கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>கட்டட விதிமீறல்: பள்ளி, கல்லூரிகளுக்கு நோட்டீஸ்

தமிழகம் முழுவதும், அனுமதியின்றி கட்டடங்கள் கட்டியுள்ள, 700க்கும் மேற்பட்ட, பள்ளி, கல்லூரிகளுக்கு, "நோட்டீஸ்' அளிக்கப்பட்டுள்ளது என, நகரமைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் உள்ள, அனைத்து தனியார் கல்வி நிறுவன வளாகங்களையும் ஆ‌ய்வு செய்து, விதிமீறல் கட்டடங்கள் குறித்த விவரங்களை, நகரமைப்புத் துறையினர் திரட்டத் துவங்கினர்.
நகரமைப்புத் துறையின் உள்ளூர் திட்ட குழுமங்கள், மண்டல அலுவலகங்களிடம் இருந்து, இத்தகைய கட்டடங்கள் குறித்த விவரங்களும், அவற்றின் இப்போதைய நிலை குறித்த விரிவான அறிக்கைகளும் பெறப்பட்டன.
இந்த அறிக்கைகளை ஆய்வு செய்ததில், 500க்கும் மேற்பட்ட சுயநிதி, கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வுக்கூடம், நூலகம் ஆகியவை கட்டப்பட்டது தெரியவந்துள்ளது. முறையான அனுமதி இவற்றிற்கு இல்லை.
இவற்றில் உள்ள விதிமீறல் கட்டடங்களின் பரப்பளவு, 75 லட்சம் சதுர அடியை தாண்டும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக, சென்னையை ஒட்டியுள்ள, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தான் அதிக எண்ணிக்கையில், சுயநிதி கல்வி நிறுவனங்கள் உள்ளன.இவற்றில் உள்ள, விதிமீறல் கட்டடங்களின் பரப்பளவு மட்டும், 30 லட்சம் சதுர அடி வரை இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
கல்லூரிகள் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும், 300க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி வளாகங்களிலும், அனுமதியின்றி அடுக்குமாடி கட்டடங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இவை தொடர்பான விவரங்களும் நகரமைப்புத் துறை அதிகாரிகள் மூலம் சேகரிக்கப்பட்டுள்ளன.வரன்முறை:இந்த விவரங்களுடன், இவற்றின் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கை, அரசுக்கு அனுப்பப்பட்டது.
இதன் அடிப்படையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, நகரமைப்புத் துறை, உயர்கல்வித் துறை அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இக்கல்வி நிறுவனங்களிடம், சதுர அடி அடிப்படையில், அபராதம் வசூலித்தால், அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்ற ஆலோசனை, அரசின் பரிசீலனையில் உள்ளது.
இந்நிலையில், கடந்த மாதம், 14, 28 ஆகிய தேதிகளில், நகரமைப்புத் துறை கமிஷனர் கார்த்திக், அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும், உள்ளூர் திட்ட குழுமங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.இந்த சுற்றறிக்கையின் அடிப்படையில், அந்தந்த பகுதிகளில் விதிமீறல் கட்டடங்கள் உள்ள கல்வி நிறுவனங்களை, நகரமைப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதில், இதுவரை, 500க்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கும், 200க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கும், "நோட்டீஸ்' அளிக்கப்பட்டுள்ளன.
உங்கள் வளாகத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள், நகரமைப்புத் துறையின் அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கட்டப்பட்ட கட்டடங்கள் சட்டப்படி குற்றமாகும். எனவே, 1971ம் ஆண்டு நகரமைப்புச் சட்டத்தின் பிரிவுகள், 56, 57ன்கீழ், அனுமதியில்லா கட்டடமாக அவை அறிவிக்கப்படுகின்றன' என, நோட்டீசில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
விதிமீறலில் ஈடுபட்டுள்ள கல்வி நிறுவனங்கள், இந்த நோட்டீசுக்கு அளிக்கும் பதிலை, ஆய்வு செய்த பின், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

