கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பறந்தாலும் விட மாட்டேன்: இன்று விமானப்படை தினம்

 
இந்தியாவின் முப்படைகளுள் ஒன்றான விமானப்படை, மற்ற நாடுகளின் வான் வெளித் தாக்குதலில் இருந்து நாட்டை பாதுகாக்கிறது. இது 1932 அக்., 8ல் ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது.

இந்நாளை நினைவுபடுத்தும் விதமாக, அக்., 8ம் தேதி தேசிய விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது. இளைஞர்கள் தாமாக முன்வந்து விமானப்படையில் சேர வேண்டும் என்பதை இத்தினம் நினைவுபடுத்துகிறது. சுதந்திரம் பெறுவதற்கு முன்பே, இரண்டாம் உலகப்போரில் இந்திய விமானப்படை ஈடுபட்டுள்ளது. 1947ல் நாடு சுதந்திரம் பெற்ற பின் இந்தியா ஐந்து முறை(பாகிஸ்தானுடன் 4, சீனாவுடன் 1) போரில் ஈடுபட்டது. இந்த ஐந்து போரிலும் இந்திய விமானப்படை ஈடுபட்டது.

இந்திய விமானப்படையில், 1,27,000 வீரர்கள் பணி புரிகின்றனர். 1361 போர் விமானங்கள் உள்ளன. பைட்டர்ஸ், டிரைனர்ஸ், டிரான்ஸ்போர்ட்ஸ், ஹெலிகாப்டர், மைக்ரோ லைட்ஸ், அல்ட்ரா லைட்ஸ் கிளைடர்ஸ் போன்ற பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது.
நான்காவது இடம்:
பாதுகாப்பு துறையில் சாதித்தவர்களுக்கு, வழங்கப்படும் விருதுகளில், உயரிய விருது "பரம் வீர் சக்ரா' விருது. நாட்டின் முதல் போர் விமானம் "வெஸ்ட்லேன்ட் வாபிதி'. உலகில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக 4வது பெரிய விமானப்படையாக இந்திய விமானப்படை திகழ்கிறது. உயர் தொழில்நுட்பங்கள் , சிறப்பு வாய்ந்த போர் விமானங்கள் ஆகியவற்றை விமானப்படை கொண்டுள்ளது.

>>>அக்டோபர் 08 [October 08]....

  • இந்திய விமானப் படை தினம்
  • பெரு கடற்படை தினம்
  • கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு தினம்(1959)
  • இந்திய விமானப்படை நிறுவப்பட்டது(1932)
  • ஜெர்மனி, மேற்கு போலந்தை இணைத்துக் கொண்டது(1939)

>>>"சரியான திசையில், சரியான வேகத்தில் சென்றால் வெற்றி"- மயில்சாமி அண்ணாதுரை

"சரியான திசையில், சரியாக வேகத்தில், சரியான நேரத்தில் சென்றால்தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்" என, இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.
திருப்பூர், பள்ளியில், சூரிய சக்தி மின் உற்பத்தி பிரிவை துவக்கி வைத்து, மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது: ஒருவர் சிறப்பாக செயல்பட்டால், அவரை தாராளமாக பாராட்ட வேண்டும்; தவறு செய்தால், கனிவாக சுட்டிக் காட்ட வேண்டும். ஒலிம்பிக் போட்டியில், ஒருவர் தான் கோப்பை வெல்ல முடியும். ஆனால் பள்ளி தேர்வில் அனைவரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற முடியும்.
நான்கு லட்சம் கி.மீட்டர் தூரத்தில் உள்ள நிலவை அடைய, சந்திராயனை வினாடிக்கு ஒரு கி.மீ., வேகத்துக்கும் அதிகமாக செலுத்த வேண்டும்; சரியான திசை, சரியான வேகம், சரியாக நேரத்தில் சென்றதால்தான் அது நிலவை அடைய முடிந்தது. அதுபோல் நமது குறிக்கோளை அடைய, சரியான நேரத்தையும், சரியான வேகத்தையும் பயன்படுத்த வேண்டும்.
அதற்கான சந்தர்ப்பங்கள் இளைய தலைமுறைக்கு நிறையவே உள்ளது. எந்த துறையாக இருந்தாலும் அதில் வெற்றி பெற முடியும். சரியான பதில்களை பெற, சரியான கேள்விகளை கேட்க தெரிந்திருக்க வேண்டும்; அப்போதுதான் அந்த கேள்விகள், வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

