கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பெண் தொழில் முனைவோருக்கான அழகுக்கலை பயிற்சி

மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொழில் முனைவோருக்கான அழகுக்கலை பயிற்சி வழங்கப்பட உள்ளது. பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள்  மட்டுமே இந்த பயிற்சியில் பங்கேற்க முடியும்.
இதில் சேருபவர்களுக்கு, 2 வாரங்கள் பயிற்சி வகுப்புகளும், 4 வாரங்கள் செய்முறைப் பயிற்சியும் வழங்கப்படும். அக்டோபர் 4ம் தேதி முதல் நவம்பர் 11ம் தேதி வரை இந்த பயிற்சிகள் நடைபெற உள்ளன. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பயிற்சி வழங்கப்படுகிறது.
MSME-DI, G.S.T Road, Near SBI, Guindy, Chennai - 32 என்ற முகவரியில் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு www.msmedi-chennai.gov.in எனும் இணையதளத்தை அணுகலாம் அல்லது 97898 26374, 99529 20812 எனும் செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம்.

>>>அக்டோபர் 04 [October 04]....

  • உலக வன விலங்குகள் தினம்
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா பிறந்த தினம்(1884)
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் திருப்பூர் குமரன் பிறந்த தினம்(1904)
  • மெக்சிகோ குடியரசானது (1824)
  • முதலாவது செயற்கை கோள் ஸ்புட்னிக் 1 பூமியை சுற்றி வர விண்ணுக்கு அனுப்பப்பட்டது(1957)

>>>புத்துயிர் பெறும் சிலம்பக்கலை : பாரம்பரியத்தை காக்கும் கல்வித்துறை

உடுமலை அருகே அரசுப்பள்ளி மாணவர்கள் பாரம்பரிய மிக்க, சிலம்ப கலையினை, பள்ளி நிர்வாகமும், ஊராட்சி நிர்வாகமும் ஒத்துழைப்பால், மாணவர்கள் முறையாக பயின்று வருகின்றனர். அழிந்து வரும் கலையாக காணப்பட்ட சிலம்பம், இளைய சமுதாயத்திடம் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருவதால், மீண்டும் புத்துயிர் பெற்று வருவதாக, சிலம்ப பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.

கற்கால மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் தோன்றியது சிலம்ப கலை. தமிழ் மன்னர்களால் உருவாக்கப்பட்டு, போற்றி பாதுகாக்கப்பட்டு வந்த தற்காப்பு கலைகளில், ஒன்றாக இக்கலை இருந்துள்ளது. கடந்த காலங்களில், சிலம்பாட்டம், புலி விளையாட்டு, கரடி விளையாட்டு, சில்தா (கம்பு), பிச்சுவா (இரண்டு கத்தி) சோடு, வாள், குத்து வரிசை, தீபந்தம், சுருள் கத்தி, மகுடு என்ற மான் கொம்பு விளையாட்டு ஆகியவை தமிழகத்தில் பாரம்பரியமிக்க போர் கலையாகவும் இருந்துள்ளது.

இதில், சிலம்ப பயிற்சி பெற்றவர்கள், பயிற்சி பள்ளிகளை துவக்கி அதன் மூலம் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இக்கலையினை கற்றுத் தந்து வருகின்றனர். தேங்காயை தலையில் வைத்து உடைத்தல், தராசு தட்டில் முட்டை வைத்து சுற்றுதல், தராசு தட்டில் இரண்டு டம்ளரில் தண்ணீர் வைத்து சுற்றுதல் போன்ற பல்வேறு பயிற்சிகளும் சிலம்ப ஆசிரியர்களால் அளிக்கப்படுகிறது. திருவிழா மற்றும் பண்டிகை காலங்களிலும், சிலம்ப போட்டிகள் நடைபெறுகிறது; மாவட்ட அளவிலும் சிலம்ப போட்டிகள் நடத்தப்பட்டு சிலம்ப கலைகளை இளைஞர்களிடம் வளர்க்கப்பட்டு வருகிறது.

