கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>சமாதானத்தின் தூதுவர்:இன்று காந்தியடிகள் பிறந்த தினம்

இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே அகிம்சையை கற்றுக்கொடுத்த, இந்தியாவின் தேசத்தந்தை என அழைக்கபடும் காந்தியடிகளின் பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இன்று உலகுக்கு தேவைப்படுவது, காந்தியடிகள் பின்பற்றிய "அகிம்சை' தான். மகாத்மா காந்தி, 1869 அக்., 2ம் தேதி, குஜராத்தின் போர்பந்தரில் பிறந்தார். 1883ல் தனது 13 வயதில் காந்தி, கஸ்தூரிபாய் என்பவரை திருமணம் செய்தார். பள்ளிக்கல்வியை முடித்தபின், உயர்கல்விக்காக 1888ல் லண்டன் சென்றார். அங்கு பாரிஸ்டர் பட்டம் பெற்று இந்தியா திரும்பினார். சில காலம் மும்பையில் வக்கீலாக பணியாற்றினார்.
தென் ஆப்ரிக்காவில் 21 ஆண்டுகள்:
பின் 1893ல், வேலைக்காக தென்னாப்பிரிக்கா சென்றார். அப்போது அங்கு ஆங்கிலேயர்களின் நிறவெறி மற்றும் இனப்பாகுபாடு அதிகமாக இருந்தது. வெள்ளையர் அல்லாத காரணத்தால், காந்தியடிகளும் பலமுறை பாதிக்கப்பட்டார். அங்குள்ள இந்தியர்களையும், கறுப்பின மக்களையும் ஒன்றினைத்து "சத்யாகிரகம்' எனும் அறவழிப் போராட்டம் மூலம் அம்மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதன் பின், இந்தியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற ஆங்கிலேய அரசு முன்வந்தது. தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர்களின் நிலையை மேம்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்ட காந்தியடிகள் 21 ஆண்டுகளுக்குப் பின், 1915ல் நாடு திரும்பினார்.

இந்திய சுதந்திர போராட்டம்:
இந்தியா ஆங்கியேர்களிடம் அடிமைப்பட்டு கிடந்தது. நாடு முழுவதும் ஆங்கிலேயர்களை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தனர். இதைக்கண்ட காந்தி காங்., கட்சியில் சேர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டார். 1920ல் காங்., கட்சியின் தலைவராகவும் இருந்தார். ரவிந்திரநாத் தாகூர், கோபாலகிருஷ்ண கோகலே, நேரு, ஜின்னா, வல்லபாய் படேல், அம்பேத்கார் உள்ளிட்ட பல தலைவர்களுடன் இணைந்து சுதந்திர போரட்டத்தை நடத்தினார். நாடு முழுவதும் பயணம் செய்து மக்களிடம் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தியதில் காந்தியின் பங்கு முக்கியமானது. சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம், தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு போன்ற அறப் போராட்டங்களின் மூலம் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடினார். இறுதியில் 1947 ஆக., 15ல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது.

இறுதி வரை போராட்டம்:
இந்தியா சுதந்திர தினத்தை கொண்டாடிய வேளையில் காந்தியோ இந்தியா - பாக்., பிரிவினையை கண்டு மனம் வருந்தினார். உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார். இறுதியில் 1948 ஜன., 30ம் தேதி, காந்தியடிகள் வழிபாடு முடிந்து வெளியே வந்த போது, நாதுராம் கோட்சே என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது நினைவு தினம், உலக அகிம்சை தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

வாய்மையே ஜெயிக்கும்:
மகாத்மா காந்தி ஒன்றும் வசீகரத்தோற்றம் உடையவரில்லை, கையில் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தியதில்லை. ஆனாலும் ஆங்கிலேய அரசு அவரைக் கண்டு பயந்தது. இந்திய மக்கள் அனைவரும் அவரது கட்டளைக்கு கீழ்படிந்தனர். ஏனெனில் அவரது நேர்மை மற்றும் துணிவு. இவர் நினைத்திருந்தால் செல்வந்தராகவே வாழ்ந்திருக்கலாம். ஆனால் விவசாயிகள் அரை ஆடை அணிந்திருந்ததைப் பார்த்து, தானும் அரையாடை மனிதனாக மாறினார். இதுதான் இவரை மகாத்மாவாக மாற்றியது. "வாய்மையே வெல்லும்' என்ற வரிக்கு ஏற்ப கடைசி வரை, உண்மையாகவே வாழ்ந்தார். நாட்டு மக்களும் இதனை பின்பற்ற வேண்டும்.

>>>அக்டோபர் 02 [October 02]....