>>>மாணவர்களிடம் வர்த்தக மின் கட்டணம் வசூலிக்க தடை

"அடுக்கு மாடி வீடுகளில், மாணவர்கள் மற்றும் நிறுவன ஊழியர்கள் தங்கியிருந்தால், அவர்கள் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு, வர்த்தகக் கட்டணம் வசூலிக்க முடியாது" என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல்லைச் சேர்ந்த, முத்துலட்சுமி, ராமசாமி ஆகியோர் தாக்கல் செய்த மனு: எங்களுக்குச் சொந்தமான, ஐந்து அடுக்கு மாடி வீட்டில், இரண்டு முதல், நான்காவது மாடி வரை, நாங்கள் வசித்து வந்தோம். பின், இந்த, மூன்று மாடிகளும், மாணவர்கள் மற்றும் அருகில் உள்ள ஜவுளிக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தங்குவதற்காக, வாடகைக்கு விடப்பட்டது.
2011ம் ஆண்டு டிசம்பரில், மின்வாரிய உதவிப் பொறியாளர், சோதனை மேற்கொண்டார். மின்சாரப் பயன்பாட்டை ஆய்வு செய்து, மூன்று மாடிகளும் வர்த்தக நோக்கத்துக்காக பயன்படுத்தப்படுகிறது என, முடிவு செய்தார்; அதற்குரிய கட்டணத்தை நிர்ணயித்தார். எங்கள் வீட்டை, வணிக வளாகமாகக் கருதுவது சரியல்ல. எனவே, வணிக வளாகத்திற்கான மின்சாரக் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.
மனுவை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு: அடுக்கு மாடிகளில் உள்ள அறைகளில், ஊழியர்கள் தங்கியிருந்ததாக, உதவிப் பொறியாளரின் ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை, வணிக ரீதியில் கணக்கிட்டுள்ளனர். அதில், சர்ச்சை இல்லை.
அதேபோல், சொத்து வரி நிர்ணயிக்க, தரை தளம் மற்றும் முதல் தளத்தை, வணிக ரீதியில் கணக்கிட்டுள்ளனர். அதே நேரத்தில், இரண்டு முதல், நான்காம் மாடிகளை, குடியிருப்பு பகுதியாகக் கருதி, சொத்து வரியை, நகராட்சி கணக்கிட்டுள்ளது. எனவே, இந்த, மூன்று மாடிகளையும், வணிக வளாகமாக, உதவிப் பொறியாளர் கருதியதில், எந்த அடிப்படையும் இல்லை.
மாணவர்கள், ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள் தங்கியிருந்ததாலேயே, அந்த அடுக்கு மாடிகளை, வணிக வளாகமாகக் கருதி விட முடியாது. ஊழியர்களுக்கான வாடகையை, ஜவுளிக் கடை நிறுவனம் அளிப்பதால், அது வணிகமாகி விடாது. அங்கு, எந்த வர்த்தக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. எனவே, வணிக வளாகமாகக் கருதி, உதவி நிர்வாகப் பொறியாளர் உத்தரவிட்டது, ரத்து செய்யப்படுகிறது.
வணிக வளாகமாகக் கருதி, ஏற்கனவே வசூலித்த மின் கட்டணத்தை, எதிர்காலத்தில் சரி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு, நீதிபதி அரி பரந்தாமன் உத்தரவிட்டுள்ளார்.