உடுமலை அருகே பள்ளபாளையம் ஊராட்சியில் உள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 225 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளி மாணவர்கள் பாரம்பரிய மிக்க சிலம்ப கலை கற்க ஆர்வம் காட்டியதால், பள்ளி நிர்வாகம், ஊராட்சி நிர்வாகமும் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

முதற்கட்டமாக தற்போது, ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிலம்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. வாரம்தோறும், வெள்ளிக்கிழமைகளில், மதிய நேரத்தில், 3.00 மணிக்கு மேல் மாணவர்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. முதலில், குச்சிகளை சுற்ற கஷ்டமாக உணர்ந்த மாணவர்கள் தற்போது, லாவகமாக குச்சிகளை சுற்ற பழகிகொண்டுள்ளனர்.

""பெற்றோர்கள் ஒத்துழைப்பு, கல்வித்துறை அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெறப்பட்ட பின்னரே, சிலம்ப பயிற்சி வாரத்தில் ஒரு நாள் ஊராட்சி தலைவர் ஒத்துழைப்போடு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. மாணவர்கள் ஆர்வமுடன் கற்று வருகின்றனர். உடற்பயிற்சி போன்றுள்ளதாலும், தற்காப்பு கலையாக உள்ள இக்கலையினை கற்க மாணவர் மட்டுமின்றி, மாணவியரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்,'' என்றார் இப்பள்ளி தலைமையாசிரியர் மகாலட்சுமி.
"உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் சிலம்பம்
'சிலம்ப ஆசான் சக்திவேல் மற்றும் பயிற்சியாளர் நந்தகோபால் கூறியதாவது: ஆங்கிலேயர்களை விரட்ட வீரபாண்டிய கட்ட பொம்மன், புலித்தேவர், மருதபாண்டிசகோதர்கள் உள்ளிட்ட மன்னர்கள் காலத்தில் சிலம்பம் போர்க்கலையாக பயன்படுத்தப்பட்டதாக சிலம்ப வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிலம்பம் வெறும் கலை மட்டுமல்ல; உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. இப்பயிற்சியின் மூலம் உடற்பயிற்சி, உளப்பயிற்சி, அதிர்வினை நிகழ்வு, உடல் தாங்கும் திறன் பயிற்சி, சமயோசிதமாக சிந்தித்தல், நிலை தடுமாறாமல் நிற்கும் பயிற்சி, சிலம்பத்தை கைகளினால், பயன்படுத்துவதால் விரல்களுக்கு பயிற்சி கிடைக்கிறது.உயிருக்கும் ஆரோக்கியம் தரும் சிலம்பம் மனித வாழ்க்கைக்கு கற்பக விருட்சமாக உள்ளது. தற்போது சிலம்பாட்டத்தை அரசு அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டாக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் சேர்த்துள்ளனர். இதனால், அழிவின் விளிம்பில் இருந்த சிலம்ப போட்டி தற்போது புத்துயிர் பெற்றுள்ளது.
பள்ளபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், தற்போது மாணவர்களுக்கு சிலம்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. ஊராட்சி தலைவர் ஒத்துழைப்பால், இப்பயிற்சி மாணவர்களுக்கு முறையாக வழங்கப்படுகிறது. இதற்கான சம்பளமும் அவர் சொந்த செலவில் வழங்கி வருகிறார். தற்போது, விடுமுறை நாட்களிலும் தினசரி மாணவர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

>>>சிந்தனை + பேச்சு = ரோபோ

ரோபோக்கள் பற்றி அதிகம் கேள்விபட்டிருக்கிறோம். மனிதர்கள் செய்யும் வேலைகளை, ரோபோ செய்வதையும் பார்த்திருக்கோம். விஞ்ஞான வளர்ச்சியின் உச்சகட்டமாக இன்னும் 3 ஆண்டுகளில் சுயமாக சிந்தித்து, பேசும் ரோபோக்களை பார்க்கப் போகிறோம்.

இவை மனிதனிடம், உரையாடவும், விவாதங்களில் பங்கேற்கவும் இருக்கிறது என்றால் நம்புவீர்களா. நம்பித்தான் ஆக வேண்டும். அதற்கான ஆய்வை ஸ்காட்லாந்தில் உள்ள அபெர்டீன் பல்கலை துவக்கியுள்ளது. இந்த ஆராய்ச்சி சாத்தியமானால், உலகமே வியப்படையும். இந்த புத்தசாலித்தனமான தொழில்நுட்பம், மனிதனின் வாழ்க்கை முறையையே மாற்றிவிடும். இது பற்றி அபெர்டீன் பல்கலை தலைமை ஆராய்ச்சியாளர், டாக்டர் வாம்பெர்டோ கூறுகையில், "இதற்கான சாப்ட்வேர் இன்னும் 3 ஆண்டுகளில் கிடைக்கும்,' என நம்பிக்கையுடன் கூறுகிறார். மனிதனின் வழிகாட்டுதல் இல்லாமல், தானாகவே சிந்தித்து, இவை இயங்கக் கூடியவை.

இந்த ரோபோவிடம், ஒரே நேரத்தில் ஒருவர் மட்டும் கலந்துரையாட முடியும். பேசும் ரோபோக்களைப்போல, பேசும் திறன் கொண்ட கம்ப்யூட்டர்கள் தயாரிப்பதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த தொழில்நுட்பங்கள் வெற்றி அடைந்தால், மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் மாற்றங்கள் உருவாகும். விண்வெளி, ஆழமான கடல், அணு உலை பாதுகாப்பு போன்றவற்றில் தற்போது ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ரோபோக்களை விட, புதிய ரோபா அதிக திறன் மிக்கது.

குறிப்பிட்ட பணியை மனிதன் செய்யச் சொல்லும்போது, அது முடியாவிட்டால், "எனக்கு தெரியவில்லை' என இந்த ரோபோக்கள் பதில் சொல்லும். இந்த ஆய்வு வெற்றியடையும் நாளை, உலக மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
பாதுகாப்பு ஏற்பாடு
சுய சிந்தனை கொண்ட ரோபோக்களால் எதிர்காலத்தில், மனித குலத்திற்கே ஆபத்து வரும் அபாயம் இருக்கிறது என்றும் ஒரு கருத்து உள்ளது. எக்காலத்திலும் அப்படி ஒரு சூழ்நிலை வந்து விடக் கூடாது என்பதற்காக, புதிய ரோபோக்களில் சில பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
1.இந்த ரோபோக்கள், மனிதனை எந்நேரத்திலும் எதிர்க்காது. தேவைப்பட்டால், மனிதர்கள் இவற்றை அழிக்கும் வண்ணம் உருவாக்கப்பட உள்ளது.
2.தானாக எந்த வேலையையும் செய்யாமல், மனிதனின் உத்தரவுகளை மட்டுமே இவை செயல்படுத்தும்.
3.ரோபோவுக்கு ரோபோக்களே பாதுகாப்பாக இல்லாமல், மனிதர்களால் மட்டுமே பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

ரோபோ வரலாறு:
ரோபோக்களின் வரலாறு பழமையானது. புராண காலங்களிலே, செயற்கை மனிதர்களின் கதாபாத்திரங்களை உருவாக்கினர். அவற்றின் தற்கால வடிதான் ரோபோ. ஜப்பானியர்களே நவீன ரோபோக்களை உருவாக்கினர். முதல் ரோபோவை, 1954ம் ஆண்டு ஜார்ஜ் தேவோல் என்பவர் வடிவமைத்தார். அதை முதலில் "யுனிமேட்' என அழைத்தனர். இது 1960ம் ஆண்டு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்டது. இது வெப்பமான உலோக துண்டுகளை கையாள பயன்படுத்தப்பட்டது.

வரையறை:
ரோபோ என்பதற்கு, மனிதன் இடும் கட்டளைகளை, நிறைவேற்றும் இயந்திர மனிதன், என பொதுவாக கூறலாம். ரோபோ எனும் சொல்லை முதன்முதலில் செக் குடியரசு எழுத்தாளர் காரெல் கேபெக் என்பவர் 1920ம் ஆண்டு பயன்படுத்தினார். அவரது ஆர்.யு.ஆர்., எனும் நாடகத்தில் ரோபோ கதாபாத்திரத்தை அறிமுகம் செய்தார். மனிதர்கள் போல் தோற்றம் கொண்ட இயந்திரங்கள், தொழிற்சாலையில் வேலை செய்வது போல், காட்சி அமைத்திருந்தார். ரோபோ என்பதற்கு செக் மற்றும் ஸ்லாவிக் மொழிகளில் கடும் தொழில், கடும் உழைப்பு என பொருள்.

