கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>குரூப்- 4 தேர்வு முடிவை வெளியிட நீங்கியது தடை

குரூப்- 4 தேர்வு முடிவை வெளியிட விதிக்கப்பட்டிருந்த தடையை, சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியது. இதையடுத்து, இன்னும் ஓரிரு நாட்களில் குரூப் - 4 தேர்வுக்கான முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி. வெளியிடும் எனத் தெரிகிறது.
டி.என்.பி.எஸ்.சி., குரூப்- 4 தேர்வு, ஜூலை 7ம் தேதி நடந்தது. 10 ஆயிரத்து 718 பணியிடங்களுக்கு நடந்த தேர்வில், தமிழகம் முழுவதும் இருந்து 10 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வு எழுதினர். தர்மபுரி மாவட்டத்தில், தேர்வு எழுதிய சிலருக்கு, 200 கேள்விகளுக்குப் பதில், 150 கேள்விகள் மட்டுமே, கேள்வித் தாளில் இடம் பெற்றிருந்தன.
இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில், சிலர் மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்களை விசாரித்த நீதிமன்றம், "மறுஉத்தரவு வரும் வரை, தேர்வு முடிவை வெளியிடக் கூடாது" என உத்தரவிட்டது. விடைத்தாளை திருத்திக் கொள்ள, அனுமதித்தது. ஆகஸ்ட் 17ம் தேதி, இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இவ்வழக்கு, நீதிபதி நாகமுத்து முன், நேற்று விசாரணைக்கு வந்தது. டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிறைமதி, "குறைபாடு உடைய, கேள்வித்தாளை வழங்கியதால், பாதிக்கப்பட்ட, 13 பேருக்கு, புதிதாக தேர்வு நடத்தப்பட்டது. அதில், மனுதாரர்களுக்கும், சந்தர்ப்பம் வழங்கப்பட்டது" என்றார்.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கே.பாலு, "தேர்வு நடத்தப்பட்டு விட்டதால், எங்களுக்கு மேற்கொண்டு எந்தப் பிரச்னையும் இல்லை" என்றார். இதையடுத்து, "குரூப் - 4 தேர்வு முடிவை வெளியிடக் கூடாது" என, ஆகஸ்ட் மாதம் பிறப்பித்திருந்த உத்தரவை நீக்கி, நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டார்.

>>>சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தும் பணி கிடைக்காதவர்கள் குமுறல்

சிறப்பு ஆசிரியர் பணிக்கு, 10 மாதங்களுக்கு முன், சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்த நிலையில், இதுவரை நியமனம் வழங்கப்படவில்லை.
அரசுப் பள்ளிகளில், 1,020 பட்டதாரி விளையாட்டு ஆசிரியர்கள் உட்பட, 1,500 சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க, 2011 டிசம்பரில், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது. இப்பணி முடிந்து, 10 மாதங்களாகியும், பணி வழங்கப்படவில்லை.
ஆனால், கடந்த ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்த, முதுகலை பட்டதாரிகளுக்கு, ஆசிரியர் பணி வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று, சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், "சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பணியிடங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்கள் குறித்த விவரத்தை அரசு சேகரிக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்"  என்றார்.

>>>நவம்பர் இறுதியில் பிளஸ் 2 தனித்தேர்வு முடிவுகள்

பிளஸ் 2 தனித் தேர்வு நேற்று துவங்கியது. ஏற்கனவே நடந்த தேர்வுகளில், தோல்வி அடைந்த மாணவ, மாணவியர் மற்றும் ஜூன், ஜூலையில் நடந்த உடனடித் தேர்வில் தோல்வி அடைந்தோர், இத்தேர்வை எழுதுகின்றனர்.
மாநிலம் முழுவதும், 200க்கும் மேற்பட்ட மையங்களில், 50 ஆயிரத்து 500 பேர் எழுதுகின்றனர். சென்னையில், 11 மையங்களில் நடக்கும் தேர்வில், 6,533 பேர் எழுதுகின்றனர். இதன் முடிவுகள், அடுத்த மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும்.