  • சர்வதேச வன்முறை எதிர்ப்பு தினம்
  • மகாத்மா காந்தி பிறந்த தினம்(1869)
  • இந்திய முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம்(1904)
  • தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் நினைவு தினம்(1975)

>>>இந்திய உயர்கல்வி

கடந்த சில ஆண்டுகளாக இந்திய உயர்கல்வியானது, பல மாற்றங்களுக்கு உட்பட்டு வருகிறது. பாரம்பரிய அமைப்பு முறையிலிருந்து, தனியார் பங்களிப்பில் தொடங்கி, வெளிநாட்டு பல்கலைகள் உள்ளே நுழைவது வரை, இந்த மாற்றமானது, பல நிலைகளைக் கொண்டது. இந்த மாற்றம் வெகு வேகமாக நடந்து வருகிறது.
அதேசமயத்தில், இத்தகைய மாற்றங்களின் மீது விமர்சனங்களும் எழுகின்றன. நாள்தோறும் பெருகிவரும் பல தனியார் உயர்கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம், கட்டமைப்பு வசதிகள், அவை வழங்கும் படிப்புகளின் தரநிலைகள் ஆகியவைப் பற்றியும், அத்தகைய கல்வி நிறுவனங்களால், கல்வியானது முற்றிலும் வணிகமயமாய் மாற்றப்படுவதும் குறித்து பல விமர்சனங்கள் உள்ளன.
இந்த வகையில் உயர்கல்வியை பரப்புவதில் பல சவால்கள் உள்ளன. நவீன, தொடர்புடைய மற்றும் சமகாலத்திய பாடத்திட்டத்தை மேம்படுத்தல், தரத்தை மதிப்பிடுவது, ஏற்றுக்கொள்ளும் நெறிமுறைகள், கொள்கைகள் மற்றும் நிர்வாகக் கூறுகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல சவால்கள் உள்ளன.
கல்விக்கான முதலீடு
சிறந்த அமைப்பு ரீதியான கல்வியின் மூலம், தொழில்நுட்பம் மற்றும் அறிவு ஆகியவற்றை ஒரு சமூகம் பெறுவதே, அதன் மேம்பாட்டிற்கான வழியாகும். கல்வித்துறையில் போதுமான முதலீடு இல்லாமல் போவதானது, ஒரு சமூகத்தின் பெரும் பின்னடைவுக்கு காரணமாக ஆகிவிடுகிறது. இந்த நூற்றாண்டில், அபரிமித தொழில்நுட்ப வளர்ச்சியினால், சமூகத்தின் வாழ்க்கை முறையே மாறிவிட்டது. அறிவின் விஸ்தாரம், அடைத்துவைக்க முடியாதவாறு, நாடுகளின் எல்லைகளுக்குள் முடங்காமல், தங்குதடையின்றி பரவிக் கொண்டுள்ளது.
இன்றைய நிலையில், கல்விக்காக ஒருவர் வெளிநாடு செல்வது மட்டுமே வழக்கமான ஒன்றாக இருக்கவில்லை, மாறாக, கல்வியே எல்லை கடந்து சென்று கொண்டிருப்பதும் வழக்கமான ஒன்றாக இருக்கிறது. கடல் கடந்த வளாகங்கள் மற்றும் இணைப்புகள் என்பதன் மூலம், வெளிநாட்டு பல்கலைகள், இந்தியாவிற்கு வரத் துவங்கியுள்ளன.
சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படும் நபர்களாக நமது பட்டதாரிகள் உருவாக, உயர்கல்வியில் அதிகளவு முதலீடு தேவைப்படுகிறது. அதேசமயம், இந்தியாவில், உயர்கல்வியை சர்வசேதமயப்படுத்துவது இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளது என்று கூறலாம்.
வெளிநாட்டு பல்கலைகள் இந்தியாவில் நிறுவப்படுவதில் இருக்கும் சில நடைமுறை ஆபத்துகளாக கீழ்கண்டவை தெரிவிக்கப்படுகின்றன,
* அதிகளவிலான கட்டணம்
* சரியற்ற படிப்புகள்
* சேர்க்கை முறையில் நடைபெறக்கூடிய ஊழல்கள்
* கொள்கைகள் மற்றும் செயல்படுவதில் ஏற்படும் வேறுபாடுகள்
போன்றவை.
மாணவர் சேர்க்கை வீழ்ச்சி