>>>வி.ஏ.ஓ., தேர்வு 150 மையங்கள் பதற்றம் நிறைந்தவை

"வி.ஏ.ஓ., தேர்வு நடக்கும் மையங்களில், 150 மையங்கள், பதற்றம் மிகுந்தவையாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த மையங்கள், "வெப்-கேமரா' மூலம் கண்காணிக்கப்படவுள்ளது,"" என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ் தெரிவித்தார்.
தேர்வாணைய அலுவலகத்தை, முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்துவிட்டு சென்றபின், தேர்வாணைய அலுவலர்கள், பணியாளர்கள் மத்தியில், தலைவர் நடராஜ் பேசியதாவது:நீங்கள் விரும்பியபடி, உங்களுக்கு தேவையான வசதிகளை அளிக்கும் வகையில், புதியகட்டடம் கட்டப்பட்டுள்ளது. பணியாளர்கள், மகிழ்ச்சியான சூழலில் வேலைபார்த்தால் தான், பணிகள் சிறப்பாக இருக்கும். அந்தவகையில், புதியஅலுவலகம், உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.வரும் ஞாயிற்றுக் கிழமை நடக்கும், வி.ஏ.ஓ., தேர்வு, நம் முன் உள்ள சவால். இந்த தேர்வை, வெற்றிகரமாக நடத்தி முடிக்கவேண்டும்; கண்டிப்பாக செய்வோம் என்ற நம்பிக்கைநம்மிடம் உள்ளது.இவ்வாறு நடராஜ் பேசினார்.
பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:வி.ஏ.ஓ., தேர்வு, 3,473 மையங்களில் நடக்கின்றன. 9.72 லட்சம் பேர், தேர்வுக்கு விண்ணப்பித்தனர். எவ்வளவு பேர் எழுதுகின்றனர் என்பது, 30ம் தேதியன்று தெரியும். அனைத்து தேர்வு மையங்களிலும், தேர்வுப் பணிகளை, வீடியோ எடுக்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.150 மையங்கள்,பதற்றம் மிகுந்தவையாக கண்டறியப்பட்டுள்ளன.
இந்த மையங்களில், "வெப்-கேமரா' மூலம், எனது அறையில் இருந்தபடியே, 150 மையங்களையும் கண்காணிக்க, ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. குரூப்-2 கலந்தாய்வு: ஏற்கனவே நடந்த குரூப்-2 தேர்வு தொடர்பாக, சென்னை, ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. இதனால், கலந்தாய்வு நடத்த முடியாத நிலை இருந்து வந்தது. இவ்வழக்கில், தேர்வாணையத்திற்கு சாதகமாக, நேற்று தீர்ப்பு வந்துள்ளது.தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, ஒரு வாரத்திற்குள், கலந்தாய்வு நடத்தப்படும். இதன்மூலம், 3,500 பணியிடங்கள் நிரப்பப்படும்.இவ்வாறு நடராஜ் தெரிவித்தார்.

>>>காதோடு பேசினால் காது கேட்"காது'

அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்துவோருக்கு, காதுகள் கேட்காமல் போகும் அபாயம் இருக்கிறது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.முன்பெல்லாம் காதில் முணுமுணுப்பு, விசில் ஒலி, சங்கு ஊதுவது போன்ற சத்தங்கள் 60 வயதினரிடையே தான் ஏற்பட்டது. மொபைல் போன்களை தொடர்ந்து பயன்படுத்துவதால், இப்போது 20 வயதினர் கூட இப்பாதிப்புக்கு ஆளாகின்றனர். மொபைல் போனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சினால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 50 சதவீதம் அதிகம் எனவும் டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது உலக காது கேளாதோர் வாரம் (செப்.,24 - 30) கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நேரத்தில் காதுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விஷயங்களில், கவனம் செலுத்துவது அவசியம்.இளைஞர்கள், "இயர்போனில்' தினமும் சில மணி நேரமாவது பாடல்களை கேட்கின்றனர். மொபைல் போன் மியூசிக் பிளேயர்களில், அதிக ஒலியுடன் பாடல் கேட்பவர்களுக்கு, எப்போதும் மொபைலில் பேசிக்கொண்டு இருப்பவர்களுக்கு நிச்சயம் காதில் பாதிப்பு ஏற்படும்.
80 டெசிபலுக்கும் அதிகமான ஒலியை, தொடர்ந்து நான்கு மணி நேரம் கேட்டால் காதுகள் செவிடாகிவிடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. இயர்போனில் குறைந்த அளவு ஒலியை வைத்து, பாடல்களை சிறிது நேரம் மட்டுமே கேட்க வேண்டும்.சாலைகளில் காணப்படும் ஒலி மாசுபாடு, உடலளவிலும், மனதளவிலும் பாதிப்புகளை உண்டு ஏற்படுகிறது. இது குறித்த விழிப்புணர்வு, ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டும். அப்போது தான் இப்பாதிப்பில் இருந்து மீள முடியும்.