>>>வனத்துறை பள்ளி மாணவர்களுக்கு பரிசு ரூ.3.50 லட்சம் தர அரசு அனுமதி

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும், பிளஸ் 2 படித்து, 2011-12ம் ஆண்டு அரசு தேர்வுகளில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்க, 3.50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வனத் துறையால் நிர்வகிக்கப்படும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் பெறும் மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. கடந்த கல்வியாண்டு முதல், அரசு பள்ளிகளில் பயின்று தேர்வில், முதல் மூன்று இடங்களை பெறுவோருக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. பத்தாம் பகுப்பில் முதலிடம் பெறும் ஒரு மாணவர், ஒரு மாணவிக்கு, தலா, 25 ஆயிரம், இரண்டாம் இடம் பிடிப்போருக்கு, தலா, 20 ஆயிரம், மூன்றாம் இடம் பிடிப்போருக்கு, தலா, 15 ஆயிரம் ரூபாய் தரப்படும். இதே போல், பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெறும் மாணவர், மாணவிக்கு, தலா, 50 ஆயிரம், 30 ஆயிரம், 20 ஆயிரம் ரூபாய், என்ற அடிப்படையில், பரிசு வழங்கப்படுகிறது.
வேலூர் மண்டலத்தில், வனத் துறை பள்ளிக்கு இவ்வாய்ப்பு இத்தடவை கிடைத்திருக்கிறது. இத்தடவை கூடுதலாக ஒரு மாணவி பரிசு பெறும் தகுதி பெற்றிருக்கிறார். அதனால், கூடுதல், 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்ற வனத்துறை கோரிக்கையை அரசு ஏற்று, 3.50 லட்சம் ரூபாய்க்கு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

>>>மனசாட்சியுடன் பணியாற்ற உறுதியேற்க வேண்டும் : இயக்குனர் அறிவுறுத்தல்

"பள்ளி தலைமையாசிரியர்கள் மனசாட்சியுடன் பணியாற்றி, மாணவர்களின் தேர்ச்சிக்காக உழைக்க வேண்டும்,'' என, அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்ட இயக்குனர் இளங்கோவன் பேசினார்.

மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், பத்தாம் வகுப்பு பொது தேர்வில், குறைந்த அளவு தேர்ச்சி விகிதம் பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம், மதுரை வேலம்மாள் பள்ளியில் நேற்று நடந்தது. இதில், இளங்கோவன் பேசியதாவது: மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில் தலைமையாசிரியர்களின் பங்கு முக்கியம். பத்தாவது மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி என்பது மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். இதில் தோல்வி ஏற்படும் போது மாணவரின் வாழ்க்கை திசைமாறி செல்ல வாய்ப்புள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களின் "ரோல் மாடல்'. இதை புரிந்து ஆசிரியர்களின் செயல்பாடு அமைய வேண்டும். இதுவரை உங்களின் செயல்பாடுகளை சுயபரிசோதனை செய்துகொண்டு, இந்த பயிற்சிக்கு பின்னராவது "மாணவர்களின் முன்னேற்றத்துக்காக நல்ல விஷயம் செய்ய வேண்டும்' என்று, நீங்களே உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். மனசாட்சிப்படி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரித்து, பள்ளிகளில் "ரிசல்ட்'டை அதிகரிக்க வேண்டும், என்றார்.

>>>அக்., 20ல் பல்கலை பட்டமளிப்பு விழா

மதுரை காமராஜ் பல்கலை பட்டமளிப்பு விழா, அக்.,20ல் நடக்கிறது. தமிழக கவர்னர் ரோசய்யா, உயர் கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் பங்கேற்கின்றனர். விழாவில், 85 பேருக்கு "டாக்டர்' பட்டங்களும், பல்வேறு துறைகளில் பல்கலை அளவில் "ரேங்க்' பெற்ற 80 பேர் உள்பட 35,000 பேருக்கு பட்டம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாட்டை, துணைவேந்தர் கல்யாணி, பதிவாளர் (பொறுப்பு) பிச்சுமணி செய்துவருகின்றனர்.