>>>ஸ்டெல்லா மேரிஸ், லயோலாவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

சென்னையில் உள்ள, 2 கல்லூரிகளில், கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த கட்டணத்துக்கும் அதிகமாக வசூலிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை, சென்னை ஐகோர்ட் நீக்கியது.
தமிழ்நாடு கத்தோலிக்க சிறுபான்மை நலச் சங்கம் உள்ளிட்ட, இரண்டு அமைப்புகள், தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: சென்னையில், லயோலா கல்லூரி மற்றும் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிகளில், கல்விக் கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த கட்டணத்துக்கும் அதிகமாக வசூலிக்கின்றன; இவை, அரசு உதவி பெறும் கல்லூரிகள். எனவே, கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
மனுக்களை விசாரித்த ஐகோர்ட், இரண்டு கல்லூரிகளிலும், கூடுதல் கட்டணம் வசூலிக்க, தடைவிதித்து, ஏப்ரல் மற்றும் ஜூன் மாதத்தில் உத்தரவிட்டது. இவ்வழக்கு, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.
கல்லூரிகள் தரப்பில், வழக்கறிஞர், ஐசக் மோகன்லால், "நன்கொடை வசூலிப்பதில்லை; லாப நோக்கிலும் செயல்படவில்லை. நிதிக் குழு தயாரித்த திட்டத்தின் அடிப்படையில், கட்டணம் வசூலிக்கப்படுகிறது" என்றார். இதையடுத்து, இரண்டு கல்லூரிகளுக்கும் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டது. விசாரணையை, வரும், 29ம் தேதிக்கு, ஒத்தி வைத்தது.

>>>கல்லூரி கல்வி இணை இயக்குனருக்கு நீதிமன்றம் கண்டனம்

உசிலம்பட்டி முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க, முன் அனுமதி கோரிய மனுவை பரிசீலிக்காத, மதுரை கல்லூரிக் கல்வி இணை இயக்குனருக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.
முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி செயலாளர் தாக்கல் செய்த மனு: எங்கள் கல்லூரி பேராசிரியர் ரவி. இவரது நன்னடத்தை சரியில்லாததால், 2011 நவம்பர் 18ல்  சஸ்பெண்ட் செய்தோம். சார்ஜ் மெமோ அளித்தோம். பழநி ஆண்டவர் கல்லூரி முதல்வர் (ஓய்வு) ஜெயபாலன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
ரவி விளக்கம் அளிக்க, போதிய வாய்ப்பளிக்கப்பட்டது. அவரது பதில், திருப்தி அளிக்கவில்லை. அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானது. ரவியை பணி நீக்கம் செய்ய நிர்வாகம் முடிவு செய்தது. அதற்கு முன் அனுமதி கோரி, மதுரை கல்லூரிக் கல்வி இணை இயக்குனருக்கு பரிந்துரைத்தோம். அதன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதி வினோத் கே.சர்மா முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் ஈ.வி.என்.சிவா ஆஜரானார்.நீதிபதி: ரவி மீது கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. மனுதாரர், கல்லூரிக் கல்வி இணை இயக்குனருக்கு பரிந்துரைத்து 6 மாதங்கள் ஆகிறது. அதில், இணை இயக்குனர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரது பணியை, சரிவர மேற்கொள்ளவில்லை. மனுவை 2 மாதங்களுக்குள் பரிசீலித்து, உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, உத்தரவிட்டார்.

>>>அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கான வாய்ப்புகள் எப்படி?