>>>மானியம் இல்லாத சிலிண்டர் விலை 750 ரூபாய்:எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம்

நடப்பு நிதியாண்டில், அக்டோபர் முதல், 2013 மார்ச் வரையிலான, ஆறு மாத காலத்தில், ஒவ்வொரு வீட்டிற்கும், மூன்று சமையல் காஸ் சிலிண்டர்கள் மட்டுமே, மானிய விலையில் வழங்கப்படும். அதற்கு மேல், தேவைப்படுவோர் சிலிண்டர் ஒன்றுக்கு, 750 ரூபாய் செலுத்த வேண்டும்.பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெருமளவு நஷ்டத்தைச் சந்தித்து வருவதால், சமையல் காஸ் சிலிண்டர்களுக்கு வழங்கப்படும் மானியத்தைக் குறைக்க, மத்திய அரசு முடிவு செய்தது. அதனால், "ஒரு வீட்டிற்கு, ஆண்டுக்கு ஆறு சமையல் காஸ் சிலிண்டர்கள் மட்டுமே, மானிய விலையில் வழங்கப்படும். அதற்கு மேல் தேவைப்படுவோர், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், அவ்வப்போது நிர்ணயிக்கும், சந்தை விலையை கொடுத்து, காஸ் சிலிண்டர் வாங்கிக் கொள்ள வேண்டும்' என, சமீபத்தில் அறிவித்தது.
அதேநேரத்தில், "இந்த நிதியாண்டில், மீதமுள்ள ஆறு மாதங்களுக்கு, மூன்று சிலிண்டர்கள் மட்டுமே, மானிய விலையில் வழங்கப்படும்' என்றும் தெரிவித்தது.அதனால், அக்டோபர் 1ம் தேதி முதல், 2013, மார்ச் 31 வரையிலான, ஆறு மாத காலத்தில், ஒவ்வொரு வீட்டிற்கும், மூன்று சமையல் காஸ் சிலிண்டர்கள் மட்டுமே, மானிய விலையில், அதாவது, 399 ரூபாய்க்கு வழங்கப்படும். அதற்குமேல், காஸ் சிலிண்டர் வாங்குவோர், 14.2 கிலோ எடை கொண்ட ஒரு காஸ் சிலிண்டருக்கு, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துள்ள சந்தை விலையான, ரூ.756.50 செலுத்த வேண்டும்.
இந்த சந்தை விலையும், சர்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்ற வகையில், மாதம் தோறும் மாறுபடும். அதே நேரத்தில், வர்த்தக பயன்பாட்டிற்கான, 19 கிலோ எடை கொண்ட, காஸ் சிலிண்டருக்கு, 1,334 ரூபாய் செலுத்த வேண்டும்.காங்கிரஸ் கட்சி ஆளும், சில மாநிலங்கள் மட்டும், "ஆண்டுக்கு ஒன்பது, சமையல் காஸ் சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படும்' என, அறிவித்துள்ளன. மத்திய அரசு அறிவித்துள்ள, ஆறு சிலிண்டர்கள் போக, மீதமுள்ள மூன்றுக்கான மானியத்தை, மாநில அரசுகளே வழங்கி விடும். பொதுமக்களின் நலன் கருதி, இந்த முடிவை எடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

>>>உச்சநீதிமன்ற உத்தரவுப்படி எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு

உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, கூடுதல் இட ஒதுக்கீட்டால், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இடம் வழங்க, எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, இன்று நடக்கிறது.
தமிழகத்தில் அமலில் உள்ள, 69% இடஒதுக்கீட்டின்படி, எம்.பி.பி.எஸ்., படிப்பில், மாணவர் சேர்க்கைக்கு இரண்டு கட்டமாக நடந்த கலந்தாய்வு, கடந்த, 18ம் தேதி முடிந்தது. இதில், தமிழகத்தில் உள்ள, 18 அரசு மருத்துவக் கல்லூரிகளின், 1,823 மற்றும் 11 தனியார் மருத்துவக் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீடாக உள்ள, 838 எம்.பி.பி.எஸ்., இடங்கள் முழுவதும் நிரம்பிவிட்டன.
இந்நிலையில், 69% இடஒதுக்கீடு முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கடந்த, 24ம் தேதி, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், 69% இடஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டுள்ள, தகுதியுடைய மாணவர்களுக்கு, கல்வி நிறுவனங்களில், கூடுதல் இடங்களை உருவாக்கி, அவர்களை சேர்க்கும் நடவடிக்கையை, மாநில அரசு உடனே எடுக்க உத்தரவிடப்பட்டது.
இதன்படி, 99% மதிப்பெண் பெற்றும், மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காத மாணவ, மாணவியருக்காக, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை அடுத்து, 50% இடஒதுக்கீட்டின்படி, எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வை மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இக்கலந்தாய்வில் பங்கேற்கத் தகுதியான மாணவர்களுக்கு, இன்று கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
இதுகுறித்து, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை தேர்வுக் குழு செயலர் சுகுமார் கூறியதாவது: இன்று நடக்கும் கலந்தாய்விற்கான, தரவரிசை பட்டியல் உள்ளிட்ட விவரங்கள், www.tnhealth.org , www.tn.gov.in ஆகிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி மட்டுமே, விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். இவர்களுக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., இடம் வழங்கப்படும்.
இக்கலந்தாய்வில் அதிகரிக்கப்படும், எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, இந்திய மருத்துவ கவுன்சிலின் ஒப்புதலை பெற, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சுகுமார் கூறினார்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீடு எம்.பி.பி.எஸ்., இடங்களும், இடஒதுக்கீடு முறையில் தான் நிரப்பப்படுகின்றன. ஆனால், இன்று, அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் தான், 50% இடஒதுக்கீட்டின் படி, கலந்தாய்வு நடைபெறும் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது.