>>>மதுரை மல்லிகைக்கு "புவிசார் குறியீடு': மலருக்கு கிடைத்த, "முதல் மரியாதை'

உலகளவில் தனித்துவம் வாய்ந்தது மதுரை மல்லிகை என்பதைக் குறிக்கும் வகையில், "புவிசார் குறியீடு' (ஜி.ஐ.,) கிடைத்துள்ளது,'' என, மதுரை விவசாயக் கல்லூரி டீன் வைரவன் தெரிவித்தார்.
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களை உள்ளடக்கிய, "பழைய மதுரையின்' மண்வளம், மல்லிகைக்கு ஏற்றது. இந்த மண்ணில் விளையும் மல்லிகைக்கு மட்டும் கூடுதல் மணம், வெண்மை உண்டு. இரண்டு நாட்கள் வரை பூக்கள் வாடமல் நன்றாக இருக்கும். பூவின் காம்பும், இதழ்களும் சம உயரத்தில் இருக்கும். மதுரை மல்லி வாசம் என்றே சிறப்புடன் காலம் காலமாக போற்றப்படுவதே, மதுரை மல்லிகைக்கு சிறப்பு. தமிழகத்தின் பல இடங்களில், பரவலாக மல்லிகைப் பூக்கள் விளைந்தாலும், மதுரையின் சிறப்பு வேறிடத்தில் இல்லை. மதுரை மார்க்கெட்டிற்கு மட்டும் பிப்ரவரி, ஏப்ரல் மாதங்களில் 15 முதல் 20 டன் பூக்கள் வரத்து இருக்கும். நவம்பர், டிசம்பரில் வேறெங்கும் பூக்கள் உற்பத்தி இருக்காது; மதுரையில் மட்டும் குறைந்தளவு உற்பத்தி இருக்கும். இந்த சிறப்புகளுக்காக, மதுரை மல்லிகைக்கு "புவிசார் குறியீடு' கிடைத்துள்ளது. நாட்டில் ஒரு பூவிற்கு "புவிசார் குறியீடு' கிடைத்தது, இதுவே முதல்முறை.