வகைகள்
தொலை தூரம் செல்லும் ரோபோ:

மனிதனால் செல்ல முடியாத இடங்கள், விண்வெளி ஆகியவற்றுக்கு இந்த வகை ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை மனிதனை விட, சிறப்பாக பணியை முடிக்கின்றன.
அறுவடை ரோபோ:
விவசாய பணிகளில், ரோபோக்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. இவை மனிதர்களை விட, வேகமாக செய்யக் கூடியவை. இதனால் மனிதத் தேவை குறைகிறது என்ற கருத்தும் உள்ளது.
வீடுகளில் ரோபோ:
தோட்டத்தை பராமரித்தல், தரையை துடைத்தல், முதியோருக்கு உதவியாக இருத்தல் போன்ற வீட்டு தேவைகளுக்காகவும் ரோபோக்கள் வடிவமைக்கப்படுகின்றன. இவை வீட்டில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுக்காகவும் பயன்படுகின்றன.
சுத்திகரிப்பு ரோபோ:
ஆழ்குழாய், கால்வாய் ஆகியவற்றில் சுத்திகரிக்க இவ்வகை ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. மனிதனுக்கு தீங்கு ஏற்படுத்தக்கூடிய கதிர்வீச்சு பரவும் இடங்கள், நச்சு வாயு வெளிவரும் இடங்களில் இதன் பயன்பாடு இன்றியமையாததாக உள்ளது.
ராணுவ ரோபோ:
ராணுவ பயன்பாட்டில் ரோபோக்களின் பயன்பாடு குறித்து தினமும் பல ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. மனித உயிரிழப்புகள் வெகுவாக குறைக்கப்படும் என்பதால் எல்லா நாடுகளும் ராணுவ ரோபோ தயாரிப்புக்காக அதிகளவில் நிதி ஒதுக்குகின்றன. எல்லைப் பாதுகாப்பு, வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்தல், ஆகியவற்றுக்காக ராணுவத்தில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