>>>ரேபிஸ் என்ற அரக்கன்: இன்று உலக ரேபிஸ் தினம்

 
ரேபிஸ் என்பது ஒரு வகை வைரஸ். இது காடுகளில் வாழும் வௌவால், நரி, ஓநாய் போன்ற விலங்குகளையும், வீட்டு விலங்கான நாயையும் எளிதில் தாக்கக் கூடியது. ரேபிஸ் வைரஸ் தாக்கிய விலங்குகள், மனிதர்களை நேரடியாக கடிப்பதாலோ அல்லது அவ்விலங்குகளால் கடிக்கப்பட்ட பிற விலங்குகள் மூலமாகவோ பரவுகிறது.

ரேபிஸ் நோய்க்கு தடுப்பு மருந்தை, முதன் முதலில் 1885ல் லூயிஸ் பாஸ்டர் என்பவர் கண்டுபிடித்தார். அதற்கு முன் இந்நோய்க்கு மருந்தே கிடையாது. உயிரிழப்புகளும் அதிகம் நிகழ்ந்தன. இவரது சாதனையை அங்கீகரிக்கும் விதமாக, இவரது மறைந்த நாளான செப்., 28ம் தேதி, உலக ரேபிஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ரேபிஸ் நோயால், உலகில் ஆண்டுதோறும் 55 ஆயிரம் பேர் இறக்கின்றனர், சராசரியாக 10 நிமிடத்துக்கு ஒருவர் இறக்கிறார் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. 97 சதவீத ரேபிஸ் நோய், நாய்கள் மூலம் தான் பரவுகின்றன. இந்தியாவில் மட்டும் 2 கோடியே 50 லட்சம் நாய்கள் உள்ளன. அதில் 60 சதவீதம் தெருவில் திரியும் நாய்களாகவும், மீதி வீட்டில் வளர்க்கும் நாய்களாகவும் உள்ளன என தனியார் ஆய்வு தெரிவிக்கிறது. இவை மூலம் ரேபிஸ் அதிகமாக பரவுகிறது.

கவனம் அவசியம்: வீட்டில் வளர்க்கும் விலங்குகளிடம் கவனமாகவும், தொடர் கண்காணிப்பிலும் இருக்க வேண்டும். அதன் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படின், உடனே கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். ரேபிஸ் வைரஸ் தாக்கிய விலங்குகள் கடித்தவுடன், அந்த இடத்தில் சோப்பு நீரால் 10 முதல் 15 நிமிடம் நன்கு கழுவ வேண்டும். பின் டாக்டரிடம் காட்டி, சிகிச்சை மேற்கொண்டால் நோயிலிருந்து பாதுகாக்கலாம். இல்லாவிட்டால் இது உயிரையும் பறிக்கக் கூடியது.

>>>செப்டம்பர் 28 [September 28]....

  • உலக ரேபிஸ் நோய் தினம்
  • பசுமை நுகர்வோர் தினம்
  • தாய்வான் ஆசிரியர் தினம்
  • சீன பகுத்தறிவாளர் கன்ஃபூசியஸ் பிறந்த தினம்(கிமு 551)
  • அலெக்சாண்டர் பிளமிங் பெனிசிலினைக் கண்டுபிடித்தார்(1928)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...  *அவசர செய்தி: அனைத்து Block civil coordinators (BRTE) கவனத...