இதுகுறித்து டீன் கூறியதாவது:
இரண்டு ஆண்டுகளாக, மதுரை விவசாயக் கல்லூரி ஆராய்ச்சி நிலையம் சார்பில், மல்லிகைக்கு "புவிசார் குறியீடு' பெறும் முயற்சியில் ஈடுபட்டோம். தனிநபர் பெயரில் வாங்க முடியாது என்பதால், தானம் அறக்கட்டளை மூலம், ஆறு மாவட்ட மல்லிகைப்பூ உற்பத்தியாளர்களை ஒருங்கிணைத்து, சங்கம் அமைத்தோம்; இதில் 200 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்; தொழில்நுட்ப ரீதியான ஆவணங்களை, மார்ச் 2011ல், சென்னையில் உள்ள அலுவலகத்தில் சமர்ப்பித்தோம்; மீண்டும் சில ஆவணங்கள் தேவைப்பட்டதால், திருத்தப்பட்டு, மார்ச் 2012 ல், மீண்டும் விண்ணப்பித்தோம். இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது "அறிவுசார் சொத்துரிமை' (ஐ.பி.ஆர்.,) இதழில், "மதுரை மல்லிகை'க்கு "புவிசார் குறியீடு' வழங்கப்பட்டுள்ளதாக, வெளியிடப்பட்டுள்ளது. தொல்காப்பியம், பரிபாடல், திருவிளையாடற் புராணங்களில் "மதுரை மல்லிகை' பற்றி கூறப்பட்டுள்ள ஆவணங்களை, திரட்டியுள்ளோம். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது "பேக்கிங்' முக்கியம். அதற்கான தொழில்நுட்பத்தையும் விவசாயிகள், விற்பனையாளர்களுக்கு கற்றுத்தர உள்ளோம். நவம்பர், டிசம்பரில், உற்பத்தியை அதிகரிப்பதற்கான தொழில்நுட்பத்தை ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன்:
இதனால் பூ வர்த்தகம் இன்னும் அதிகரிக்கும். "மதுரை மல்லிகை' என்று பெருமையாக சொன்னாலும், நான்கு ஆண்டுகளில் உற்பத்தி 30 சதவீதம் குறைந்துவிட்டது. விளைநிலங்கள் மனையாகி விட்டன; பத்தியை மீண்டும் அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தற்போது துபாய், கனடா, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு, சென்னையிலிருந்து தான் ஏற்றுமதி செய்கிறோம். மதுரை விமான நிலையத்தில் பன்னாட்டு சேவை துவங்கினால், அதிகமாக ஏற்றுமதி செய்ய முடியும். அதற்கேற்ப உற்பத்தியை அதிகரிக்க ஏற்பாடு செய்யலாம்.
கலப்படம் செய்தால் "காப்பு'
* புவிசார் குறியீடு கிடைத்திருப்பதால், வெளிநாட்டு ஏற்றுமதிக்கு, குறிப்பிட்ட விலையை இனி நிர்ணயிக்க முடியும்.
* விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்.
* இப்பெயரில், மற்ற பகுதிகளில் விளையும் மல்லிகைப் பூக்களை கலப்படம் செய்ய முடியாது. அப்படி செய்தால், 2 லட்சம் ரூபாய் அபராதம், ஐந்தாண்டு சிறை தண்டனை உண்டு.

"புவிசார் குறியீடு' என்றால் என்ன?:
ஒரு குறிப்பிட்ட இடத்தையோ (புவியியல்) அல்லது தோற்றத்தையோ, குறிப்பிடும் பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம், "புவிசார் குறியீடு' (ஜியாகிரபிக்கல் இண்டிகேஷன்) எனப்படுகிறது. இக்குறியீடு, அந்த பொருளின் சொந்த இடத்தின் தரத்தையும், நன்மதிப்பையும் பறை சாற்றும் சின்னமாக விளங்கும். இந்தியாவில் பாரம்பரியம் மிக்க பொருட்களுக்கு, மத்திய அரசு அங்கீகாரம் அளித்து பாதுகாக்கிறது. இச்சட்டம் 1999ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, செப்.15, 2003ம் ஆண்டு அமலுக்கு வந்தது.
இதன்படி மத்திய அரசால் பதிவு செய்யப்பட்ட தமிழக பொருட்கள்:
* சேலம் பேப்ரிக்
* காஞ்சிபுரம் பட்டு
* பவானி ஜமுக்காளம்
* மதுரை சுங்குடி
* கோவை வெட் கிரைண்டர்
* தஞ்சாவூர் வண்ண ஓவியங்கள்
* நாகர்கோவில் கோவில் நகைகள்
* தஞ்சாவூர் கலை தகடுகள்
* ஈஸ்ட் இந்தியா லெதர்
* சேலம் வெண்பட்டு
* கோவை கோரா பட்டு
* ஆரணி பட்டு
* சுவாமிமலை வெண்கலப் பொருட்கள்
* ஈத்தாமொழி நெட்டை தென்னை
* தஞ்சாவூர் பொம்மை
* விருப்பாச்சி மலை வாழை
* சிறுமலை மலை வாழை
* தற்போது மதுரை மல்லி

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Attention Sabarimala Devotees - Devasam Board Notice

  சபரிமலை பக்தர்கள் கவனத்துக்கு - தேவசம் போர்டு அறிவிப்பு சபரிமலை செல்லும் பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைக...