின்னர் சிவில் சர்வீஸ் தேர்வு அல்லது மாநில அளவிலான போட்டித் தேர்வுகளை எழுதுவார்கள். சிலர், தத்துவப் பாடத்தில் முதுநிலைப் படிப்பை முடித்துவிட்டு, எம்.பில் மற்றும் பி.எச்டி ஆகியவற்றில் கவனம் செலுத்தி, ஆசிரியர் தொழிலுக்கு சென்று விடுவர்.
தேசிய அளவில், குறைந்தளவிலான கல்லூரிகளும், பல்கலைகளும் மட்டுமே, தத்துவப் படிப்பை வழங்கி வருகின்றன. இது ஒரு பெரிய குறையாக இருந்தாலும், இத்துறையிலும் பலவிதமான வாய்ப்புகள் இருப்பதாகவே நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒருவரின் திறனைப் பொறுத்து அவர் அடையும் உயரம் அதிகம்.
தத்துவமானது, ஒருவருக்கு, நுணுக்கமான மற்றும் கற்பனாவாத சிந்தனையை வழங்குவதோடு, நல்வாழ்க்கை வாழ்வதற்கான நல்லறிவை தந்து, அதன்மூலம் சமூகத்திற்கும் நன்மை கிடைக்க வழியேற்படுகிறது. இத்துறையில், தொழில்ரீதியான எதிர்காலம் என்ன இருக்கிறது என்ற உறுதி இருந்தால்தான், அதிக மாணவர்களை இத்துறை நோக்கி ஈர்க்க முடியும் என்பது ஒரு நடைமுறை உண்மையே.
பாடத்திட்ட மாற்றம்
ஒவ்வொரு பாடத்திட்டத்திலும், தத்துவம் என்பது ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்களே தவிர, அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இளைஞர்களின் அறிவில் தத்துவத்தை அறிமுகப்படுத்துவதால், அவர்களின் சிந்தனைகள் பயனுள்ள வகையில் செழுமையடையும்.
இந்தியாவில், ஒரு சில ஐஐடி கல்வி நிறுவனங்கள், தத்துவ துறையில் ஆய்வு செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
பிற வாய்ப்புகள்
தத்துவம் படித்த ஒருவர், ஆசிரியர் தொழிலுக்குத்தான் சென்றாக வேண்டும் என்றில்லை. மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகளை எழுதலாம் அல்லது மனிதவளத் துறை போன்ற சிறப்பு பிரிவுகளில், வணிக மேலாண்மையிலும் ஈடுபடலாம். இதுமட்டுமின்றி, ஜர்னலிசம் மற்றும் கிரியேட்டிவ் ரைட்டிங் போன்ற துறைகளிலும் ஈடுபடலாம். ஏனெனில், இத்துறைகளில், வார்த்தைகள் மற்றும் கருத்துக்களை கிரகிக்கும் தன்மை, பகுப்பாய்வு திறன் போன்றவை தேவைப்படுகிறது.
தத்துவப் படிப்பிற்கான பெரிய வாய்ப்புகள் இந்நாட்டில் இல்லைதான். ஆனால், பேராசிரியர்களுக்கான சம்பளம் மற்றும் பெல்லோஷிப் தொகைகள் போன்றவை அதிகரிக்கப்பட்டுள்ளன. தத்துவத் துறை பணி என்பது, பணத்திற்கு அப்பாற்பட்டு, உள்ளார்ந்த தேடல் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த ஒன்று என்பதை மறந்துவிடலாகாது.
வரப்பிரசாதம்!
பகுப்பாய்வு, விவாதங்கள், சமூக, அரசியல் மற்றும் மதம் தொடர்பான சிக்கல்களை விரிவாக புரிந்து கொள்ளுதல், பிரபஞ்ச தோற்றம், இயக்கம் மற்றும் மனிதர் உள்ளிட்ட உயிரினங்களின் வாழ்வு ஆகியவற்றை தர்க்க ரீதியாக புரிந்து கொள்ளுதல், படைப்பின் நோக்கம், உலகத்தின் தொடர் இயக்கப் போராட்டம், ஆதாரம் இல்லாத வரலாறுகளை தர்க்க ரீதியாக அலசுதல் ஆகியவற்றில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு, தத்துவப் பாடம் ஒரு வரப்பிரசாதம்.
மாபெரும் கொடை!
ஒருவருக்கு தத்துவத்தை உருவாக்கும் திறன் இருப்பதானது, இயற்கையின் மாபெரும் கொடை. தத்துவம் என்பது அனைத்தினும் மேன்மையானது. பிரபஞ்ச இயக்கவியலின் அடிப்படை, கணிதமாக இருந்தாலும், தத்துவமானது, அந்த கணிதத்தையும் வரையறுத்துக் கூறும் ஒரு கருவியாக உள்ளது.
விஞ்ஞான ஆய்வுகளுக்கு அடிப்படையாக தத்துவ ஆய்வுகள் உள்ளன. உலகம் எந்தளவிற்கு பழமையானதோ, அதே அளவிற்கு தத்துவமும் பழமையானது. ஏதோ, இன்றைக்கு, இந்த உலகமானது, பொருள் உற்பத்தி, சுரண்டல், முதலாளியம் என்ற நிலைப்பாடுகளில் தீவிரமாக இயங்கி வருகிறது என்பதற்காக, தத்துவம் வீண் என்று பொருளில்லை. மேற்கூறிய அம்சங்களும் தத்துவத்திற்கு உட்பட்டே நடைபெறுகின்றன. உலகின் இயக்க அம்சங்கள் ஒவ்வொன்றும் தத்துவத்திற்குள் அடக்கம்.
படைப்பாக்க தத்துவத் திறனும், தத்துவ ஆர்வமும் உள்ள ஒருவர், சாதாரண வேலை வாய்ப்புகளைத் தேடி அலைய வேண்டியதில்லை. அவர் தனது முயற்சிகளின் மூலமாகவே பிரபலமடையலாம். புத்தகங்கள் எழுதுதல், பிரசங்கம் நிகழ்த்துதல் போன்ற பல வாய்ப்புகள் உள்ளன.
ஒருவர், தத்துவப் பட்டப் படிப்புகளை முடிக்கையில், அவருக்கு உலக தத்துவங்களைப் பற்றி ஒரு விரிவான அறிமுகம் கிடைக்கிறது. அதன் ஆழம் புரிகிறது. இதன்மூலம், தனது தத்துவப் பயணத்தை எவ்வாறு துவக்கலாம் என்பதை தீர்மானித்துக் கொள்ளலாம். எனவே, தத்துவப் படிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது.
கண்டனத்துக்குரியது
ஒட்டுமொத்த வாழ்வின் அடிப்படையாக விளங்கும் தத்துவப் பாடத்திற்கு மாணவர்களை ஈர்ப்பதற்கான திட்டங்களை தீட்டாமல், கல்லூரி மற்றும் பல்கலைகளில், அத்துறைகளின் மேம்பாட்டில் கவனம் செலுத்தாமல், இருக்கும் துறைகளுக்கும் மூடுவிழா நடத்தும் அரசின் செயல் கண்டனத்துக்குரியது என்று பல கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.
குறைந்தபட்சம், மேலே சொன்னதுபோல், பல பாடப்பிரிவுகளில், தத்துவத்தை ஒரு அம்சமாக சேர்க்கலாம். நமது தலைமுறைகள், தத்தவத்தின் அறிமுகமே இல்லாமல் இருப்பது வேதனைக்குரியது அல்லவா!