>>>6 லட்சம் சொற்களுடன் விரிவுபடுத்தப்பட்ட தமிழ்ப் பேரகராதி

சென்னை பல்கலைக்கழகத்தின் விரிவு படுத்தப்பட்ட தமிழ் - தமிழ் - ஆங்கில அகராதி, 6 லட்சம் சொற்களுடன் தயார் செய்யப்பட்டுள்ளது. வட்டார வழக்குச் சொற்களுக்கு, இதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
மொழியின் வளத்தை, எடுத்துரைக்கும் அளவு கோலாக, அகராதி உள்ளது. தமிழ் மொழியின் முதல் அகராதி, 96 ஆண்டுகளுக்கு முன் வெளியானது. இணைப்புத் தொகுதிகளையும் சேர்த்து, ஏழு தொகுதிகள் இதுவரை வெளியாகியுள்ளன. கடந்த, 1924 முதல், 1939ம் ஆண்டு வரை, ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 996 சொற்களைக் கொண்ட தமிழ் அகராதியை, சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
இந்திய மொழிகளில், முதன் முதலில் அகராதியை வெளியிட்டது தமிழ் மொழி தான். இந்த அகராதியின் சிறப்புகளுக்காக, அகராதியின் தலைமைப் பதிப்பாசிரியர், வையாபுரி பிள்ளைக்கு, "ராவ் பகதூர்" பட்டத்தை அரசு வழங்கியது. தமிழ் அகராதி வெளியாகி, 96 ஆண்டுகளில், அரசியல், கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் பல துறைகளில், பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இவற்றின் தாக்கம், சமூக, பொருளாதார நிலைகளிலும் மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது. துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சி, மொழியிலும் பதிவாகியுள்ளது. அகராதிகளும், இந்த தாக்கங்களை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த பின்னணியில், சென்னை பல்கலைக்கழகம், தமிழ்ப் பேரகராதியை திருத்தியும், புதுமைப்படுத்தியும் உருவாக்கும் திட்டத்தை மேற்கொண்டுள்ளது. இதற்கு, பல்கலைக்கழக மானியக் குழு, நிதியுதவி அளித்துள்ளது.
இதுகுறித்து, பேரகராதித் திட்டத் தலைவர் ஜெயதேவன் கூறியதாவது: புதுப்பிக்கப்படும் தமிழ் அகராதி, 12 தொகுதிகள் கொண்டதாக இருக்கும். ஆறு லட்சம் சொற்களுக்கு மேல் உள்ள, தமிழ் - தமிழ் - ஆங்கிலம் என, இரு மொழி அகராதியாகவும், வரலாற்று முறையில் பொருள் தருவதாகவும் அமைகிறது.
கிராமங்கள் நகரங்களாகி வருகின்றன. கிராம மக்கள் வாழ்க்கை முறையில், தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இச்சூழலில், வட்டார மொழிகள் மறைந்து வருகின்றன. வட்டார மொழிகளைக் காக்க, அவற்றை அகராதியில் பதிவு செய்ய வேண்டிய கடமை, இன்றியமையாததாக உள்ளது. வட்டாரச் சொற்களின் தொகுப்புகளை வைத்திருக்கும் தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள் அவற்றை அனுப்பி வைக்கலாம். அவை, அகராதியில் சேர்க்கப்படும்.
அகராதி திருத்தும் பணி, 2003ம் ஆண்டு, மே, 1ம் தேதி துவங்கியது. அகராதியின் மாதிரி பதிவு, தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள அகராதியியல் வல்லுனர்களுக்கு அனுப்பப்பட்டு, அவர்களின் கருத்துக்கள் பெறப்பட்டன. அதனடிப்படையில், அகராதி திருத்தும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
ஆதார நூல்கள்: தொல்காப்பிய அகராதி, சட்டச் சொல் அகராதி, அணிகலன்கள் அகராதி, சித்திரகவிக் களஞ்சியம், உரிச்சொல் நிகண்டு அகராதியும் மூலமும், ஆசிரிய நிகண்டு அகராதியும் மூலமும், பிங்கல நிகண்டு அகராதியும், மூலமும், பாட்டியல் களஞ்சியம் ஆகிய ஆதார நூல்கள் பேரகராதிக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.
அகராதியின், முன்வடிவ நிலை, 10 தொகுதிகள், 5,385 பக்கங்கள் உள்ளதாக தொகுக்கப்பட்டுள்ளன. 11வது தொகுதி பணி, முடியும் நிலையில் உள்ளது. பேரகராதி திட்டத்துக்கு, "ஆற்றல்சால் பல்கலைக்கழகம்" திட்டத்தின் கீழ், பல்கலைக்கழக மானியக் குழு, 40 லட்சம் ரூபாயும், தமிழக அரசு, 10 லட்சம் ரூபாயும், முனைவர் ஆ.கந்தையா, 25 ஆயிரம் ரூபாயும் நிதியளித்தனர்.
இப்பணிக்கான, கூடுதல் நிதியை பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் வழங்கியதோடு, பணியாளர்களையும் கூடுதலாக நியமித்தார். இவ்வாறு ஜெயதேவன் கூறினார்.