இந்தியாவைப் பொறுத்தவரை இருக்கும் ஒரு பெரிய சவால் என்னவெனில், உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதுதான். இந்தியா மக்கள்தொகையில் மட்டுமல்ல, பரப்பளவிலும் பெரிய நாடு என்பதை நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. வளர்ந்த நாடுகளில் 85%க்கும் மேற்பட்டோர் உயர்கல்வியில் சேர்கிறார்கள் என்றால், இந்தியாவிலோ, அந்த எண்ணிக்கை வெறும் 12% என்ற அளவில் உள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது என்னவெனில், நாட்டின் பெரும்பான்மையான மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கிறார்கள். அதேசமயம், உயர்கல்வி நிறுவனங்களோ, தங்களின் கவனத்தை நகர்ப்புறங்களில் மட்டுமே செலுத்துகின்றன.
ஊரகப் பகுதிகளில் வாழும் 65% மக்களின் உயர்கல்வித் தேவைகளை நிறைவுசெய்ய, வெறும் 20% கல்வி நிறுவனங்களே அப்பகுதிகளில் அமைந்துள்ளன. ஆனால், 30% முதல் 35% வரை மக்கள் தொகையைக் கொண்ட இந்திய நகர்ப்புறங்களில் அல்லது வளரும் நகரங்களில், 80% உயர்கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளது. இங்குதான் பிரச்சினையே!
தனியார் பல்கலை வளர்ச்சி
உயர்கல்விக்கான தேவை அதிகரித்து வரும் நிலையிலும், அரசு பல்கலைகளின் தரம் தொடர்ச்சியாக குறைந்து வருவதாலும், பல தனியார் உயர்கல்வி முதலீட்டாளர்களின் §வையை அதிகப்படுத்தியுள்ளது. ஆனால் தனியார் உயர்கல்வி மையங்களின் விதிமுறைகள், அவற்றின் வளர்ச்சி விகிதத்தை தக்கவைப்பதில் தவறிவிட்டன. இதன்மூலம், தரம் மற்றும் சமூக நலன் ஆகிவற்றைப் பற்றிய கவலைகள் ஏற்படுகின்றன.
சில தனியார் உயர்கல்வி நிறுவனங்களைப் பற்றி இங்கே காணலாம்,
* சிம்பயோசிஸ் சர்வதேச பல்கலைக்கழகம் - பூனே
இக்கல்வி நிறுவனத்தின் 4 வளாகங்களில், மொத்தம் 11,000 முழுநேர மாணவர்கள், 75 நாடுகளிலிருந்து வந்து படிக்கிறார்கள்.
* ஜேகே லக்ஷ்மிபத் பல்கலை - ஜெய்ப்பூர்
பல்வேறான துறைகளில், இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை வழங்கிவரும் இக்கல்வி நிறுவனம், தென்கொரியாவின் ஹன்யாங் பல்கலையுடன் கூட்டும் வைத்துள்ளது.
* அமிட்டி பல்கலை - நொய்டா
இங்கே, பி.எச்டி நிலைவரை, 80,000 மாணவர்கள் கற்கிறார்கள். 3500 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். இந்தியாவில் 4 பல்கலைகளும், துபாய், சிங்கப்பூர், மொரீஷியஸ், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் மொத்தம் 6 வளாகங்களும் இப்பல்கலைக்கு உள்ளன.
* விஐடி - வேலூர்
இப்பல்கலை, தமிழ்நாட்டிலேயே, சிறந்த உள்கட்டமைப்பு வசதியோடு செயல்படும், ஒரு சிறந்த தொழில்நுட்ப பல்கலையாகும்.
இத்தகைய தனியார் உயர்கல்வி நிறுவனங்கள், தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல வளாகங்களை அமைத்து, அதன்மூலம் மாணவர் சேர்க்கையை அதிகரித்து, உயர்கல்வி தேவையை நிறைவுசெய்யும் முயற்சியில் ஈடுபடுகின்றன.
2011ம் ஆண்டின் Ficci அறிக்கை இவ்வாறு கூறுகிறது, "இந்தியாவில் அதிகரித்து வரும் இளைஞர் எண்ணிக்கை,  குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சி, நடுத்தர வர்க்கத்தினர், தங்களுடைய பிள்ளைகளின் கல்விக்கு அதிகம் செலவுசெய்ய தயாராக இருப்பது போன்ற காரணிகள், உயர்கல்விக்கான தேவையை இந்நாட்டில் அதிகரித்துள்ளது."
தனியார் பல்கலைகளின் நோக்கமும் பங்களிப்பும்