>>>செப்டம்பர் 26 [September 26]....

  • இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பிறந்த தினம்(1932)
  • கர்நாடக இசை அறிஞர் பாபநாசம் சிவன் பிறந்த தினம்(1890)
  • கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை நினைவு தினம்(1954)
  • ஏமன் அரபுக் குடியரசு அமைக்கப்பட்டது(1962)
  • இந்தோனேஷியா ஐநாவில் இணைந்தது(1950)

>>>பொது பிரிவினருக்கு கூடுதல் இடம்: தமிழக அரசுக்கு உத்தரவு

தமிழகத்தில் அமலில் உள்ள, 69 சதவீத இடஒதுக்கீட்டால், பொது பிரிவைச் சேர்ந்த, தகுதியுடைய மாணவர்களுக்கு, கல்வி நிறுவனங்களில் கூடுதல் இடங்களை உருவாக்கி, அவர்களைச் சேர்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மண்டல் கமிஷன் பரிந்துரையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், இடஒதுக்கீடு, 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பிற்படுத்தப்பட்டோர் நலன் கருதி, தமிழக அரசு, சட்டத்தின் மூலம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யப்பட்டு, அது தொடர்கிறது.
இந்த, 69 சதவீத இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட மாணவி காயத்ரி மற்றும் ஒன்பது மாணவர்கள், "69 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும், தமிழக அரசின் சட்டம், அரசியல் சட்டப்படி செல்லத்தக்கதா" எனக் கேள்வி எழுப்பி, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை, நேற்று விசாரித்த நீதிபதிகள், ராதாகிருஷ்ணன் மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய, உயர் நீதிமன்ற அமர்வு பிறப்பித்த உத்தரவு:
தமிழகத்தில், அமலில் உள்ள, 69 சதவீத இடஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட தகுதியுடைய மாணவர்களுக்கு, நடப்புக் கல்வியாண்டில் மருத்துவம், பொறியியல், பல் மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்வியில், கூடுதல் இடங்களை உருவாக்கி, அவர்களை மாநில அரசு சேர்க்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும்.
குறிப்பாக, 99 சதவீத மதிப்பெண்கள் பெற்றும், மருத்துவக் கல்லூரிகளில், இடம் கிடைக்காத மாணவர்களுக்காக அரசு இதைச் செய்ய வேண்டும். அதே நேரத்தில், தமிழக அரசின், 69 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் செல்லத்தக்கதா என, மனுதாரர்கள் எழுப்பியுள்ள கேள்விக்கு, தமிழக அரசுக்கு 6 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...