அமெரிக்காவில் ஆராய்ச்சி வாய்ப்புகள் எவ்வாறு உள்ளன? அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள், இந்திய மாணவர்களுக்கு ஆராய்ச்சிக்கான ஆதரவு ஊதியம் மற்றும் உதவித்தொகை தருகின்றனவா? அப்படியிருப்பின், அதற்குரிய தகுதிகள் என்ன?
பதில்: அமெரிக்காவில் ஆராய்ச்சி வாய்ப்புகள் என்பது, எந்தத் துறை என்பதைப் பொருத்தும் அந்தத் துறை மேற்கொண்டிருக்கும் நிதி ஆதரவு பெற்ற திட்டங்கள் எத்தனை என்பதைப் பொருத்தும் அமையும். பொதுவாக, ஆராய்ச்சித் திட்டத்தின் தேவை சார்ந்து, அதை வழி நடத்தும் துறைத் தலைவர்கள், ஆய்வு உதவியாளர்களை அவர்கள் எதிர்பார்க்கும் தகுதிகளின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பார்கள். அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு ஆராய்ச்சிக்கான ஆதரவு ஊதியம் மற்றும் உதவித் தொகை ஆகியவற்றை வழங்குகின்றன. ஆனால், மாணவர்கள் அதற்கு கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.
கூடுதல் தகவல்களுக்கு அமெரிக்க-இந்திய அறக்கட்டளையை (USIEF) அணுகலாம். மின்னஞ்சல்: usiefchennai@usief.org.in தொலைபேசி: (044) 2857 4423/4131. இணையதளம்: www.usief.org.in பேஸ்புக்: www.facebook.com/EducationUSA.
கேள்வி: ஒரு இந்திய நிறுவனத்தின் ஒப்பந்தப் பணிக்காக அமெரிக்காவுக்கு தற்காலிகமாக அனுப்பப்பட்டு, அந்தப் பணிக் காலம் முடிந்த பிறகு அங்கேயே வேறு வேலையில் சேர்வது சட்டப்பூர்வமானதா? 
பதில்: உங்கள் கேள்விக்கு சரியான பதில் என்பது, எவ்வாறு நீங்கள் வேறு வேலைக்கு மாறுகிறீர்கள், எத்தகைய வேலைக்கு "விசா' வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பொருத்தே அமையும். "எச்1பி விசா' வைத்திருப்பவர்கள், அபராதம் இன்றி வேறு வேலைக்கு மாறுவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், அவர்கள் பணியில் சேரும் புதிய நிறுவனம், இந்த மாறுதலுக்கான எச்1பி விண்ணப்பத்தைத் தாக்கல் செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரர் ஏற்கனவே "எச்1பி விசா' வைத்திருப்பதால், இது "எச்1பி விசா' உச்ச வரம்பு கட்டுப்பாட்டுக்குள் வராது.எல் "விசா' என்பது, ஒரு நிறுவனம் தனது ஊழியரை அமெரிக்காவிலுள்ள கிளை அலுவலகத்துக்கு மாற்றுவதாகும். அதனால், அதே "விசா'வில், அமெரிக்காவில் புதிய நிறுவனத்தில் வேலை செய்ய முடியாது.
புதிய வேலை கிடைத்தால், அதில் சேர்ந்து பணியைத் துவங்குவதற்கு முன், அந்த நிறுவனம் ஊழியருக்காக "எச்1பி விசா' விண்ணப்பத்தை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் அந்த ஊழியர் அமெரிக்காவிலிருந்து தனது நாட்டிற்குத் திரும்பி வந்து, அங்குள்ள அமெரிக்கத் தூதரகத்தில் புதிய விசாவை பெற்றுச் செல்ல வேண்டும்.
சுற்றுலா மற்றும் வர்த்தகம் சார்ந்த பி1/பி2 வகை விசாவில் செல்பவர்கள் அமெரிக்காவில் வேலை பார்க்க முடியாது. ஒரு நிறுவனத்தின் உற்பத்தி அல்லது சேவை சார்ந்த சம்பளம் பெறும் பணியில் சேர முடியாது. இந்த வகை விசாவில் அமெரிக்காவில் இருக்கும் போது, ஏதேனும் வேலை கிடைத்தால், அதற்குரிய விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
கேள்வி: கணவமார்களின் சார்பு "விசா'வில் உள்ள மனைவிமார்கள் வேலை செய்வதற்கு அமெரிக்கா ஏன் அனுமதிக்க மறுக்கிறது?
பதில்: தகுதியுள்ள நபர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் "எச்1பி விசா'வின் கீழ் வேலை செய்யலாம். அவர்களின் மனைவிமார்கள், வேலை தரும் நிறுவனம் அனுப்புவதாக இருந்தால், "எச்1பி விசா'வுக்கு விண்ணப்பிக்கலாம். நிறுவனங்கள் தங்களின் கிளை அலுவலகங்களுக்கு மாற்றல் செய்யும், "எல்1 விசா'வில் இருப்பவர்களின் மனைவிமார்கள் அமெரிக்காவில் வேலை செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
பரிவர்த்தனை திட்டத்தின் கீழ், அதாவது, "ஜே1 விசா'வில் செல்பவர்கள், தூதரக அதிகாரிகளுக்குரிய, அதாவது, "ஏ1 விசா'வில் செல்வபவர்களின் மனைவிமார்கள், அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்றச் சேவைத் துறையிலிருந்து (USCIS) உரிய அனுமதி வாங்கியிருந்தால், வேலை செய்யலாம். மேலும் விவரம் அறிய, காண்க: https://secure.ssa.gov/apps10/poms.nsf/Inx/0110211420.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...