இந்தியாவில், கல்வித்துறையில் தனியாரின் பங்களிப்பும், செல்வாக்கும், கடந்த 1991ம் ஆண்டில் நுழைக்கப்பட்ட தாராளமயமாக்கல் கொள்கைக்குப் பிறகுதான் வலுப்பெற்றன மற்றும் அதிகரித்தன. அதன்பிறகு, மேலாண்மை, பொறியியல் மற்றும் மருத்துவம் போன்ற படிப்புகளின் முக்கியத்துவத்தில் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டன.
கடந்த 2008ம் ஆண்டின்படி, நாட்டிலுள்ள 113 நிகர்நிலைப் பல்கலைகளில் 80 பல்கலைகள், தனியாரால் நிர்வகிக்கப்படுபவை. இவற்றில் பல, அரசின் கொள்கைகளின்படி உருவாக்கப்பட்டவை. இந்திய அரசைப் பொறுத்தவரை, தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற வரையறையை தெளிவாக வகுப்பதில் காலம் தாழ்த்தியே செயல்பட்டு வந்துள்ளது.
இந்தியாவில், உயர்கல்வியை நெறிப்படுத்தும் அமைப்பான யு.ஜி.சி, ஒரு புதிய விதியைஅறிவித்துள்ளது. அதன்படி, உலகில் முதல் 500 இடங்களுக்குள் வரும் சிறந்த பல்கலைகளுடன் மட்டுமே, இந்திய பல்கலைகள் கூட்டு வைத்து செயல்பட வேண்டும் என்பதாகும். மேலும், UGC அமைப்பால், A grade அளிக்கப்பட்ட இந்திய பல்கலைகள் மட்டுமே, முதல் 500 சிறந்த வெளிநாட்டு பல்கலைகளுடன் கூட்டு வைத்துக்கொள்ள முடியும் என்றும் யு.ஜி.சி விதிமுறைகள் கூறுகின்றன. 
வெளிநாட்டு பல்கலைகள், இந்தியாவில் கிளை வளாகங்களை அமைப்பதற்கு அனுமதி கொடுக்கும் சட்டம், நாடாளுமன்றத்தில் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
இந்தியாவின் சிறந்த உயர்கல்வி நிறுவனங்கள்
சில முக்கிய ரேங்கிங் சர்வேயின்படி, டெல்லி பல்கலைக்கழகம், பல்வேறான சிறப்பம்சங்களுக்காக, இந்தியாவின் முதல்தர பல்கலையாக வகைப்படுத்தப்படுகிறது. அதற்கடுத்து, பனாரஸ் இந்து பல்கலையும், கல்கத்தா பல்கலையும், ஜவஹர்லால் நேரு பல்கலையும் வருகின்றன.
அலிகார் முஸ்லீம் பல்கலை, ஒஸ்மானியா பல்கலை, சென்னை பல்கலை, அலகாபாத் பல்கலை, ஹைதராபாத் பல்கலை, ஜாமியா மிலியா இஸ்லாமியா, பாண்டிச்சேரி பல்கலை, மைசூர் பல்கலை, ஆந்திரா பல்கலை, மகாராஜா சயாஜிராவ் பல்கலை போன்றவை அடுத்தடுத்த இடங்களில் வருகின்றன.
மேலும், சர்வேக்களின்படி, கூடுதல் முக்கியத்துவம் பெற்ற கல்வி நிறுவனங்களில், குவஹாத்தி பல்கலை, ராஞ்சி பல்கலை, வடகிழக்கு மலையக பல்கலை மற்றும் மங்களூர் பல்கலை போன்றவை அடங்குகின்றன. அதேசமயத்தில், கொச்சின் பல்கலை, உத்கல் பல்கலை, பாட்னா பல்கலை, பெங்களூர் பல்கலை மற்றும் கேரளா பல்கலை போன்றவை தங்களின் முக்கியத்துவத்தை சற்று இழந்துள்ளன.
அரசு பல்கலைகளை தவிர்த்து பார்த்தால், டெல்லியின் குருகோபிந்த் சிங் இந்திரப்பிரஸ்தா பல்கலையானது, தனது வளாகங்களில் மற்றும் இணைப்பு கல்லூரிகள் மூலமாக வழங்கும் பரவலான படிப்புகள் மூலம் பிரபலமடைந்து விளங்குகிறது. இதன்மூலம், தரமான உயர்கல்வி நிறுவனங்களை நாடும் மாணவர்கள் மத்தியில், இப்பல்கலை பெயர்பெற்ற ஒன்றாக திகழ்கிறது.
தரம் தொடர்பான சிக்கல்கள்