>>>140 சி.பி.எஸ்.இ. பள்ளிகள்: பள்ளிக் கல்வித்துறை அனுமதி

மெட்ரிகுலேஷன் பள்ளி நடத்துவதில், பல்வேறு தொடர் நெருக்கடிகள் இருந்து வருவதால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை துவங்க, தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும், 140 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, பள்ளிக் கல்வித்துறை, தடையில்லா சான்று வழங்கியுள்ளது.
சமச்சீர் கல்வி திட்டம் வருவதற்கு முன், நான்கு வகை கல்வித் திட்டங்கள் அமலில் இருந்தன. இதில், இந்தி, பிரெஞ்ச் உள்ளிட்ட மொழிகளை, மொழிப்பாடமாக கற்பதற்கு, வழிவகை இருந்தது. சமச்சீர் கல்வி திட்டத்தில், அதற்கு வழியில்லை. இந்தி மொழியை, மொழிப் பாடமாக கற்க முடியாது. அதை, ஒரு விருப்பப் பாடமாகத் தான் கற்க முடியும்.
தொடர் அங்கீகாரம் வழங்குவதில் அலைகழிப்பு, எதிர்பார்த்த கட்டணம் நிர்ணயிக்காதது, பெற்றோர்-பள்ளி நிர்வாகிகளிடையே, அவ்வப்போது வெடிக்கும் பிரச்னை, பெற்றோர், மாணவர் விரும்பும் பாடத் திட்டங்களை வழங்க முடியாத நிலை போன்ற காரணங்களால், சி.பி.எஸ்.இ., பக்கம் தனியார் பள்ளி நிர்வாகிகள், தங்களது பார்வையை திருப்பியுள்ளனர்.
தமிழகத்தில், ஏற்கனவே 500 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இயங்கி வரும் நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளில், 140 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, பள்ளிக் கல்வித்துறை, தடையில்லா சான்று வழங்கியுள்ளது. பெரிய இட வசதியுள்ள, மெட்ரிக் பள்ளிகளின் நிர்வாகிகள், பக்கத்திலேயே சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, விண்ணப்பித்து வருகின்றனர்.
மெட்ரிக் பள்ளிகளை அப்படியே மூடிவிட்டு, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் ஆரம்பிப்பதற்கு, சட்டத்தில் வழிவகை இல்லை. இதனால், படிப்படியாக மாணவர் சேர்க்கையை குறைத்து, ஒரு கட்டத்தில் பள்ளியை மூடிவிட்டு, சி.பி.எஸ்.இ., பள்ளி துவங்கவும், சில பள்ளி நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து, தனியார் பள்ளி ஒன்றின், தாளாளர் ராம சுப்பிரமணியன் கூறியதாவது:
தமிழகத்தில், கல்வி குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால், பிரெஞ்ச், ஜெர்மன் உள்ளிட்ட மொழிகள், இங்குள்ள பள்ளிகளில் மொழிப்பாடமாக இருக்க வேண்டும் என, பலரும் எதிர்பார்க்கின்றனர். ஆனால், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில், அதுபோல் வாய்ப்பு இல்லை.
சி.பி.எஸ்.இ., போர்டு, தரமான கல்வி திட்டம் வழங்குவதுடன், பிரெஞ்ச், ஜெர்மன், இந்தி, தற்போது சீன மொழியை கற்பிக்கவும் வழிவகை செய்கிறது. ஒருமுறை அங்கீகாரம் பெற்றுவிட்டால், அதன்பின் தொடர் பிரச்னைகள் கிடையாது. இதனால், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்குவதில், பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றாஅர்.
சோடை போகவில்லை: தனியார் பள்ளி நிர்வாகிகளின் கருத்து குறித்து, பள்ளிக் கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், "தமிழகத்தில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, உரிய விதிமுறைகளை பூர்த்தி செய்து, விண்ணப்பிப்பவர்களுக்கு, தடையில்லா சான்று வழங்குகிறோம். சி.பி.எஸ்.இ., பள்ளிகள் புதிதாக வருவதால், மாநில பாடத் திட்டம் சோடை போனதாக அர்த்தம் கிடையாது என்று தெரிவித்தன.

>>>ஊரக திறனாய்வு தேர்வு: மீண்டும் நடத்த ஆசிரியர்கள் வலியுறுத்தல்

ஊரக திறனாய்வு தேர்வில், பழைய பாடத்திட்டப்படி கேள்விகள் கேட்கப்பட்டதால், தகுதியுள்ள மாணவர்களை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறும் ஆசிரியர்கள், மறுதேர்வு நடத்த வலியுறுத்தியுள்ளனர்.
எட்டாம் வகுப்புக்கு தேர்வாகிய மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில், ஆண்டுதோறும் நடத்தப்படும் ஊரக திறனாய்வு தேர்வு, கடந்த செப்டம்பர் 23ம் தேதி நடந்தது. மனதிறன் பகுதி, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
தமிழகம் முழுவதும் இந்த தேர்வை 50 ஆயிரம் கிராமப்புற மாணவர்கள் எழுதினர். இத்தேர்வில், சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் கேள்விகள் கேட்கப்படாமல், 2010-11 பழைய பாடத்திட்டப்படி கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
தாங்கள் படிக்காத பாடங்களில் இருந்து கேள்விகள் வந்திருந்ததால், மாணவர்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு உத்தேசமாக பதில் அளித்துள்ளனர். இதனால் மாணவர்களும், அவர்களை தேர்வுக்கு தயார்படுத்திய ஆசிரியர்களும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இந்த தேர்வின் மூலம் தகுதியான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது பாதிக்கப்படும். எனவே, இத்தேர்வை ரத்துசெய்துவிட்டு, மறுதேர்வு நடத்த வேண்டும் என அரசுக்கு, மாணவர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்: பழ...