உலக பொருளாதார தளங்களில் ஏற்படும் மாற்றங்கள், கல்வித் துறையையும், குறிப்பாக உயர்கல்வித்துறையையும் பாதிக்கின்றன. கல்வியின் விளைவு மற்றும் வேலை பெறுகின்ற திறன் ஆகிய 2 அம்சங்களிலும் தரம் என்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இன்றைய நிலையில், ஒரு வரைமுறைப்படுத்தப்பட்ட கல்வி அமைப்பிற்கான வியூகங்களை வகுக்கையில், மாணவர்கள், பெற்றோர்கள், எதிர்கால வேலைவாய்ப்பு நிறுவனங்கள், அரசு மற்றும் நிதியளிக்கும் நிறுவனங்கள் ஆகியோரின் நலன்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
பல்வேறு நிலைகளில் தரத்தை உறுதிசெய்வதானது, கல்வி நிறுவனங்கள் மற்றும் தேசிய ஏஜென்சிகள் ஆகிய இரண்டின் பொறுப்பிலும் உள்ளது. மாணவர்களின் சிறப்பான கல்வி நிலைய செயல்பாடானது, கல்வி நிறுவனங்களில், அவர்களுக்கு போதுமான சுதந்திரம் கொடுக்கப்படாததாலும், ஆராய்ச்சி மற்றும் இதர விஷயங்களில் ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இல்லாததாலும் பாதிக்கப்படுகிறது. சரியான கல்விச் சூழல் அமையாததே இவற்றுக்கு காரணம்.
விதிமுறைகள் இல்லாமை
கடந்த 2005ம் ஆண்டு நாடாளுமன்றத்தில், தனியார் பல்கலைகள் நிறுவுதலை முறைப்படுத்தும் சட்டம் கொண்டுவரப்பட்டபோது, எதிர்க்கட்சிகள் மற்றும் பல தனியார்களின் எதிர்ப்பால் அச்சட்டம் கிடப்பில் போடப்பட்டது. தேசிய மற்றும் மாநில அளவில், தனியார் கல்வி நிறுவனங்களுக்கான நெறிமுறைகள் வலுவாக இல்லாதது, அவைகளின் தரம் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது. மோசமான உள்கட்டமைப்பு, குறைவான மற்றும் போதுமான தகுதிகள் இல்லாத ஆசிரியர்கள் மற்றும் அபரிமித கட்டணம் போன்றவை முக்கிய பிரச்சினைகளாக உள்ளன.
உயர் தொழில்கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் கொடுக்கும் AICTE செயல்பாடுகளும், பல சமயங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகின்றன. உயர்கல்வியில் முறைகேடுகளை தடுக்கும் சட்டத்தை, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தாலும், இன்றைய நிலையில், நிலைமையை சரியாக்க, ஒரு சிறந்த வரைமுறை அமைப்பு தேவை என்பதே உண்மை.
இ-லேர்னிங்
உயர்கல்விக்குரிய போதுமான உள்ளகட்டமைப்பு மற்றும் ஆசிரியர்கள் இல்லாத இந்தசூழலில், ஒரு அருமையான மாற்று வழி இன்று உள்ளது. வகுப்பறை கற்பித்தலுக்கு மாற்றாக, தகவல் தொழில்நுட்ப புரட்சியின் உதவியால், இ-லேர்னிங் என்ற அம்சம் கிடைத்துள்ளது.
இம்முறையில், teleconferencing, email, audio conferencing, television lessions, radio broadcasts, interactive radio conselling, interactive voice response system போன்ற தொழில்நுட்ப அம்சங்களின் உதவியால், பூகோள மற்றும் அரசியல் எல்லைகளைக் கடந்து, உயர்கல்வியை அனைவரும் பெற முடியும். எனவே, இதுதொடர்பாக, அரசு விரிவான ஒரு முடிவை எடுக்க வேண்டியுள்ளது.
கல்வி வல்லரசு
"இந்தியா ஒரு கல்வி வல்லரசு" என்ற நிலையை அடைய, நாட்டிலுள்ள பட்டதாரிகளின் எண்ணிக்கையை, அடுத்த சில ஆண்டுகளில் கணிசமாக அதிகரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதன்விளைவாக, பல்கலைக்கு படிக்க செல்வோரின் எண்ணிக்கையை, தற்போது இருக்கும் 12% என்ற நிலையிலிருந்து, 2025ம் ஆண்டில் 30% என்ற இலக்கிற்கு உயர்த்த வேண்டியுள்ளது. இதன் விளைவாக நாட்டின் மாணவர் மக்கள் தொகை பன்மடங்கு பெருகும்.

>>>வி,ஏ.ஓ. தேர்வு: 20 சதவீதம் பேர் எழுதவில்லை

தமிழகம் முழுவதும் நடைபெற்ற வி.ஏ.ஓ. தேர்வை 20% பேர் எழுதவில்லை. அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 74.4 சதவீதம் பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர் என்று அதிகாரிகள் கூறினர். தேர்வு எழுதியவர்களில் 4.21 லட்சம் பேர் பெண்கள்.
தமிழகம் முழுவதும் 244 தேர்வு மையங்களில் 3,483 தேர்வுக்கூடங்களில் நேற்று வி.ஏ.ஓ. பணியிடத்திற்கான போட்டித் தேர்வு நடைபெற்றது. ஆயிரத்து 870 வி.ஏ.ஓ. பணியிடங்களுக்கு, தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்திய இந்த தேர்வில் பங்கேற்க 10ம் வகுப்பு படித்தவர்கள், பட்டதாரிகள், ஆசிரியர்கள், பொறியியல் முடித்தவர்கள் அதிகளவில் போட்டி போட்டு விண்ணப்பித்தனர்.
தேர்வுக் கூடங்களை மாவட்ட வருவாய் அலுவலர்கள் தலைமையில் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்தனர். சென்னையில் நடந்த தேர்வை டிஎன்பிஎஸ்சி தலைவர் நட்ராஜ், செயலர் உதயசந்திரன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜெயகாந்தன் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த எழுத்து தேர்வில் வெற்றி பெறுவோர் நேரடியாக பணியில் நியமிக்கப்படுவார்கள்.
சென்னையில் எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலை பள்ளியில் நடந்த விஏஓ தேர்வை பார்வையிட்ட பின் டிஎன்பிஎஸ்சி தலைவர் நடராஜ் அளித்த பேட்டி:
தமிழகம் முழுவதும் விஏஓ தேர்வு எந்தவித பிரச்னை இல்லாமல் நடந்தது. அதிகபட்சமாக சென்னையில் 70 ஆயிரம் பேர், மதுரையில் 52 ஆயிரம், நெல்லை, சேலத்தில் 51 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். தேர்வு மையங்களில் இருந்து விடைத்தாள்கள் அனைத்தும் உடனடியாக சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்துக்கு கொண்டுவர உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன் பின்னர், விடைத்தாள் ஸ்கேன் செய்யப்படும். ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள் ஒரு வாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வு எழுதியோர் அதனை பார்த்து கொள்ளலாம். தேர்வு முடிவுகளை ஒரு மாதத்தில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
விஏஓ தேர்வுக்கான வினா விடை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (http://www.tnpsc.gov.in/answerkeys.html) வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடைகளில் தேர்வர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் 7 நாட்களுக்குள் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
அதன் பின்னர் நிபுணர் குழுவுடன் கலந்து ஆலோசித்து விடைகளில் திருத்தம் இருந்தால் அதுபற்றிய விவரம் இணையதளத்தில் மீண்டும் வெளியிடப்படும். அதன் பிறகே விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

>>>மூடு விழாவுக்கு தயாராகும் ஐ.டி.ஐ.கள்: கவனிக்குமா அரசு?

அரசு ஐ.டி.ஐ.களில் வேலைவாய்ப்புகள் அதிகமுள்ள புதிய பாடப்பிரிவுகள் தொடங்கியும், போதிய விளம்பரமின்மையால் மாணவர்கள் சேர்க்கை குறைவாகவே உள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் பயில்வதற்கு வாய்ப்பு அளிக்க, அரசு ஐ.டி.ஐ.,க்கள் மீது, அரசு கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் 62 அரசு ஐ.டி.ஐ.களும், 650 தனியார் ஐ.டி.ஐ.களும் இயங்கி வருகின்றன. வங்கிக்கடன் கிடைப்பதால் ஏராளமானோர் பொறியியல், மருத்துவம் படிப்பதையே விரும்புகின்றனர்.மிகக் குறைந்த மதிப்பெண்களும், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களும்தான் ஐ.டி.ஐ.,யில் சேர்ந்து பயிலும் நிலை உள்ளது.
ஆசிரியர்கள் பற்றாக்குறை:தமிழகம் முழுவதிலும் உள்ள ஐ.டி.ஐ.,களில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடிய இளநிலை பயிற்சி அலுவலர்கள், உதவி பயிற்சி அலுவலர்கள் பணியிடம் 50 சதவீதம் காலியாக உள்ளது.
கடந்த 2000ம் ஆண்டில், பயிற்சி ஆசிரியர்கள் நியமனம் செய்ததோடு சரி. கடந்த 12 ஆண்டுகளாக இறப்பு, ஓய்வு பெற்ற பயிற்சி அலுவலர்களுக்கு பதிலாக புதிதாக பயிற்சி அலுவலர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை.
அதன் காரணமாக தமிழகம் முழுவதும் 550 பயிற்சி அலுவலர்கள் பணியிடம் காலியாக உள்ளன.ஐ.டி.ஐ.,களில் மாணவர்கள் படித்து தெரிந்து கொள்வதை விட, பயிற்சி முறைகள் செய்து கற்றுக் கொள்ளக்கூடிய விஷயங்கள் அதிகம்.
செய்முறைக்காக, தேவையான பொருட்கள் வாங்க, ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு,  400 ரூபாய் நிதி ஒதுக்குகிறது அரசு. இது போன்ற காரணங்களால், மாணவர்கள், அரசு ஐ.டி.ஐ., களில் சேர ஆர்வம் காட்டுவதுஇல்லை. பி.பி.ஓ., படிப்பில் சேர ஆளில்லை. இதை சரி செய்ய, தமிழகத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ.,களில், உலக வங்கி உதவியுடன், 15 ஐ.டி.ஐ., களும், மாநில அரசு நிதி உதவியில், நான்கு ஐ.டி.ஐ., களும் மொத்தம் 19 ஐ.டி.ஐ.,களில் வெளிநாடு மற்றும் உள்நாட்டில் வேலை வாய்ப்பு அளிக்கக்கூடிய சிறந்த "டிரேடுகள்' (திறன்மிகு மையம்) அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.
வேலைவாய்ப்பு: உதாரணமாக, தோல் பொருள் மற்றும் காலணி பிரிவு, கேன்டீன் டெக்னாலஜி, ஆட்டோமொபைல், பி.பி.ஓ., உள்ளிட்ட பல தொழில் பயிற்சிகள் இதில் அடங்கும்.பிளாஸ்டிக் சேர், வாகனங்கள் மட்கார்டு, கார்கள் என, அனைத்திலும் பிளாஸ்டிக் உபயோகம் அதிகரித்து விட்ட இந்த உலகில், பி.பி.ஓ., முடித்தவர்களுக்கு, தனியார் தொழிற்சாலைகளில், வேலை வாய்ப்பு அதிகம் உள்ளது.
போதியளவு விளம்பரம் இல்லாததால், இந்த படிப்பில் மாணவர்கள் சேர அதிகம் ஆர்வம் காட்டுவது இல்லை. 40 மாணவர்கள் இதன் காரணமாக, கடலூரில் உள்ள பி.பி.ஓ., பிரிவில் மொத்தமுள்ள 80 இடங்களில், 40 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர்.
நடப்பு ஆண்டில் இரண்டு முறை கவுன்சிலிங் நடத்தி, மாணவர்கள் சேர்க்கை நடத்திய போதும், 50 சதவீதம் மட்டுமே இதுவரை நிரம்பியுள்ளன.எனவே, வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் பயில்வதற்கு வாய்ப்பு அளிக்க, அரசு ஐ.டி.ஐ.,க்கள் மீது, அரசு கவனம் செலுத்த வேண்டும் என்ற கருத்து எழுந்து இருக்கிறது.

>>>குரூப் - 2 விடைத்தாள் வழக்கு: சி.பி.சி.ஐ.டி.யிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு

டி.என்.பி.எஸ்., குரூப்- 2 தேர்வு வினாத்தாள் வெளியான வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற அரசின் ஒப்புதல் கிடைத்ததையடுத்து, வழக்கு தொடர்பான ஆவணங்கள் நேற்று சி.பி.சி.ஐ.டி.,யிடம் முறையாக ஒப்படைக்கப்பட்டன.
டி.என்.பி.எஸ்.ஸி., சார்பில் தமிழகம் முழுவதும், 3,631 பணியிடங்களுக்கு ஆகஸ்ட், 12ம் தேதி குரூப்- 2 தேர்வு நடந்தது. இதில், 6.40 லட்சம் பேர் எழுதினர்.தேர்வுக்கு முன்பே, ஈரோடு, அரூர் மையங்களில் வினாத்தாள் நகல் வெளியானதால், குரூப்2 தேர்வு ரத்து செய்யப்பட்டது.டி.என்.பி.எஸ்.ஸி., ஈரோடு வட்ட பொறுப்பாளர் லியாகத் அலிகான் கொடுத்த புகாரின் பேரில், ஈரோடு டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
குமாரபாளைத்தை சேர்ந்த செந்தில், தனக்கொடி, திருச்செங்கோட்டை சேர்ந்த சுதாகர், கவுந்தப்பாடியை சேர்ந்த வரதராஜன் உள்ளிட்ட பத்து பேரை கைது செய்தனர்.முக்கிய குற்றவாளியான, சென்னையை சேர்ந்த பாலன் என்ற ஸ்ரீதர்ராஜிடம் நடத்திய விசாரணையில், திருவள்ளூரை சேர்ந்த தியாகராஜனிடம் இருந்து வினாத்தாள் வாங்கியதாக தெரிவித்தார்.
தியாகராஜன் கொடுத்த தகவலை அடுத்து, விசாகப்பட்டிணம் சென்ற போலீஸார், ஆந்திராவை சேர்ந்த ஆனந்தராவை கைது செய்து, கஸ்டடி எடுத்து விசாரித்தனர்.இதில், விசாகப்பட்டிணத்தைச் சேர்ந்த கக்கூன் என்பவர் பெயரை கூறியதால், அவர் தான் முக்கிய குற்றவாளியென முடி செய்தனர்.
இவ்வழக்கில், முக்கிய குற்றவாளிகள் ஒடிசா, கொல்கத்தா, ஆந்திரா என வெளிமாநிலங்களில் இருப்பதால், உள்ளூர் போலீஸாரால் முழுமையாக எடுத்துச் செல்ல முடியவில்லை. வழக்கை சி.பி.சி.ஐ.டி., வசம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தமிழக அரசின் ஒப்புதல் கிடைத்ததையடுத்து, ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுமணி, கோவையில் சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி., ராஜராஜனிடம், வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களையும் ஒப்படைத்தார். வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாறியுள்ளதால், விசாரணை வேகமெடுத்து, விரைவில் முக்கிய குற்றவாளிகள் அனைவரும் பிடிபடுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

>>>அனுபவங்களின் பொக்கிஷம்-இன்று உலக முதியோர் தினம்

சுருங்கிய தோல்கள், மங்கிய கண்கள், நரைத்த முடி ஆகியவற்றுடன் அனைவரது குடும்பத்திலும் இருக்கின்றனர் முதியோர். வாழ்க்கைப் பயணத்தில் இவர்கள் பெற்ற குழந்தைகளுக்காக உழைத்து, முதிர்ந்த வயதில் தள்ளாடி நிற்கின்றனர். இவர்களின் உழைப்பு மற்றும் தியாகத்தை மறக்காமல், அவர்களிடம் அன்பு காட்டி அரவணைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆண்டுதோறும் அக்., 1ம் தேதி, சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது.

இத்தினத்தில், தொண்டு நிறுவனங்களும், சமூக அமைப்புகளும் முதியோரை மகிழ்விக்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான இடங்களில், முதியோரின் நிலை பரிதாபமாக உள்ளது. பெற்ற பிள்ளைகள் இருந்தும், 60 வயதைத் தாண்டிய பின்னரும், ஓய்வெடுக்க முடியால், பசிக்காக உழைத்துக்கொண்டிருக்கும் நிறைய முதியோரை நாம் பார்க்க முடிகிறது. இவர்களின் அனுபவங்களை, பொக்கிஷமாக கருத வேண்டும்.

மூன்றில் ஒருவர்:உலக மக்கள்தொகையில் 10ல் ஒருவர் 60வயதுக்கு மேற்பட்டவராக இருக்கிறார். இது, 2050ல் ஐந்தில் ஒருவராகவும், 2150ல் மூன்றில் ஒருவராகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மனதால் குழந்தைகள்:
முதியோரும், குழந்தையும் மனதால் ஒன்று எனக் கூறுவர். ஞாபக மறதி காரணமாக, நம்மிடம் கேட்டவற்றையே திரும்ப திரும்ப கேட்பர். இதற்கு அவர்களிடம் கோபம் காட்டாமல், பரிவுடன் உதவ வேண்டும். முதியோரை இதுநாள் வரை, கவனிக்க மறந்து விட்டாலும், இத்தினத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, அவர்களிடம் அன்பு செலுத்த முன் வரவேண்டும். நாமும் நாளை முதியோர் ஆவோம் என்பதை மனதில் நிறுத்துங்கள்.

ஏன் இந்த நிலை:
பிள்ளைகள் நல்ல வசதியோடு இருந்தும், பெற்றோர்களை பார்த்துக்கொள்ளாமல் முதியோர் இல்லங்களில் சேர்க்கும் கொடுமையும், நமது நாட்டில் நடக்கிறது. இவ்வாறு முதியோரை கவனிக்க மறுத்தவர்கள், அவர்களை திரும்பவும் வீட்டுக்கு அழைத்து வர முயற்சி எடுங்கள். முதியோரின் ஆசி இருப்பின், வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையலாம்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Shield Ceremony for 114 Best Schools - DEE Proceedings, Dated : 08-11-2024

   மாவட்டத்திற்கு 3 பள்ளிகள் வீதம் 38 மாவட்டங்களில் 114 சிறந்த பள்ளிகளுக்கு 14-11-2024 அன்று கேடயம் வழங்கும் விழா - தொடக்கக்கல்வி இயக்குநரின...